ஈழத் தமிழர்களின் உரிமைகளைத் தீவிரமாக முன்னெடுக்க 1971இல் தமிழ் மாணவர் பேரவையும், 1972இல் தமிழ் இளைஞர் பேரவையும் – நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே – சில இளைஞர்களால் தொடங்கப்பட்டன. இவை முறையான அமைப்பு வடிவமோ, கொள்கைத் திட்டமோ இன்றி செயல்பட்டு வந்தன. இச்சூழலில்தான் 1974 சனவரி 3 முதல் 10 வரை யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, எவ்வகை அரசியல் சார்புமற்றுத் தமிழறிஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது. இம்மாநாட்டின் இறுதி நாளன்று, இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் கலவரத்தை ஏற்படுத்தி, 9 தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. இந்நிகழ்வு, தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் இருவர் உட்படப் பதினொரு தமிழரின் படுகொலைக்குக் காரணமான இன்ஸ்பெக்டர் சந்திரசேகராவைப் பழிதீர்க்க, வெடிகுண்டுகளுடன் சென்ற தமிழ் இளைஞர் சிவக்குமரன், தனது நடவடிக்கை தோல்வியைத் தழுவியதால், காவல் துறையின் பிடியிலிருந்து தப்பிக்க "சயனைட்' விழுங்கி உயிர் நீத்தார். ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் "சயனைட்' குப்பி கடித்த முதல் போராளி எனும் பெருமையோடு, இவரது சிலை யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டுள்ளது.

தமிழர் உரிமை பறிப்பு, தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தடை, தமிழ் மக்கள் வாழ்வின் மீதான நெருக்கடி எனச் சிங்கள அரசின் இனவெறி மேலாதிக்கம் நாளுக்கு நாள் வளர்ந்தது. இச்சூழலில்தான் 14.5.1976 அன்று வட்டுக்கோட்டை – பண்ணாகம் என்ற இடத்தில் தமிழ்த் தலைவர்களும் மக்களும் ஒன்று கூடி, "தனி ஈழமே' தீர்வு என மாநாட்டுத் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தனர். இத்தீர்மானத்தை முன்னிறுத்தி, 1977இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் 19 இடங்களில் 18 இல் தமிழர் தலைவர்கள் வெற்றி பெற்றனர். இது, தனி ஈழக் கோரிக்கைக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கணிக்கப்பட்டது. இதற்கு முன்னரே, ஆயுதம் தாங்கிப் போராடுவதே விடுதலைக்கு வழிவகுக்கும் என முடிவெடுத்து, சில இளைஞர் குழுக்கள் தலைமறைவாகச் செயல்படத் தொடங்கி யிருந்தன. ஆயுதப் போராட்டப் பாதையை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் இயக்கம் 1976 மே மாதத்தில் முறைப்படுத்தப்பட்ட அமைப்பு வடிவத்தோடு, தமது இயக்கத்தைத் தொடங்கியது. இதையொட்டியே, 1979 சூலையிலிருந்து இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டமும், அவசர கால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டன.

தமிழர்களிடையே தமிழீழக் கோரிக்கை செல்வாக்குப் பெற்றதை, தமிழ்த் தேசியக் கருத்துருவாக்கத்தின் அறிவுச் செயல்பாடாகவே சிங்கள அரசு கருதியது. இதனை முறியடிக்கும் வகையில் தென் ஆசியாவின் மிகப் பெரியதும் மிக அரிய நூல்களைக் கொண்டதுமான, தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் நூலகம் 31.5.1981 அன்று நள்ளிரவில் இலங்கை ராணுவம் மற்றும் காவல் துறையால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. 1933 இல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கே.எம்.செல்லப்பா என்பவரின் முயற்சியால் 844 நூல்களுடன் தொடங்கப்பட்டு, 1959இல் பொது நூலகமாக விரிவடைந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களும், தமிழர் வரலாறு கூறும் பழந்தமிழ் ஓலைச்சுவடிகளும் தீக்கிரையாகின. இதிலிருந்தே, தமிழர்களின் கல்வி மற்றும் பண்பாட்டு விழுமியங்களைத் துடைத்தழிப்பதில் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பேரினவாத வெறியைப் புரிந்து கொள்ள முடியும். 1983இல் வெலிக்கட சிறையில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட 56 போராளிகள் கடும் துன்புறுத்தலுக்குப் பிறகு கொல்லப்பட்டனர். இப்படுகொலைகள் தமிழ் இளைஞர்களைப் பெருமளவில் ஆயுதப் போராட்டப் பாதைக்கு அணி திரட்டின.

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் "கறுப்பு சூலை' என அழைக்கப்படும், 1983ஆம் ஆண்டின் சிங்கள இனவெறியர்களின் தாக்குதலுக்குக் கொழும்பு நகரத்தில் மட்டும் 3000 தமிழர்கள் பலியாகினர். தமிழர்களுக்கு உடைமையாயிருந்த ஆலைகள் உட்படப் பல்வேறு சொத்துகள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன. 1983ஆம் ஆண்டில் தொடங்கிய ராணுவத் தாக்குதல், 1987ஆம் ஆண்டு மே மாதம் "ஆபரேஷன் லிபரேஷன்' என்ற பெயரில் யாழ்குடா நாட்டை முற்றுகையிட்டு, தமிழர் உயிர் வாழ்வதற்கான அனைத்து உத்தரவாதங்களையும் அழிக்கும்வரை நீண்டது. இக்கால கட்டங்களில்தான் இலங்கையிலிருந்து ஏறக்குறைய பத்து லட்சம் தமிழர்கள் அகதிகளாக, இந்தியாவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் தஞ்சமடைந்தனர்.

1970களின் இறுதியிலிருந்து இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலம் வரை அல்லது படுகொலை செய்யப்படும் காலம்வரை – எல்.டி.டி.ஈ., பிளாட், ஈராஸ், இ.என்.டி.எல்.எப்., இ.பி.ஆர்.எல்.எப்., டெலோ என அனைத்து ஈழப் போராளிக் குழுக்களும் இந்திய ராணுவத்தின் உதவியோடு, "ரா' உளவுப் பிரிவின் கண்காணிப்பின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்றனர். இந்திய ஆளும் வர்க்க அதிகாரிகளால் சில ஆண்டுகள் கையாளப்பட்டதன் விளைவாக, இப்போராளிக் குழுக்கள் ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட, சகோதரச் சண்டைகளில் போராளிகள் பலரும் ஒன்றுமறியா மக்களும்கூடக் கொல்லப்பட்டனர். 1971இல் பாகிஸ்தான் மீது படையெடுத்து "பங்களாதேஷ்' என்ற நாட்டை உருவாக்கியது; பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டியது; அணிசேரா நாடுகளுக்குத் தலைமையேற்று அமெரிக்க – அய்ரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் காலனிய ஆதிக்கத்திற்கு இணங்க மறுத்தது; தெற்காசியத் துணைக்கண்டப் பகுதியில்இந்திய நாட்டின் மேலாதிக்கத்தை நிறுவுவது என இந்திரா காந்தியின் அயலுறவுக் கொள்கைகள் சார்ந்த அரசியல் தலைமைப் பாத்திரமே, ஈழ விடுதலைக்கு ஆதரவு நல்கும் விதமாக, இந்திய அரசின் அப்போதைய நிலைப்பாட்டைத் தீர்மானித்தது.

இந்திராவுக்குப் பிறகு ராஜிவ் காந்தி காலத்தில் 1987இல் யாழ்குடா முடக்கப்பட்டு, அன்றாட வாழ்வே கேள்விக்குறியான சூழலில், உடனடித் தேவையான உணவுக்கும் வழியின்றித் தவித்த மக்களுக்கு, 1987 சூலை 3 அன்று இந்திய அரசு ராமேஸ்வரத்திலிருந்து உணவுப் பொருட்களைக் கடல் வழியே அனுப்பி வைத்தது. இலங்கை அரசு அக்கப்பல்களை அனுமதிக்க மறுத்துத் திருப்பி அனுப்பியது. ஆனால், இந்திய அரசு அடுத்த நாளே விமானங்கள் மூலம் யாழ் பகுதியில் உணவுப் பொருட்களை இறக்கியது. தனது நாட்டின் எல்லைக்குள் அனுமதியின்றிப் பறந்து, தரையிறங்கிய இந்திய ராணுவத்தை எதிர்க்கும் வலிமை இலங்கை அரசுக்கு அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை!

1961 இந்திய – சீன எல்லைப் போரில், இலங்கை அரசு சீனத்தை ஆதரித்தது. இலங்கை சீனத்தை ஆதரிப்பதற்கான அடித்தளம் பவுத்தமாக இருந்தால், இந்திராவின் இந்தியா ஈழத்தை ஆதரித்ததற்கான அடித்தளம் இந்து மதமாகத்தானே இருக்க முடியும்? ஆனாலும் இந்திராவுக்குப் பிறகு, இந்திய ஆளும் வர்க்கம் இலங்கை அரசியல் மற்றும் ஈழ விடுதலை குறித்தான நிலைப்பாடுகளைப் படிப்படியாக மாற்றிக் கொள்ளத் தலைப்பட்டது. இந்திரா அளவிற்கு அரசியல் தேர்ச்சியும், சூழ்ச்சியுமற்ற அவரது புதல்வர் ராஜிவ் காந்தி, இந்திய ஆளும் வர்க்கத்தின் உயர் அதிகாரிகளால் வழிநடத்தப்பட்ட, "கார்ப்பொரேட்' நிறுவனமொன்றின் தலைமை இயக்குநர் போலவே செயல்பட நேர்ந்தது. இயல்பிலேயே தமிழ்த் தேசிய அரசியலால் வெறுப்புற்றிருந்த பார்ப்பன ஆளும் வர்க்கம், ஈழ விடுதலைப் போராட்ட ஆதரவைக் கை கழுவி, இலங்கை அரசையும் போராளிக் குழுக்களையும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் வைக்கும்படி ராஜிவுக்கு ஆலோசனை கூறினர்.

இப்பின்னணியில் தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பான வடக்கு – கிழக்குப் பகுதிகளை அங்கீகரிக்கவும், அதிகாரப் பரவலுடன் சம உரிமைகளுக்கு வழி வகுக்க வும் இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தத்தை முன்மொழிந்து, 1987இல் ராஜிவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடப்பட்டது. இவ்வொப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும், இலங்கை அரசு மற்றும் ஈழப் போராளிகளுக்கிடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும் எனக் காரணங்கள் பூசப்பட்டு, "அமைதிப்படை' என்ற பெயரில் இந்திய ராணுவம் தமிழர் வாழிடங்களில் அத்துமீறி அம்மக்களை அழித்தொழித்து, ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படையின் உளவுப் பிரிவில் உயரதிகாரியாகப் பணியாற்றிய கர்னல் ஹரிஹரன், "த சண்டே இந்தியன்' வார இதழுக்கு, அளித்த நேர்காணலில் (25.1.09), "ராஜிவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவின் குறைபாடுகளை எதிர்த்து, 15.9.1987 அன்று விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான திலீபன், சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியபோது, இந்தியாவுக்கு எதிரான கண்டனப் போராட்டங்களைப் புலிகள் யாழ்ப்பாணம் முழுக்க நடத்தினர். ஆனால் புது டில்லி இந்த சிக்கலைக் கையாளும் பொறுப்பை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது. இறுதியாக செப்டம்பர் 26, 1987இல் திலீபன் மரணமடைந்த போது, புலிகளுக்கும் இந்தியப் படையினருக்குமான உறவு மேலும் கசப்படைந்தது'' எனக் கூறியிருக்கிறார். இது, ஈழத் தமிழர் நலனில் இந்திய அரசுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் இருந்த அக்கறையின்மையையும், இந்திய "அமைதிப் படை'யின் நோக்கத்தையும் அம்பலப்படுத்துவதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், இலங்கை ராணுவத்தின் அத்தனை பாசிசக் கழிசடைத்தனங்களை இந்திய ராணுவமும் செய்தது. இதன் விளைவாக, அவர்களை விடுதலைப் புலிகள் நேர் நின்று எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்திய ராணுவத்தைச் சில போராளிக் குழுக்கள் ஆதரித்து நின்றாலும், இந்திய ராணுவம் தன் "யோக்கியதை'யையும் படை வலிமையையும் இழந்து, இலங்கையிலிருந்து பெருத்த அவமானத்துடன் நாடு திரும்பியது.

இதன் பின்னர் 13ஆவது சட்டத்திருத்தம் உள்ளிட்ட ராஜிவ்–ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த, இலங்கை உச்ச நீதிமன்றம் தடைசெய்துவிட்டது. 1991 மே 21 அன்று ராஜிவ் காந்தி தமிழகச் சுற்றுப்பயணத்தின்போது கொல்லப்பட்டார். இக்கொலையின் புலனாய்வுக்குப் பிறகு, குற்றம் சுமத்தப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தடை செய்யப்பட்டது. ஈழ விடுதலைக்கு வீதியில் இறங்கிப் போரõடிய தமிழக மக்களின் மனங்களில் அச்சமும் அந்நியத் தன்மையும் குடி கொண்டன. இதன் பின்னணியில் ஈழ விடுதலைக்கு எதிரான தம் விருப்பங்களுக்கேற்ப, இந்திய ஊடகங்கள் – நடுவண் உளவுப் பிரிவு – அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் மீது செல்வாக்கு செலுத்தத் தொடங்கியது பார்ப்பன ஆளும் வர்க்கம்; அல்லது மேற்சொன்னவற்றின் துணையோடு, ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் திரைமறைவுத் திட்டங்களினூடே ஒழிக்கவும் இன்றுவரை முயன்று வருகிறது எனலாம்.

அறிவியல் தொழில் நுட்பமும், முதலாளித்துவ ஜனநாயகக் கோட்பாடுகளும் ஒருங்கே கைகோத்தபோது, அமெரிக்க – அய்ரோப்பிய நாடுகள் தம் அரசியல் மேலாதிக்கத்திற்கும் பொருளியல் சுரண்டலுக்கும் புதிய பாதைகளைக் கண்டறிந்தன. இதன் முதற்கட்டமாக, உலக வர்த்தகக் கழகமும், பன்னாட்டு நிதியமும் உலக முதலாளிகளுக்கு வகுத்துத் தந்த திட்டம்தான் "டங்கல் – காட் ஒப்பந்தம்'. உற்பத்தித் திறனிலும் மூலதனத் திரட்டலிலும் பின்தங்கி, பொருளாதாரத் தேக்க நிலைக்குத் தள்ளப்பட்ட இந்தியா போன்ற வளர்முக நாடுகளைத் தம் கைப்பிடிக்குள் சிக்க வைக்க, இத்திட்டம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பெரிதும் உதவியது. உலக அரங்கில் முதலாளித்துவப் பெருமிதங்களின் அடையாளங்களில், தாமும் தன்னால் வழிநடத்தப்படும் இந்தியாவும் இடம் பெற வேண்டும் என்ற ராஜிவ் மற்றும் அவரை உயர்த்திப் பிடித்த இந்தியத் தரகு முதலாளிகளின் கனவு, இயக்கப் போக்கில் இத்திட்டங்களை வரித்துக் கொள்வதில் நிலைத்தன. இந்தியாவின் "இளம் தலைவர்' எனக் கொண்டாடப்பட்ட ராஜிவ், புதிய பொருளாதாரக் கொள்கைகளை இந்திய உற்பத்தித் துறைக்கும், சந்தைக்கும் அறிமுகப்படுத்தினார்.

உலக வங்கியின் அறிவுத் துறை தரகர்களாகப் பயிற்சி பெற்ற, மன்மோகன் சிங்கும் ப. சிதம்பரமும் ராஜிவ் காந்தியின் கரங்களாகச் செயல்பட்டனர். இந்தியாவின் நட்பு நாடாக விளங்கிய சோவியத் ரஷ்யா கெடுவாய்ப்பாக, முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்திற்கு நாட்டைத் திறந்துவிட, தாராளவாத நெகிழ்வுத் தன்மையில் உடைந்து நொறுங்கி, சர்வதேச அதிகார பலத்தை இழந்தது. உலக அரசியல் – பொருளியல் – ராணுவ மேலாதிக்கத்திற்குத் தலைமை தாங்க, அமெரிக்கா போட்டியின்றித் தேர்வானது. சோவியத் ரஷ்யாவின் தோழமை நாடு என்ற பிம்பம் மெல்ல மறைந்து, அமெரிக்காவின் தீவிர ஆதரவு நாடுகளில் ஒன்றாக, இந்தியா தனது அடையாளத்தைப் பேணி வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

தனது பொருளாதார நலன்களுக்காக அமெரிக்கா, இந்தியாவின் முகத்தைப் புனரமைப்பது போல, இந்தியாவும் இலங்கையின் முகத்தை தன்னுடைய மேலாதிக்க நலன்களுக்கேற்பவே புனரமைக்க விரும்புகிறது. இலங்கையின் நெல் உற்பத்தியில் மூன்றிலொரு பங்கும், மீன்பிடித் தொழிலில் 90 சதவிகிதமும், கடல்சார் ஏற்றுமதியில் பெரும்பங்கும் ஈழத்தைச் சார்ந்தே இருந்ததும், மொழி வழி தேசிய இனமாக இந்தியாவோடு தொடர்பு கொண்டிருந்ததும், நவீனத் தொழிற்நுட்பம் வளர்ச்சியடையாத இந்திரா காலத்து இந்தியாவுக்கு சாதகமானதாக இருந்தது. ஆனால் இன்றைய தாராளவாத முதலாளித்துவக் கோட்பாடுகள் – பரந்துபட்ட சந்தையையும், மூலதன வளர்ச்சிக்கான திறன்மிக்க (உற்பத்தி சக்திகளை) மனித ஆற்றல்களையுமே முதன்மையாகக் கோருகின்றன.

15.2.2009 அன்று, சென்னையில் நிகழ்ந்த சந்திப்பு ஒன்றில் பேசிய சிங்களப் பத்திரிகையாளரும் இடதுசாரியுமான சிறீதுங்க ஜெயசூர்யா, "உலகம் முழுவதும் பிரபலமான இலங்கைத் தேயிலை என்பது, உண்மையில் "சிலோன் டீ' அல்ல; அது "டாடா டீ'. இலங்கையின் தேயிலை உற்பத்தியில் 60 சதவிகிதம் "டாடா' குழுமத்திற்கே சொந்தமானது. மேலும், இலங்கையின் எந்திரத் தொழில்துறையும் ஊர்திச் சந்தையும் கூட அசோக் லேலண்ட், பஜாஜ், டாடா, மகிந்திரா போன்ற இந்திய நிறுவனங்களையே சார்ந்துள்ளன. இந்திய முதலாளிகளின் பரவலான வணிகச் சந்தைக்கும், நீண்டகால வர்த்தகத்திற்கும் ஒன்றுபட்ட இலங்கையே முக்கியமானது'' என்று குறிப்பிட்டதும் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது.

மிக அண்மையில் கூட, ராஜபக்சேவின் தொழில் நுட்ப ஆலோசகராக "இன்போசிஸ்' நாராயணமூர்த்தியை இந்திய அரசு நியமித்தது. சில நாட்களுக்குப் பிறகு நாராயணமூர்த்தி அதை ஏற்க மறுத்து விட்டாலும், பின்னாளில் இலங்கையின் தொழில் நுட்ப உள்கட்டுமானங்களை நிர்மாணிப்பதிலும் நிர்வகிப்பதிலும் இந்தியாவின் தலையீட்டு உரிமையை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும். இப்போதுகூட திரிகோணமலையில் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்றை இந்திய அரசு நிர்மாணித்து, நிர்வகித்து வருகிறது. மன்னார் வளைகுடாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெட்ரோலிய வள ஆய்வுகள் பின்னாளில் குஜராத் எண்ணெய்க் கிணறுகளைப் போல, அம்பானி குழுமத்திற்குத் தாரை வார்க்கப்படலாம். இவ்வகையில் இந்தியாவின் பொருளியல் பயன்கள் ஈழப்பிரச்சனையை ஒருபுறம் அணுக, இன்னொரு புறத்தில் இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் கேந்திர முக்கியத்துவமாக வினையாற்றுகின்றன. இதையும் ஒரு பார்ப்பன வாக்குமூலத்தின் வழியாகவே இங்கு புரிந்து கொள்வது எளிதாகயிருக்கும்.

"இந்திய – இலங்கை பிரகதி சன்சதியா' என்ற அமைப்பு அண்மையில் இலங்கையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெளிவிவகாரப் பிரிவைச் சேர்ந்த ரவ்னி தாக்கூரும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சேஷாத்ரி சாரியும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய சேஷாத்ரி, "இலங்கை விவகாரத்தில் பா.ஜ.க.வும் காங்கிரசும் ஒரே கொள்கையோடுதான் செயல்படுகின்றன. இப்போது இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடக்கும் போரில் இந்தியா நிச்சயம் தலையிடாது. இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளில் நமக்குத் தொந்தரவு தராத நாடுகள் இலங்கையும் பூடானும்தான். பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகள் நமக்கு எப்போதும் தொந்தரவுதான். பொதுவாக இந்தியாவுக்குப் பொருளாதார ரீதியில் இலங்கையில் நல்ல பயன்பாடு உண்டு. பொருளாதார ஒப்பந்தங்கள் போட நல்ல சூழல் வர வேண்டும். இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை இதை மனத்தில் வைத்துத்தான் முடிவு செய்யப்பட்டது. இலங்கையில் ஸ்திரத்தன்மை ஏற்பட அங்கும் ஒரு பலம் வாய்ந்த அரசு தேவை. இதற்கு இரண்டு விசயங்கள் முக்கியம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் பலம் பெற்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிபர் ராஜபக்ஷே ஒரு மிதவாதி. அவர் சாதாரண எம்.பி.யாக இருந்தபோதே, 1999இல் பா.ஜ.க. ஆட்சியில் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடந்தபோது, டெல்லிக்கு வந்து எங்களைப் பாராட்டி விட்டுச் சென்றார். தமிழ் மாகாணம், சிங்கள மாகாணம் என்பதையெல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கையில் மொழிவாரியாகவோ, இனவாரியாகவோ அல்லாமல் சுய அதிகாரம் பெற்ற உள்ளாட்சி (பஞ்சாயத்து ராஜ்) அமைப்புகளை உருவாக்கத் தயாராக இருக்கிறார். விடுதலைப் புலிகளின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலமே, இலங்கைத் தமிழர்களுக்குப் பலன் கிடைக்கும். சிங்கள மக்களை எதிர்த்துத் தமிழர்கள் இலங்கையில் முன்னேற முடியாது'' என சிங்கள இனவாதத்தின் குரலாகவே ("ஜுனியர் விகடன்' பிப்ரவரி.4. 2009) தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பார்ப்பன – இந்துத்துவவாதிகளின் "இந்து ஒற்றுமை' என்பது, இந்தச் சமூகத்தில் பார்ப்பனர்களின் மேலாதிக்கமும் இந்திய அதிகார வர்க்கத்திற்கான முதலாளித்துவ நலனும்தான் என்பதே, சேஷாத்ரி போன்றவர்களின் வாக்குமூலத்திலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மையாகும். ஆனால், தமிழகத்திலுள்ள தமிழ்த் தேசியவாதிகளோ பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் என இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அண்டை நாடுகள் இருக்கும் சூழலில், தமிழீழமே இந்தியாவின் நட்பு நாடாக இருக்க முடியும் என இந்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷாக உருவாக்கியதைப் போல, இலங்கையிலிருந்து தமிழீழத்தை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். இலங்கையைப் போல ஆயுதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படாத நிலையிலும், ஏறக்குறைய 3 லட்சம் கிழக்கு வங்காள மக்கள் பாகிஸ்தானின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜுல்பிகார் அலி புட்டோவின் அரசால் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து அகதிகளாகக் குடியேறினர். இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபடும் ராஜபக்சே அரசும் கூட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட "ஜனநாயக' அரசுதான்.

வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு உருது மொழியே, கல்வி – நிர்வாகம் – ஆட்சியதிகாரம் ஆகியவற்றின் மொழியாக இருக்கும் என பாகிஸ்தான் அரசு செயல்படுத்த முனைந்ததே, அம்மக்களைப் பெரும் கிளர்ச்சியில் இறங்கத் தூண்டியது. டாக்கா மருத்துவக் கல்லூரி மாணவியர் விடுதியில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ வெறியர்கள், ஒட்டுமொத்த மாணவியர்களையும் கடத்திச் சென்று வன்புணர்ச்சியில் சீரழித்த கொடுமை ஒன்றே, பாகிஸ்தானின் ராணுவ பாசிசத்தைப் புரிந்து கொள்ள உதவும். பங்களாதேஷ் சுதந்திரம் பெற்ற நாளில் மக்களிடம் உரையாற்றியபோது "பாலியல் பலாத்காரத்தில் பாதிப்புக்குள்ளான நம் இளம் பெண்களை மணந்து கொள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும்' என முஜிபுர் ரகுமான் கண்ணீரோடு குறிப்பிட்டதை இங்கு நினைவு கூர வேண்டும்.

அரசியல் அதிகார வெறிக்கு இந்துத்துவம் இந்தியாவில் பங்களிப்பதைப் போல, இஸ்லாமிய மத அடையாளமோ, உணர்வோ பாகிஸ்தான், பங்களாதேஷ் உறவுக்குப் பயனளிக்கவில்லை. சொந்த மதத்தைச் சேர்ந்த மக்களையே கொடூரமாகக் கொன்றழித்தும், ராணுவ முகாம்களில் பெண்களை வல்லுறவுகளில் சிதைத்தும் பாகிஸ்தான் ராணுவம் நரவேட்டையாடியதும், இந்தியப் படையெடுப்புக்கு நியாயமான காரணங்களாக சொல்லப்பட்டன. ஆனாலும் பங்களாதேஷை உருவாக்கியது, இந்தியாவிற்கு வெளியே பாகிஸ்தானையும் முஸ்லிம்களையும் பலவீனப்படுத்துவதற்கேயன்றி வேறல்ல.

இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்மையினர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர் என்ற போதிலும், தனி ஈழத்தை உருவாக்க இந்திய அரசு விழையவில்லை. காரணம் வெளிப்படையானது: அப்போதும், இப்போதும் இலங்கைத் தீவின் மீதான மேலாதிக்கத்தால் விளையும் பொருளாதாரப் பயன்கள். மற்றொன்று, இலங்கையின் இந்து சமூக மேலாதிக்கத்தில் பார்ப்பனர்களின் நேரடிப் பங்கு இல்லாதது. தமது மேலாதிக்கத்திற்கான நேரடிப் பயன் இல்லாதபோது, பார்ப்பனர்கள் சூத்திரர்கள் குறித்தோ, பஞ்சமர்கள் குறித்தோ இந்து எனும் உணர்வில் கவலை கொள்வதில்லை. ஈழ விடுதலைக்கு எதிராகவும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், நிராகரித்தும் "இந்து' நாளேடு தொடர்ந்து எழுதி வருவது இவ்வகைப்பட்டதே. ஆக, பார்ப்பன ஆளும் வர்க்கமும் இந்திய முதலாளிகளும் தமக்கான நேரடிப் பயன்பாட்டிலிருந்தே, இந்திய அரசுக்கான உள்விவகார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். இந்திய ஆளும் வர்க்க நலன்களுக்குப் பின்னே அடித்தளமாக இருப்பது, பெரு முதலாளித்துவமா? தரகு முதலாளித்துவமா? என்ற ஒற்றைக் கேள்வியே, இந்தியக் கம்யூனிஸ்டுகளின் விவாதப் பொருளாக இருக்கிறது. தேசிய இனங்களை ஒடுக்கும் "இந்திய தேசியம்' ஒரு கற்பிதமே என முழங்கி வரும் தமிழ்த் தேசியவாதிகள், இக்கற்பிதத்தைக் கட்டமைத்துக் காத்து வரும் கருப்பொருளைக் குறித்துக் குழப்பமான அல்லது வேறுபட்ட வரையறைகளையே முன்வைத்து வருகின்றனர்.

இந்திய ஆளும் வர்க்கத்தை உருவாக்குவது இந்திய (தரகு/பெரு) முதலாளிகள் எனில், இந்திய தேசியத்தைக் கட்டமைத்தது இந்து மதமும், பார்ப்பனிய அரசியலுமே. இந்து மதத்தில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டும், பார்ப்பனிய அரசியலுக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டும்தான் – இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிகளும், தமிழ்த் தேசியவாதிகளும் – இந்தியப் புரட்சி குறித்தோ, தேசிய இன விடுதலை குறித்தோ ஓயாது "வியாக்யானம்' செய்து வருகின்றனர். இந்து மத எதிர்ப்பைத் தவிர்த்தும் பார்ப்பனிய எதிர்ப்பை மழுங்கடித்தும், உழைக்கும் மக்களின் அறியாமைக்கு ஊறுவிளைவிக்காமல், தத்தமது புரட்சிகரக் கோட்பாடுகளை வென்றெடுத்து விடலாம் என்ற இவர்களின் செயல்திட்டம் பிழைப்புவாதமாகவே முடிந்து போகும்.

இந்து மத – பார்ப்பனிய எதிர்ப்பு என்பது சாராம்சத்தில் வர்ணாசிரமத்தையும், சாதி – தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்ப்பது மற்றும் அவற்றை அழித்தொழிப்பது என்ற சமூக, அரசியல் பண்பாட்டுச் செயல் திட்டத்தை முன்வைப்பதுமேயாகும். இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் பார்ப்பனத் தலைமையில் இயங்குகின்றன; அதனால் அவர்களுக்கு இந்து மத – பார்ப்பனிய எதிர்ப்பில் அக்கறையில்லை எனவும், இந்தியத் தேசியத்தின் கருத்தியல் அடித்தளமே இந்துத்துவம்தான் எனவும் குற்றம் சுமத்தும் தமிழ்த் தேசியவாதிகள், இந்துமத – பார்ப்பனிய எதிர்ப்பைச் செயலாக்குவது தமது புரட்சிகர வாய்ச்சொற்களில் மட்டுமே!

வறட்டுச் சூத்திர நாத்திகவாதமாகவும், மிகைப்படுத்தப்பட்ட இந்துமத – பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரமாகவும் திராவிட இயக்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது எனக் குறைகூறி, திராவிட தேசிய(?)த்திற்கு மாற்றாகப் பரிணமித்த தமிழ்த்தேசியவாதிகள், இந்து மத – பார்ப்பனிய எதிர்ப்பை ஏறத்தாழக் கைகழுவிவிட்டனர் என்றும், அவர்களின் கருத்தியல் அடித்தளமாக சைவ சிந்தாந்த நெறிகளே இயங்குகின்றன என்றும் குற்றம் சாட்டலாம். பார்ப்பன வேத மத மறுப்பில் சைவ சிந்தாந்த நெறிகள் வளர்ந்தன என்றாலும், சைவ – வைணவக் கலவியில் செழித்ததே இந்து மதமும் பார்ப்பனிய தர்மங்களும். இதனைப் புரிந்து கொண்டால், தமிழீழ விடுதலையை முன்னெடுத்த தமிழ்த் தேசியக் கருத்துருவாக்கத்தின் பிற்போக்குத் தன்மையையும், நவீன அறிவியல் வளர்ச்சிக் காலகட்டத்தில் ஒரு தேசிய

இன விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவுக்கான காரணத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.

– அடுத்த இதழிலும் 

அழிக்கப்படும் இலங்கை ஊடகங்களின் உரிமைகள்

யாழ்ப்பாணத்தில் 1981இல் "ஈழ நாடு' பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டதில் தொடங்கி, 1987இல் இந்திய ராணுவம் "அமைதிப்படை' என்ற பெயரில் அட்டூழியங்கள் நிகழ்த்திய காலத்தில், யாழ்ப்பாணத்தில் "சாட்டர்டே ரிவ்யூ' வார இதழ் அலுவலகத்தில் குண்டு வீசியது; இந்திய ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலில் "ஈழமுரசு', "முரசொலி' ஆகிய பத்திரிகைகளின் அலுவலகங்களைத் தகர்த்தது மட்டுமின்றி, ரிச்சர்ட் பி கொய்சா (1990), "சரிநிகர்' செய்தியாளர் குருமூர்த்தி (1990), யாழ் பத்திரிகையாளர் நிமல்ராஜன் (2000, அக்டோபர்), "வீரகேசரி' செய்தியாளர் அய்யாத்துரை நடேசன் (மே, 2004), "தமிழ் நெட்' ஆசிரியர் தர்மரத்னம் சிவராம் (ஏப்ரல், 2005), சுப்பிரமணியம் சுகிர்தராஜன் மற்றும் சிங்களப் பத்திரிகையாளர் சம்பத் லக்மால் (சனவரி, 2006), சரிநிகர் ஆசிரியர் சந்திரபோஸ் சுதாகர் (2007), யாழ் செய்தியாளர் ரஜிவர்மன் (ஏப்ரல், 2007), யாழ் சக்தி தொலைக்காட்சி செய்தியாளர் பரநிரூபசிங்கம் தேவகுமார் (மே, 2008), யாழ் "நமது ஈழ நாடு' ஊழியர் சிவமகா ராஜா (ஆகஸ்ட், 2006) மற்றும் "தினமுரசு'ஆசிரியர் அற்புதராஜா நடராஜா, வானொலிக் கலைஞர் கணேசபிள்ளை, கே.எஸ். ராஜா, அன்ரனி ஜேசுதாசன், ரேலங்கி செல்வராஜா, பாலநடராஜ அய்யர் என இன்றுவரை – ஈழ விடுதலைப் போராட்டச் சூழலில் படுகொலை செய்யப்படும் ஊடகவியலாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது...

Pin It