நக்கீரன் வெளியிட்டு வரும் ‘அதிரடி-எதிரடி’ பகுதியில் ஜெயலலிதா கருத்துக்கு பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பதிலை பெற்று வெளியிட்டுள்ளது.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இந்த வருடம் என் பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை - ஜெயலலிதா.

விடுதலை இராசேந்திரன் - ஈழத் தமிழர்களுக்காக பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என்று ஜெயலலிதா சொல்வது அப்பட்டமான நாடகம். தமிழகத்தில் இன்றைக்கு எழுந்துள்ள ஈழ ஆதரவு எழுச்சியில், தனக்கும் பங்குண்டு என்பதை காட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

அதற்காகத்தான் இந்த நாடகம். ஈழத் தமிழர்கள் மீது அவருக்கு உண்மையாகவே கவலை இருக்குமேயானால் இன அழிப்புக்கு துணை போகும் இந்திய அரசை வலிமையாக ஜெயலலிதா கண்டித்திருக்க வேண்டும். மாறாக, இந்திய அரசின் நடவடிக்கையை ஆதரிப்பதாக கூறுகிறார்.

போர் என்று வந்துவிட்டால் மக்கள் சாகத்தானே வேண்டும் என்று சொன்னவர் தானே ஜெயலலிதா. ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்பது ‘இந்து’ ராம், ‘துக்ளக்’ சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்களின் குரல்களுக்கு ஆதரவாக இருப்பது தானே தவிர வேறெதுவும் இருக்க முடியாது.

நன்றி: ‘நக்கீரன்’ பிப்.18, 2009

Pin It