தில்லியே தில்லியே செந்தமி ழர்க்குநீ
கொள்ளியே! கொள்ளியே! கும்பி எரியுதே!
நஞ்சினும் கொடிய வஞ்சகம் நிறைந்த
நெஞ்சுனக் கென்பது கொஞ்சும் பொய்யோ?
வீழ்நாள் வரைஎம் வேர்அ றுக்கவே
வாழ்நாட் பகையாய் வந்துவாய்த் தாயோ?
காழ்த்து முற்றிய கயமைத் தனத்துடன்
சூழ்ச்சிக் குழிகள் தோண்டி வைத்தாயோ?
கொத்துக் கொத்தான கொலைகளை நிறுத்தென
மொத்தமாய்த் தமிழகப் பேரவை முன்னம்
வயிறெரிந்து வடித்த தீர்மா னத்தை
மயிரள வேனும் மதித்தா யாநீ?
தள்ளாத வயதிலும் எங்கள் தலைவர்கள்
உள்ளம் பதற ஓடிவந்து ரைத்தும்
இன்ன வரைக்கும் எம்மக் கட்கே
என்னநீ கிழித்தாய் எருமை மாடே!
இரக்கமே உனக்குக் கொஞ்சமும் இல்லையோ?
இன்னும்உன் கல்மனம் கரைய வில்லையோ?
பிரணாப் அங்குப்போய் பீற்றிய தென்ன?
சொரணை கெட்ட உலக்கையே சொல்நீ!
பதவிக்கு உன்முன் பல்இளிப் பவர்கள்
பச்சைத் தமிழரைக் காட்டிக் கொடுப்பர்
‘உதவிக்கு வருவாய் நீ’என் றுரைத்தே
ஊரை ஏய்த்துக் கண்ணீர் வடிப்பர்
ஓநாய் அங்குள்ள இராசபக் சேஎனில்
வாயால் பிணந்தின்னும் வஞ்சகப் பேய்நீ
டாட்டா பிரல்லா எச்சிலைக்கு வாலை
ஆட்டிக் கால்நக்கும் அடிமை நாய்நீ
பாழும் பாடையில்,நீ பயணப்பட் டால்தான்
வாழும் தேசிய இனங்கள் பிழைக்கும்!
ஆழக் குழியில் உனை அடக்கம்செய் தால்தான்
ஈழ விடுதலை வெற்றி முளைக்கும்!
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
வெற்றி முளைக்கும்
- விவரங்கள்
- தமிழேந்தி
- பிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2009