stalin karunanidhi anna dmkதமிழகம் ஆசியப் பகுதியில் உயர்ந்த மனித வளமும், நிறைந்த இயற்கை வளமும் கொண்ட ஒரு நிலமாகும். இந்நன்னிலத்தை ஒரு நூறாண்டு முன்னே செலுத்தியப் பெருமை, நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் அரசியலையும், தந்தை பெரியார் முன்னெடுத்த திராவிடக் கருத்தியலை தழைக்கச் செய்த கழக அரசியலையும் சேரும்.

1920களில் தொடங்கிய இந்தக் கருத்தியல் ஒரு நூறாண்டு கோலோச்சியதால் தமிழகம் அடைந்த நன்மைகள் ஏராளம். இன்றைக்கு உலகின் பல்வேறு நாடுகளின் அறிவுக் கருவூலமாக, உழைப்பு முதலீடாகத் தமிழர்கள் திகழ்கின்றனர்.

அதற்கு பல சமூக, மத மூடநம்பிக்கைகளை, பத்தாம் பசலித்தனங்களை, கட்டுப்பாடுகளை தமிழர்கள் துணிந்து உடைத்து முன்னேறியதே காரணம். அந்தத் துணிவையும், பரந்த முற்போக்குச் சிந்தனைகளையும் தமிழரின் மனதில் விதைத்ததுதான் திராவிடக் கருத்தியலின் சாதனை.

பாழாய்ப் போன பத்தாண்டுகள் – தந்தை பெரியாரின் வழியில் 50 ஆண்டு காலம் ஆட்சி செய்து, ஓரிரு தலைமுறைகள் முன்னேறிய தருணத்தில், முதல் கட்ட, இரண்டாம் கட்டத் தலைவர்களைச் சோர்வும் முதுமையும் வரவேற்றன.

அடுத்த கட்டத் தலைவர்கள் உருவாகும் முன்பே அவர்களைச் சிதைக்க ஆரியப் பார்ப்பனீயம் போட்ட திட்டம் தான் 2ஜி எனும் ஜோடனை வழக்கு. குறிப்பாக ஆ.ராசா, கனிமொழி, மாறன் ஆகியோரைப் பதம் பார்த்தனர் எதிரிகள். அந்தக் கலக்கத்தில், குழப்பத்தில் நெடுநாள் நட்புகளும் விலக, தனித்து விடப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகம்.

2011 தேர்தலைக் குறிவைத்து வீசப்பட்ட அந்த சதி வலை, சரியாகத் தன் வேலையைச் செய்தது. திராவிட இளம் தலைமுறை, தன் மீது விழுந்த சதி வலையை அவிழ்க்குமுன், என்றுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒடுக்கப்பட்ட முகத்தைப் பொறுக்காத ஆதிக்கச் சாதியினர், தம் ஆண்ட பெருமையைத் தக்கவைக்க உருவாக்கிக் கொண்ட தமிழ்த்தேசிய அரசியலை வளர்க்க இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

அண்டை நாட்டில் நடந்த கோரப் போரில் கையறு நிலையில் நிறுத்தப்பட்ட கலைஞரை வேண்டுமட்டும் களங்கப் படுத்தினர். மறுபுறம் போரைக் கொண்டாடிய, ஜெயலலிதா அம்மையாரின் பக்கம் நின்றனர்.

சில்லறைகளாகச் சிதறடிக்கப்பட்ட தமிழ், தமிழர் குறித்த வீர வசனங்களும், ஆண்ட பெருமைகளும் ஒரு கட்டத்தில் இம்மண்ணில் கலந்து வாழ்ந்து வந்த பிற மொழியினரை, குறிப்பாகத் தெலுங்கரை வந்தேறிகளாக பகைவராக அடையாளங்காட்டுவதில் குவிந்தது.

சாதி அடையாளமாகி, அதுவே பெருமையாகி, வீர வன்னியன், தேவேந்திர வேளாளன், சோழப் பறையன் என போலியான அடைமொழிகளில் தஞ்சம் புகுந்தனர் இளைஞர்கள்.

தமிழக இளைஞர்களைத் திசைத் திருப்பும் வேலையைச் செவ்வனே செய்து முடித்த பார்ப்பனியம், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கவும், பிற்படுதப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் இடஒதுக்கீட்டைப் பறிக்கவுமான தன் நோக்கங்களை ஆளும் அ.தி.மு.க வை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, கொஞ்ச கொஞ்சமாக நிறைவேற்றி வருகிறது.

தமிழக வேலை வாய்ப்புகளையும், உயர்கல்வி வாய்ப்புகளையும் தமிழர் அல்லாத வடமாநிலத்தார் அனுபவிக்கவும் அடையவும் புறவழியே வாயில்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.

இப்படிப் பாழாய்ப்போன பத்தாண்டுகளையும், மாநில உரிமைகளையும் மீட்க தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்.

தி.மு.க தலைவரின் முழக்கங்கள்

கொரோனா காலத்தில் தொடங்கி ஒன்றிணைவோம் வா, ஸ்டாலின் தான் வாராறு; விடியல் தரப் போறாரு, அ.தி.மு.க.வை நிராகரிப்போம் போன்ற முழக்கங்களுடன் தமிழக மக்களின் நெஞ்சில் நிறைந்து வரும் தளபதி ஸ்டாலின் அவர்கள், கிராம சபைக் கூட்டங்கள், முதல் நூறு நாள்களில் மக்கள் குறை தீர்ப்பு, விவசாய, கல்விக் கடன்கள் ரத்து என அதிரடித் திட்டங்களால் தமிழக அரசியல் சூழலை ஒரு கலக்கு கலக்கி வருகிறார். ஸ்டாலின் வாய்ச் சவடால்காரர் அல்ல. அவர் சொன்னதைச் செய்வார்.

தி.மு.க தலைவர் ஆட்சிக்கு வந்து செய்வதாகச் சொல்வதை அ.தி.மு.க அரசு இப்போதே செய்வதாக 110 விதியின் கீழ் அறிவிப்புகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தமிழகம் முழுவதும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி, மீண்டும் சமத்துவபுரங்கள் என கலைஞர் விட்டுப்போனப் பொறுப்புகளைச் சுமக்க ஸ்டாலின் அணியமாகிவிட்டார். அவர் பதவிக்கு முன்பாகவே பொறுப்பெடுத்த அழகை மூத்த தலைமுறையினர் வாஞ்சையுடன் பார்த்து ரசிக்கிறார்கள்.

கலைஞரின் நிறைவேறாக் கனவுகள்

‘உன் எதையும் தாங்கும் இதயத்தைக் கொடு’ என்று சொன்னார் கலைஞர், அண்ணாவின் பேருறக்க இரங்கலில். அதோடு கலைஞரின் சக்தியில் பாதியைக் கேட்டார் தளபதி, கலைஞரின் நிறைவேறாத கனவுகளையும் இலட்சியங்களையும் நிறைவேற்றிட அவருடைய இரங்கலில்…

அந்தக் கனவு, அந்த இலட்சியம், தமிழகத்தை ஆசியாவின் தலைசிறந்த மாநிலமாக முன்னேற்றுவது. சாதி மத பேதங்கள் ஒழிந்த சமத்துவபுரமாக தமிழகமே மாறுவதைக் காண்பது. தமிழ்மொழியையும், தமிழ் நிலத்தையும், தமிழக மக்களையும் சமூக நீதி தழைக்க முதன்மையாக்கிக் காட்டுவது என்ற உயர்ந்த அந்த இலட்சியத்தை அடையவும், உடனடியாகத் தமிழகத்தைப் பின்னோக்கி இழுக்கும் ஆற்றல்களைக் கட்டுப்படுத்தவும் தி.மு.க ஆட்சிக்கு உடனடியாக வரவேண்டும். அதற்கான முதுகெலும்பும், ‘நா’ணயமும் பெற்ற கட்சி தி.மு.க மட்டுமே!

- சாரதாதேவி

Pin It