விடுதலைப் புலிகள் குறித்தும், அவ்வமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்தும், தமிழக முதலமைச்சர் கலைஞர் 16. 11. 2009 அன்று வெளியிட்டிருந்த அறிக்கை ஒரு விவாதத்தை எழுப்பியது. அதன் பிறகு, 24. 11. 2009 முரசொலி கேள்வி - பதில் பகுதியில் அவ்வறிக்கை பற்றிய சில விளக்கங்களை அவரே எழுதியிருந்தார்.

கலைஞரின் அறிக்கையைக் கண்டித்து எழுதியவர்களில் சிலர், அவரைக் கண்டித்ததோடு மட்டும் நிற்காமல், அதற்குப் புலிகளின் ஆதரவாளர்களான தொல். திருமாவளவனும், சுப. வீரபாண்டியனும் விடைசொல்ல வேண்டும் என்றும் கேட்டிருந்தார்கள். விடை சொல்வதில் நமக்கு ஒரு தயக்கமும் இல்லை. ஆனால், பத்திரிகைகளுக்குக் கொடுக்கப்படும் இதுபோன்ற நம் விரிவான அறிக்கைகள் முழுமையாக வெளியிடப்படுவதில்லை என்பதோடு, சில ஏடுகளில் அவை திரித்தும் வெளியிடப்பட்டு விடுகின்றன என்ற அச்சம் காரணமாக நாம் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. எனவே, நம் எண்ணங்களையும், நிலைப்பாட்டையும் இங்கு முழுமையாக வெளியிட வேண்டிய கடமை நமக்குள்ளது. 

சுருக்கமாய்ச் சொல்வதெனில், தமிழக அரசியலில் நாம் தி.மு.க.வையும், ஈழ அரசியலில் விடுதலைப்புலிகளையும் ஆதரிக்கின்றோம். ஆனால், தி.மு.க. விற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான உறவு வேறுமாதிரியானது.

தி.மு.க.வைப் பொறுத்தவரை, 1956 முதல் ஈழ மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளதே தவிர, எப்போதும் விடுதலைப் புலிகளை ஆதரித்ததில்லை. புலிகள் இயக்கமும், தி.மு.க.வை நம்பியதில்லை. எம்.ஜி.ஆருடன் இருந்த நெருக்கம் காரணமாக, தி.மு.க. செய்த சிறு உதவிகளைக் கூட ஏற்க இயலாத நிலையிலேயே புலிகள் இருந்தனர். கால ஓட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. புலிகளுக்கு ஆதரவாக இருந்த இந்திரா காந்தியும், எம். ஜி. ஆரும் இறந்து போனார்கள். புலிகளைக் கடுமையாக எதிர்க்கின்ற, ஈழ மக்களுக்கே எதிரான நிலைப்பாடு கொண்ட, ‘தான் ஒரு பாப்பாத்திதான் ’ என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துக் கொண்ட ஜெயலலிதா, 1991 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். ராஜீவ் கொலையை ஒட்டித் தி.மு.க.வினரின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. சொத்துகள் நாசமாக்கப்பட்டன. தி.மு. கழகக் கொடிக் கம்பங்கள் வெட்டியயறியப்பட்டன. மாறாக, விடுதலைப் புலிகளின் எதிரியான ஜெயலலிதாவிற்கு அரியணை வழங்கப்பட்டது.

ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தன் காட்டுத் தர்பாரைத் தொடங்கினார். புலிகளின் ஆதரவாளர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், பாதி நாள்களைச் சிறையில்தான் கழிக்க நேர்ந்தது. பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர், புலிகளின் ஆதரவாளர் இல்லை என்றாலும், எதிர்ப்பாளராகவும் இல்லை. ஈழப்பிள்ளைகளுக்கு ஜெ. ஆட்சியில் தடை விதிக்கப்பட்டிருந்த கல்வி வாய்ப்பைக் கலைஞர்தான் வழங்கினார்.

2001 இல், மீண்டும் ஜெ. ஆட்சி வந்தபோது, அந்தக் கல்வி உரிமை கூட மறுக்கப்பட்டது. பொடா என்னும் கொடும் சட்டத்தின் கீழ், புலிகள் இயக்க ஆதரவாளர்கள் அனைவரும், ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டோம். “இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பிப் பிரபாகரனைச் சிறைப்பிடித்து வரவேண்டும்” என்று தமிழகச் சட்டமன்றத்தில் ஜெ. தீர்மானமே நிறைவேற்றினார். பொடா சிறை மீண்டு வெளிவந்த பிறகும் கூட, பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்று நெடுமாறன் ஐயா, நான் உள்படச் சிலருக்கு நீதிமன்றத் தடை விதிக்கப்பட்டது. பேசாமல்தான் இருந்தோம்.

பலர் வற்புறுத்தியும் கூட, அந்தத் தடையை எதிர்த்துச் சிறு சலசலப்பைக் கூட ஐயா நெடுமாறன் காட்டவில்லை. நாங்களும் அதற்கு உடன்பட்டோம் என்பது ஒரு தலைகுனிவு வரலாறு.

இந்நிலையில் 2006 சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவைக் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டிய ஐயா நெடுமாறன் ‘நடுநிலை வகித்தார்’. அடுத்தடுத்து, விடுதலைப்புலிகள் ஆதரவுக் கட்சிகள் அனைத்தும் (சிறுத்தைகள் உள்பட) ஜெ. வுக்கு ஆதரவாகச் சென்று விட்டனர். புலிகளை எதிர்க்கும் காங்கிரஸ் மட்டுமே தி.மு.க.வோடு கூட்டணியில் மிஞ்சிற்று. சிறுத்தைகள் மீண்டும் திமுக அணிக்கு வந்துவிட்ட பிறகும், திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய பெரிய கட்சிகளும், நம்மைப் போன்ற ஓரிரு அமைப்புகளும் மட்டுமே தி.மு.க.விற்கு ஆதரவாக உள்ளோம். 2009 தேர்தல் நேரத்தில் மற்ற புலிகள் ஆதரவுக் கட்சிகள், அமைப்புகள், திரைப்படத் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஜெயலலிதா ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர்.

ஆளுங்கட்சியின் அருகில் நின்று, ஈழ மக்களுக்கு உதவியிருக்க வேண்டிய அனைவரும், உள்ளூர் அரசியலில் மும்முரம் காட்டி, கலைஞரை வீழ்த்துவதிலேயே கவனமாக இருந்தனர். அத்தனை கோளாறுகளும் அங்குதான் தொடங்கின. அவர்களால் கலைஞரை வீழ்த்தவும் முடியவில்லை, ஈழ மக்களைக் காக்கவும் முடியவில்லை. எனினும், 16.11.2009 இல் வெளிவந்துள்ள கலைஞரின் அறிக்கை, அவர் எதிர்ப்பாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், அவரை ஆதரிப்பவர்களுக்குத் தர்ம சங்கடத்தையும் கொடுத்துள்ளது என்பதுதான் உண்மை. கலைஞரிடமிருந்து இப்படி ஒரு அறிக்கை வராதா என்றுதான் அவர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

நம் முதலமைச்சரின் அன்றைய அறிக்கை ஒரு பக்கச் சார்புடையதாகவே இருந்தது. விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் மட்டும்தான் அதில் இருந்தது. கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் பட்டியலும் மிக நீளமானது. சர்வதேசக் கடலில் பயணம் செய்து கொண்டிருந்த மாவீரன் கிட்டுவை, சமாதானம் பேசச் சென்ற ஜானியை, மாவீரர்கள் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 17 பேரைக் கொன்றவர்கள் யார்? இந்திய அரசும், அதிகாரிகளும் அல்லவா? அமிர்தலிங்கத்தின் கொலையிலும் கூட, இந்திய ரா அமைப்பே பின்னணியில் இருந்தது என்பதைப் பலரும் அறிவர்.

‘டெலோ ’ சபாரத்தினம் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தது, அதற்கு முதல் நாள் சபாரத்தினத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்ட புலிகளின் தளபதி லிங்கத்தின் கொலை அல்லவா? இந்திய ‘ரா’வுடன் கைகோத்துக் கொண்டு, தலைவர் பிரபாகரனைக் கொலை செய்யச் சதி செய்த துரோகி மாத்தையாவைக் கொன்றது எல்லாவிதத்திலும் நியாயம்தானே? மாத்தையாவைத் தண்டித்ததில் எந்தப் பிழையும் இல்லை, துரோகி கருணாவைத் தண்டிக்காமல் விட்டதுதான் பிழை என்பதுதான் நம் கருத்து. இவ்வாறு கலைஞர் அறிக்கையில் இருந்து நாம் மாறுபட்டாலும், ஜெயலலிதாவின் கடுமையான புலிகள் எதிர்ப்புப் போக்கைப் பற்றி வாய் திறக்காதவர்கள், கலைஞர் மீது மட்டும் குறி வைத்துப் பாய்வது ஏன் என்ற வினா எழுகிறது.

கலைஞராவது ‘வேங்கை பிரபாகரனுக்காகக் கண்ணீர் விடுகிறேன்’ என்கிறார். தமிழ்ச் செல்வன் இறந்தபோது, அவர் நெஞ்சுருகி எழுதிய கவிதையை நாடறியும். என்றைக்காவது ஜெயலலிதா, புலிகளையோ, அதன் தலைவர்களையோ ஆதரித்து ஒரு சொல்லேனும் கூறியிருக்கிறாரா? தேர்தல் நேரத்தில், தனித் தமிழீழம் வேண்டும் என்று கூறி, மேடையில் நாடகமாடிய வேளைகளில் கூட, புலிகளைக் கண்டித்தே பேசினார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. 

வைகோ, நெடுமாறன், இராமதாஸ், தா. பாண்டியன் போன்ற தலைவர்கள், கலைஞரைப் புலிகளின் எதிர்ப்பாளர், ஈழ மக்களுக்கே எதிரி என்று ஆக்கிவிடத் துடிக்கின்றனர். சோ, சுப்பிரமணிய சாமி, இந்து ராம் போன்ற பார்ப்பனர்களோ, ‘கலைஞர் விடுதலைப் புலிகளுக்கு ரகசியமாக உதவுகின்றவர்’ என்று கூறி, அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பாடாய்ப்படுகின்றனர். இரண்டிலும் உண்மையில்லை. மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு குழுவினருக்கும் ஒரு நோக்கத்தில் மட்டுமே ஒற்றுமை உள்ளது. ஈழ மக்களுக்கு உதவ வேண்டும் என்பதைக் காட்டிலும், ஈழப் பிரச்சினையைக் காட்டி எப்படியேனும் கலைஞரைக் கவிழ்த்துவிட வேண்டும் என்பதுதான் அந்த நோக்கம்.

எப்படியோ போகட்டும், நம்மைப் பொறுத்தவரையில், நம் நிலைப்பாட்டில் நாம் தெளிவாக இருக்கிறோம். நாம் தி.மு.க.வை ஆதரிக்கின்றோம் என்பதற்காக, புலிகளைப் பற்றிய தி.மு.க.வின் பார்வையை நாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம் என்பதில்லை.

நாம், தமிழக அரசியலில் முழுக்க முழுக்கத் தி.மு.க.வையும், கலைஞரையும் ஆதரிக்கிறோம். ஈழ மக்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், தமிழக மக்களையும் படுகுழியில் தள்ளிவிடக் கூடாது என்று கருதுகின்றோம். இன்றைக்கும் கலைஞரை விட்டால், தமிழகத்திற்கு வேறு நாதியில்லை என்று உறுதியாக நம்புகிறோம். புலிகள் ஆதரவு என்னும் நிலைப்பாட்டில், தி.மு.க.விடமிருந்து நாம் வேறுபட்டாலும், அதற்காகத் தமிழக ஆட்சியை ஜெயலலிதா போன்ற கொடுங்கோலர்களிடமோ, விஜயகாந்த் போன்ற அரசியலற்றவர்களிடமோ ஒப்படைத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றோம். ஈழ அரசியலில், விடுதலைப் புலிகளே மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிய போராளிகள் என்பதையும், அவர்களின் தியாகங்கள் ஈடு இணையற்றவை என்பதையும் உறுதிப்படுத்துகின்றோம்.

இதுவே நம் நிலைப்பாடு!

- சுப.வீரபாண்டியன்

Comments

10 comments

10
gnairu
நேரடி எதிரிகள் என்றைக்குமே நமக்கு எதிரிகள்தான் அதில் மாற்றமில்லை.. ஆனால் எதிரிகளின் எதிர்ப்பை.. தனது துரோகத்தை மறைக்கும் ஆயுதமாக ஏற்றுக்கொண்டது ஏன்? ஜெயலலிதாவின் எதிரி என்ற செயல்பாட்டு முந்தானைக்குள் துரோகி கருணாநிதி ஒழிந்துகொள்ள முற்படுவது ஏன்? என்ற கேள்விக்கு விடை என்ன? உச்சகட்ட தாக்குதல் நேரத்தில் உண்ணாவிரத நாடகமும் போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற பொய் பரப்புரையும் ஏன்? முத்துகுமரன் இறுதி ஊர்வலம் கருங்காலிகளால் திசைமாற்றப்பட்டது ஏன்? இந்தியா ஆயுத உதவி செய்யவில்லை என்ற மறுப்பறிக்கை ஏன்? கருணாநிதியை நாராயணனும் மேனனும் சந்தித்த ஒவ்வொரு முறைக்குப் பின்னும் ஈழ படுகொலை உயர்ந்துகொண்டே போனது ஏன்? ஈழத்தமிழனுக்காக தன் தியாகத்தை பட்டியலிடும் அதே நேரத்தில் படுகொலைக்கு ஆளாகிக் கொண்டிருந்த ஈழத்தமிழனை காப்பாற்றாமல் அமைதி காத்தது ஏன்? ஈழ ஆதரவு வழக்கறிஞர்கள் போராட்டத்தை ஒடுக்க காவல் துறையை ஏவியது ஏன்? புலி ஆதரவு மத்திய அரசு எதிர்ப்பாளர்களையும் கூட‌ நீதிமன்ற தீர்ப்பையும் மீறி சிறையில் அடைத்தது ஏன்? இன்றுவ‌ரை சிங்க‌ள‌ இராணுவ‌த்தால் தாக்க‌ப்ப‌டும் த‌மிழ‌க‌ மீன‌வ‌னைக் காப்பாற்ற‌ பாதுகாப்பு ந‌ட‌வ‌டிக்கை இல்லை ஏன்? சேதுக் கால்வாய்க்கு உரிமை கொண்டாடிய‌ க‌ருணாநிதி அது மத்திய அரசால் கைக‌ழுவப்படுவதைதை வேடிக்கை பார்ப்ப‌து ஏன்? ப‌த‌விக்காக‌ சுழ‌ல் நாற்காலியில் சுழ‌ன்ற‌வ‌ர் த‌ன் இன‌ம் அழிப்ப‌தை க‌டித‌ம் மூல‌ம் ம‌ட்டுமே பேசிய‌து ஏன்? வ‌ர‌லாற்றில் இன துரோக‌த்தை ம‌றைக்கும் இந்த‌ செய‌ல் ஏன்?
எதிரியை விட‌ துரோகி ஆப‌த்தான‌வ‌ன் என்று வ‌ச‌ன‌ம் எழுதிய‌ க‌ருணாநிதியின் கைக்கூலிக‌ளுக்கு இன்னும் நிறைய‌ ஏன்க‌ள் உள்ள‌ன‌ சுப‌.வீ... முள் வேலிக்குள் ஈழ‌த்த‌மிழ‌ன்... சினிமாக் கூத்தாடிக‌ளின் ஆட்ட‌த்தை ரசிப்ப‌வ‌ன் இன‌த்த‌லைவ‌னா? த‌ன‌க்குத்தானே ப‌ட்ட‌ம் ப‌ரிசு வ‌ழ‌ங்கிக் கொள்ளும் ஒரு முட்டாளை ந‌ம்பி த‌மிழ் இன‌மே அழிந்துள்ள‌து.. இன்னுமா க‌ருணாநிதிக்கு வ‌க்கால‌த்து.. சு.ப‌.வீக்க‌ளையும்.. ஜெக‌த்க‌ஸ்ப‌ர்க‌ளையும்.. திருமாக்க‌ளையும் வ‌ர‌லாறு ச‌ரியாக‌வே க‌ணிக்கும்.. சோனியா, க‌ருணாநிதி, ம‌ன்மோக‌ன், சித‌ம்ப‌ர‌ம், ராஜ‌ப‌க்சேக்க‌ள் எல்லோருமே இட்ல‌ர் அணி என்ப‌தை ச‌ரித்திர‌ம் ம‌றுக்காது...
Haran
1.When Srilankan Govt kiilling more than a Lakhs Tamils, Karuna(nidhi) bargaining to get the Minister seat for his son. What a leader. Still now migrated tamils cant able to bring the resolution against srilanka in the UNO. Still India supporting Lanka and india fight against the resolution which bring the north countries. So far Karuna(nidhi) not condemning india even a single statement.

2. Elin shander is a doctor and she is a member in HumanRights in USA. Last five years she condeming against the human rights violation in Lanka. she got the visa to participate the meeting in Delhi & Chennai. But last moment India cancled her VISA. Karuna(nidhi) given pressure to the Central Govt to withdraw the VISA.

3.Seriously I have never heard about such a leader in the World. Karuna(nidhi) beate Nero King who reading Piano when his country destroying.

4.Prabha losed his family for his people. Karuna(nidhi) losed tamils for his family.
Muthu
உங்கள் விளக்கம் புரியவில்லை..... கருணாநிதி செய்த தவறை.... ஜெயலலிதா செய்த தவருடன் ஏன் ஒப்புடுகிரீர்கள்? “இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பிப் பிரபாகரனைச் சிறைப்பிடித்து வரவேண்டும்” என்று தமிழகச் சட்டமன்றத்தில் ஜெ. தீர்மானம் நிறைவேறிய போது அதை ஏன் திமுக எதிர்கவில்லை? அதை நீங்கள் ஏன் மறைக்க வேண்டும்? முத்துகுமரன் மரணம் தமிழ்நாட்டில் மாணவர்களிடையே ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியது... அதை அடக்கியது யார்? இந்திய ராணவ வண்டியை வழி மரிதத்ததற்கு தேச பாதுகாப்பு சட்டத்தை ஏவியது யார்? தமிழனை கொள்ள வேண்டாம் என்று சொல்வது கருணாநிதிக்கு தேச குற்றமா? பெரியார் திராவிடர் கழக தொண்டர்களை கேளுங்க எத்தனை வழக்கு என்று?
ஈழ தமிழர்களுக்கு ஜெ விரோதி.... கருணாநிதி துரோகி. நீங்கள் ஏன் அவருக்கு காவடி தூக்குகிறீர்கள்?
Dr.Thirumugam
நீங்கள் சொன்னீர்கள் என்றால் சரியாகத்தான் இருக்கும் சுப வீ ! இன்றைக்கல்ல, என்றைக்கும் கலைஞரை விட்டால், உங்களுக்கு வேறு நாதியில்லை என்று நாமும் உறுதியாக நம்புகிறோம். புலிகளுக்கு ஏற்ப்பட்ட பின்னடைவால் தாங்கள் மிக மிக வருத்தத்துக்கு உள்ளாகி இனி எப்படி தலை நகர் டில்லி முதல் தமிழர் வாழும் நாடுகள் எங்கும் பறந்து, தமிழ் மக்களுக்கு தாம் சேவையாற்றப்போகிறோம் என தாங்கள் தத்தளிப்பது புரிகிறது! போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வகையில் தங்கள் நிலைப்பாட்டை தானைத் தலைவர், **** கருணாநிதிக்கு எழுத்து மூலமாக தெளிவாக்கியுள்ளீர்கள்! கவலை வேண்டாம்! தங்களின் சேவை தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் தேவை என்பதை தமிழ் நாட்டுத் தமிழ் **த்தலைவர் நன்றாக அறிவார்! கண்டிப்பாக நடக்கவிருக்கும் "உலகத் தமிழ் செம்மொழி மானாட மயிலாட நிகழ்ச்சியில்... மன்னிக்கவும்! மா நாட்டு நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு கருமத்தரங்கத்தில் உங்கள் நிலைப்பாட்டை மேலும் தெளிவு படுத்தத் தக்க வாய்ப்புக் கிடைக்கும் என நம்புவோம்! கவலை வேண்டாம்! நல்லதே நடக்கும்!
manipari
oru latcham tamilanin vuyirai kapartamal irunthathdu illamal, ore vuril oruveetil ilavu vizhunthuvitathal inoruveetil thirumanam makizhchiyag nadapathu eyalbu endru sangapadalai udaranam katiya kruna-nidiyai thamizh ina thalaivaraga subavi ertugollatum, anal martravarukum avaru vazhi katuvathu ayokiyathanam
ஆ.தமிழ்ச்சுடர்
தமிழ் இனத்தின் விரோதி ஜெயலலிதா;அவர் தமிழரும் அல்ல. தமிழர்களுக்கு, அந்தத் தமிழர்கள் தமிழ்நாட்டவர்களாக இருந்தாலும் சரி, இல்லை தமிழீழ நாட்டவர்களாக இருந்தாலும் சரி அவர் ஏன் உதவ வேண்டும் என நாம் எதிர்பார்க்க வேண்டும்? தன்னைத் தமிழ்ப்பெண் என்றோ, தன் வாயால் தமிழ் வாழ்க என்று பீத்திக்கொண்டோ விளம்பர விளக்குமாறுகளுடன் எப்போதும் அவர் வந்ததில்லை. படு கேவலம், மகா அசிங்கம் கழிசல் திராவிடம், திராவிட இனம், திராவிட இனப் பெண்மணி என்றெல்லாங்கூட சொல்லிக் கொண்டதே இல்லை.
தமிழர் என்று எங்களை உணர்ந்த நாங்கள் ஜெயலலிதாவிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. எதிரியிடம் போய் என்ன எதிர்பார்க்க முடியும்? எம்முடைய இந்த நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. பேராசிரியர் குழம்பிப் போனால் நாங்கள் என்ன செய்ய முடியும்.
கருணாநிதியை இதுவரை நம்பி வாக்களித்தோம்; ஏமார்ந்தோம். இப்போது கருணாநிதி யார் எனபதைத் தெரிந்து கொண்டோம். மாற்று தேடுகிறோம். ஜெயலலிதா தமிழ் இன விரோதி என்று அறிந்திருந்தோம். ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே தமிழ் இன விரோதிகள் என்று இப்போது அறிந்திருக்கிறோம். அவ்வளவுதான்.
ஒரு சட்டம் போட்டான் - அவ்வளவுதான் ‘திராவிட நாடு’ கொள்கை ஓடிப்போய்விட்டது. ஒரு 'மிசா'வில் உள்ளே தள்ளி உதை உதை என்று உதைத்தான் - அவ்வளவுதான் மாறாத நிரந்தர கூட்டணி வந்தது. தமிழீழத் தலைவருக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயல்லிதா தீர்மானம் கொண்டு வந்தார்; கருணாநிதி அதைத் தடுக்கவில்லை; எதிர்க்க வில்லை;எதிர்த்து வாக்களிக்கவும் இல்லை. சுப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவிற்கு கவிதா எழுதி வைத்தார் கருணாநிதி; அது எத்தனை நாள்களுக்குத் தாக்குப்பிடித்தது? நானே அடிமை என்று அறிவித்துக்கொண்டவர் ஏன் இன்னும் தலைமை தாங்குகிறார். ஒரு அடிமையின் தலைமையில் இந்தத் தமிழ் இனமும் நாடும் எப்படிச் செல்ல முடியும். அடிமைக்கும் ஆட்சிக்கும் என்ன தொடர்பு? அடிமைக்கு ஆட்சிக் கட்டிலில் என்ன வேலை? இங்கே இருக்கின்ற எல்லா தமிழர்களையும் ஒட்டு மொத்தமா அடிமைகளாக விற்பனை செய்கிற வேலையா? தமிழ் ஈழ மக்களுக்கு கருணாநிதியால் எந்தப் பயனும் இல்லை என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள்; அதனால் தானே 'தமிழ் ஈழக் கொள்கையில் அல்ல தமிழ்நாட்டில் கருணாநிதியை ஆதரிக்கிறேன்' என்று நீங்களே கூறுகிறீர்கள்! தமிழ் இனத்திற்கு பிரச்சனை இப்போது அங்கே உள்ளது;ஒன்றும் செய்யமுடியாத கருணாநிதி இங்கே பிரச்சனை வந்தால் மட்டும் என்ன செய்து விடுவாராம்?
எல்லாம் பெரிய பெரிய தலைவர் என்று கூறிக் கொள்கிறார்கள்; ஆனால் நடைமுறையில் தமிழ் இனம் என்ற அளவிலான எந்த அறிவும் இருப்பதாகத் தெரியவில்லை இவர்களுக்கு. சாதி அரசியல், பதவி அரசியல், சொத்து-பத்து அரசியல், வாரிசு அரசியல் இவற்றைப் பொருத்த வரையில், துல்லியம் என்றால் துல்லியம் அவ்வளவு துல்லியமான அறிவு இவர்களுக்கு இருக்கிறது. இவர்கள் எல்லாம் இந்த மாதிரி புத்தியைத் தொலைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
இராமதாசு, வைகோ, திருமாவளவன், தா.பாண்டியன் போன்றவர்கள் மீண்டும் மீண்டும் தவறுகளையே செய்கிறார்கள். சாதி கட்சியை வைத்துக்கொண்டு இராமதாசு என்ன செய்துவிட முடியும்! அந்தந்த சாதி மக்களைத் தவிர வேறு யார் வாக்களிப்பார்கள்? அந்தச் சூழலில்தான் வேற்று இன, வேற்று மாநில வேட்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்களிக்கிறார்கள். விஜயகாந்தின் வெற்றி இப்படித் தரப்பட்டதுதான்.
இதே நிலைதான் திருமாவளவனுக்கும்; இவரைப் பொருத்த வரையில் கருணாநிதி- திமுக, சோனியா-காங்கிரசு என்று கெட்டு சீரழிந்து போனதால்தான் இந்த நிலமை வந்தது. தமிழ் நாட்டில் இருப்பதைப் போன்ற தனி நபர் அரசியலும், தனி நபர் விரோத அரசியலும் உலகில் வேறு எங்கும் கிடையாது. கருணாநிதி-ஜெயல்லிதா அரசியல் அப்படிப்பட்டது; கருணாநிதி-வைகோ அரசியல் அப்படிப்பட்டது; கருணாநிதி-பழ.நெடுமாறன் அரசியல் அப்படிப்பட்டது; அரசியல் என்பது 'சொத்து-பத்து' என்றாகிவிட்டது. எந்த தலைவருக்கும் 'பணி-மூப்பு-ஓய்வு' என்பதில்லை; சாவுகூட வரமாட்டேங்கிறது. பெரியார் காலத்திலே இருந்தே இதுதான் திராவிட இயக்கத் தலைமைகளின் புத்தியும் நிலைப்பாடும். பழ.நெடுமாறன் எல்லாம் அரசியலை விட்டுப் போக வேண்டிய காலம் இது.
கடைசியாக, சுப.வீரபாண்டியன்....... இந்தப் பேராசிரியரைப்பற்றி என்ன சொல்வது!.... எங்க தலையில்தான் அடித்துக் கொள்ளவேண்டும். கேட்டால் 'இப்பதான் ரொம்ப பிஸியா இருக்கமுடியுது; முன்னாடி எல்லாம் பொய்து போவது எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா? ' என்பதையெல்லாம் நல்ல தமிழிலே நாள்கணக்கில் உரை வீசுவார். நாமும் இவருடைய சொல் ஒழுகலை 'ஜொல்லு ஒயுவ' கேட்டுக் கொண்டிருப்போம். இதைத்தான் திராவிட மேடைப்புரட்டல் என்பது; அது பாமரப்பயல்களை ஏய்ப்பதற்கும் படித்தவர்களின் பொழுது போக்கிற்குமானது. வெற்றி பெறக்கூடிய வாய்ப்புக்களைப் பார்த்து கணக்குகள் போட்டு இங்கே இருப்பதா எதிரி அணியில் இருப்பதா என்று முடிவு செய்வதெல்லாம் இன அழிப்பு பற்றிய போராட்டங்களிலும், போர்களிலும் கடைபிடிப்பது அறிவீனம்; துரோகம்.
rasheedkhan
இத்தனைநாள் இல்லாம்ல் இந்த ஆண்டு மட்டும் இத்தாலி பாதிரியார் தமிழ் ஆய்வாளர் கால்டுவெல் அவர்களுக்கு அரசு மரியாதை செய்யவேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளது ஏன்?
kumar
ரொம்ப பிரமாதமான சமாலீப்பு! சு ப வீ ய இப்படி போட்டு வாங்கு வாங்கு வாங்குரீங்கலெ மாசா மாசம் சாப்பாட்டுக்கு எவன்டா பணம் தர்றீங்க! சும்மா........
E. Ramakrishnan
Pallukkum Kaval (Suba vee) Appadeyae Ponnaikum Nanban (Suba Vee)
உழைத்து பிழைக்கும் தமிழன்
இனமான சு ப வீ யை, ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நெய்வெலியில் சந்தித்தேன் .
எங்கே அந்த சு ப வீ ?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.