நேர்காணல்: பல்லடம் நாராயணமூர்த்தி, தீபா, வடிவேல்
“நம்மை நாம் சூத்திரர்கள், இந்துக்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் கீழ்மைக் குணமே நம் நாடு அடிமையாய் இருப்பதற்குக் காரணமாயிருப்பது என்பது போலவே பெண்கள் புருஷனுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்.அதிலும் தாலி கட்டின புருஷனுக்குக் கீழ்படிந்து நடக்கவேண்டும் என்னும் உணர்ச்சிகள் பெண்களை மிருகமாக்கி இருக்கின்றன.
ஆதலால், அப்பேர்ப்பட்ட மிருக உணர்ச்சியையும், அடிமை உணர்ச்சியையும் ஒழிக்க முயற்சித்த இந்த மணமக்களையும், அதற்கு உதவியாயிருந்த பெற்றோர்களையும் நான் மிகப் போற்றுகிறேன்.
பெண்கள் முன்னேற்றத்தில் கவலை உள்ளவர்கள் பெண்களைப் படிக்க வைக்கும் முன் இந்தக் கழுத்துக் கயிற்றைத் (தாலியை) அறுத்தெறியும் வேலையையே முக்கியமாய் செய்ய வேண்டுமென்று சொல்லுவேன்.”
- தோழர் பெரியார் - குடி அரசு - 13.07.1930
தோழர் ஜெய்சாந்தியிடம்
என்னுடைய பெயர் ஜெய்சாந்தி என்னுடைய ஊர் உடுமலைக்கு பக்கத்துல சிக்கனூத்துங்கிற கிராமம். எங்க தாத்தா மதுரைவீரன் கோவில் பூசாரி தொடர்ந்து எங்க வீட்டுல தலைமுறை தலைமுறையாக பூசாரியாதான் இருக்காங்க
உங்களுடைய திருமணம் எப்படி நடக்கனும்னு நினைச்சீங்க?தோழர் தாலி,சடங்கு மறுத்து திருமணம் பண்ணனும் அப்படின்னு சொன்னதை எப்படி ஏத்துக்கிட்டீங்க?
திருமணம் அப்படின்னாலே தாலி கட்டித்தான் பண்ணுவாங்க. ஆனா மாப்பிள்ளையை எல்லோருக்கும் புடிச்சுருச்சு. ஆனாலும் மாப்பிள்ளை தாலி கட்டாம திருமணம் பண்ணுவேன்னு சொல்றாங்க அது எப்படின்னு எங்க வீட்டுல எதிர்ப்பு இருந்தது. அது எப்படி தாலி இல்லாமல் கூடத் திருமணம் பண்ணுவாங்களான்னு நினைச்சேன்.
ஒரு கிறிஸ்டியனா இருந்தாக் கூட மோதிரம் மாத்திக்கிறாங்க. நம்ம இந்துதான் இந்து மதத்துக்கு தகுந்த மாதிரி தாலி கட்ட வேண்டியதுதானே? அவங்க அவங்க மதத்துக்கு தகுந்த மாதிரி திருமணம் பண்றாங்க. இவர் ஏன் இப்படி சொல்றாரு மூணு முடிச்சு போடுறதுல என்ன கஷ்டம்? எதுக்கு இப்படி இருக்காங்கன்னு நினைச்சேன். தாலி கட்டமாட்டேன்னு சொன்னது எனக்கு அதிர்ச்சியாகதான் இருந்தது. விஜயன் வந்து என்கிட்ட சொன்னாரு, தாலி வந்து ஜாதியை அடையாளப்படுத்துவது, பெண் அடிமைத்தனம் அப்படின்னு எடுத்துச் சொன்னார். நீங்க ஏன் புரிஞ்சுக்கமாட்டிங்கறீங்க அப்படின்னு கேட்டார்.
தாலி கட்டலையின்னா இந்தத் திருமணமே நடக்காது?அப்படிங்கிற மாதிரியான பிரச்சனைகள் இருந்ததா?
ஆமாம் இருந்தது. திருமணத்துக்கு முன்னாடி நாள் இரவு வரைக்குமே கல்யாணம் நடக்குமோ, நடக்காதோ அப்படிங்கிறது ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது. அதுக்குப் பிறகு சடங்குகள் எல்லாத்தையும் மறுத்துட்டு தாலி மட்டும் கட்டித்தான் எங்களுக்கு திருமணம் நடந்தது. கோவை இராமகிருட்டிணன் அண்ணன் தலைமையில திருமணம் நடந்தது.
தாலி கட்டித் திருமணம் பண்ணினீங்க. அதுக்குப் பிறகு தாலி அகற்றணும் அப்படிங்கிறதைக் குறித்து நீங்க ரெண்டு பேரும் விவாதிச்சிருக்கீங்களா?
2008-ல் திருமணம் நடந்தது. 2008 கடைசியில எம்.ஆர்.ராதா நூற்றாண்டு விழா கோவையில நடந்தது. அந்தக் கூட்டத்துக்குதான் நான் முதல்ல போறேன். அப்ப நம்ம இயக்கப் பெண் தோழர்கள் எல்லாரும் தாலி, மெட்டி இல்லாம அங்க வந்திருந்தாங்க. இவங்க எல்லாரும் இப்படி இருக்கறப்ப நம்ம ஏன் இப்படி இருக்கக்கூடாதுன்னு நினைச்சேன். இவங்க எல்லாரும் தாலி, மெட்டி இல்லாம வாழ்றாங்க எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க. நம்ம ஏன் இவர்களை ஒரு முன் உதாரணமாக எடுத்துட்டு பெண் அடிமைச்சின்னம் இல்லாம வாழக்கூடாதுன்னு நினைச்சேன்.
பொதுவா இந்து மதத்துல தாலிங்கிறது புனிதமானது அப்படின்னு சொல்றாங்க. அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?
புனிதமானதுன்னு எல்லாம் ஒண்ணும் கிடையாது. மதத்துக்காகச் சொல்ற ஒரு விஷியம் தான். இப்ப தாலியை நெஞ்சுக்குக் கீழே இறக்கிப் போட்டுருந்தா, கணவனை நாம் எப்பவுமே நெஞ்சுக்குள்ளையே நினைச்சுகிட்டு இருக்கோம் அப்படிங்கறது ஒரு மூடநம்பிக்கை. அப்படியெல்லாம் தாலி போட்ட எந்தப் பெண்ணும் கணவரை 24 மணி நேரமும் நினைத்துக்கொண்டே இருப்பதில்லை. எதுக்காக அப்படி நினைச்சுக்கிட்டே இருக்கணும்? வேற வேலை வெட்டி இல்லையா?
தாலியைக் கழட்டிட்டாலும் கணவன் மனைவி பிரிஞ்சு போயிடுவாங்க அப்படின்னு கூடச் சொல்வாங்க. அதுவும் ஒரு மூடநம்பிக்கை தான். நாட்டுல நடக்குற எல்லா விவாகரத்து வழக்குலயும் தாலி கட்டுணவங்கதான் பிரியுறாங்க. தாலியே கட்டாத எத்தனையோ பெண்கள் இவங்க சொல்றபடி நல்லாத்தான் வாழறாங்க.
தாலியிலேயும் ஜாதிதான் முக்கியமா வருது. பெண் அடிமைத்தனச் சின்னமாகவும் இருக்குது. அதனால தாலியை அகற்றனும் அப்படின்னு நினைச்சேன்.
வெளிமாநிலப் பெண்கள் தாலி கட்டி இருக்காங்களா?அதாவது தமிழ்நாட்டைத்தவிர மத்த பெண்களை நீங்க பார்த்து இருக்கீங்களா?
வடமாநிலப் பெண்கள் தாலிகட்டி இருக்காங்கன்னா, அது ஒரு வித்தியாசமா இருக்கும். அவங்களுக்கு அது வந்து தாலி நம்ம நாட்டுக்காரங்க வந்து மஞ்சள் கயிறு கட்டியிருப்பாங்க. அவங்க செயின்ல தாலி கோர்த்து போட்டு இருக்காங்க. கருகமணிப்பாசி மாதிரிப் போடுறாங்க. அப்புறம் நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவங்க குங்குமம் கொஞ்சமா வைப்பாங்க. ஆனால் அவங்க தலையில வகுடு(நேர்) எடுத்து பாதி அளவு வைப்பாங்க.
இப்ப வந்து பெரும்பாலான பெண்கள் வந்து தாலி, அதாவது மஞ்சள் கயிறு கட்டறது இல்லை. கல்யாணத்தப்ப சடங்கு, சம்பிரதாயத்துக்காகக் கட்டியிருந்தாலும் கூட அதுக்குப் பிறகு தாலிக்கொடின்னு சொல்வாங்க அதை மட்டும் போட்டுட்டு இருப்பாங்க. மஞ்சள் கயிறை வந்து 3, 4 சென்டி மீட்டர் அளவுமட்டும் எடுத்துக் கொடியில கோர்த்து போட்டுக்குறாங்க. வசதியுள்ளவங்க தங்க செயின்ல தாலியைக் கோர்த்து போட்டு இருக்காங்க. வசதி இல்லாதவங்க மஞ்சள் கயிறுல தாலியைக் கோர்த்துப் போட்டு இருக்காங்க. எப்படி இருந்தாலும் இது ஒரு அடிமைச்சின்னம்தான்.
தாலி பற்றிய விழிப்புணர்வு உங்களுக்குத் தெரிஞ்சதுக்கு. அப்புறம் கணவன் இறந்ததற்கு பிறகு பெண்களுக்குத் தாலி அறுப்பாங்க. அந்த மாதிரியான நிகழ்வுகளைப் பார்க்கும்போது உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது?
அதையெல்லாம் நேர்ல பார்க்கும்போது ரொம்பக் கஷ்டமா இருக்கும். அந்த பெண்ணுக்கு நிறைய கண்ணாடி வளையல் போட்டுவிட்டு, குங்குமத்துல பெரிய பொட்டா நெத்தியில வைச்சுவிட்டு, தலைநிறைய பூ வைச்சு கூட்டிட்டு வருவாங்க. அந்தப் பொண்ணு ரொம்ப அழுதுட்டு வர மறுக்கும். அப்பவும் நாலு பேர் சேர்ந்து அந்தப் பொண்ணைக் கட்டாயப்படுத்திக் கூட்டிட்டு வந்து கைவளையல் களையெல்லாம் உடைச்சுட்டு, நெத்தியில இருக்கிற பொட்டு அழுச்சுட்டு, அப்படியே அந்தப் பூவையும் எடுத்து வீசிருவாங்க.
அதையெல்லாம் பார்க்கறப்ப நான் அப்படியே அழுது இருக்கேன். அவங்களோட கணவன் இறந்ததைவிட இந்தப் பொண்ணை இவ்வளவு கேவலப்படுத்திட்டு இருக்காங்களேன்னு நினைச்சு நான் ரொம்ப அழுதிருக்கேன். கணவன் இறந்ததற்குப் பிறகு கூட ஒரு பொண்ணு பூ வைக்கக்கூடாது, பொட்டு வைக்கக்கூடாது, இவ இனி விதவை, நாம் வெளியே போகும்போது கூட இவ முகத்துல முழிக்கக்கூடாதுன்னு சொல்வாங்க. இது ஒரு மூடநம்பிக்கை. இது பெண்களைக் கேவலப்படுத்துற விஷியம்.
ஒரு பொண்ணு வந்து தான் பிறந்ததுல இருந்து பூ,பொட்டு எல்லாமும் வைச்சுட்டுத்தானே இருக்காங்க திருமணத்தின் போது கணவன் தாலி மட்டும் தான் கட்டுறாங்க. அப்படிங்கறப்ப கணவன் இறந்ததற்கு பிறகு தாலி மட்டுமே அறுக்காம, பூ,பொட்டையும் சேர்த்து வைக்கக்கூடாதுன்னு சொல்றாங்க. கணவன் அப்படிங்கற சொந்தம் நமக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அதாவது குறிப்பிட்ட திருமண வயது வரும்போது அந்தச் சொந்தம் கிடைக்கிறது. ஒரு சில காரணங்களினால் கணவன் இடைப்பட்ட காலங்களில் இறந்தாலும் அந்த இடைப்பட்ட காலத்தில் கட்டிய தாலியை மற்றும் அகற்றாமல் பிறந்தது முதல் வைச்சுட்டு இருக்கிறபூ,பொட்டு,வளையல் இதுவும் வேண்டான்னு சொல்றாங்க. இன்னமும் இந்த மாதிரியான மூடநம்பிக்கை இருந்துட்டுதான் இருக்குது.
தாலியை நீங்க அறுத்த பிறகு உங்களுடைய உறவினர்கள்(அ) நண்பர்கள் கிட்ட எந்த மாதிரி வரவேற்பும், எதிர்ப்பும் இருந்தது?
தெரியாதவங்க வந்து நீங்க கிறிஷ்டியனா? ஏன் தாலி கட்டுல? உங்க வீட்டுக்காரர் இறந்துட்டாரானு கேட்பாங்க. ஆரம்பத்துல தெரியாதவங்க அப்படி கேட்பாங்க. அதுவே எங்களைப் பத்தித் தெரிஞ்சவங்க இவங்க இப்படித்தான் இருப்பாங்க. சொன்னா மாத்திக்க மாட்டாங்க அப்படின்னு சொல்வாங்க. அதனால் எனக்கு எதிர்ப்பு எல்லாம் வந்தது இல்லை. இப்ப உறவினர்கள் ஆரம்பத்துல எதிர்ப்பு தெரிவிச்சாலும் இவங்க தாலி இல்லையின்னாலும் நல்லாத்தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. நம்ம தாலி கட்டி வாழ்ந்தாலும் இன்னமும் இப்படித்தான் இருக்கோம்னு சொல்வாங்க.
உங்களுக்குத் தாலி கட்டித்தான் திருமணம் நடந்தது. அதுக்குப் பிறகு தாலியை அறுத்து இருக்கீங்க தாலி கட்டியிருந்த போது உங்கள் வாழ்க்கை நிலையும் தாலி அறுத்ததற்கு பிறகு உங்கள் வாழ்க்கை நிலையும் எப்படி இருக்கு?
நான் தாலி கட்டும்போது கிராமத்துல வாழ்ந்ததாலே பெரியாரியல் வாழ்வியலை பத்தி எதுவும் தெரியாது. அதனால தாலி கட்டித்திருமணம் பண்ண வேண்டியநிலை இருந்தது. இப்ப பெரியாரியல் வாழ்வியலைப் பத்தித் தெரிச்சுக்கிட்டேன். அதனால் பெண்கள் இப்படித்தான் சுதந்திரமாக இருக்கணும் அடிமையாய் இருக்கக்கூடாது அப்படிங்கறதை நான் உணர்ந்தேன். தாலியை அகற்றினேன் சந்தோஷமாக இருக்கிறேன். பெண் விடுதலைக்கு பெரியாரியல் வாழ்வு சரியானதா இருக்குது.
பெண் விடுதலை பத்தி என்ன நினைக்கிறீங்க?அவங்க எந்த மாதிரி இருந்தா சரியானதா இருக்கும்னு நினைக்கிறீங்க?
ஒரு பெண் வந்து சுயமரியாதையோட சுதந்திரமா வாழணும். இப்ப தாலி கட்டிக்கூட ஆண்களுக்கு அடிமையாய் இருக்கிற பெண்கள் நிறைய பேர் இருக்காங்க. பெண்களுக்கு மட்டும் கல்யாணத்துக்கு தாலி கட்டுறாங்க. இவளுக்கு திருமணம் ஆகிருச்சு அப்படின்னு மத்தவங்களுக்கு தெரியறதுக்கு தாலி போடுறாங்க. ஆனால் ஆண்களுக்கு எந்த ஒரு அடையாளமும் இல்லை. ஒரு சில கிராமப் பகுதியில மட்டும் திருமணத்துக்கு ஆண்களுக்கு காலில் மெட்டி போடுவது வழக்கம். ஆனா அவங்க திருமணம் முடிச்சு ஒரு வார காலத்திலேயே அதையைக் கழட்டிடுவாங்க. ஏன்னா அதையே போட்டுட்டு வெளியே போறதுக்கு கூச்சப்படுவாங்க.
ஆனால், பெண்கள் மட்டும் காலத்துக்கும் அவங்க கட்டுன தாலியைச் சுமந்துட்டு இருக்கணும். கணவன் இறந்த பிறகு அந்த பெண்ணை ‘விதவை’ ன்னு சொல்றாங்க ஆனால் மனைவி இறந்தததுக்குப் பிறகு கணவனை யாரும் ‘விதவன்’ னு சொல்றதில்லை. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி ஒரு பெண் வந்து ‘கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன்’ அப்படிங்கிற பழமொழியைச் சொல்லி வாழ்ந்துட்டு இருப்பாங்க. அந்த மாதிரி அடிமையாய் இல்லாமல் சுயமரியாதையோட இந்தச் சமூகத்துல வாழக் கத்துக்கணும்.
தோழர் விஜயனிடம்
என்னுடைய பெயர் விஜயன் ஊர் பல்லடத்துக்கு அருகில் சுக்கம்பாளையம் என்னுடைய துணைவியார் ஜெய்சாந்தி, எங்களுடைய மகன் சமர்.
உங்களுடைய திருமணம் ஜாதி மறுப்பு திருமணமா?திருமணம் எப்போது நடந்தது?யாருடைய தலைமையில் நடந்தது?
என்னுடைய திருமணம் 2008 பிப்ரவரி 18-ல் நடந்தது. எங்களுடைய திருமணம் ஜாதிமறுப்பு திருமணம் இல்லை. ஆனால் சடங்கு மறுப்புத் திருமணம். த.பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் நடந்தது. தாலி மட்டும் கட்டணும் அப்படிங்கிற நிர்பந்தத்தில் தாலி மட்டும் கட்டி சடங்குகளைத் தவிர்த்து திருமணம் நடந்தது.
நீங்க தோழர் சாந்தி வீட்டுல எதுக்காக தாலி கட்டாம திருமணம் பண்ணனும் அப்படிங்கிற விஷியத்தை எடுத்து சொல்லி புரிய வைச்சீங்களா?
ஆமாம் நான் நிறையச் சொன்னேன். ஆனாலும் அந்த ஊர் குக்கிராமம். அங்க வந்து பெரியாரியல் வாழ்வு, தாலிமறுப்பு, இந்துமத எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு அப்படிங்கிற செய்திகளை யாருமே கொண்டு போகாததால் அதைப்பற்றி அவுங்களுக்குத் தெரியலை. நான் தாலியைப் பத்தி எடுத்துச் சொன்னப்பக்கூட அதை ஏத்துக்கிற மனநிலை அவங்ககிட்ட இல்லை.
தாலியை பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு எப்படி வந்தது?
பெரியாரியல் அமைப்பைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். அதனால தாலி, பெண் அடிமைத்தனத்தைக் காட்டுது. ஜாதியைக் காட்டுது. தாலியில்லாத பெண்களை முண்டச்சீன்னு சொல்றாங்க இந்த மாதிரியான இழிவுச் சொற்கள் நிறைய வருது. தாலி வந்து இந்துப் பண்பாடு. பெரியாரியல் வாழ்வுக்கும், சமத்துவத்துக்கும் தாலி எதிரானதுன்னு நினைச்னேன். திருமணத்தக்குப் பிறகு எனது துணைவியாருக்கும் அதைப் புரிய வைத்து 2012 ல் நாங்க தாலியை அறுத்தோம்.
தாலியை நீங்க எப்ப எந்த நிகழ்ச்சியில் அறுத்தீர்கள்?
2012 ல் திராவிடர் விடுதலைக் கழகம் மனுசாஸ்திர எதிர்ப்பு மாநாட்டை நடத்தியது. டிசம்பர் 24 இறுதி நிகழ்வுல நானும் என்னுடைய துணைவியாரும் தாலி அகற்றலாம் அப்படின்னு முடிவு எடுத்தோம் அந்த மாநாட்டுல தோழர் திருமாவளவன், தி.வி.க.தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர். தோழர் விடுதலை இராஜேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சம்பத், தோழர் ஓவியா இவங்க எல்லாரும் இருந்தாங்க. பெண் அடிமைச் சின்னத்தையும் இழிவுச் சின்னத்தையும் அகற்றணும் இந்த இந்து வாழ்வியலை முற்றிலுமாகத் துறந்து பெரியாரியல் வாழ்வை முழுமையாகக் கடைபிடிக்கனும் அப்படின்னு நாங்க ரெண்டுபேரும் முடிவு பண்னி அவங்க முன்னிலையில் நான் கட்டின தாலியை நானே அறுத்தோம்.
தாலி அடிமைச்சின்னம் அப்படிங்கிறதப் பத்தி தோழர் சாந்திக்கிட்ட பேசுனப்ப அவங்க எந்த மாதிரி எடுத்துக்கிட்டாங்க?
திருமணத்துக்கு முன்னாடி தாலியை பத்தி நான் சொன்னப்ப அதைய அவங்கனால ஏத்துக்க முடியலை. திருமணத்துக்கு பிறகு தோழர் சாந்தி அமைப்புல என்னோட இணைந்து செயல்படுகிறதால தாலியைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டாங்க. .தாலியைப் பத்தி நிறையப் பேசி இருக்கோம் சாதியக்கொடுமை, பெண் விடுதலை இதைப்பத்தி நிறையப் பேசி இருக்கோம். தொடர்ந்து பேசுறதால நிறைய புரிச்சுக்கிட்டாங்க. தாலியை அகற்றணும் அப்படிங்கறதுல அவுங்களும் ஆர்வமா இருந்தாங்க. ஆனால் உறவினர்கள் மத்தியில் மட்டும் ஒரு அதிருப்தி இருந்தது. இப்ப அவுங்ககிட்ட தப்புன்னு சொல்றாங்க. உறவினர்கள்கிட்ட கூட தாலி, மெட்டி அவசியமற்றதுன்னு தொடர்ந்து பேசுறாங்க.
நாங்க பெரியாரியல் வாழ்வியலோட வாழ்ந்து வர்றதால உறவினர்களுடைய சடங்கு சம்பிரதாய நிகச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறோம். அதனால எங்களுக்கு ஒரு பெரிய விஷியமா இல்லை. அடிமைச் சின்னத்தை அகற்றினோம் அப்படிங்கிற சந்தோஷத்தோட இன்னைக்கு வரைக்கும் இருக்கோம்.
தாலி இந்து மதஅடையாளம், தமிழர் பண்பாடு அப்படின்னு சொல்றாங்க. அதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
எதைய தமிழர் பண்பாடுன்னு சொல்றாங்க. எனக்குத் தெரிஞ்சு என்னுடைய பாட்டி தாலி கட்டல அதுக்கு முன்னாடியும் ரொம்ப வயதான பாட்டிகளைப் பார்க்கும்போது தாலி கட்டாமத்தான் இருந்தாங்க. வாழ்ந்தாங்க. அவங்க வந்து பவள பாசின்னு சொல்வாங்க. அதைய மட்டும் தான் போட்டுட்டு இருப்பாங்க காலப் போக்குல தாலி கட்டாயம் அப்படின்னு சொன்னாங்க. தாலி கட்டினாங்க. அப்புறம் மந்திரம் ஓதுற அளவுக்கு பார்ப்பானக் கூட்டிட்டு வந்து அதுக்கு அப்புறம் தாலி கட்றாங்க. இது எப்படி தமிழர் பண்பாடாக் கருதமுடியும்.
நீங்க பணியாற்றிய அமைப்பு சார்புல தாலி அகற்றணும் இது பெண்களின் விடுதலைக்கான ஒரு வேலைத்திட்டம் அப்படின்னு ஏதாவது வேலைகளை செஞ்சீங்களா?இல்லை அதற்கான முயற்சிகள் ஏதும் மேற்கொண்டீர்களா?
சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் சார்புல 2015-ல் தாலி அகற்றுதல் மற்றும் மாட்டுக்கறி உண்ணுதல் விழா சூலூரில் அரங்கு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்தோம் அந்த அரங்கு உரிமையாளர்கிட்டேயும், ஆதரவாளர்கிட்டேயும் இந்துமத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிச்சது அதனால நிகழ்ச்சி நடத்த அரங்கு குடுக்க அந்த உரிமையாளர் மறுத்தாங்க. காவல்துறையும் அனுமதி கொடுக்க மறுத்தாங்க அதனால அந்த நிகழ்ச்சி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
மறுபடியும் நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்து அதை நடத்த வேண்டும் என்கிற எண்ணம் இருக்கு ஆனாலும் அந்தத் தேதியில் சென்னையில் பெரியார்திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி அவர்களின் தலைமையில் தாலி அகற்றுதல் மற்றும் மாட்டுக்கறி உண்ணும் விழாவும் நடந்தது. இந்துமத எதிரிகளிடமிருந்து எதிர்ப்பையும் மீறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று அந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தது. அந்த நிகழ்ச்சி எங்களைப் போன்ற பெரியாரியல் வாதிகளுக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.
நாம் தமிழர் கட்சியில தாலிங்கிறதை இரண்டு பேரும் அணுஞ்சுக்கலாம் ‘அ’ அப்படிங்கிற ஒரு எழுத்துல ரெண்டுபேரும் ஒரு செயின்ல ‘அ’ இங்கிற டாலரோட போட்டுக்கலாம் அப்படின்னு சொல்றாங்க அதைபத்தி என்ன நினைக்கிறீங்க?
அது எப்படிங்க? பக்கத்துல ஒருத்தர் மலத்தை பூசிக்கிறான்னு சொல்லி நாமும் பூச முடியுமா? அது நாறும் அந்த மாதிரிதான் அடிமைச்சின்னமே இருக்கக்கூடாதுன்னு சொல்றோம்.
முதல்ல ஆணுக்கோ, பெண்ணுக்கோ எதுக்காக திருமணம் ஆனவங்க அப்பிடிங்கற அடையாளம் வேணும்? இந்தத் திருமண உறவுல சிக்கல் வந்துவிட்டது; பிரிந்து போகலாம் என்றால், அப்படிப் பிரிந்து விடக் கூடாது, இவள் ஏற்கனவே திருமணம் ஆனவள் அல்லது இவன் ஏற்கனவே ஆனவன் என்ற தடை போடுவதற்குத் தான் இந்த அடையாளங்கள் பயன்படும்.
அப்படிங்றப்போ ஆணும், பெண்ணும் ‘அ’ எழுத்து போட்ட டாலர் செயின் மட்டும் போட்டா, அது அடிமையாக இருக்காதா? கண்டிப்பா அதை உடைக்கனும். பெரியார் பண்பாடு ஆகட்டும் மற்ற முற்போக்கு அமைப்புகளுடைய வேலைகள் ஆகட்டும் ஒரு செயின்ல வந்து ‘அ’ எழுத்துப் போட்டு இருக்கிறதை அணிஞ்சுகுறதுல வந்து மீண்டும் அடிமைத்தனத்தை உருவாக்குமே தவிர பெண் விடுதலையோ, மத விடுதலையோ, சாதி விடுதலையோ கட்டாயமா உருவாக்க முடியாது.
தாலியில ஜாதி அடையாளம் இருக்கா? நீங்க பார்த்து இருக்கீங்களா?
கட்டாயமா இருக்குது. இப்பவும் நம்ம நகை கடைக்கு போயி திருமணத்துக்குத் தாலி கேட்டா, அவங்க வரிசையா எடுத்து வைப்பாங்க. இது கவுண்டர்களுக்கு இது செட்டியார், இது தலித் உட்பிரிவுக்கான தாலி இந்த மாதிரி பட்டியல எடுத்து வைக்கிறாங்க. இதுல நீங்க எந்த மாதிரி அணிஞ்சுக்குவீங்கன்னு கேட்கறாங்க ஜாதி கேக்கறாங்க. அதனால, ஜாதியையும், இழிவான இந்து மதத்தையும் அடையாளப்படுத்தும் இந்தத் தாலியை அறுத்ததில்பெருமையா இருக்கிறது.