தமிழக முதலமைச்சரின் செயலாளராக இருக்கும் இராசமாணிக்கம் மிகவும் பிற்படுத்தப்பட்ட இசை வேளாளர் சாதியைச் சார்ந்தவர். இவரது மகன் துர்க்கா சங்கருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சாதியைச் சார்ந்த அனுராதாவுக்கும் சாதி மறுப்பு காதல் திருமணம் சென்னையில் நடந்தது. கலைஞரும், மருத்துவர் ராமதாசும் மணமக்களை வாழ்த்திப் பேசியுள்ளனர்.

மருத்துவர் ராமதாசு பேசுகையில் - உயர்க்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை, பா.ஜ.க. உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த பிறகும், அதை முழுமையாக அமுலாக்காமல், படிப்படியாக அமுல்படுத்தக் காரணம் என்ன? இது பிற்படுத்தப்பட்டோர் முகத்தில் பூசப்பட்ட கரி; இதை கலைஞர் துடைத்தெறிய வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

“100 லட்டுகள் இருக்கும் போது அதில் 15 லட்டுகள் தலித் மக்களுக்குத் தரப்படுகின்றன. ஏழரை லட்டுகள் பழங்குடியினருக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள எழுபத்து ஏழரை லட்டுகளையும், ஒரு குறிப்பிட்ட சமுதாயமே முழுமையாகத் தின்று ஏப்பம் விடுகிறது. அதற்கு எதிராகத்தான் 93 வயதிலும் பெரியார் கடுமையாகப் போராடினார்” என்று மருத்துவர் ராமதாசு உணர்வுப் பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.

பதிலளித்த கலைஞர் - “இப்போது களத்தில் தோற்றிருக்கிறோம் ஆனால் போரில் பெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.

கலைஞரின் இந்த பதிலைப் பார்த்தால், படிப்படியான இடஒதுக்கீடு என்ற சூழ்ச்சியில் பார்ப்பன சக்திகள் வெற்றி பெற்று விட்டார்களோ என்ற அழுத்தமான சந்தேகம் எழவே செய்கிறது.

‘புளுட்டோ விடை பெற்றது சூரியனை சுற்றும் 9 கிரகங்களில் ஒன்று புளுட்டோ. ஆனால் ‘புளுட்டோ’ இனி ஒரு கிரகம் அல்ல என்று கடந்த ஆக.17 ஆம் தேதி செக்கோஸ்லேவேகியா குடியரசின் தலைநகரான பிராசா நகரில் கூடிய சர்வதேச வானியல் அறிஞர்கள் மாநாடு அறிவித்து விட்டது. 75 நாடுகளைச் சார்ந்த 2500 வானியல் அறிஞர்கள், இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். கிரகம் என்பதற்கான இலக்கணம் என்ன? அது ஒரு நட்சத்திரத்தை சுற்ற வேண்டும். ஆனால், அதுவே ஒரு நட்சத்திரமாக இருக்கக் கூடாது. இரண்டாவதாக, கோள வடிவில் இருக்க வேண்டும். மூன்றாவதாக தனது அடர்த்திக்குத் தகுந்த ஈர்ப்பு விசை இருக்க வேண்டும்.

புளுட்டோவைப் பொறுத்த வரை மூன்றாவது அளவுகோலை பூர்த்தி செய்யவில்லை. எனவே அது கிரகம் ஆகாது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ‘நாங்கள் தான் புளுட்டோவை, சோதிடத்தில் சேர்த்துக் கொள்ளவே இல்லையே; நாங்கள் சொன்னதைத்தானே இப்போது விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் என்று துள்ளிக் குதிக்கிறார்கள் சில சோதிடர்கள். அப்படியானால் ஒரு கேள்வி: விஞ்ஞானம் சூரியனை நட்சத்திரம் என்கிறது. சந்திரன் ஒரு துணைக் கோள். இவைகளை சோதிடர்கள், கிரகங்களாக வைத்துக் கணக்கிடுவது எப்படி சரியாகும்? அதே போல் பூமியும் விஞ்ஞானப்படி ஒரு கிரகம் தான்! ‘நவக் கிரகத்தில்’ சோதிடர்கள் பூமியை விட்டுவிட்டது ஏன்? இதை எல்லாம் கேட்டால் பதில் வராது. என்ன செய்வது? புளுட்டோ கிரகத்துக்கே, இப்போது கிரகம் சரியில்லை போலும்!

புலிகளை வெல்வது கடினம்

உலகப் புகழ் பெற்ற ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் சார்பில் அதன் செய்தியாளர் சைமன் கார்ட்னர் ஈழத்தில் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் திரிகோண மலைப் பகுதிக்குச் சென்று யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை ராணுவத்தினரையும், அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

“இந்தப் போரில் விடுதலைப் புலிகளை எங்களால் வெல்ல முடியாது; நாங்கள் சண்டையை விரும்பவில்லை; எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து விடுவார்கள் என்ற பயத்தில்தான், வந்துள்ளோம்; எங்களது படை வீரர்கள் பிணங்களாக வீழ்வதைப் பார்த்து நாங்கள் அலுத்துப் போய்விட்டோம்” என்று அதிகாரிகள் பலரும் கூறியதாக அந்த செய்தியாளர் தெரிவித்திருக்கிறார். சிங்கள ராணுவம் கூலிக்கு போராடுகிறது. புலிகள் தன்மானத்துக்குப் போராடுகிறார்கள்!

பன்றி குணம் கொண்ட கூட்டம்

சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் உறுப்பினர்கள் பாலபாரதி (மார்க்சிஸ்ட்), திருக்கச்சூர் ஆறுமுகம் (பா.ம.க.), சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.), யசோதா (காங்கிரஸ்) ஆகியோர் திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு சந்தனப் பட்டை அடித்து அவமரியாதை செய்ததை கண்டித்தனர்.

அதற்கு பதில் அளித்து முதல்வர் கலைஞர் பேசியதாவது:

திண்டுக்கல்லில் திராவிடர் தலைவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், சிலைக்கு அல்ல, அவரது கொள்கைக்கு, லட்சியத்துக்கு, குறிக்கோளுக்கு களங்கம் கற்பிக்கிற செயல், சேட்டை குறித்து பத்திரிகைகளில் படம், செய்தி வந்துள்ளன. அது விஷமிகள் செயல் என்று காவல் துறை சொன்னதை உறுப்பினர் சிவபுண்ணியம் ஏற்காமல் கண்டித்துள்ளார்.

காவல்துறை இன்னும் வேகமாக அக்கறையோடு செயல்பட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டிய கடமை இருக்கிறது. பெரியாருக்கு இத்தகைய இழிவை ஏற்படுத்துகிறவர் நன்றியுள்ள தமிழனாக இருக்க மாட்டார்கள். பன்றி குணம் உடையவர்தான் அதைச் செய்வார். பன்றிகளை இப்படி தெருவில் நடமாடவிடக் கூடாது. காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்.

Pin It