‘சமூக நீதி காத்த வீராங்கனை’ ஜெயலலிதாவின் பார்ப்பனப் பற்று!

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசலாமா என்கிறார், ‘சமூக நீதிகாத்த வீராங்கனை’ ஜெயலலிதா. எனது ஆட்சிக் காலத்தில் தமிழ் ஈழ ஆதரவாளர்களை அடக்கி வைத்திருந்தேன் என்று பார்ப்பன இறுமாப்போடு கதைக்கிறார். ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டதாலே அதை ஆதரித்துப் பேசுவது ‘பொடா’ சட்டத்தின் கீழே கூட குற்றமல்ல என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு கூறிய பிறகும், இவர்களின் பார்ப்பன உணர்வு இப்படி எல்லாம் பேச வைக்கிறது.

பாபர் மசூதியை - பார்ப்பன பயங்கரவாத கும்பல் இடித்துத் தள்ளியதைத் தொடர்ந்து, நாடு முழுதும் ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிஷத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. அப்போது தடை செய்யப்பட்ட விசுவ இந்து பரிஷத்தும், ஆர்.எஸ்.எஸ்.சும், கோவையில் தங்களது அகில இந்தியக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு, அனுமதி வழங்கியவர்தான் அன்றைய முதல்வர் ஜெயலலிதா!

பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களை குடும்பம் குடும்பமாக கொத்து கொத்தாக ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கொலை செய்து தீயில் போட்டு பொசுக்கி நரவேட்டை நடத்திய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில், தனிச் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பார்ப்பன பயங்கரவாதத்துக்கு தனது பாசத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தியவர்தான் ஜெயலலிதா.

மசூதியை இடித்த இடத்தில் ராமனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்றும், இங்கே கட்டாமல் வேறு எங்கே கட்டுவது என்றும், பார்ப்பன பயங்கரவாத கும்பலின் கருத்தை எதிரொலித்தவர்தான் ஜெயலலிதா.

ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் தண்டனை தந்தபோது, சுற்றுலா வந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து விவசாயக் கல்லூரி மாணவிகள் 3 பேரைக் கொளுத்தி அ.தி.மு.க.வினர் வெறியாட்டம் ஆடினார்களே நினைவிருக்கிறதா? மனித நேயமற்ற பயங்கரவாதத்தை நடத்திய அந்தக் குற்றவாளிகளை தனது பதவி காலத்தில் தண்டனையிலிருந்து தப்புவிக்க, அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, அதற்காக நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் தான் ஜெயலலிதா!

பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்களை மகிழ்ச்சிப்படுத்த மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்து - பிறகு தேர்தல் தோல்விக்குப் பிறகு வேறு வழியின்றி திரும்பப் பெற்றவர்தான் ஜெயலலிதா!

எம்.ஜி.ஆர். பெயரில் அவரது வாரிசாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு, அதிகாரத்தைப் பிடித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, பார்ப்பனக் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பவர் என்பதை உண்மை எம்.ஜி.ஆர். தொண்டர்களே, மறந்துவிடாதீர்!

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தனது சொந்தப் பணத்தை கோடி கோடியாக அள்ளித் தந்து விடுதலைப்போராளிகள் இயக்கத்துக்கு உரமூட்டி, ஈழத் தமிழர் விடுதலை வரலாற்றிலும், ஈழத் தமிழர்களின் இதயத்திலும் நீங்கா இடம் பெற்றிருப்பவர்தான் எம்.ஜி.ஆர். எம்..ஜி.ஆர் கொள்கைகளுக்கு நேர் மாறாக பார்ப்பன சக்திகளுடன் சேர்ந்து கொண்டு ஈழத் தமிழர் ஆதரவுக் குரலையே நசுக்கத் துடிப்பவர்தான் ஜெயலலிதா!

ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை தமிழர்கள் மீது திணித்த போது தனது அதிருப்தியை வெளியிட்டவர் தான் எம்.ஜி.ஆர். ஒப்பந்தத்தை ஈழத் தமிழர்கள் ஏற்பதற்கு, எம்.ஜி.ஆர். மூலம் அன்றைய ராஜீவ் ஆட்சியின் உளவுத்துறை விடுதலைப் போராளிகளை நிர்ப்பந்தப்படுத்த திட்டமிட்டது. போராளிகளை சந்தித்த எம்.ஜி.ஆர். ‘உங்கள் விருப்பப்படி முடிவெடுங்கள்’ என்று கூறி, நிர்ப்பந்தப்படுத்துவதில் தனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படுத்தினார். அவர்தான் எம்.ஜி.ஆர்.! ஆனால், போராளிகளின் மறைவுக்குக்கூட கண்ணீர் சிந்தக்கூடாது என்பவர்தான் ஜெயலலிதா!

தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் மண்டைக்காட்டில் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினர் மதக்கலவரத்தை உருவாக்கியபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். சட்டமன்றத்தில் இவ்வாறு பேசினார்:

“இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிகாரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது போன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல மற்ற மடாதிபதிகள் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது. அச்சுறுத்தல் பயிற்சிகளை அரசு ஏற்றுக் கொள்ள முடியாது.

குறிப்பாக சொல்கிறேன், ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. இந்தப் பயிற்சிகளே போதும். ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகள் தேவை இல்லை.

- (29.3.82 இல் சட்டமன்றத்தில் - முதல்வர் எம்.ஜி.ஆர். பேசியது.)

- இப்படி மதவெறி சக்திகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் கலவரங்களை உருவாக்கியதற்காக இடையில் நிறுத்தப்பட்டிருந்த இந்து முன்னணியினரின் விநாயகன் ஊர்வலத்துக்கு மீண்டும் தனது ஆட்சியில் அனுமதி கொடுத்து மகிழ்ந்தவர்தான் ஜெயலலிதா!

‘நான் இந்து அல்ல; எனது மதம் திராவிட மதம்’ என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது பதிவு செய்தவர் எம்.ஜி.ஆர்.! ஆனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, சரசுவதி பூசை என்று பார்ப்பனியப் பண்டிகைகளுக்கு வாழ்த்து செய்தி வழங்கிக் கொண்டிருப்பவர்தான் ஜெயலலிதா!

ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் வாரிசு அல்ல; அவரது கொள்கைக்கு எதிரானவர். பார்ப்பன சக்திகளுக்காக ‘திராவிட இயக்கத்தை ஏணியாகப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பிடித்து, தமிழின உணர்வை காலில் போட்டு நசுக்கத் துடிக்கிறார்!

இப்படி எம்.ஜி.ஆர். கொள்கைகளை குழி தோண்டி புதைத்துவிட்டு, பார்ப்பன பயங்கரவாதத்துக்கு ‘நடை பாவாடை’யை விரித்துக் கொண்டிருப்பவர்தான் ஜெயலலிதா. அதனால்தான் சு.ப. தமிழ்ச் செல்வன் மறைவுக்கு தமிழன் ரத்தம் ஓடும் உணர்வோடு இரங்கல் கவிதை தீட்டிய கலைஞர் ஆட்சியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பார்ப்பன உணர்வை பச்சையாகவே வெளிப்படுத்துகிறார்.

தமிழின உணர்வாளர்களே தமிழினப் பகைவரை அடையாளம் காணத் தவறாதீர்கள்!

Pin It