ஈழத் தமிழர்களின் விருப்பத்திற்கு எதிராக இராஜிவ் - ஜெயவர்த்தனே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி காந்தி தேசமான இந்தியா அனுப்பிய அமைதி காக்கும் படை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு இந்தியாவினால் உயிரை விட்டவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் லெப்டினன்ட் கர்னல் திலீபன். ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 15,1987-ல் உண்ணாநிலை ஆரம்பித்த திலீபன், தொடர்ச்சியாக 12 நாட்கள் துளி நீரும் அருந்தாமல் மாண்டார். அவரது 36-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டெம்பர் 26).

காந்தி தேசத்திற்கு எதிராக காந்தியின் அகிம்சை வழியில் போராடி இந்தியாவின் அகிம்சை முகமூடியை கிழித்துத் தொங்கவிட்டவர் ஆயுதப் போராட்ட அமைப்பை சேர்ந்த திலீபன். மற்றொரு புறம் அமைதியின் வடிவமாய் கருதப்படும் புத்தனின் நெறிகளை கடைபிடிப்பதாக சொல்லப்படும் சிங்களப் பேரினவாதிகளின் இனவாதத்தை அறிவார்ந்த முறையில் அணுகியவர் திலீபன். இப்படியாக இந்தியா - இலங்கையின் தமிழர்களுக்கு எதிரான இனவாதப் போக்கை உலகிற்கு அம்பலப்படுத்தியது திலீபனின் இந்த 12 நாட்கள் உண்ணாநிலை போராட்டம்.prabhakaran pays homage dileepanதனித் தமிழீழம் அடைவதற்கு விடுதலைப் புலிகள் ஆயுத வழியையே நம்பியவர்கள் என்ற எண்ணங்களை தகர்த்தெறிந்தவர் திலீபன். தன்னுயிரை ஈந்து ஆயுதப் போராட்டம் தமிழர்கள் மீது இந்தியா-இலங்கையின் ஆரிய இனவாதத்தால் திணிக்கப்பட்டது என்பதை உலகிற்கு பறைசாற்றியவர்.

அறவழிப் பேரொளியாக தமிழினத்தின் வரலாற்றில் பதிந்த போராளி திலீபன். தமிழர்களிடம் இன உணர்வு ஊற்றெடுக்க தன்னுடல் வற்றிப் போவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட உன்னத வீரன். அவ்வீரனை நினைவு கொள்வதைக் கூட சிங்கள வெறியர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவரின் உருவப்படம் தாங்கிய ஊர்தியை உடைத்திருக்கிறார்கள் சிங்களப் பேரினவாதிகள்.

திலீபனின் 36-வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி, உண்ணாநிலைப் போராட்டம் துவங்கிய நாட்களை நினைவு கூற, அவரின் திருவுருவப் படத்தை ஊர்தியில் வைத்து தமிழீழப் பகுதிகள் எங்கும் ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு பயணம் துவங்கியது.

அம்பாறை பொத்துவிலில் இருந்து தொடங்கி யாழ்ப்பாணம் நல்லூரை நோக்கி இந்த ஊர்தி சென்றது. ஊர்தி செல்லும் வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் சொரிந்து நினைவஞ்சலி செலுத்தினர்.

இந்த ஊர்தி திருகோணமலை கப்பல்துறைப் பகுதியை செப்டம்பர் 17, 2023, அன்று வந்தடைந்த போது, அங்கு இலங்கையின் சிங்களக் கொடியுடன் வந்த சிங்கள இனவெறியர்கள் சிலர் இதன் மீது தாக்குதல் நடத்தி, திலீபனின் உருவப் படத்தினையும் சேதப்படுத்தினர். ஊர்தியுடன் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கசேந்திரன் மற்றும் அவருடன் இருந்தவர்களையும் கூட இந்த வெறியர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் அடித்து காயப்படுத்தியுள்ளனர். பாதுகாப்பிற்கு வந்த காவல் துறையினர் கண்முன்னால் இவையெல்லாம் நிகழ்த்தப்பட்டும் அவர்கள் எதையும் தடுக்கவோ, தாக்கியவர்களை கைது செய்யவோ முயற்சிக்கவில்லை என்பது முக்கியமானது.

இவ்வாறான ஒரு அசம்பாவிதம் நடக்கக் கூடிய சூழ்நிலைகள் இருந்த போதிலும் சிங்களப் புலனாய்வாளர்களும், காவல் துறையும் அதனை செய்யாது, மறைமுகமாக சிங்கள வெறியர்களுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு நினைவு ஊர்வலத்தைக் கூட சகித்துக் கொள்ள முடியாத அளவில் சிங்கள இனவெறியர்களும், இனவாத அரசுக் கட்டமைப்பும் உள்ள நாடாகவும் இலங்கை இருக்கிறது. தமிழர்களை கொத்து கொத்தாக இனப்படுகொலை செய்த போர் முடிந்து 14 வருடங்கள் கடந்த பின்பும் சிங்கள இனவெறியர்கள் மனநிலை மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

விடுதலைப் புலிகளின் நியாயங்களை மட்டுமல்ல, எந்த நியாயங்களையும் உள்வாங்கும் மனநிலைகளை சிங்களப் பௌத்த பேரினவாத அரசு சிங்களர்களுக்கு உருவாக்கவே இல்லை. இனவாத வெறிகளை வளர்த்துக் கொள்ள சிங்களர்களை பழக்கப்படுத்திய கட்டமைப்புகளையே அரச எந்திரங்களாக சுற்றிலும் கட்டியது. இந்த எண்ணம் இன்னும் உடைபடவே இல்லை என்பதைத்தான் இந்த திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதல் எடுத்துக்காட்டுகிறது. இதற்கு மாறாக மக்களை நெறிப்படுத்தக் கூடிய கட்டமைப்புகளையே விடுதலைப் புலிகள் கட்டினார்கள். அதற்கு தூணாக இருந்து செயல்பட்டவரே திலீபன்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் 1983-ம் ஆண்டு சேர்ந்த திலீபன் மருத்துவப் படிப்பை உதறி விட்டு வந்தவர். இயக்கத்தில் துடிப்புடன் செயல்பட்ட அவர் புலிகளின் அமைப்பு கட்டமைப்புகளை கட்டுவதில் பேராற்றல் கொண்டவராக இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் மாணவர் இயக்கம், தமிழீழ மகளிர் அமைப்பு, தமிழீழ தேசபக்தர் அமைப்பு, சுதந்திரப் பறவைகள் அமைப்பு, தமிழீழ விழிப்பு குழுக்கள், தமிழீழ கிராமிய நீதிமன்றங்கள், சுதேச உற்பத்தி குழுக்கள், தமிழீழ ஒலி ஒளி சேவை கட்டுப்பாட்டு அமைப்பு, தமிழர் கலாச்சார அவை என இவையெல்லாம் இயக்கத்தில் சேர்ந்த குறுகிய காலத்திற்குள் அவர் கட்டியவை. இவ்வளவு ஆற்றலும், திறமையும், வீரமும் உடைய திலீபன் தான் இந்திய – இலங்கை அரசுகள் அறவழிக்கு மதிப்பு கொடுக்காது என்பதை மக்கள் அறிந்து கொள்ள உண்ணாநிலையைத் தேர்ந்தெடுத்தார்.

தன் உயிர் மூச்சாக எதை நினைத்து இயக்கத்தில் சேர்ந்தாரோ, அந்த தனித் தமிழீழ கோரிக்கைக்காக கூட இல்லை, குறைந்தபட்சம் தமிழர்களுக்கு உறுதியளித்த இந்திய – இலங்கை உடன்படிக்கையை நிறைவேற்றச் சொல்லியே உண்ணாநிலை மேற்கொண்டார் திலீபன். அதையும் இந்தியா கண்டு கொள்ளவில்லை. திலீபன் முன்வைத்த கோரிக்கைகள்:

  1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்னும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
  2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் பகுதிகளில் நடக்கும் சிங்கள குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
  3. இடைக்கால அரசு அமையும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
  4. வடகிழக்கு மாகாணங்களில் காவல் நிலையங்கள் திறப்பது நிறுத்தப்பட வேண்டும்.
  5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுபவருக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்.

இவை அனைத்துமே இந்திய – இலங்கையின் உடன்படிக்கையில் உள்ளவை. இந்த உடன்படிக்கை இந்தியாவின் அரசியல் நலனுக்காக, இலங்கையை தனது கைப்பிடிக்குள் வைத்திருப்பதற்காக போடப்பட்டதன்றி, தமிழீழ மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கவில்லை என்பதை திலீபனின் மரணமே உலகிற்கு உரத்துச் சொல்லியது. இந்திய இலங்கையின் நாடகத்தை அம்பலப்படுத்தியது. இந்திய – இலங்கையின் நாடகங்கள் இன்னும் நின்றபாடில்லை. திலீபன் உண்ணாநிலை, மேற்கொண்ட அன்றிலிருந்து ஐ.நா அவையில் இலங்கை மீதான விவாதங்கள் நடக்கும் இன்று வரை தொடர்ந்து கொண்டே தானிருக்கிறது.

ஜெனீவாவில் நடக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத் தொடரிலும் இந்தியா இன்றும் வழக்கம் போலவே ஒப்புக்காக இலங்கையை வலியுறுத்தி வந்திருக்கிறது. ‘மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும், வாக்குறுதி மீதான முன்னேற்றம் வேண்டும், அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும்’ என தன் பங்கிற்கு மென்மையாக பதிவு செய்திருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே உண்ணாநிலை முடிவெடுத்த திலீபனின் மரணத்திற்கு காரணமான இந்தியா, இனவெறி இலங்கை அரசிடம் இவற்றையெல்லாம் எதிர்பார்ப்பதாக ஐ.நா அவையில் தெரிவித்திருக்கிறது.

தமிழர்களை உருக்கிய திலீபனின் உண்ணாநிலை போராட்டம் இந்தியாவை அன்றும் உலுக்கவில்லை. இன்றும் தமிழீழப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட குவியல் குவியலான மனிதப் புதைகுழி குறித்து இந்தியா அதிரவில்லை. அங்கு தமிழர்கள் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுவது குறித்தும், தமிழர்களின் நிலங்கள் வகை தொகையின்றி பறிக்கப்படுவது பற்றியும், தமிழர் பகுதிகளில் மிதமிஞ்சிய இராணுவக் குவிப்பைப் பற்றியும் கவலைப்படவில்லை. மாறாக 13 வது சட்டத்திருத்தம் என்கிற போலியான தீர்வை சுமந்து கொண்டு, தமிழீழத்தில் இந்துத்துவ கொள்கைகளை நிலைநாட்டத் துடிக்கிறது பாஜக அரசு. அதற்கு தூது செல்லவே அண்ணாமலையின் தமிழீழப் பயணமும் அமைந்தது. இலங்கை அரசை மிரட்டுவதற்கு தமிழீழப் பகுதிகளை பகடையாக உருட்டுவதை இந்திய அரசு இன்று வரை நிறுத்தவில்லை.

தமிழர்களை இனப்படுகொலை செய்த இனவெறி நாட்டிற்குள் தமிழினப் படுகொலைக்கான தீர்வு கிடைக்க வேண்டும் என ஐ.நா அவையும் 14 வருடங்களாக இலங்கையை மென்மையாகவே வருடிக் கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நடக்கும் தொடர்ச்சியான கூட்டத்தொடர்களில் இலங்கை மீதான போர்க்குற்றம், மனித உரிமை மீறல், ஊழல், வெளிப்படைத்தன்மை போன்றவற்றில் இருக்கும் பற்றாக்குறைகளை சுட்டிக் காட்டுவதைப் போலவே, தற்போது நடைபெறும் 54 வது கூட்டத் தொடரிலும் சுட்டிக் காட்டியுள்ளது. மேற்குலகம் முன்மொழிந்த பொறுப்பு கூறல், மறு சீரமைப்பு, நல்லிணக்கம் போன்ற நிலைமாற்ற காலத்திற்கான நீதியை (Transitional justice) அடைவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும் என மென்மையாக கோரியுள்ளது.

இந்த மென்மையான வலியுறுத்தல்களுக்கு கூட இலங்கைப் பிரதிநிதி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த கூட்டத் தொடரிலும் ‘நல்லிணக்கம் மேற்கொள்ளும் வழிகளை செயல்படுத்துவோமே தவிர, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் மீதான மனித உரிமை மீறலுக்கு பொறுப்புக் கூறல் திட்டம் அமைப்பது என்பது இயலாது, ஐநாவின் தீர்மானங்கள் ஆக்கப்பூர்வமற்ற மற்றும் வளங்களை வீணடிக்கும் செயல், இலங்கை இந்த தீர்மானத்துடன் ஒத்துழைக்காது’ என்று மேம்போக்கான வலியுறுத்தல்களைக் கூட புறக்கணித்திருக்கிறது இலங்கை.

இந்திய-இலங்கையின் அரசியல் நோக்கங்களை தீர்க்கமாக உணர்ந்தவர் திலீபன். இவைகளிடம் இருந்து தமிழர்களுக்கான தீர்வுகள் கிடைக்கும் என அவர் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை துவங்கவில்லை. இரண்டின் கொடிய நோக்கங்களையும் உலகிற்கு அம்பலப்படுத்தவே அந்த மாவீரன் தன்னுயிரை அர்ப்பணித்தார். தன்னுடலை வருத்தி சொட்டு நீரும் அருந்தாமல் போராடிய அந்த இளைத்த உருவைத்தான் இன்னமும் கனத்த இதயத்தோடு கண்ணீர் சொரிந்து மக்கள் வணங்குகிறார்கள். இந்திய இலங்கையின் துரோகம் வரலாற்றில் படிந்து விட்ட கறையாக நீடித்து விட, திலீபனின் தியாகம் எக்காலமும் அழிக்க முடியாத சித்திரமாக உலகத் தமிழர்களிடம் பதிந்து விட்டது.

“தன்னை பலி கொடுத்து ஈடு இணையற்ற ஒரு மகத்தான தியாகத்தை திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு. தமிழீழப் போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்வு. தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிய நிகழ்வு…. தான் நேசித்த மண்ணுக்கு ஒருவன் எத்தகைய உயர்ந்த தியாகத்தை செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத் தான் அவன் செய்திருக்கிறான். ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரினும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம். எமது கௌரவம்…அவன் துடிதுடித்து செத்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் என் ஆன்மா தளர்ந்தது. ஆனால் நான் திலீபனை ஒரு சாதாரண மனிதப் பிறவியாக பார்க்கவில்லை. தன்னை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு இலக்கிய நெருப்பாகவே நான் அவனைக் கண்டேன்… அவன் உண்மையில் சாகவில்லை காலத்தால் சாகாத வரலாற்று புருஷனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்…” – தேசியத் தலைவரின் உரையில் வாழ்ந்த மகத்தான போராளியாக திலீபன் நம்முள் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

- மே பதினேழு இயக்கம்

Pin It