நேற்றும் மறந்து விட்டேன்
இன்றாவது எழுதிவிடலாம்
என்று எடுத்தேன்
அந்தத் தாலாட்டை...
குழந்தை இறந்துவிட்ட
சேதி வந்தது
இப்படித்தான் எப்போதும்
நிகழ்கிறது
விடியலுக்கு முன்பே
கரைந்து விடுகிற பனித்துளி
இரவுக்கு முன்பே
வந்து வெளியேறி விடுகிற நிலவு
கனவில் கூட
வடிந்து விடுகிறது நதிவெள்ளம்
கடலைத் தொடும் முன்பு...
வாசலில் விழுமுன்பே
உலர்ந்து விடுகிறது மழை
காற்றும் அப்படித்தான்
வந்து வீசும்போது
சருகாகிக் கிடக்கிறது இலை!
பாவப்பட்ட என்னால்
பாடப்படுவதற்கு
ஒரு வலி காத்துக் கொண்டிருக்க,
மூளை மரணம் எப்போதோ
அறிவிக்கப்பட்டுவிட்டது
காலமும் இடமும் கைவிடப்பட்ட,
அரவமற்ற ஒரு பெருவெளியில்
மிதந்து கொண்டிருக்கும்
என்னுடைய உடலை
உலுக்கிக் கொண்டிருக்கிறேன் ...
உடல் சிதறி இறந்த குழந்தை
அணிந்திருந்த
உடைகளின் மிச்சங்களைக்
கையில் ஏந்தி
வார்த்தைகளும் கண்ணீரும்
அற்றுப் போய் அமர்ந்திருக்கும்
தாயிடம் சேர்ப்பிக்கச் சொல்லிக்
கதறிக் கொண்டி ருக்கிறது
எனது எழுதப் படாத
தாலாட்டும்..
- தாமரை