சபரிமலை அய்யப்பன் கோயிலில் இளம் வயது பெண்களை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சீராய்வு மனுவின் மீது அளித்த தீர்ப்பில் நீர்த்துப் போகச் செய்து விட்டது.
ஏற்கனவே அளித்த தீர்ப்பு வழியாகப் பெண்கள் கோயிலுக்குப் போக உரிமை கிடைத்தது. 7 பேர் கொண்ட அமர்வுக்கு வழக்கு விசாரணையை இப்போது மாற்றியுள்ளனர். இறுதி விசாரணையின் தீர்ப்பு வரும் வரை சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்லத் தடையில்லை என்றும், இப்போதும் உச்ச நீதிமன்றம் (பெரும்பான்மை தீர்ப்பு) தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆனால் கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி சபரிமலைக்கு வரும் இளம் பெண்களை காவல்துறையைப் பயன்படுத்தி தடுத்து வருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவியதற்குக் காரணம் சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதித்ததுதான் என்று கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினர் கருதுகிறார்கள்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சி நடத்திய உயர்மட்டக் குழு கூட்டத்தில் பெண்ணுரிமை கண்ணோட்டத்தோடு கோயிலுக்கு வந்த பெண்களுக்கு அரசு பாதுகாப்பு தந்திருக்கக் கூடாது. அதுவும் ஒரு தோல்விக்குக் காரணம் என்று குழு முடிவுக்கு வந்தது. இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது கடந்த கால முடிவிலிருந்து பின் வாங்கியதற்கு இதுவே காரணம் என்று தெரிகிறது.
எந்த சமூக சீர்திருத்தமும் சட்டத்தினாலோ, தீர்ப்புகளினாலோ வெற்றி பெற்று விட முடியாது. சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடமும் கட்சியினரிடமும் பரப்பி கருத்துருவாக்கம் செய்யப்பட வேண்டும்.
ஜாதி ஒழிப்பு - மத எதிர்ப்பு - மூடநம்பிக்கை எதிர்ப்பு - கடவுள் மறுப்பு கருத்துகளை மக்களிடம் பேசத் தேவையில்லை. அதைவிட ஆட்சிக்கு வருவதற்கான அரசியல் பிரச்சினைகளை மட்டுமே பேசினால் போதும் என்ற முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளே வந்து விடுவதால் இத்தகைய சட்டங்களை அமுல்படுத்துவதற்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் வருகின்றன. விழிப்புணர்வு பெறாத மக்கள் ‘நம்பிக்கை’களிலிருந்து விடுபடவும் மறுக்கிறார்கள். ‘உயர் ஜாதி ஏழை’களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.