திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மகரதீபம் ஏற்றப்பட்டதாம். இந்த ‘தீபத்தை’ தரிசிக்க 15 லட்சம் பக்தர்கள் கூடினார்கள் என்று ‘தினத்தந்தி’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. (25.11.2007) அந்த செய்திக்கு அருகிலேயே மற்றொரு செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது. “திருவண்ணாமலையில் ‘திடீர்’ தீ; தீபத்தைக் காணச் சென்ற பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்” - என்பது செய்தியின் தலைப்பு. ஆக முன்னது தீபம்; பின்னது தீ. ‘தீபம்’ - தீயானது எப்படி?
“திரளான பக்தர்கள் ஒரே சமயத்தில் திருவண்ணாமலை மலை உச்சியில் கற்பூரம் ஏற்றியதால், தீ காற்றில் பரவி மரம் செடிகளில் பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதனால் மலை ஏறி தீப ஜோதியைக் காணச் சென்ற பக்தர்கள் இரவில் வழி தெரியாமல் ஆங்காங்கே அலறியடித்து ஓடினார்கள்; சிலர் மூச்சு திணறினர்”
என்கிறது அந்த செய்தி. பகவான் பெயரைச் சொன்னால் ‘தீபம்்’; அதற்கு ‘அரோகரா’, பக்தி முழக்கம்; ‘தீபம்’ தீயாகி விட்டால், ‘அரோகரா’ ஒடுங்கிப் போய் ‘அய்யோ; அம்மா’வாக மாறிவிடுகிறது. அண்ணாமலையில் எழுந்தருளியுள்ளாராம் அருணாசலேஸ்வரர். பகவான் காப்பாற்றுவான் என்று ‘தீபம்’ ஏற்றிய பக்தர்களுக்கு தீப்பற்றும்போது கடவுள் நம்பிக்கை வருவதில்லை; தீயணைக்கும் படைதான் வர வேண்டியிருக்கிறது.
‘ரத்தக் கண்ணீர்’ திரைப்படத்தில் மூத்த பெரியாரியல்வாதி திருவாரூர் தங்கராசு எழுதி நடிகவேள் எம்.ஆர்.ராதா பேசும் வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி அரோகரா என்பான்; அதுவே வீட்டில் தீப்பற்றினால் - அய்யோ, அப்பா என்று வயிற்றிலடித்துக் கொள்வான். இதுதாண்டா உங்கள் பக்தி என்பார் நடிகவேள். இது என்ன சிறு பிள்ளை விளையாட்டு என்று கேட்டால், பக்தர்களைப் புண்படுத்தாதே என்று, பூணூலை உருவிக் கொண்டு புறப்பட்டு விடுவார்கள்.
‘பகவன் குடியிருப்புகளுக்கே’ (அதாவது கோயில்) தீ விபத்து ஏற்பட்டால் அதற்கு இழப்பு ஈடு கோரி ‘ஆயுள் காப்பீடு’ (இன்சூரன்ஸ்) செய்யப்படுகிறது தெரியுமா என்றார், ஒரு ‘இன்சூரன்ஸ்’ அதிகாரி. சரிதான். இவை எல்லாம் நவீன ‘ஆகம’ விதிகள் போலும்.
கிருஷ்ணனும் சுடிதாரும்
இப்போதெல்லாம் கடவுள் என்ன நினைக்கிறார் என்று கோயிலுக்குள்ளே போய் சோதிடம் பார்க்கும் பார்ப்பனர்கள் வந்து விட்டார்கள். இதற்குப் பெயர் ‘தேவபிரசன்னம்’. அய்யப்பனை ஜெயமாலா என்ற பெண் நடிகை சென்று வணங்கி விட்டதற்காக அய்யப்பன் ஆத்திரமாக இருப்பதாக கடந்த ஆண்டு ஒரு அமளி துமளி எழுந்தது போல் - இப்போது குருவாயூர் கிருஷ்ண பகவான் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறான்.
குருவாயூர் கிருஷ்ணனை தரிசிக்க வரும் பெண்கள் சுடிதார் உடையுடன் வரலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்தது. இளம் பெண்கள் புடவை பாவாடை தாவணிக்கு விடைக் கொடுத்து சுடிதாருக்கு மாறிவிட்டதால், நிர்வாகம் இப்படி ஒரு முடிவையெடுத்தது. ஆனால், பெண்கள் சுடிதார் அணிந்து வருவதால் கிருஷ்ணனுக்கு கோபம் அதிகரித்து விட்டது என்று, சில பார்ப்பன புரோகிதர்கள் ‘பிரசன்னம்’ பார்த்துக் கூறியிருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து - கேரள உயர்நீதிமன்றம், ‘சுடிதாருக்கு’ தடை போட்டது! புடவை கட்டிய பெண்கள்தான் இனி கிருஷ்ணனை தரிசிக்க முடியும் என்று அறிவித்துவிட்டது. கிருஷ்ண பகவானுக்கு இளம் பெண்கள் ஆடை மீது எப்போதுமே ஒரு நாட்டம். யமுனை ஆற்றில் இள நங்கையர் ‘குள்ளக் குளிரக்குடைந்து நீராடும்’ வேளையில் அவர்கள் களைந்து போட்ட ஆடைகளை வாரிச் சுருட்டிப் போய் மரக்கிளையில் அமர்ந்து மகிழ்ச்சிக் கூத்தாடிய ‘பகவான்’ அல்லவா? அதாவது ‘ஈவ்டிசிங்’ (பெண்களை துன்புறுத்தல்) எனும் குற்றத்தின் முன்னோடியே அவன்தான். அப்படி பெண்களின் ஆடைகளில் எப்போதுமே தனிக் கவனம் செலுத்தும் ‘கிருஷ்ண பகவானுக்கு’ உடலை முழுமையாக மறைக்கும் சுடிதார் அணிந்து வரவேண்டும் என்றால் கோபம் வராதா, என்று கேட்கிறார், ஒரு கிருஷ்ண பக்தர்.
இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே நவம்.28 ஆம் தேதி காலை ஒரு செய்தி வந்திருக்கிறது. உச்சநீதிமன்றம் - கேரள உயர்நீதிமன்றத்தின் ‘சுடிதார்’ தடையை நீக்கி தீர்ப்பளித்துள்ளது. புடவை கட்டிய பெண்கள் மட்டுமே குருவாயூர் கிருஷ்ணனை வழிபட முடியும் என்பது 5000 ஆண்டு கால மரபு, அதை மீறக்கூடாது என்று மோகன்தாஸ் என்ற கிருஷ்ண பக்தர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் “உடைகள் காலம் தோறும் மாற்றத்துக்கு உரியது. பொது ஒழுக்கத்துக்கு இடையூறு இல்லாமல் இருப்பதுதான் இதில் முக்கியம்.
ஒரு காலத்தில் பெண்கள் ரவிக்கை அணியவே தடை இருந்தது. உங்களுக்குத் தெரியுமா? இப்போது பெண்கள் ரவிக்கை அணியாமல், வருவதுதான் பழம் மரபு என்று கூறுவீர்களா?” என்று கேட்டுள்ளார் தலைமை நீதிபதி, பரவாயில்லையே; உச்சநீதிமன்றம்கூட அவ்வப்போது அறிவுபூர்வமாக பேசத் தொடங்கியிருக்கிறதே என்பதில் மகிழ்ச்சிதான்.
ஆனால் - ராமன் பாலம் கட்டினான் என்று வழக்கு தொடர்ந்தால் மட்டும் வழக்கை உச்சநீதிமன்றம் அனுமதித்து விடுகிறது! கிருஷ்ணனிடம் சீர்திருத்தம் பேசும் உச்சநீதிமன்றம் ராமனிடம் மட்டும் ஏன் பேச மறுக்கிறது? என்று கேட்கிறீர்களா? பதில் கூறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குவரும்; இதோ வாயை மூடிக் கொண்டோம்!