கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்தியாவின் ஆயுத உதவி, இதோ, ஆதாரங்கள்!

ஈழத் தமிழர்கள் மீது முப்படைகளையும் ஏவி படுகொலை நடத்துகிறது சிறீலங்கா அரசு. சர்வதேச சமூகம் இதை வேடிக்கை பார்க்கிறது. ஈழத் தமிழர்கள் தான் போராளிகளாகி, இயக்கமாகி, தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்காக ராணுவத் தாக்குதல்களுக்கு பதிலடி தந்து வருகிறார்கள். எந்த நாட்டின் உதவியும் அவர்களுக்கு கிடையாது. ஆனால் சிறீலங்காவுக்கு...

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிடாது ஒதுங்கி நிற்கிறது என்று வெளியில் கூறிக் கொண்டு மறுபக்கத்தில் இந்தியா, சிறீலங்காவுக்கு ஆயுதங்களை வாரி வழங்குகிறது.

இதோ, அதற்கான ஆதாரங்கள்....

“இந்தியாவின் தார்மீக ஆதரவு தான் எங்களுக்குத் தேவை” என்று, சிறீலங்கா அதிபர் ராஜபக்சே வெளியில் பேசுகிறார். ஆனால், இந்தியாவோ, சிறீலங்காவுக்கு நவீன ஆயுதங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் வழங்கிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்புக்கான கருவிகளை மட்டுமே இந்தியா வழங்குவதாகக் கூறிக் கொண்டாலும், உண்மையில் தாக்கி அழிக்கக் கூடிய அதி நவீன ஆயுதங்களை, இந்தியா வழங்கிக் கொண்டிருக்கிறது. (Surces said, the ‘Supply of some clearly offensive weapons’ could not be ruled out)- இது இந்தியாவின் தேசிய நாளேடுகளில் ஒன்றான ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு, கடந்த செப்டம்பர் மாதம் (14.9.2007) வெளியிட்ட செய்தி:

நவம்பர் 2 ஆம் தேதி சிறீலங்கா ராணுவம் சர்வதேசப் பேச்சு வார்த்தைகளில் தமிழர்களின் பிரதிநிதியாகப் பங்கேற்ற சு.ப. தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்துக் கொன்று, பிணமாக்கியது. அந்தக் கண்ணீரின் சுவடுகள் மறைவதற்குள் அடுத்த ஏழு நாட்களிலே நவம்பர் 9 ஆம் தேதி இலங்கையின் அமெரிக்க தூதர் விழா நடத்தி, சிறீலங்காவுக்கு ஆயுதங்களை வழங்கினார். அந்த அமெரிக்க தூதரின் பெயர் ராபர்ட் ஓ. பிளாக் Robert O. Blake).

அவ்வளவும் சிறீலங்கா கப்பல் படைக்கான நவீன படகுகள், ஆயுதங்கள். விழா நடந்த இடம் திரிகோணமலை துறைமுகம். சிறீலங்கா அரசு சார்பில் கப்பல் படை தளபதி வசந்த கரன்னாகோடா அவைகளைப் பெற்றுக் கொண்டார். ‘சர்வதேச பயங்கரவாதத்தை’ முறியடிக்க, சர்வதேச நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்கலாம் என்று அமெரிக்கா, ஒரு சட்டத்தையே நிறைவேற்றி வைத்துள்ளது. (U.S. National Defense Authorisation Act) இந்த சட்டத்தின் 1206 ஆவது பிரிவின் கீழ் இந்த ஆயுதங்களை வழங்கியிருக்கிறது. இதன் மூலம் சிறீலங்காவின் கப்பல் படையின் வலிமை பல மடங்கு அதிகமாகியுள்ளது என்கிறார், அமெரிக்க தூதர். இதை படங்களுடன் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன சிறீலங்கா நாளேடுகள்.

‘அமெரிக்க எதிர்ப்பு’ தலையங்கங்களை தீட்டும் ‘இந்து’ பார்ப்பன நாளேடானாலும் சரி, தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானாலும் சரி, இப்படி அமெரிக்கா அதி நவீன ஆயுதங்களை வழங்குவதை மட்டும் கண்டிக்காமல், கண்களை மூடிக் கொள்கின்றன. மாறாக, ‘தமிழகத்திலிருந்து விடுதலைப்புலிகளுக்கு படகுகளில் பெட்ரோல் கடத்தப்படுகிறது. கெரசின் கடத்தப்படுகிறது. அலுமினிய ‘பால்ஸ்கள் போகின்றன. அய்யகோ, பயங்கரவாதம்’ என்று கூக்குரல் போடுகின்றார்கள்.

“சிறீலங்கா அரசு ஆயுதங்களை பாகிஸ்தானிடமோ அல்லது சீனா விடமோ கேட்கக் கூடாது. அவர்களுக்கு எந்த ராணுவத் தேவையானாலும் இந்தியாவிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் தருவோம். எங்களிடம்தான் வரவேண்டும். இந்த ஆசியப் பகுதியில் நாங்கள்தான் வலிமையான சக்தி.

சிறீலங்கா, பாகிஸ்தானிடமோ, சீனாவிடமோ ராணுவ உதவி பெறுவதை நாங்கள் விரும்ப மாட்டோம்”. (We are a big power in the region. We don’t want the Srilankan Government to go to Pakistan or China. Whatever may be their requirement, the Srilankan Government should come to us") இப்படி வெளிப்படையாக அறிவித்தது யார் தெரியுமா? இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் கலைஞரை சந்தித்துப் பேசிய பிறகு சென்னையில் அளித்தபேட்டி. பேட்டி அளித்த நாள் 31.5.2007. ‘பாதுகாப்பு கருவிகளை மட்டுமே வழங்குவோம்’ என்று பாதுகாப்பாக கூறிக் கொண்டாலும், வழங்குவது எல்லாம் தாக்குதல் ஆயுதங்கள்தான் என்ற உண்மைகள் அம்பலமாகி விட்டன.

அதே பேட்டியில் “தமிழ்நாட்டு மீனவர்களை சுடக் கூடாது என்று, சிறீலங்கா கப்பல் படையிடம் கூறிவிட்டோம். இனிமேல், தமிழக மீனவர்களை சுட மாட்டார்கள்” என்றும், எம்.கே.நாராயணன் கூறினார். அதற்குப் பிறகு, 25 முறை, தமிழக மீனவர்கள் சுடப்பட்டார்கள். சிறை பிடிக்கப்பட்டார்கள். நாராயணன் வாய் திறக்கவில்லை. இவர் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரா? சிறீலங்காவின் பாதுகாப்பு ஆலோசகரா?

ஈழப் பிரச்சினையிலிருந்து இந்தியா விலகிக் கொண்டு விட்டது என்று கூறிக் கொண்டே 2000 ஆம் ஆண்டில் சிறீலங்காவுக்கு சக்தி வாய்ந்த போர்க் கப்பலை வழங்கியது. இந்தியா, சிறீலங்காவிடம் உள்ள வலிமை மிக்க போர்க் கப்பல் இது ஒன்றுதான். அணு ஆயுதக் கருவிகளையும், ஏவுகணைகளையும் கொண்டது இந்த போர்க் கப்பல். இந்தக் கப்பலின் பெயர் அய்.என்.எஸ். சரயு.

பிறகு இது எஸ்.எல்.என்.எஸ். சயுரா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தப் போர்க்கப்பலில் பயன்படுத்தக் கூடிய நவீன தாக்குதல் ஆயுதங்களையும், அவ்வப்போது இந்தியா வழங்கி வருகிறது. ஏராளமான தமிழ்ப் போராளிகளை கடலில் பிணமாக்கியது, இந்தக் கப்பல்தான். தமிழர்களை கடலில் பிணமாக்கிவிட்டு, இந்தக் கப்பல் திரும்பியபோதெல்லாம் ராஜபக்சே, இந்தியா வழங்கிய... இந்த கப்பலுக்கு வரவேற்பு விழாக்களை நடத்தி மகிழ்வது வழக்கம்.

அதே 2000 ஆம் ஆண்டில் இந்தியா மற்றொரு யுத்தக் கப்பலையும் வழங்கியது. அதன் பெயர் ‘வார்ஷா’. இந்தியா வழங்கிய வார்ஷா கப்பலின் நீளம் 75 மீட்டர். இதை ஓட்டுவதற்கு 100 மாலுமிகள் தேவை. கடும் வேகத்தில் (8500 கடல் மைல்) பயணிக்கக்கூடியது. இப்போது மூன்றாவது கப்பலையும் இந்தியா வழங்கியுள்ளது. இதன் பெயர் ‘புளூவாட்டர்’.

அமெரிக்கா வழங்கிய நவீன ஆயுதங்கள் இந்தப் போர்க் கப்பல்களில் பொறுத்தப்பட்டு கடலில் தமிழர்களை பிணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே இந்தியா வழங்கிய எஸ்.எல்.என்.எஸ். சயுரா போர்க்கப்பலை இந்தியா பழுது பார்த்து சீரமைத்துத் தந்திருக்கிறது. கொழும்பிலிருந்து வெளிவரும் ‘தி நேஷன்’ ஆங்கில நாளேடு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி (25.2.2007) இந்த செய்திகளை வெளியிட்டுள்ளது.

தாக்குதல் கருவிகளை வழங்க மாட்டோம் என்று கூறிக் கொண்டே, இப்படி போர்க் கப்பல்களை மன்மோகன்சிங் வழங்கலாமா? என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக விடுத்த அறிக்கை ஒன்றின் வழியாக தங்கள் வேதனையை வெளிப்படுத்தினார்கள். போர்க் கப்பல்களை வழங்காதீர்கள் என்று இந்தியாவுக்கு வேண்டுகோள் வைத்தார்கள். ஆனால் மன்மோகன்சிங் ஆட்சி, தனது ஆயுத உதவியைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஒரு பக்கம் ஈழத் தமிழர் பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் தான் தீர்க்க வேண்டும் என்று கூறிக் கொண்டு, மற்றொரு பக்கத்தில் சிறீலங்காவை ராணுவ ரீதியாக வலிமைப்படுத்திக் கொண்டிருப்பது பார்ப்பன அணுகுமுறை அல்லவா? இந்துக்களைப் புண்படுத்தக் கூடாது என்று கூறிக் கொண்டு, பார்ப்பனரல்லாதவர்களை ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் நடைமுறைக்கும் இந்திய அரசின் அணுகுமுறைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

“சிறீலங்காவுடன் இந்தியா நல்லுறவு கொண்டுள்ளது. அந்த நாட்டின் ராணுவத்துக்கு இந்தியா தொடர்ந்து ராணுவப் பயிற்சி அளித்து வருகிறது. அந்த நாடு, ராணுவ உதவி அளிக்குமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து நவீன ஆயுதங்கள், துப்பாக்கிகளை அளித்து வருகிறோம். வான்வெளி தாக்குதலை எதிர்த்துப் போரிடும் நவீன துப்பாக்கிகளும் வழங்கப்படுகின்றன”.

இப்படி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருப்பவர் யார்? இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி தீபக் கபூர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கடந்த அக்.28 ஆம் தேதி அளித்த இந்த பேட்டி அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது. (29.10.2007 ‘தினத்தந்தி).

உளவுத் துறை வழியாகவும், ராணுவ உதவிகள் வழியாகவும் இந்தியாவின் உதவி, சிறீலங்காவுக்கு கிடைத்து வருகிறது. இந்த உதவிகள் மட்டும் கிடைக்காமல் போயிருக்குமானால், சிறீலங்காவின் கடல்படை, இவ்வளவு வெற்றிகளைக் குவித்திருக்கவே முடியாது.

சிறீலங்கா விமானப் படைக்கும், அண்மைக் காலமாக இந்தியா பேருதவிகளை செய்து வருகிறது. [intelligance and equipment] by the Indian Government, the SLN would not have achieved its success. The SLAF, too is receiving much support in recent times) இப்படி செய்தி வெளியிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கிறது - ‘தி நேஷன்’ ஆங்கில நாளேடு. இது கடந்த வாரம் வெளியிட்ட செய்தி (18.11.2007)

மனித உரிமைக்கான அய்.நா. ஆணையர் லூயி ஆர்பர் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களைப் பற்றிய புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து நேரில் பார்வையிடச் சென்றார். அவரை ராஜபக்சேவுக்கு அடுத்த நிலையில் அதிகாரச் செல்வாக்குடன் திகழும், ராஜபக்சே ஆலோசகரும், அவரது சகோதரருமான பசில் ராஜபக்சே நேரில் சந்தித்து இவ்வாறு கூறினார்: “அய்.நா. எங்களுக்கு இப்போது உதவிட முன்வரவேண்டும். மனித உரிமை மீறல்களை கண்காணிக்கக் கூடாது. இந்தியாகூட இப்போது மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதை நிறுத்திவிட்டு, சிறீலங்காவுக்கு உதவிகளை செய்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

'தி நேஷன்’ ஆங்கில நாளேடு (14.10.2007) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தமிழர்கள் படுகொலை செய்யப்படும்போது 

செஞ்சோலையில் குழந்தைகள் குண்டு வீசி கொல்லப்பட்டபோது 

சமாதானப் பேச்சுக்கு தலைமை தாங்கிய சு.ப. தமிழ்ச்செல்வன் குறி வைத்து கொல்லப்பட்டபோது

கண்டனம் தெரிவிக்காத இந்திய அரசு, சிங்கள ராணுவத் தளபதி பொன் சேகர தாக்குதலுக்கு உள்ளானபோது, பதறியடித்து, கண்டனத்தைத் தெரிவித்ததன் காரணம், இப்போது புரிகிறதா? சிறீலங்காவின் ராணுவ அடக்குமுறைகளுக்கு மனித உரிமை மீறல்களுக்கு இந்தியா பச்சைக் கொடி காட்டிவிட்டது என்பதை, சிறீலங்காவின் உயர் அதிகாரத்திலுள்ள பசில் ராசபக்சேவே இப்போது பகிரங்கப்படுத்திவிட்டார்.

தமிழர்களே, இந்த அநீதிகளைத் தட்டிக் கேட்கவாவது, நாம் முன் வர வேண்டாமா? இதிலும் வாயைப் பொத்திக் கொண்டு ஆமையாய், ஊமையாய் போனால், நாம் தமிழர்களாய் பிறந்ததற்கு, ஏதேனும் அர்த்த முண்டா? அடையாளமுண்டா?

தமிழர்களுக்கு எதிராக தோள்தட்டிப் புறப்பட்டிருக்கும் பார்ப்பன சக்திகளுக்கு எதிராக உரத்துக் குரல் கொடுப்போம் வாருங்கள்!