‘சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் உரிமை உண்டு” என்று செப்டம்பர் 28 அன்று வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஓ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய நால்வரும் ஒரே தீர்ப்பை வழங்கினர். அதே சமயம் இந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த பெண் நீதிபதி ‘இந்து மல்கோத்ரா” மாறுபட்டத் தீர்ப்பை வழங்கினார்.
முதன் முதலில், 1991 ஆம் ஆண்டு மகாதேவன் என்பவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கைத் தொடர்ந்தார்.
இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் மனம் புண்படுத்தும் விதமாக உள்ளது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது கேரள உயர்நீதிமன்றம்.
அதன் பிறகு 2006இல் இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இரண்டு ஆண்டுகள் கழித்து 2008இல் வழக்கை ஏற்று, அதன் பிறகு 7 ஆண்டு வழக்கை நிலுவையில் வைத்து அதன் பிறகு 2016இல் விசாரித்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனம் அமர்வு முக்கியமானத் தீர்ப்பை வழங்கியது.
இந்தத் தீர்ப்பை ஹிந்துத்வாவாதிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றார்கள். 10 வயதிற்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதைக் கடந்த பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற நிலையை மாற்றிப் பெண்களும் செல்லலாம், அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை இந்து மதவாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கக் கூடாது என்று வாதாடிய வழக்கறிஞர் சாய் தீபக் வைத்த வாதம் என்னவென்றால், ‘அய்யப்பனின் பிரம்மச்சரியம் கெட்டுவிடுமாம்”, ஏன் உங்கள் கடவுள் அய்யப்பன் பெண்களை காம கோணத்தில் தான் பார்ப்பாரா? அன்னையாக, தங்கையாக, அக்காவாகவெல்லாம் பார்க்க மாட்டாரோ? ஆப்போ கோளாறு எங்கே உள்ளது உங்கள் சிந்தனைக்கே!.
முன்பெல்லாம் கோவிலுக்கு ஆண்களை போக வேண்டாம் என்பார்களாம். ஏனென்றால் அங்கு தேவதாசிகள் இருப்பார்கள், அதனால் ஆண்கள் கெட்டுவிடுவார்களாம். இப்போது சபரிமலைக்கு பெண்களைப் போக வேண்டாம் என்கிறார்கள், ஏனென்றால் அங்கு அய்யப்பன் இருக்கிறாராம். இப்படி எல்லாம் முகநூலில் செய்திகள் பார்க்கின்றோம்.
ஏன் பெண்கள் செல்லக்கூடாது? அய்யப்பன் வெறும் பிரம்மச்சாரி அல்ல, ‘நைஷ்டிக பிரம்மச்சாரி” அப்படி என்றால் ‘வாழ்நாள் முழுவதுக்கும் பிரம்மச்சாரியாக இருப்பவர்’ என்பது பொருள். மாதவிடாய் இருக்கும் பெண்கள் கோவிலுக்கு வரக்கூடாது, கோவில் தீட்டாகிவிடும் என்பது இவர்களின் கருத்து. இது எவ்வளவு பெரிய கொடுமை! இயற்கை உயிர்களில் மனித இனம்பெண்ணினத்திற்கு வழங்கிய தனித்தன்மை தீட்டு என்றால் என்ன அசுத்தம் என்பது பொருள். அந்த மாதவிடாய் காலத்தில் பெண்களை தீண்டத்தகாதவர்களாக, அசுத்தமானவர்களாக வைத்திருக்கும் இந்த சமூகம் எவ்வளவு மோசமானது, இவற்றை படைத்தது கடவுள் என்றால் அந்த கடவுள் எவ்வளவு அயோக்கியர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். கடவுள் அனைவருக்கும் பொது என்றால் பெண்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடு இதன் பெயர் தான் பாரம்பரியம், கலாச்சாரம் என இதைத்தான் நாம் ஒழிக்க வேண்டும் முதலில்.
பெண்கள் விடுதலை பெற்றால் தான், ஆண்களும் சுதந்திரமாக இருக்க முடியும். இந்தச் சமூகமும் சுதந்திரமாக இருக்க முடியும் என்றார் தந்தை பெரியார். இந்த நாட்டில் ஓடும் ஆறுகள், நதிகளுக்கு பெண் பெயரை வைத்துக்கொண்டு, எண்ணற்ற பெண் தெய்வங்களை வழிபடும் பாரத மாதாகி ஜே! என்ற கோஷம் போட்டுக் கொண்டு பெண்கள் கூட செல்லக்கூடாது என்று சொல்வது தான் கலாச்சார காவலர்களின் ஹிந்துத்வம்.
ஹிந்து மதவாதிகள் நம்மைப் பார்த்து கேட்கும் கேள்வி நான் உயர்ந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஒரு நீதிபதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு நான் ஜெயலலிதாவை ஒருதலையாகக் காதலித்தேன் என்ற ஆசையை வெளிப்படுத்திய மார்கண்டேய கட்ஜூ சொல்கிறார். நீதிபதி தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிட்டனர், பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா தவிர இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்குமா என்று?
நியாயமான கேள்விதான். இப்படி ஒரு வழக்கை இஸ்லாமியப் பெண்கள் யாரேனும் வழக்கு தொடர்ந்தால், அதை நாம் வரவேற்போம், ஆதரிப்போம். மதங்கள் பெண்களைப் பொருளாகப் பார்க்கிறது, நாம் பாலின சமத்துவத்தையே கேட்கின்றோம்.
மாதவிடாய், தீட்டு என்று சொல்பவர்கள்தான் பகவதி அம்மனுக்கு விழா நடத்துகிறார்கள். அய்யப்பன் பிரம்மச்சாரி கடவுள் என்கிறார்கள் கேரளாவில் அய்யப்பனுக்கு மேலும் 4 கோவில்கள் உள்ளது, அதில் அய்யப்பனுக்கு இரண்டு மனைவிகள் உண்டு முதல் மனைவியின் பெயர் பூரணி, இரண்டாம் மனைவியின் பெயர் புஷ்கலை. அய்யப்பன் பிரம்மச்சாரி என்பதே புரட்டு. பிரம்மச்சாரி கடவுள் என்றால் எப்படி இரண்டு திருமணங்கள் நடந்தது. இதற்கு இவர்களிடத்தில் பதில் இல்லை, பதிலும் வராது.
எப்படி இருந்தாலும் வைதீகத்திற்கு கிடைத்த பெரும் அடிதான் இந்த தீர்ப்பு. சாமியே சரணம் அய்யப்பா! என்ற பெண்கள் குரல் முழக்கம் சபரிமலைக்குள் ஒலிக்கட்டும். வாழ்த்துகள்.
இத்தகையத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி சந்திரசூட் எல்லா பெண்களும் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்றார் இவர்களை மாத்திரம் வேற்றுமைப்படுத்துவது எவ்வகையில் நியாயம்? என்ற அறிவார்ந்த கேள்வியை கேட்டமைக்கும், வழிபடுதலில் பாலின வேற்றுமையை அறுக்கும் அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைக்கு எதிரானது: என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கும் நன்றி.
இப்படிப்பட்ட வரலாற்றுத் தீர்ப்பை எழுத அடிப்படைக் காரணமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் குழு தலைவர் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கருக்கும், தன் வாழ்நாள் முழுவதும் பெண்ணுரிமைக்காகப் போராடிய தலைவர் தந்தை பெரியாருக்கும் பெண்கள் நன்றி காட்ட வேண்டும்.
இந்தத் தீர்ப்பை மேல்முறையீடு செய்யமாட்டோம், பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல உரிய பாதுகாப்பு வழங்குவோம் என்று கூறி பல நெருக்கடிகளைச் சந்தித்து வரும் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டும். கோவிலுக்குள் பெண்கள் சென்றால் வெட்டுவோம், குத்துவோம், தற்கொலை செய்து கொள்வோம் என்று பேசுவது அடிப்படையில் அவர்களுக்குப் பயம் வந்து விட்டது, ஹிந்து மதத்தின் அடிபீடம் ஆடித்தான் போயிருக்கிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த வெற்றி! வெல்லட்டும் பாலியல் சமத்துவ, சமூக நீதி!!.