இப்போது பத்திரிகைகளில் பரபரப்பான இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது - சபரிமலை அய்யப்பன். நடிகைகளோடு அய்யப்பனை இணைத்துப் பேசப்படுவதால்தான் “ஆண்டவனுக்கு” இந்த “யோகம்” அடித்திருக்கிறது. நடிகைகள் மட்டும் இல்லாவிட்டால் “தினத்தந்தி”களுக்கு அய்யப்பன் தலைப்புச் செய்தியாக வந்திருக்க மாட்டான். நடிகைகள் ஜெயமாலா, சுதாசந்திரன், தேவபிரசன்னம் பார்த்த உன்னி கிருஷ்ணபணிக்கர், மேல் சாந்தி, கீழ் சாந்தி என அழைக்கப்படும் அய்யப்பன் கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் இவர்களை மய்யமாக வைத்து, மாறி மாறி திகைக்க வைக்கும் குற்றச் சாட்டுகள் வீசப்படுகின்றன. இந்த நிலையில், கேரளாவில் ஆட்சியிலிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறநிலையத்துறை அமைச்சர் - இது, ‘தேவஸ்வம்போர்டு’ சந்திக்க வேண்டிய பிரச்சினை என்கிறார்.
‘சுனாமி’ பேரழிவைவிட மக்களை பாதித்துள்ள பிரச்சினையாக ‘அய்யப்பன்’ பிரச்சினையை இந்த ‘அறிவார்ந்த’ சமூகம் பேசி வருகிறது. நாட்டில் பரப்பப்பட்டுவரும் இந்தப் பிரச்சினை பற்றி ‘மார்க்சியம்’ பேசுவோர், பகுத்தறிவு கண்ணோட்டத்தில் கருத்துகளை முன் வைக்கத் தயாராக இல்லை. கலைஞர் மட்டும் பகுத்தறிவுப் பார்வையோடு, அய்யப்பன் கோயிலில் நிகழும் மகளிர் அவமதிப்பைக் கண்டித்து ‘முரசொலி’ யில் கவிதைத் தீட்டியிருக்கிறார்.
அய்யப்பன் கடும் கோபத்தில் இருப்பதாக உன்னி கிருஷ்ணன் பணிக்கர் கூறியிருக்கிறார். தான் கோபமாக இருப்பதாக உன்னி கிருஷ்ண பணிக்கரிடம் அவர் ‘தேவபிரசன்னம்’ கேட்டபோது கூறினானாம். ‘சக்தி’ வாய்ந்த சபரி மலையான் தனது சக்தியைப் பயன்படுத்தி, நேரடியாகக் குற்றங்களைக் களைய முடியவில்லை.
உன்னிகிருஷ்ண பணிக்கர் எப்போது வருவார், அவரிடம் தனது மனக்குறைகளைக் கொட்டி அழலாம் என்று அய்யப்பன் காத்துக் கொண்டு இருந்திருக்கிறான் போலிருக்கிறது. பக்தர்கள் விரதமிருந்து தங்கள் கோரிக்கை மனுக்களை எடுத்துக் கொண்டு அய்யப்பனிடம் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அய்யப்பனோ, தனது கோரிக்கைகளை முன் வைக்க, உன்னி கிருஷ்ண பணிக்கரின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்கிறான்.
இந்த உன்னி கிருஷ்ண பணிக்கர் ஜெயலலிதாவுக்கே ‘பிரசன்னம்’ பார்த்து, ஆட்சிக்கு வருவதற்கான பரிகாரங்களைக் கூறி வந்தவர். அவரது ஆலோசனை வழிகாட்டுதல்களோடு செயல்பட்ட ஜெயலலிதா, கடைசியாக, ஆட்சியை இழந்து போய் நிற்கிறார். பழனி முருகனிடமும் இதேபோல் ‘தேவபிரசன்னம்’ கேட்டவர்தான் இந்த உன்னிகிருஷ்ணன். அவரது ஆலோசனைப்படி தான் ‘நவபாஷாணத்தால்’ (மூலிகைகளால்) செய்யப்பட்ட ‘முருகன்’ சிலைக்கு, கோயில் நிர்வாகம் அபிஷேகங்களை நிறுத்தி வைத்தது. ‘நவபாஷாண’ சிலைக்கு பதிலாக, ‘அய்ம் பொன்னால்’ செய்யப்பட்ட முருகன் சிலையை வைக்க பணிக்கர் ஆலோசனை கூறினார்.
அதாவது தன்மீது ஒவ்வொரு நாளும் ‘அபிஷேகம்’ நடத்தி, பக்தர்கள், தன்னைக் ‘கரையச் செய்து’ வருவதை பொறுக்க முடியாமல் பணிக்கர் வருகைக்காகக் காத்திருந்த பழனி முருகன், அவரிடம் கண்ணீரோடு முறையிட, உடனே பணிக்கர் மாற்று முருகனை நிறுவ ஆலோசனை வழங்கினார். சித்தர் வழி பக்தி மரபை ஒழிக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த ‘சுமார்த்த’ப் பார்ப்பனரும், கொலை வழக்கு குற்றவாளியுமான காஞ்சிபுரம் ஜெயேந்திரனும் இதற்கு உடந்தையானார். ஆனால், ‘தேவபிரச்சன்னங்களை’ நம்ப மக்கள் தயாராக இல்லை.
மக்கள் எதிர்ப்பின் காரணமாக பணிக்கர் ஆலோசனைகள் கைவிடப்பட்டன. ஏனென் றால், ஆண்டவன் கோபத்தைத் தணிக்க பரிகாரங்கள் இருக்கின்றன. புரோகிதப் பார்ப்பனர்களை வைத்து யாகங்களை நடத்தி அவர்களுக்கு, பணத்தையும் பொருளையும் வாரி வழங்கினால், ‘ஆண்டவன்கள்’ தங்களது கோபத்தை எல்லாம் குறைத்துக் கொண்டு விடுவார்கள். காரணம் கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரம் ‘பிராமணருக்கு’ கட்டுப்பட்டது எனவே கடவுளே “பிராமணருக்கு”க் கட்டுப்பட்டவர் தானே! ஆனால், மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாதே; அது ஓட்டுப் பெட்டிக்குள் எதிரொலிக்குமே!
உன்னி கிருஷ்ண பணிக்கர் - ‘குமுதம்’ ரிப்போர்ட்டர்’ வார ஏட்டுக்கு (ஜூன் 29) ஒரு பேட்டி அளித்துள்ளார். சுவாரசியமும், பரபரப்பும் நிறைந்த அந்தப் பேட்டி பல உண்மைகளைப் “புட்டுப் புட்டு” வைக்கிறது.
தன்னிடம் தேவசம்போர்டு அதிகாரிகள் அய்யப்பனிடம் ‘தேவப்பிரசன்னம்’ பார்க்கக் கேட்டபோது, “நான் உண்மைகளைத்தான் வெளியிடுவேன். நான் கூறுவதை மறைக்கக் கூடாது” என்று நிபந்தனை போட்டாராம்! காரணம் - “கடந்த காலத்தில் தேவசம்போர்டு அதிகாரிகளும், நிர்வாகிகளும் என்ன நினைக்கிறார்களோ, அவர்கள் எதைச் செய்ய விரும்புகிறார்களோ அது அப்படியே பிரச்சன்னத்திலும் வர வேண்டும் என்று விரும்பி அதன்படியே செய்தும் வந்திருக்கிறார்கள்” என்று பணிக்கர் கூறியிருக்கிறார்.
அதாவது தங்களின் விருப்பங்களைப் பட்டியல் போட்டுக் கொண்டு அதை அய்யப்பனின் விருப்பமாக அறிவித்து வந்திருக்கிறார்கள். சர்வசக்திக் கொண்ட புலியைப் புரட்டிப் போட்ட அய்யப்பனும், வாலைச் சுருட்டிக் கொண்டு ‘பூனை’போல் இந்த மோசடியைப் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறான் பாருங்கள்!
சரி; அய்யப்பனுக்கு - அர்ச்சகர்களாக இருக்கும் “மேல் சாந்தி” என்ற நம்பூதிரிப் பார்ப்பனர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்ற ‘சூடும் சுவையும்’ நிறைந்த தகவலையும், பணிக்கர் வெளியிட்டிருக்கிறார். ஆகமத்தை மீறப்படாது என்று ‘சிண்டை’ சிரைத்துக் கொண்டு, மொட்டையோடு ‘வைதீக மீறலை’ச் செய்துக் கொண்டிருக்கும் துக்ளக் சோ, அய்யப்பன் ‘சன்னிதானத்தில்’ நடக்கும் ஆகமமுறைகேடுகளை கண்திறந்து பார்க்குமாறு பரிந்துரைக்க விரும்புகிறோம்.
“மேல் சாந்தி என்பது மிக உயரிய புனிதமான ஒரு பதவி. இப்பதவியில் இருப்பவர் உரிய தகுதியும், பண்பும் உள்ளவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவரை முழுக்க முழுக்கத் தகுதியின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். (ஆனால் - நம்பூதிரிப் பார்ப்பனராக இருக்க வேண்டும் என்பது மட்டும் அடிப்படையான தகுதி) இதன்படி முந்நூறுக்கும் மேற்பட்ட நம்பூதிரிகள் தேர்வில் கலந்து கொண்டு, அதில் நுறு பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவர்களுக்கு ‘இண்டர்வியூ’ நடத்தி அதில் பத்துபேரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் அனைவரின் பெயரையும் தனித்தனியே துண்டுச் சீட்டில் எழுதிப் போட்ட, பின்பு குலுக்கல் மூலம் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இங்கேதான் கடந்த ஆட்சியின் போது (கேரளாவில்) அரசியல் புகுந்தது. அந்தப் பத்து சீட்டிலும் ஒருவரின் பெயரையே எழுதி அவரைத் தேர்ந்தெடுங்கள் என்று அரசு குறிப்பிட்ட ஒருவருக்காக நிர்ப்பந்தித்திருக்கிறது” என்கிறார், பணிக்கர்.
கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் ஆட்சிக்குக் கூட ஒரு உண்மை தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதாவது, ‘அய்யப்பன் என்பதெல்லாம் சுத்தப் பொய்; எனவே எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம்; அங்கே காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஒரு நம்பூதிரிப் பார்ப்பனர் இருப்பதே, ஆட்சிக்கு நல்லது’ என்ற தெளிவான முடிவோடு காங்கிரஸ் கட்சியும் செயல்பட்டிருக்கிறது. அதேபோல் ‘மேல் சாந்தி’ பதவிக்கு வரத் துடித்த பார்ப்பனரும், ‘அய்யப்பன்’ சக்தியைவிட ஆளும் கட்சியின் ‘சக்தி’ தான் தனக்குப் பயன் தரும் என்பதில் உறுதியாகவே இருந்திருக்கிறார்.
தன்னிடம் ‘பிரசன்னத்தில்’ கழுதைகள் பற்றிக்கூட அய்யப்பன் கூறியதாக பணிக்கர் கூறியுள்ளார். “பூசைக்குத் தேவையான பொருள்களைக் கழுதைகள் மூலம் கொண்டு வரக்கூடாது; வரும் வழியில் காட்டு விலங்குகளால் தாக்கப்பட்டு பல கழுதைகள் இறந்து விடுகின்றன. சில ரத்தக் கறைகளுடன் வந்து சேருகின்றன. அதை அய்யப்பன் ஏற்கவில்லை” என்கிறார் பணிக்கர். தனக்கு பூசைப் பொருள்களைக் கொண்டுவரும் கழுதையை, காட்டு விலங்குகள் தாக்காமல், புலியை அடக்கிய அய்யப்பன் தடுத்திருக்கக் கூடாதா என்று பணிக்கர், அய்யப்பனிடம் கேட்டிருக்கலாம்! பரவாயில்லை.
ஆனால், “யார் எனக்கு பூசை செய்கிறார்களோ, அவர்கள்தான் எனக்கான பூசை பொருளையும் கொண்டு வரவேண்டும். கழுதைகள் மீது பூசைப் பொருள்கள் வரலாமா? அது தீட்டாகாதா? எனவே - கழுதைக்கு பதிலாக நம்பூதிரிகளே, பூசைப் பொருளை சுமந்து வரவேண்டும்.
‘கழுதை பூசைப் பொருள்களை சுமப்பது ஆகம விதியை மீறியதல்லவா?” என்று அய்யப்பன், தனது பிரச்சன்னத்தில் சொல்லியிருக்க வேண்டும். அதுதான் நியாயம். ஆனால், அய்யப்பனோ கழுதைக்கு பதிலாக ‘ரோப் கார்’ மூலம் அவற்றைக் கொண்டு வரலாம் என்று ‘பிரச்சன்னத்தில்’ கூறியதாக பணிக்கர் கூறியுள்ளார். இதுவும் நல்ல யோசனைதான். ‘
ரோப் கார்’ மூலம் (இழுவை ரயில்) பூஜைப் பொருள்களைக் கொண்டு வருவதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், அடுத்த பிரசன்னத்தில் அய்யப்பன் எடுத்துக் கூறலாம். ‘எல்.அன்.டி.’ நிறுவனத்திலோ அல்லது டாட்டா குழுமத்திலோ கணினி கட்டமைப்பில் செயல்படக் கூடிய ஒரு நவீன எந்திரத்தை வடிவமைக்க அய்யப்பன் பிரசன்னம் கூறலாம்.
அதற்கான ‘பட்ஜெட்’ விவரங்களையெல்லாம்கூட, அய்யப்பன் கூறலாம். ‘ரோப் கார்’ வரை நவீனத்துக்கு வந்துவிட்ட அய்யப்பனுக்கு, இவை எல்லாம் தெரியாமல் போய் விடுமா என்ன? இதை எல்லாம்விட, பூசைப் பொருள்களை சுமந்து வரும் கழுதைகளுக்கே காயத்ரி ஓதி மேல் சாந்தியாக்கிவிட்டால், அய்யப்பன் சன்னிதானத்தின் ஊழலை முற்றாக ஒழித்துக் கட்டிவிடலாம் என்ற ஒரு நல்ல யோசனையும் நம் கைவசம் இருக்கிறது. ஆனால் யார் கேட்கப் போகிறார்கள்?
அய்யப்பனை ஆத்திரத்தின் உச்சிக்குக் கொண்டுபோனது நடிகை ஜெயமாலாவும், நடிகை சுதாசந்திரனும் தான்! நடிகை ஜெயமாலா, 1987-ல் சபரிமலைக்குப் போய் அய்யப்பனைத் தொட்டு தரிசித்து, தெய்வ நிந்தனைக்கு ஆளாகி, இப்போது “குற்றத்தை” ஒப்புக் கொண்டும் விட்டார். அதேபோல் 1999-ல் நடிகை சுதாசந்திரன் - இதே குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொண்டுவிட்டார்.
19 ஆண்டுகளுக்கு முன்பும், 7 ஆண்டுகளுக்கு முன்பும், இந்த பெண்கள் தம்மை தரிசிக்க வந்து மாபெரும் குற்றத்தை இழைத்து விட்டார்கள்; அதாவது கழுதைகள் பூசைப் பொருள் கொண்டு வருவது எப்படிக் ‘குற்றமோ’, அதேபோல பெண்கள் அய்யப்பனை நேராக தரிசிக்க வருவதும் ‘குற்றம்’! சட்டத்தின் முன் - ஆண், பெண் வேறுபாடுகள் இல்லை என்றாலும், ‘அய்யப்பன்’ அதை ஏற்கத் தயாராக இல்லை என்கிறார்கள், அய்யப்பன் கோயில் நிர்வாகிகளும், மேல் - கீழ் சாந்தி வகையறாக்களும்! அங்கே நடக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களில் கேரள அரசு தலையிடாது என்கிறார், தேவசுவம் போர்டு அமைச்சர் ஜி.சுதாகரன்! அதாவது பெண்களுக்கு எதிரான ‘தீண்டாமை’ நடந்தாலும்கூட, வாய் திறக்க மாட்டார்களாம்! வாழ்க புரட்சி!
மலப்புரத்திலே, பேட்டி அளித்த உன்னிகிருஷ்ணன், ‘எனக்கு எதிரான (மேல் சாந்திகள் கூறும்) குற்றச்சாட்டுகள் எல்லாம் “பிராமண”ரல்லாதவருக்கு எதிராக, “பிராமணர்கள்” செய்துவரும் சதியின் ஒரு பகுதியேயாகும். நான் ‘பிராமணரல்லாதவராக’ இருப்பதால் தேவப் பிரஸ்தானத்தில் நான் கண்டறிந்து கூறியவற்றை அவர்கள் அங்கீகரிக்கத் தயாராக இல்லை” (தினமணி, ஜூன் 30) என்கிறார் பணிக்கர்!
‘அப்படி வாங்க, பணிக்கர் சார். கடைசியில், வரவேண்டிய இடத்துக்கு வலி தாங்காமல் வந்து விழுந்திட்டீங்களே’ என்று, பணிக்கருக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க முடியாது. அய்யப்பன் உட்பட - அத்தனை கடவுள்கள் மீதும் மக்கள் கொண்டுள்ள பக்தி நம்பிக்கையை மூலதனமாக்கி, சமூகத்தைச் சுரண்டும் கும்பல்களாகவே இந்த பணிக்கர்களும், நம்பூதிரிகளும் இருந்திருக்கிறார்கள்.
அவர்களுக்குள் ‘வர்த்தகப் போட்டி’ என்று வரும்போது, பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையைக் கையில் எடுக்கிறார்கள்! ஜெயலலிதாவுக்காக - பழனி முருக வழிபாட்டை பார்ப்பன மரபாக்க முயன்றவர் இதே பணிக்கர் தானே! இப்படி அய்யப்பனைச் சுற்றி நிற்கும் மர்ம முடிச்சுகளை எல்லாம் அவிழ்க்கக் கூடிய சக்தி ஒரே ஒரு நபரிடம் தான் இருக்கிறது. அந்த நபர் அய்யப்பனே தான்!
“பணிக்கர் கூறுவது உண்மையா? நான் கூறியதைத்தான் பணிக்கர் கூறினாரா? நம்பூதிரிகளின் மறுப்பு சரியா? அவர்கள் யோக்கியமானவர்களா? நடிகைகள் வந்து என்னைத் தொட்டு, என் திருமேனியைத் தீண்டிப் பார்த்தார்கள் என்பது உண்மை தானா?”
இந்தக் கேள்விக்கெல்லாம் விசாரணைக் குழு முன் தோன்றி அய்யப்பன் சாட்சியமளித்தால், பிரச்சினைகள் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். அப்போதும் ஒரு சிக்கல் இருக்கிறது. அப்படியே அய்யப்பன் வந்து நேராக சாட்சியமளித்தாலும், ‘வந்தது அய்யப்பன் இல்லை’ என்பார் பணிக்கர். இல்லை இல்லை அய்யப்பன் தான் என்பார்கள் மேல்சாந்திகள்! அப்புறம் அதற்கொரு விசாரணை போட வேண்டி வரும்!
“அடேங்கப்பா, என்ன ‘புரூடா’, என்ன ‘ரீல்’? நல்லா சுத்துறீங்கப்பா காதுல பூ!” என்று தான் நடுநிலையோடு, அறிவைப் பயன்படுத்துகிற எந்த சராசரி மனிதனும் கேட்கச் செய்வான்! இவ்வளவுக்குப் பிறகும் - பகுத்தறிவுள்ள, மானமுள்ள மனிதர்களும், சுயமரியாதையுள்ள பெண்களும், இந்தக் கடவுள்களை நம்பிக் கொண்டிருக்கத்தான் போகிறீர்களா? என்றே பெரியார் தொண்டர்கள் கேட்பார்கள்! ஏன் கேட்க மாட்டார்கள்? செவிப்பறை கிழியுமளவுக்கு கேட்கத்தான் செய்வார்கள்!