மகத்தில் அம்பேத்கர் நடத்திய தீண்டப்படாத மக்கள் மாநாட்டில் - பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை அறிவித்து, மக்களைத் திரட்டிப் போராடினார். அம்பேத்கர் பிறந்த நாளில் - அந்த வரலாற்றை இளம் தலைமுறைக்கு நினைவூட்டுகிறது, இக்கட்டுரை.
புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்வில் சிறப்பான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதுதான் மகத் போராட்ட நிகழ்ச்சியாகும். போலே அவர்களால் பம்பாய்ச் சட்ட சபையில் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்ட தீர்மானம் தான் இப் போராட்டத்திற்கு மூலமாகும்.
1923 இல் நிறை வேற்றப்பட்ட போலே தீர்மானம் 1926இல் சிறிய மாறுதல்களுடன் மீண்டும் உறுதிப்படுத்தப் பட்டது. இதன் அடிப்படையில் மகத் நகராட்சி சௌதார் குளத்தைத் தீண்டப்படாதவர் பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. ஆனாலும் நகராட்சியின் தீர்மானம் செயல் வடிவம் பெறவேயில்லை. சாதி இந்துக்களின் எதிர்ப்பு உணர்வுக்கு அஞ்சித் தீண்டப் படாதவர்கள் தங்கள் உரிமையை நிலை நாட்ட முடியவில்லை.
ஆகவே 1927 மார்ச்சு 19, 20 ஆகிய நாட்களில் கொலாபா மாவட்டத் தீண்டப்படாத மக்கள் மாநாட்டை மகதில் நடத்துவது என்று முடிவெடுக்கப் பட்டது. இம் மாநாட்டிற்கு பதினைந்து வயது சிறுவர் முதல் எழுபது வயது முதியவர் வரை ரொட்டி மூட்டையைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தும் நடந்தே வந்து மகதை அடைந்தனர். மராட்டியம், குசராத் ஆகியவற்றின் எல்லா மாவட்டங்களிலிருந்தும் தீண்டப்படாத வகுப்புத் தொண்டர்களும், தலைவர்களும், பேராளர்களுமாக மொத்தத்தில் பத்தாயிரம் பேர் மகத் மாநாட்டிற்கு வந்தனர்.
இம் மாநாடு நடைபெற்ற இடத்தில் தீண்டப்படாதவர்களுக்குக் குடி தண்ணீர் கிடைக்காது என்பதால் சாதி இந்துக்களிடமிருந்து நாற்பது ரூபாய்க்குத் தண்ணீர் விலை கொடுத்து வாங்கப்பட்டது.
மாநாட்டிற்குத் தலைமை உரையில் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு அறை கூவல் விடுத்தார். மனிதர்கள் என்ற முறையில் அந்த மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காகக் குரலெழுப்புவதோடு தங்களுடைய குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்கச் செய்வதன் மூலம் தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள தக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இராணுவத்திலும், காவல் துறையிலும், கடற்படையிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் பணியில் சேருவதற்கான தடையை நீக்கக் கோரி அரசுக்கு எதிராகப் போராட முன் வர வேண்டுமென்று வலியுறுத்தினார்.
மாநாடு பல தீர்மானங்களை நிறைவேற்றியது. அவற்றில் ஒன்று மேல் சாதிக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் குடியுரிமைகளைப் பெறுவதற்கு உதவிட வேண்டு மென்றும், அவர்களை வேலைகளில் அமர்த்திக் கொள்ளவும், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உணவளிக்க வேண்டுமென்றும், இறந்த விலங்குகளின் உடல்களைச் சாதி இந்துக்களே புதைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறை வேற்றியது.
மேலும் தனியான சட்டத்தின் மூலம் இலவசக் கட்டாயக் கல்வியை வழங்க வேண்டுமென்றும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர் விடுதிகளுக்கு அரசு நிதி உதவி அளிக்க வேண்டுமென்றும், மற்றொரு தீர்மானமானது உள்ளாட்சி அமைப்புகளும், நகராட்சிகளும் போலே முன் மொழிந்த தீர்மானத்தை அமுலாக்க நடவடிக்கை எடுக்கும்படி அரசாங்கம் கோர வேண்டுமென்றும் தேவைப்பட்டால் இந்தியக் குற்றப் பிரிவுச் சட்டத்தின்படி 144 வது விதியைப் பயன்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டது.
மற்றொரு தீர்மானமானது, பொதுக் குளமான சௌதார் குளத்தில் இறங்கத் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்படும் பொருட்டு இந்த மாநாட்டுப் பிரதிநிதிகள் அந்தக் குளத்திற்குச் செல்வதென்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மார்ச் 20 ஆம் தேதியன்று காலையில் பிரதிநிதிகள் அமைதியாக அணி வகுத்து அந்தக் குளத்திற்குச் சென்றனர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட அணி வகுத்தது இந்தியாவில் இதுதான் முதல் தடவை! ஊர்வலத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கர் தலைமை வகித்தார். குளத்தை வந்தடைந்ததும் முதலில் அம்பேத்கர் அதனுள் இறங்கி இரு கைகளாலும் நீரை அள்ளிப் பருகினார். அதைத் தொடர்ந்து மற்ற பிரதிநிதிகள் அனைவரும் நீரைப் பருகினர். பின்னர் அனைவரும் மாநாட்டுப் பந்தலுக்குத் திரும்பி வந்தனர்.
இந்த நிகழ்ச்சி நடந்து 2 மணி நேரம் கழித்துத் தீய எண்ணங்கொண்ட சில சாதி இந்துக்கள் தீண்டப் படாதவர்கள் வீரேசுவரர் கோயிலுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளனர் என்ற பொய்ச் செய்தியை பரப்பினர். இதன் காரணமாக சாதி இந்துக்கள் கைகளில் ஆயுதங்களுடன், இந்து மதத்திற்கு ஆபத்து, கடவுளைக் களங்கப்படுத்தப் பார்க்கிறார்கள் என்று கூச்சலிட்டு மாநாட்டு பந்தலை நோக்கி ஓடி வந்தனர். மாநாட்டிற்கு வந்தவர்களில் பலரும் சிறு சிறு குழுக்களாக நகரத்தில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தனர்.
சிலர் ஊருக்குத் திரும்பிச் செல்வதற்காக மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைந்த சாதி வெறியர்களின் கூட்டம் பிரதிநிதிகளைத் தாக்கத் தொடங்கியது. அவர்கள் உண்டு கொண்டிருந்த உணவை எட்டி உதைத்து மண்ணில் சிதற அடித்தது. பாத்திரங்களை நசுக்கியது.
ஆண்கள், பெண்களை மற்றும் குழந்தைகளையும் தாக்கினர். மஹத் நகருக்குள் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகளுக்குள்ளும் புகுந்து அவர்களைத் தாக்கினர். அவர்கள் அருகிலிருந்த முஸ்லீம் வீடுகளுக்குள் புகுந்து உயிர் தப்ப வேண்டியிருந்தது.
அரசாங்க ஓய்வு இல்லத்தில் தங்கியிருந்த அம்பேத்கருக்கு இந்தத் தகவல் கிடைத்ததும் அவர் விரைந்தோடி வந்தார். வழியில் சமூக விரோதக் கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டது. அவர் மிகவும் பொறுமையாகப் பதிலளித்தார். கோயிலுக்குள் நுழையத் தாங்கள் திட்டமிட வில்லையென்றும் தங்களுக்கு அத்தகைய விருப்பம் எதுவும் கிடையாதென்றும் அவர் பதிலளித்தார்.
அம்பேத்கர் பயணியர் மாளிகைக்குத் திரும்பிய போது, கிட்டத்தட்ட நூறு பேர் பழிக்குப் பழி வாங்கி விடவேண்டும் என்று கண்களில் தீப்பொறி பறக்க, கைகள் துடிதுடிக்கப் பொறுமையிழந்து அம்பேத்கரின் ஆணைக்காக காத்துக் கொண்டிருந்தனர். அம்பேத்கர் என்ன அசோக் சிங்காலா, பிரவீண் தொகாடியாவா மாற்றுக் கருத்துள்ளவர்களை திரிசூலம் கொடுத்து குத்தச் சொல்வதற்கு! மனித நேயம் உள்ளவரல்லவா அம்பேத்கர்.
அவர்களை பொறுமையுடனும் கட்டுப் பாட்டுடனும் இருக்குமாறு வேண்டினார். அன்று மட்டும் சினத்தைத் தூண்டும் வகையில் ஒரு சொல் சொல்லியிருந்தால் போதும். மகத் நகரில் அன்று இரத்த ஆறு ஓடியிருக்கும். பேரழிவு ஏற்பட்டிருக்கும். அதை அம்பேத்கர் தடுத்து விட்டார்.
அம்பேத்கர் தாக்குதல் குறித்து விவரங்களைத் திரட்டிச் சமூக விரோதிகள் மீது காவல் துறையினரை வழக்குகளைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். அதன்படி அத்துமீறிப் பந்தலில் நுழைந்ததாக வைதீகப் போக்கிரிகள் சிலரைக் கைது செய்தனர். மொத்தம் 9 வைதீக இந்துத் தலைவர்களில் 5 பேருக்கு அதிக அளவில் அட்டூழியம் செய்தனர் என்று 4 மாதக் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. 1927 சூன் 6 ஆம் நாள் இத் தீர்ப்பை மாவட்ட நீதிபதி வழங்கினார்.
இந்தச் சம்பவமானது அம்பேத்கரின் சிந்தனையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தாழ்த்தப்பட்ட மக்களை மிகப் பெரும் அளவில் அணி திரட்டி, அவர்களுடைய சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளுக்காக அமைதியான பெரும் போராட்டங்களை நடத்த வேண்டிய காலம் வந்துவிட்டதென்ற உணர்வை அவர் உள்ளத்தில் ஏற்படுத்தியது.
இந்தப் போராட்டமானது இந்தியா முழுவதிலும் குறிப்பாகப் பம்பாய் ராஜதானியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. பல பத்திரிகைகள் இந்தப் போராட்டம் சரியானதென்று புகழ்ந்தன. சாதி இந்துக்களும் இந்தப் போராட்டம் சரியானதென்றும், போலே முன் மொழிந்த தீர்மானத்தை அரசாங்கம் அமலாகக் வேண்டுமென்றும் கோரினர்.மகத் நகரிலிருந்த பல மேல் சாதி இந்துக்களும், இந்தப் போராட்டத்தை நியாயமானதென்று கூறினர். இதன் காரணமாகச் சாதி வெறியர்களின் கோபத்திற்கும் அவர்கள் ஆளாயினர்.
தீண்டப்படாதவர்கள் தண்ணீரைத் தொட்டதால் தூய்மை கெட்டுவிட்டது என்று மேல்சாதி இந்துக்கள் கருதியதால் அதை புனிதமாக்க வேண்டுமென்று கருதினர். பசுவின் சாணம், மூத்திரம், தயிர், தண்ணீர் ஆகியவற்றின் கலவையைக் கொண்டு எல்லா வகையான தீட்டுகளையும் கழுவிட முடியும் என்று கருதினார்கள். அதன்படி மார்ச் 21 ஆம் தேதி 108 குடங்களில் அக்குளத்திலிருந்து தண்ணீர் எடுத்தனர்.
அந்தப் பானைகளில் தயிர், பசுவின் சாணம், பசுவின் மூத்திரம், பால் ஆகியவற்றைக் கரைத்த பின், தேர்ந்தெடுக்கப்பட்ட பார்ப்பனப் புரோகிதர்களின் காதைத் துளைக்கும் மந்திரக் கூச்சல்களுக்கிடையே அப்பானைகளில் இருந்த கலவைகளைக் குளத்தில் ஊற்றினார்கள். அதன் பின் அக்குளம் புனிதமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மக்களை ஆதரித்த மேல் சாதிக்காரர்கள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.