''யார் இந்நாட்டின் வரலாற்றில் மறைக்கப்பட்டார்களோ, அவர்களே இந்நாட்டின் வரலாற்றை திரும்பவும் எழுதுவார்கள்'' - புரட்சியாளர் அம்பேத்கர்
"மனிதர்கள் தங்கள் எதிர்கால வரலாற்றைத் தாங்களே படைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் அதை எப்படி வேண்டுமானாலும் படைப்பதில்லை. அவர்கள் நிகழ்கால சூழ்நிலைகளையும், முன்னோர்கள் அவர்களுக்களித்த இறந்தகால வரலாற்றையும் கொண்டே எதிர்காலத்தைப் படைக்கிறார்கள்." - கார்ல் மார்க்ஸ்
வரலாற்றில் சம்பவங்கள் தவிர்க்க முடியாத சமூக விதிகளின் அடிப்படையில் நகர்கின்றன. தனிநபர்கள் அதை முழுமையாகத் தீர்மானிப்பதில்லை. அதைப் போன்று தான் அருந்ததியர் மக்களின் போராட்டங்களையும், இயக்க வரலாற்றையும் எந்த ஒரு தனிமனிதனும் தீர்மானிப்பது இல்லை. அது, சமூகத் தேவைகளில் இருந்து தீர்மானிக்கப்படுகிறது. எந்தவொரு சமூகமும் தனக்கு முந்தைய தலைமுறையின் போராட்ட வரலாற்றையும், தியாகங்களையும் மறக்கிறதோ, அந்த சமூகம் எழுச்சி பெற முடியாது. நாம், அவர்களின் தியாகங்கள் மேல் நின்று கொண்டுதான், இன்றைக்கு அரசியல் பேசுகிறோம்.
எனக்கு ஒரு அமைப்பு பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ என்பது அல்ல, நம் வாழும் சம காலத்திலும், வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களை எந்த ஒரு ஒளிவு மறைவுமில்லாமல் தொகுத்து இச்சமூகத்தின் முன் வைப்பது மூலம் மட்டுமே இச்சமூகம் அடுத்த கட்டத்திற்கு நகரும் என உறுதியாக நம்புகிறேன்.
எண்ணற்ற போராட்டங்கள் இச்சமூகத்தில் நடைபெற்று உள்ளது. சில பகுதிகளை மட்டும் இங்கு பதிவு செய்து உள்ளேன்.
அருந்ததியர் இயக்கங்ளின் வரலாற்றில் பல அமைப்புகள் சமூக விடுதலைக்காகப் போராடின. எச்.எம்.ஜெகநாதன் (தலித் முரசு இதழில் வள்ளி நாயகம் அவர்கள் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்) 25-10-1894 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் நீதிக் கட்சியில் இணைந்து பணிகளைச் செய்தார். பிறகு 1920ல் எல்.சி.குருசாமி அவர்களுடன் சேர்ந்து சென்னை மாகாண அருந்ததியர் சங்கத்தின் தலைவராக இருந்தார். சிறந்த கல்வியாளர். பல பகுதிகளில் இரவு நேரப் பாடசாலைகளை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தியவர். இப்பள்ளிகளில் அருந்ததியர் குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைத்து தாழ்த்தப்பட்ட சமூகக் குழந்தைகளும் படித்தார்கள்.
1932ம் ஆண்டு எரவாடா சிறையில் அம்பேத்கரும், காந்தியும் பூனா ஒப்பந்தம் செய்தபோது, அய்யா ஜெகநாதன் அவர்களும் அம்பேத்கருடன் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், பிரிட்டிஷ் இந்திய அரசின் வாக்காளர் வரைவுக் குழுவிற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என கோரிக்கை வைத்தவர். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை எழுதுவதற்கு ''ஜெயபேரிகை'' என்ற இதழ் நடத்தியவர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினராக வேலூரில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அப்போதைய தமிழக முதல்வர் ராஜாஜி குலக்கல்வி முறையை அறிமுகம் செய்தபோது சட்ட மன்றத்தில் வன்மையாகக் கண்டித்தவர் என்பதோடு, சமுக களப்பணிகளையும் முன்னெடுத்துச் செய்தவர்.
அதனைத் தொடர்ந்து சோ.க.தனராசு. பொன் செல்வராசு போன்ற தலைவர்கள் உரிமைக்கான வீரமிக்க போராட்டங்களை நடத்தியவர்கள். 1974 ஆம் ஆண்டில் கோவையில் ''தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம்'' எனத் தொடங்கப்பட்டது. அதன் தலைவர் பொன்.செல்வராசு. பொதுச்செயலாளர் தாராபுரம் சோ.க.தனராசு உள்ளிட்டவர்கள். இந்த அமைப்பின் முதல் மாநில மாநாடு 1975ம் ஆண்டு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திரா காந்தி அரசு கொண்டு வந்த மிசா சட்டத்திற்கு எதிராகக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி அதை அன்றைய தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்கள். அதன் விளைவு? அதே ''மிசா''வில் பொன்.செல்வராசு. சோ.க.தனராசு கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்டார்கள். (அய்யா பொன்.செல்வராசு அவர்களுக்கு மிசா கொடுமை பாதிப்பு காரணமாக இறுதிக் காலத்தில் ஒரு கையும், ஒரு காலும் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார் )
அருந்ததியர் அமைப்புகளின் வரலாற்றில் முதல் முறையாக மிசாவில் சிறை சென்ற மாவீரர்கள் இவர்கள் தான்.
1989ல் துணைப் பிரதமர் தமிழகத்திற்கு வரும்போது அருந்ததியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு, பட்டாவுடன் வீடு கட்ட தர வேண்டும், கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கோவை மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் மக்கள் சுமார் 3000 வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினார்கள். சோ.க.தனராசு தலைமையில் துப்பரவுத் தொழிலாளர்கள் வடகோவை மேல்பாலத்தின் கீழ் இரவில் தங்கி துணைப் பிரதமர் வரும் போது பெரிய பலூன்களைப் பறக்க விட்டு எதிர்ப்பு காட்டினார்கள். அதனைக் கண்டு தான் அன்றைய இந்திய துணைப் பிரதமர் தேவிலால் மற்றும் அரசு அதிகாரிகள் அருந்ததியர் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கோவை நகர துப்பரவுத் தொழிலாளர்களை சட்ட விரோதமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, தொழிலாளர்களைத் திரட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதை ஒருங்கிணைத்தவர் சோ.க.தனராசு அவர்கள். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத கோவை, திருப்பூர் பகுதி அருந்ததியர் மக்கள் மத்தியில் களப்பணி செய்தவர் சோ.க.தனராசு (பெரியாரிய அமைப்பில் இருந்து வந்தவர்). தனக்குரிய கல்வித் தகுதிக்குக் கிடைத்த அரசுப் பணியை வேண்டாம் என முடிவு செய்து சமூக களப்பணி செய்ய வந்தவர். சாதி வெறியர்கள் சோ.க.தனராசு அவர்களை கொலை வெறித் தாக்குதல் நடத்தி சோளக்காட்டில் போட்டு விட்டார்கள். அன்றே அவர் இறந்த விட்டார் என நினைத்துக் கொண்டிருந்தனர் சாதி வெறியர்கள். மீண்டும் வந்து ஆதிக்க சாதி வெறியர்களுக்கும், அடாவடி காவல்துறைக்கும் சிம்ம சொப்பனமாக, அருந்ததியர் மக்கள் உரிமைகளுக்கான சமரசமில்லாத போராட்டங்கள் செய்த மக்கள் தலைவன் சோ.க.தனராசு அவர்கள். அவர் எப்படி இறந்தார் என்று கூட நமக்குத் தெரியவில்லை. (பல்லடம் அரசு மருத்துவமனையில் அல்லது பல்லடம் சாலையில் அனாதையாக இறந்ததாக உறுதி செய்யப்படாத சில தகவல்கள் கூறப்படுகிறது)
நாம் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு இவர்களின் போராட்டங்கள் மிக முக்கியமானது. இவர்களைத் தான் நாம் புளியமரத் தலைவர்கள் என்று கேலி பேசி சிரித்தோம் (சோ.க.தனராசு பற்றிய தகவல் எழில்.இளங்கோவன் அவர்கள் எழுதியது)
அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை ஒட்டி இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சி. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் கூட தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிமிக்க போராட்டங்கள் நடைபெற்றது. அதில் அருந்ததியர் மக்களின் எழுச்சி புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது என்றே கூறலாம். மதுரை எஸ்.டி.கல்யாணசுந்தரம் தலைமையில் ஆ.நாகராசன், கோவையில் ஊ.பி.ராசு, எஸ்.ஆர்.நாதன், பள்ளபாளையம் வீராசாமி, முத்துவீரன் உள்ளிட்டவர்கள் முதன்மையானவர்கள். தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் முன்னணி & தமிழ்நாடு அருந்ததியர் ஜனநாயக முன்னணி (TADF & TADF) என்ற அமைப்பு தொடங்கி அருந்ததியர்களைப் புதிய பாய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார்கள்.
அருந்ததியர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என 1000 பேர்களுடன் சைக்கிள் பேரணி நடத்தினார்கள். குடியரசு நாள், சுதந்திர தினத்தில் தமிழகம் முழுதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கருப்புக் கொடி பேரணி, ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து மதுரையில் ரயில் மறியல் செய்து சுமார் 2000 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டார்கள்.
1994ம் ஆண்டு சோமனூர் சாமளாபுரத்தில் அருந்ததியர் மக்கள் பொதுப் பாதையில் சுடுகாட்டுக்கு சவ ஊர்வலமாகப் போனதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாதிவெறியர்கள் வழியை மறுத்து கொலை வெறித் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது ஊர் ஒரே கலவரமாக இருந்தது. இரவில் தனியாக வந்த 9 அருந்ததியர் இளைஞர்ளைக் கடத்தி கொடூரத் தாக்குதல் நடத்தினார்கள். இதன் மீது இரண்டு நாள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அரசும், காவல்துறையும் கைவிட்ட நிலையில் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் செய்த பிறகு காவல்துறை மீட்டது. தாக்குதல் நடத்திய சாதி வெறியர்கள் கைது செய்யப்பட்டனர் (செய்திகள் அன்றைய செய்தித்தாளில் வந்ததுள்ளது)
அம்பேத்கர் நூற்றாண்டு விழாவும், தலித் மக்களின் சுயமரியாதைக்கான எழுச்சியும், அந்த மக்கள் மீதான தாக்குதலும், தலித் இயக்கங்களின் ஒற்றுமையின் தேவை உணர்ந்து, எஸ்.டி.கல்யாணசுந்தரம், திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), அரங்க.குணசேகரன் (தமிழக மனித உரிமை இயக்கம்), பூ.சந்தரபோசு (தியாகி இம்மானுவேல் பேரவை) உள்ளிட்ட 9 இயக்கங்கள் ஒருங்கிணைந்து தலித் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினார்கள். மூன்று சமூகத்தின் மீது எங்கு தாக்குதல் நடந்தாலும் தலித் கூட்டமைப்பு களத்தில் இருக்கும் என்று அறிவித்தார்கள்.
தென் மாவட்டங்களில் தலித் (பள்ளர்) மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும், மேலவாளவு முருகேசன் (பறையர்) உள்ளிட்ட 6 பேரைப் படுகொலை செய்த சாதி வெறியர்களைக் கண்டித்தும் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி மேலூரில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
அனைத்துக் கட்சிகளிலும் உள்ள 44 தனி சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற தலித் உறுப்பினர்கள் 1996 & 97 வரை தமிழகத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடந்ததைப் பற்றி சட்டமன்றத்தில் எந்தவொரு கருத்தும், கண்டனமும் எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர். இதனால், தனித் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களின் கொடும் பாவி எரிக்கும் போராட்டம் தலைமைச் செயலகத்தின் முன்பு அறிவித்து நடத்தியது தலித் கூட்டமைப்பு. மார்க்சிய லெனினிய அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், பெரியார் இயக்கங்கள், சனநாயக சக்திகளை இணைத்துக் கொண்டு அப்போராட்டம் நடந்தது.
அது தலித் மக்களிடம் புதிய நம்பிக்கை அளித்தது. அது மட்டும் இல்லாமல் தலித் மக்களுக்குள் என்ன பிரச்சினைகள் வந்தாலும், மூன்று சமூகத்தின் தலைவர்கள் கலந்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது. தலித் கலை வரலாறு, பண்பாடு பற்றி தொடர்ந்து விவாதித்து அதன் முடிவுகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டனர்,
அது குறைந்தபட்ச 10 அம்ச செயல் திட்டத்தை முன்வைத்தது. ஒன்று, தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 30 சதவீதமாக உயர்த்தி, அதில் அருந்ததியர்களுக்கு 10 சதவீதம் தனியாகத் தர வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கை. அதனை முன்வைத்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பாக தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது அதில் பேசிய தலைவர்களின் உரைகள் தொடர் முழக்கப் போர் என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. அருந்ததியர் மக்களின் பிரச்சினைகளை தலித் இயக்க தலைவர்களிடம், பொதுத் தளத்தில் பேச வைத்த அமைப்பு தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் முன்னணி.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் முன்னணி சார்பாக ஆதிக்க சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதலைக் கண்டித்தும், தலித் (பள்ளர் & பறையர்) மக்களுக்கு ஆதரவாக துணை நிற்போம் என இராமநாதபுரத்திலிருந்து மதுரை வரையில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் நடைபயணம் சென்றது.
வழி நெடுக எல்லாப் பகுதியிலும் தியாகி இம்மானுவேல் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவாக நின்றார்கள். இறுதியாக மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தலித் கூட்டமைப்பின் அனைத்துத் தலைவர்களும் கலந்து கொண்டு பேசினார்கள்.
1997ல் மதுரையில் அம்பேத்கர் சிலை உடைக்கபட்டதற்கு எதிப்பு தெரிவித்துப் போராடிய அவனியாபுரம், சுப்பரமணியபுரம் பகுதி அருந்ததியர் மக்கள் மீது காவல்துறை வீடு வீடாகச் (கோவையில் இஸ்லாமிய மக்களின் மீது எப்படி காவல்துறை நர வேட்டை நடத்தியதோ, அதைபோலத் தான் நடந்தது) சென்று கொடூரமான முறையில் தாக்குதலை நடத்தியது. துப்பாக்கிச் சூட்டில் அருந்ததியர் மாணவர் பழனிக்குமார் (துப்பரவுத் தொழிலாளர் மகன்) கொல்லப்பட்டார். இதற்கு எதிராக மதுரை நகரத் துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஒரு வாரம் நடைபெற்றதில் மதுரை ஸ்தம்பித்தது. அதைத் தொடர்ந்து தமிழக முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலித் கூட்டமைப்பின் சார்பாக மதுரையில் கண்டனப் பொதுக் கூட்டம் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. அதில் தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் முன்னணி அமைப்பின் களப்பணி முதன்மையானது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி, மாநகராட்சியின் பொது ஏலத்தில் துப்புரவுத் தொழிலாளர் வாரிசுகளுக்கு பொதுக்கழிப்பிடங்கள், கடைகள், சைக்கிள் ஸ்டேண்டு முன்னுரிமை தர வேண்டும் என கோரிக்கை விடுத்துப் போராடினார்கள் கோவை மாவட்ட சோமனூர், பல்லடம், திருப்பூர் பகுதியில் களப்பணி செய்தவர்கள்.
அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளில் சோமனூர் மலைக் கோவில் நுழைவுரிமைப் (டாக்டர் கிருஷ்ணசாமி புதிய தமிழகம் காட்சி சார்பாக கலந்துகொண்டார்) போராட்டமும், தேநீர் கடையில் தனிக்குவளை முறைக்கு எதிராக கடுமையான போராட்டமும் நடத்தியதின் விளைவு சோமனூர் சுற்றிள்ள வேலயுதம்பாளையம், பரமசியம்பாளையம், சின்னபுத்தூர், பூமலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் முன்னணி கொடிக் கம்பம் வெட்டிச் சாய்க்கப்பட்டது.
சமூகப் புறக்கணிப்பு, வேலை கொடுக்க மறுப்பு, மளிகைப் பொருள்கள், பால் எதுவும் கொடுக்கக் கூடாது என ஊர்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அங்கிருந்து எல்லாரும் திருப்பூருக்குப் போய் வேலை செய்யும்போது சில பெண்கள் பசியால் மயக்கம் போட்டு விழுந்தார்கள்.
பஞ்சத்தாலும், வறுமையாலும், துயரந்தோய்ந்து போன வாழ்க்கை பற்றி, அந்த மக்களிடம் குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள். சுமார் ஆறு மாத காலம் அத்தகைய நிலை நீடித்தது. (அப்போது, த.மு.மு.கழகத்தின் வார இதழான "உணர்வு"வில் இரண்டு பக்க கட்டுரையாக புகைப்படங்களுடன் வந்ததுள்ளது, இன்னும் சில வார இதழ்களிலும் வந்தது)
அன்றைய பல்லடம் சட்டமன்ற திமுகவின் உறுப்பினர் எஸ்.எஸ்.பொன்முடி அவர்களின் தலைமையில் அரசு அதிகாரிகளுடன் சோமனூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அலுவலகத்தின் முன்பு அருந்ததியர் மக்கள் ஒரு பக்கமும், சாதிவெறியர்கள் இன்னொரு பக்கமும், ஆயிரக்கணக்கான மக்கள் எதிர் எதிராக நின்றார்கள், அந்த இடம் முழுவதும் ஒரு போர்க் களம் போல காட்சி அளித்தது. இரவு சுமார் 11 மணி அளவில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து வெளியே வந்தபோது இளைஞர்கள், பெண்கள் கூடி அம்பேத்கர், பெரியார் வாழ்க, சாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம் என ஆயிரக்கணக்கான மக்கள் ஆவேசமாக முழக்கமிட்டு கொண்டே சோமனூர் அம்பேத்கர் படிப்பகம் வரை பேரணியாக நடந்து சென்றனர்.
அதனை அடுத்து தொடர் சாதிவெறித் தாக்குதலையும், சமூகப் புறக்கணிப்பைக் கண்டித்தும் சோமனூரில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, அமைப்பின் கொடி மரம் மற்றும் பெயர்ப் பலகையை வெட்டிச் சாய்த்த சாதிவெறியர்களுக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது, அதில் டாக்டர். கிருஷ்ணசாமி, தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைமைப் பேச்சாளர் கோவை செய்யது, தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் (இப்போது த.பெ.தி.க) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டானர். அதில் பேசிய எஸ்.டி.கல்யாணசுந்தரம் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது காலத்தின் தேவையாக உள்ளது, எங்கள் முன்னோர்கள் சாதியின் கொடுமை தாங்க முடியாமல் இஸ்லாமியர்களாக மதம் மாறியிருக்கலாம்; நீங்களும் எங்கள் உறவினர்கள் தான். எனவே தலித், இஸ்லாமியர் ஒற்றுமை காலத்தின் தேவை எனப் பேசினார்.
அதே ஆண்டு 1997 இந்துத்துவ வெறியர்கள் பொள்ளாச்சியில் இஸ்லாமியத் தலைவர் பழனிபாபாவை வெட்டி படுகொலை செய்ததைக் கண்டித்ததோடு, இஸ்லாமிய மக்களுக்கு துணை நிற்போம் என தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் முன்னணி தனது கண்டன அறிக்கையில் கூறியது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மனைவியுடன் செகுடந்தாளி முருகேசன் பேருந்தில் பயணம் செய்த போது சாதி இந்துகள் இருக்கையில் இருந்து எந்திரிக்கச் சொன்னர்கள். முருகேசன் "என் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். நான் வேண்டுமானால் நிற்கிறேன்" என்று சொல்ல, "உன் பொண்டாட்டி உடன் நாங்க சமமாக அமர்ந்து பயணம் செய்வதா?" எனக் கூறி முருகேசன், அவர் மனைவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள் சாதி வெறியர்கள்.
காவல் நிலையத்தில் அவர்கள் மீது முருகேசன் புகார் கொடுத்த பிறகு, சேரி எப்போது வேண்டுமானாலும் தாக்கப்பட்டாலம் என்ற நிலையில், இனி இந்தப் பகுதியில் எங்களால் வாழ முடியாது என அருந்ததியர் மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிபெயர்ந்து விடலாம் என முடிவு செய்து செகுடந்தாளியில் இருந்து நடைப்பயணம் சென்றவர்களை கருமத்தம்பட்டியில் வழி மறுத்து, காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் நேரில் பேச்சுவார்த்தைக்கு வருகிறார் எனப் பொய் சொல்லி மாலை வரை அமர வைத்து விட்டு, பிறகு சாலை மறியல் செய்தார்கள் என்று கூறி ஆதித்தமிழர் பேரவை, தலித் விடுதலைக் கட்சி, பகுசன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தோழர் முருகேசன், பெண்கள் உள்பட்ட சுமார் 250 பேரைக் கைது செய்து (பேச்சுவார்த்தை மூலம் பெண்கள் அதிகாலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்) கோவை மத்திய சிறையில் ஒரு வாரம் இருந்து பின்னர் பிணையில் வெளியே விடுவிக்கப்பட்டார்கள்.
சிறையிலிருந்து வெளியே வந்த முருகேசனைத் தொடர்ந்து சாதி வெறியர்கள் வழக்கை திரும்பப் பெறு என கொலை மிரட்டல் விடுத்தார்கள். அவரது மனைவி முருகேசனை தன்னுடைய ஊருக்கு அழைத்துச் சென்று விட்டார். ஓராண்டு கழிந்து மீண்டும் சொந்த ஊருக்கே வந்தவரை, மீண்டும் வழக்கைத் திரும்பப் பெறு என்று மிரட்டல் விடுத்தார்கள். அவர் முடியாது சொன்ன அடுத்த நாள் சோமனூரில் இருந்து பேருந்தில் செகுடந்தாளி வந்து இறங்கும் போது, கல்லால் அடித்து படுகொலை செய்தனர் சாதி வெறியர்கள்.
இறப்பதற்கு முன், திருப்பூர் அரசு மருந்துவமனையில் நீதிபதி முன்பு முருகேசன் மரண வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. உறுதி மிக்க போராட்டங்களை முன்னெடுத்து பகுதி மக்களின் நம்பிக்கை மிக்க அமைப்பாக தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் முன்னணி அமைப்பு இருந்தது. அன்று பல பகுதிகளில் அமைப்பு வேலை செய்த முழு நேர ஊழியர்களைப் பாதுகாத்தவர்கள் அதனைச் சுற்றி உள்ள பகுதி மக்கள் தான்.
பின்னர் 1998ல் எஸ்.டி.கல்யாணசுந்தரம் அவர்கள் பகுசன் சமாஜ் கட்சியில் இணைந்து கோவை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். அதில் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கினார். அதில் இருந்து விலகி மறுபடியும் தனி அமைப்பு தொடங்கினார் எஸ். டி.கல்யாண சுந்தரம்.
இதே கால கட்டத்தில் இரா.அதியமான் தலைமையிலான ஆதித்தமிழர் பேரவை எழில்.இளங்கோவன், சி.குப்புராசு, கோவை.ரவிக்குமார், நீலவேந்தன், வெண்மணி உள்ளிட்ட தோழர்கள் முதன்மையானவர்களாக செயல்பட்டனர்.
அடுக்குமுறையில் அருந்ததியர் மக்களுக்கு இட ஒதுக்கீடு என்ற முழக்கத்தை முன்வைத்து, மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து அது புத்தகமாக வந்ததுள்ளது ( நூல் ஆசிரியர்: எழில்.இளங்கோவன் )
கருத்தரங்கங்கள் மூலமாக பிரச்சாரம் செய்தார்கள். சில தமிழ்த் தேசிய அமைப்புகள் அருந்ததியர்களைத் தெலுங்கர்கள் என்று பேசி வந்ததற்கு எதிராக இரா.அதியமான், எழில்.இளங்கோவன் அவர்கள் இணைந்து, வரலாறு ரீதியான நூல்கள், கட்டுரைகள் கொண்டு வந்தது மட்டுமல்லாது, அருந்ததியர்கள் ''ஆதித்தமிழர்'களே என்று பறை சாற்றினார்கள்.
2003-ல் கெங்குசாமி நாயுடுவின் தெலுங்கு மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பாக தாராபுரத்தில் பேரணி மாநாடும் நடைபெற்றபோது அருந்ததியர் மக்களை ஒன்று திரட்டும் வேலையைச் செய்தார்கள்.
அப்போது, ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் ஆ.நாகராசன், பெருமவளவன், புலிபாண்டியன், தாராபுரம் அன்பழகன் ஆகியோர் தலைமையில் 'வலை விரிக்கிறான் வந்தேறி, வலை அறுத்து தலை நிமிர்ந்து சொல்லுவோம். அருந்ததியர்களே ஆதித்தமிழர்கள்" என்று முழங்கியது ஆதித்தமிழர் பேரவை.
அம்பேத்கர் பிறந்த நாளில் ஏப்ரல் 10 முதல் 14 வரை சத்தியமங்கலம் தொடங்கி ஈரோடு வரையில் அடுக்குமுறையில் அருந்ததியர் மக்களுக்கு இட ஒதுக்கீடு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து தோழர்கள் ஆ.நாகராசன், பெருமவளவன், சு.ஆனந்தன், தீபா, பொன் சுந்தரம், ஐயப்பன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் நடைப்பயணம் போனார்கள். அப்போது, பாருவாச்சி கிராமத்தில் தேநீர்க் கடையில் தனிக்குவளை இருந்ததற்கு எதிராக மறியல் போராட்டம் செய்ததால், கடை உரிமையாளர் மீதும், போராடிய தோழர்கள் மீதும் வழக்கு போடப்பட்டது. நடைப் பயணத்தின் இறுதியாக ஈரோடையில் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
சோமனூர் அருகம்பளையத்தைச் சேர்ந்த மணி, திருப்பூர் & கோவை தனியார் பேருந்தில் நடந்தனராக வேலை செய்தவர். அதே பேருந்தில் தினமும் பயணம் வந்த பெண்ணும் இவரும் காதல் செய்து வந்தார்கள். இது பெண்ணின் வீட்டுக்குத் தெரிய வந்தது. இருவரும் ஊட்டி போய் திருமணம் செய்த புகைப்படத்தை இரு வீட்டுக்கும் அனுப்பி வைத்தனர். ஒரு மாதம் கழித்து பல்லடம் சாலையில் ஒரு மரத்தில் தூக்கு போட்டு இறந்து விட்டதாக அவரின் உறவினர்களுக்கு செய்தி வந்தது. அங்கே சென்ற உறவினர்கள் இரண்டு பேரின் கால்களும் பூமியின் மீது இருந்ததால் சந்தேகம் எழுந்து, பேரவை தோழர்களிடம் செய்தி சொன்னார்கள். உடனே பேரவைத் தோழர்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்த மணியை மர்மமான முறையில் படுகொலை செய்த ஆதிக்க சாதி வெறியர்களை உடனே கைது செய்யக் கோரி திருப்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடத்தி மறைக்கப்பட்ட செய்தியை வெளி உலகத்துக்குக் கொண்டு வந்தார்கள்.
செகுடந்தாளி முருகேசன் முதலாம் ஆண்டில் சுமார் 40 காரில் சோமனூரில் இருந்து செகுடந்தாளி முருகேசன் புதைமேடு வரை முதல் முதலாக பேரணியாகச் சென்றவர்கள், இன்று அனைத்து அருந்ததியர் அமைப்புகள் அவரின் நினைவு நாள் நிகழ்ச்சி கொண்டாடி வருகிறது - இதற்கு முதல் விதை விதைத்தவர்கள் இவர்கள் தான்.
நாமக்கல் விவேகானந்தர் கல்லூரியில் காயத்திரி என்ற அருந்ததியர் மாணவி உடல் முழுவதும் காயங்களுடன் அரசு பொது மருத்துவமனையில் இறந்து கிடந்தபோது, நீதி கேட்டு கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து பேரணி போன ஆயிரக்கணக்கான அருந்ததியர் மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. அதில் பேருந்துகள் தாக்கப்பட்டது. ஆ.நாகராசன், தமிழரசு உள்ளிட்டவர்களைக் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இதில் ஆ.நாகராசன், தமிழரசு தோழர்கள் குண்டர் தடுப்புக் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.
கோபி நம்பியூரில் திருமண மண்டபம் அருந்ததியர் மக்களுக்கு தர மறுத்ததைக் கண்டித்து நீலவேந்தன் தலைமையில் மண்டபத்தை இடிக்கும் போராட்டம் நடைபெற்றது.
தோழர் நீலவேந்தன் (வழக்குரைஞர்) அருந்ததியர் மக்களுக்கு இட ஒதுக்கீடு உயர்த்த வேண்டும் என்று தீக்குளித்தவர். காளப்பட்டியில் பையக் கவுண்டர் தலைமையில் சாதி இந்துகள் அருந்ததியர் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது எல்லா முற்போக்கு அமைப்புகளும் சாதியை ஒழிப்பது எப்படி என துண்டறிக்கை பரப்புரை இயக்கத்தைத் தீவிரமாக அருந்ததியர் மக்கள் வாழும் பகுதிகளில் செய்தார்கள். புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் ''உயர்சாதித் திமிர் ஒழிப்போம்! உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம்!!" என்ற முழக்கத்துடன் துண்டறிக்கைப் பரப்புரை பணிகள் சோமனூர் சுற்றியுள்ள அருந்ததியர் மக்கள் வாழும் பகுதியில் நடந்த போது, திருப்பூர் குணாவிடம் தோழர்.நீலவேந்தன், "தோழரே… உங்கள் தோழர்கள் அருந்ததியர் மக்கள் மத்தியில் தீவிரமாகப் பிரச்சாரம் நடத்துறாங்க.. சாதித் திமிர் பிடித்த அருந்ததியர் மக்கள் இனி சாதிக் கலவரத்தில் ஈடுபட்ட மாட்டார்கள்" என்ற நீலவேந்தன், சாதிக் கலவரம் நடத்தும் சாதி வெறியர்கள் வாழும் பகுதிகளில் தீவிர பரப்புரை இயக்கம் நடத்த வேண்டும் எனக் கூறினார் (நீலவேந்தன் நினைவு மலர் நூலில் திருப்பூர் குணா எழுதிய கட்டுரையில்).
தோழர்களிடம் தன் அரசியல் நிலைப்பாடு குறித்து எந்தவொரு ஒளி மறைவு இல்லாமல் பேசுபவர் நீலவேந்தன். திருப்பூரில் பழ.நெடுமாறன் தலைமையில் உலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொண்ட பொள்ளாச்சி ந.மகாலிங்கம் தமிழ் மொழிக்கு மூத்த மொழி சமஸ்கிருதம் தான் என மாநாட்டில் பேசியது மட்டுமல்லாமல், சிறு நூல் ஒன்றை மாநாட்டுப் பார்வையாளர்களுக்குக் கொடுத்தார். அவரின் கருத்துக்கு எதிராகப் பேசிய ஒரே தோழர் நீலவேந்தன் மட்டும் தான். அவர் சிறந்த பேச்சாளர். அவரது இழப்பு அருந்ததிய சமூகத்திற்குப் பெரும் இழப்பு.
திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் சி.டி.தண்டபாணி அவர்கள் கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ் உடலைப் பார்க்க அரசு பொது மருந்துமனைக்கு வந்த போது, கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களை சந்திக்க வந்ததாக நினைத்து இந்துத்துவ மதவெறியர்கள் வழி மறுத்து கடுமையாகத் தாக்கி, அவரை அரை நிர்வாணமாக நடுரோட்டில் விரட்டினார்கள். பிறகு அதே ஆண்டில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்து பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தது. அப்போது, ஆதித்தமிழர் பேரவை சார்பில் துண்டறிக்கையில் சி.டி.தண்டபாணி அரை நிர்வாணமாக ஓடும் புகைப்படத்தையும், அதனின் கீழ் கலைஞர் அவர்களும், வாஜ்பாய் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களும் கைகள் உயர்த்தி நின்ற புகைப்படத்தையும் போட்டு, இந்துத்துவக் கொள்கையுடன் கூட்டணியா? எனக் கேள்விகள் எழுப்பி மக்களிடம் பரப்புரை இயக்கம் செய்தார்கள்.
வேறு எந்தவொரு முற்போக்கு அமைப்பும் செய்யாத வேலைகளை மிகத் துணிச்சலாக செய்தார்கள் ஆதித்தமிழர் பேரவைத் தோழர்கள். வரலாற்றுத் துறையில், பண்பாட்டுத் தளத்தில் பேரவையின் களப்பணிகள் மிகவும் முக்கியமானது.
சமுத்துவ முன்னணி என்ற அமைப்பு தொடங்கிய மு.கார்க்கி, உக்கடம் மகேந்திரன், பிரபு ஆகியோர் முதன்மையானவர்கள். இவர்கள் சமத்துவ துப்புரவுத் தொழிலாளர் முன்னணி தொடங்கி, துப்புரவுத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற தொடர் போராட்டத்துக்கு தொழிலாளர்களைத் தயார்படுத்த தினமும் அதிகாலை 4 மணிக்கு எல்லாம் வார்டுகளுக்கு முன்பாக கோரிக்கை விளக்கக் கூட்டம் நடத்தி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் செய்து அரசு அலுவலகங்களை செயல்படாமல் முடக்கினார்கள். தொடர் போராட்டங்களின் விளைவாக 776 பேரை பணி நிரந்தரம் செய்தது அரசு. (கக்கூஸ் ஆவணப்படத்தில் இதற்காகப் போராடிய தோழர்களிடம் ஒரு பேட்டி கூட எடுக்கப்படவில்லை)
நகர சேரி மக்களை வெளியே அனுப்புவது தான் கோவை நகர மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கம். அதற்கு எதிராக முற்போக்கு அம்பேத்கர் துப்பரவுத் தொழிலாளர் சங்கம் (மகேந்திரன், பிரபு) போராடியது. பகுதி அளவில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்கள் இவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள். பல இயக்கங்கள் இணைந்து கோவை நகர மேம்பாட்டுக்கான மக்கள் கண்காணிப்பு குழு (கோவை குரல் இதழ் ஒன்று வெளிவந்துள்ளது. இதழின் ஆசிரியர்கள்: டாக்டர்.ரமேஷ், பொன்.சந்திரன், மகேந்திரன், கார்க்கி) என்ற பெயரில் கூட்டமைப்பு உருவாக்கி, ஜவகர்லால் நேரு நகரப் புனரமைப்புத் திட்டத்தின் மூலமாக கோவை சேரி மக்களை நகரத்தை விட்டு வெளியேறும் திட்டத்துக்கு எதிராக ஒருங்கிணைந்தார்கள். ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த 23 சேரிகளை கோவை நகரத்தை விட்டு வெளியேற்றுவதற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடத்தினார்கள்.
கோவை நகரத்தில் வாழும் அருந்ததியர் மக்களை வெளியேற்றாதே! நகரத்தில் வாழும் அருந்ததியர் மற்றும் அனைத்து வித குடிசைப் பகுதி மக்களுக்கு வாழும் இடத்தில் பட்டா வழங்கு என்ற கோரிக்கைகளுடன் பல ஆண்டுகளாக உக்கடம் CMC காலனி மக்கள் போராடி வந்தனர். அதன் உச்சக்கட்டம் 2009ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் ஆகும். இது திடீர் எழுச்சி அல்ல. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களால் திட்டமிட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாக பிரச்சாரம் நடத்தப்பட்டது. பகுதிக்குள் ஓட்டு கேட்டு எந்த வேட்பாளரையும் அனுமதிக்கவில்லை. அன்றைய தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மக்களின் அனுமதி பெற்றே உள்ளே வர முடியும் என்ற சூழல் நிலவியது. தேர்தல் நாள் அன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் மதியம் 3 மணி வரை நீடித்தது. இளைஞர்கள் பெரும்பான்மையினர் ஒட்டு போடச் செல்லவில்லை. இதை அம்பேத்கர் முற்போக்கு துப்புரவுத் தொழிலாளர் சங்கம், பகுதி அளவில் த.பெ.தி.க. ஆகியவை முன்னெடுத்து நடத்தினார்கள். அன்று தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் அடையாளப் போராட்டமாக இல்லாமல் உண்மையில் நடைமுறையில் நடத்திக் காட்டப்பட்டது. அன்றைய தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியே உக்கடம் மக்களின் தேர்தல் புறக்கணிப்பு தான்.
அதன் விளைவு, பல கோடியில் உருவான ஜவகர்லால் நேரு நகரப் புனரமைப்புத் திட்டத்தின் மூலமாக உக்கடம் பகுதி மக்களை நகரத்தை விட்டு வெளியேற்றுவது தடுத்து நிறுத்தப்பட்டது.
இன்று பல சேரிப் பகுதிகளை வெளியேற்றி விட்டது அரசு. ஆனால் இன்று வரை உக்கடம் சேரி மக்கள் தங்களது பகுதியில் உள்ள இயக்கங்களையும், மக்களையும் ஒருங்கிணைத்து, கூட்டுத் தலைமையிலான ஊர்க் கமிட்டி ஒன்று உருவாக்கி அதன் அடிப்படையில் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இதைப் போன்றே தின வட்டி, மீட்டர் வட்டிக் கொடுமையிலிருந்து மீட்டு துப்புரவுத் தொழிலாளர்களை இணைத்து கூட்டுறவு சங்கம் தொடங்கி 25 பைசா வட்டி விகிதம், கூட்டுறவு சங்கத்தின் மூலம் அவர்களுக்கு நிதி சேமிப்பு முறை கொண்டு வந்தது, சமத்துவ துப்புரவு தொழிலாளர் முன்னணி தான்.
2006 ம் ஆண்டு இந்து முன்னணி இராம.கோபாலன் தலித் இளைஞர்களை (அருந்ததியர்) அமைப்பாக்கும் திட்டத்தின் படி, 100 மதுரை வீரன் கோயிலில் வழிபாடு செய்வது என பிரச்சாரம் தொடங்கினார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், "அருந்ததியர்" மக்கள் வசிக்கும் பகுதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்தார். இதை எதிர்த்து அன்றைய சமத்துவத் துப்புரவு தொழிலாளர் முன்னணி, சமத்துவ முன்னணி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து உக்கடம் CMC காலனியில், இந்து முன்னணி இராம.கோபாலனை மதுரை வீரன் கோயிலில் நுழைய விடாமல் தடுத்தனர். கலவரம் ஏற்படும் சூழல் உருவானது. நூற்றுக்கணக்கான காவல் துறையினர், வஜ்ரா வாகனம் என உக்கடம் பகுதியே ஸ்தம்பித்தது.
உக்கடம் CMC காலனி மக்கள் இராம.கோபாலனை நோக்கிக் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? மதுரை வீரனை கும்பிட வரும் நீ, காளப்பட்டி மாரியம்மன் கோயிலில் அருந்ததியர்கள் வழிபாடு செய்ய ஆலய நுழைவுப் போராட்டம் அறிவிக்கத் தயாரா? என முழக்கமிட்டனர். மக்களின் எதிர்ப்பால் மதுரை வீரன் கோயில் ஆலய வழிபாட்டைக் கைவிட்டார். இது அன்று இந்துத்துவா சக்திகளுக்கு கிடைத்த மிகப்பெரிய அவமானம்.
உக்கடம் CMC காலனியில் தோல்வி அடைந்தவுடன் அடுத்த நாள் கோவை ஆவாரம்பாளையத்தில் மதுரை வீரன் கோயில் வழிபாடு செய்ய முயன்றான் இராம.கோபாலன். உடனே சமத்துவ முன்னணித் தோழர்கள் மற்றும் த.பெ.தி.க. தோழர்கள் பன்னீர் செல்வம் தலைமையில் (இன்றைய சமூக நீதிக் கட்சியின் தலைவர்) ஆவாரம்பளைய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இராம.கோபாலனை வழிபாடு செய்ய விடாமல் சாலை மறியல் செய்தனர். இதனால், இராம.கோபாலன் 100 மதுரை வீரன் கோயில் வழிபாடு திட்டத்தைக் கைவிட்டான். இது அருந்ததியர் அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துகளால் குறிப்பிடப்பட வேண்டிய வரலாற்றுச் செயல் ஆகும்.
சோமனூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்த த.ஒ.வி.இயக்கத்தைச் சேர்ந்த தோழர். சிற்றரசு படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். பொது வழியாக அருந்ததியர் சவ ஊர்வலம் சென்றது இதுவே முதல் முறையாகும். சாமளாபுரம் தொடங்கி சோமனூர் வழியாக ஊஞ்சப்பாளையம் வரை சென்றது. போகும் வழியில் பேருந்துகள் தாக்கப்பட்டது. 12 பேர் மீது வழக்கு போடப்பட்டது. மறுநாள் காலையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, கொங்கு பேரவை உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டு, சோமனூர் பகுதி முழுதும் கடையடைப்பு நடத்தின; விசைத்தறிகள் அனைத்தும் மூடப்பட்டன. அன்று மட்டுமே சுமார் 100 கோடி இழப்பு என்று செய்திகள் வந்தன.
பேருந்து தாக்கப்பட்டது என்ற பெயரால் அருந்ததியர் மக்களின் பகுதிகளில் காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தியது. சிற்றரசுவைப் படுகொலை செய்த சாதிவெறியர்களை அரசு கண்டுகொள்ளவே இல்லை. அனைத்துக் கட்சிகளும் கொலை செய்த சாதிவெறியர்களுக்கு ஆதரவாக இருந்தன.
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது, அருந்ததியர் மக்களுக்கு 6 சதவீத இட ஒதுக்கீடு உயர்த்தவும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் திருப்பூர் ஊத்துக்குளி இரயில் தாண்டவாளத்துக்கு கல் வைத்தது (பார்க்க கீற்று http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/12264-2011-01-06-11-32-43 ) புரட்சிப் புலிகள் இயக்கத்தின் சதிச் செயல் என அன்றைய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. அதன் அடிப்படையில் தோழர்கள் பரமேஸ்வரன், காந்தி ஆகியோரைக் கைது செய்து, தனி அறையில் கடுமையாகத் தாக்கி தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
அந்தப் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது ப.பா.மோகன், ச.பாலமுருகன், திருப்பூர் சக்திவேல், மாதவி, கவுதம் சக்திவேல், சு.ஆனந்தன் ஆகிய தோழர்கள் ஒருங்கிணைந்து டிசம்பர் 10 மனித உரிமை நாளில் திருப்பூரில் பரமேஸ்வரன், காந்தி மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர். ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அன்றை தினம் அதைக் கண்டித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அந்தப் பகுதி அருந்ததிய மக்கள் மீது காவல்துறையின் அடக்குமுறையை வெளி உலகத்துக்கு செய்தியாகக் கொண்டு வந்தவர்கள் இவர்கள் தான்.
கலைஞர் ஆட்சியில் அருந்ததியர் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட 3 சதவீத இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என இட ஒதுக்கீடு நகல் எரிப்புப் போராட்டங்கள் நடத்தினோம், அதனால் தான் கலைஞர் அரசு எங்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கிறது என புரட்சிப் புலிகள் அமைப்பு குற்றம் சாட்டினார்கள்.
முடிவாக....
கிராமப் புறங்களின் சாதி ஒழிப்பு விடுதலைப் போராட்டங்கள் தான் 'அருந்ததியர் எழுச்சி'யைத் துவக்கி வைத்தது. அடிமையாய்க் கிடந்த கிராம இளைஞர்களை அம்பேத்கர், பெரியார், மார்க்சு நோக்கி மீண்டும் நடைபோட வைத்தது. இது முதல் தலைமுறை அரசியல் ஆளுமைகளால் சாத்தியமானது.
இதன் விளைவாய் பல இளைஞர்கள் புரட்சிகர இயக்கங்கள், தமிழ்த் தேசிய, பெரியாரிய இயக்கங்களில் அடி எடுத்து வைத்தனர். அது அருந்ததியர் மக்களின் அரசியல் வரலாற்றில் அடுத்த தலைமுறையின் அரசியல் பரிணாம வளர்ச்சியாக இருந்தது.
நகர்ப்புற இளைஞர்கள் பெரியார், அம்பேத்கர் மற்றும் மார்க்சு கொள்கைகளைக் கைகளில் ஏந்தி மிகப்பெரிய 'அரசு' என்ற அமைப்பையும், பெரு நிறுவனங்களையும் எதித்து சமரசம் இல்லாமல் போராடி நகர்ப்புற வேலையை சாத்தியமாக்கி, அதே போல கிராமப் பகுதிகளை அரசியல் விழிப்புணர்வு அடைய வைத்தனர். மேற்கண்ட நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற திட்டத்தில் எழுச்சி பெறச் செய்த முன்னோடிகள் பின்னால் மிகப் பெரிய பணபலமோ, பிரபலங்களின் அரசியல் அடையாளங்களோ, அவர்களுக்குப் பின்னால் என்.ஜி.ஒ-க்களோ இல்லை.
அம்பேத்கர், பெரியார், மார்க்சியக் கொள்கைளே அவர்களை வழி நடத்தியது. அதனால் தான், அனைத்துப் போராட்டங்களும் சாத்தியமாகியது. அது மட்டுமின்றி கோவைக் கலவரத்திற்குப் பின் இஸ்லாமிய, அருந்ததியர் ஒற்றுமையின் தேவையை உணர்ந்து அவர்களையும் ஒருங்கிணைத்து சில கூட்டங்கள் நடைபெற்றது.
ஆனால், இன்று மக்களைத் திரட்டவும், அமைப்பு கட்டவும், பணம் தேவை என்ற நிலை எங்கிருந்து உருவானது? அடையாளம் மற்றும் தனி நபர் அரசியலில் சிக்குண்டு இருப்பது தான் நமக்கு சாபக் கேடாக அமைந்துள்ளது.
"மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதிகள் புத்தர், பூலே உள்ளிட்டவர்களோடுதான் சமூக சீர்திருத்த வரலாறு துவங்குகிறது. அவர்களின் அளப்பரிய போராட்டங்களை விலக்கி விட்டு சமூகத்தின் வரலாறு எழுதப்படும் என்றால் அது முழுமையான வரலாறு இல்லை" என்கிறார் அம்பேத்கர்.
அனைத்து போராட்டங்களுமே சமூகத் தேவையில் இருந்து தான் உருவாகின்றது, தனி மனிதனின் தேவையிலிருந்து உருவாவது இல்லை. அப்படி உருவாகவும் முடியாது. கடந்த கால வரலாற்றில் அமைப்புகள் எப்படி எல்லாம் செயல்பட்டார்கள் என்கிற ஆய்வுகள் நம்மை அடுத்த கட்டதை நோக்கி நகர்த்தும்.
* சாதிவெறியர்கள் எம் வாழ்க்கையை வேட்டையாடியதைப் பற்றி...
* பெண்கள் மீது நடந்த பாலியல் கொடுமைகளைப் பற்றி...
* எமது கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார உரிமைகள் பறிக்கப்பட்டது பற்றி...
* நகரத்தில் வாழத் தகுதியற்றவர்கள் எனக் கூறி நம்மை நகரத்திலிருந்து வெளியேற்ற நினைக்கிற கார்ப்பரேட் (பெரு நிறுவனங்கள்) அரசுகள் பற்றி...
* எமது வரலாற்றையும், பண்பாட்டையும் பற்றி...
* பறிக்கப்பட்ட எமது நிலங்களைப் பற்றி..
* குடித்துக் குடித்துச் செத்துப்போன உறவினர்களைப் பற்றி...
* அத்தனை செல்வங்களிலிருந்தும், இன்பங்களிலிருந்தும் தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பற்றி ...
*மலக்குழியில் இறந்து போன துப்புரவுத் தொழிலாளர்கள் பற்றி...
இவற்றை எல்லாம் பேச...
காலங் காலமாக இந்த மக்கள் தங்களுக்கு விடிவு தரும் ஒரு தலைமைக்காக காத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இறுதியாக...
எந்தவொரு தனிமனிதனையோ. அமைப்பையோ, குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் நோக்கம் எதுவும் எனக்கில்லை. சொல்லப் போனால் அது எனது வேலையுமில்லை. இன்றைக்கு சமூக களப்பணி செய்யும் இளைஞர்களின் மனசாட்சியின் முன் வைக்கவே விரும்புகிறேன்...
தோழமையுடன் ஆரோக்கியமான அரசியல் உரையாடல்களைத் தொடங்குவோம், முரண்பாடுகளைக் கலைந்து மாற்று அரசியல் களத்தை நோக்கிப் பயணிப்போம்.
(குறிப்பு: களப்பணிகள் செய்த தோழர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. இதில் வேலை செய்த சில தோழர்கள் முற்போக்காக இருந்து வந்தவர்கள்.
பெரியார் இயக்கங்கள், மார்க்சிய லெனினிய அமைப்புகள், தமிழ்த்தேசிய அமைப்புகள், சனநாயக சக்திகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடவில்லை என்று திட்டமிட்டு கார்ப்பரேட் (பெரு நிறுவனங்கள்) மதவாத அமைப்புகளுடன் இணைந்து சில தலித் அமைப்புகள், தலித் எழுத்தாளர்கள் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதோடு, தாழ்த்தப்பட்ட மக்களை பொது சமூகத்தில் இருந்து பிரிக்கும் வேலைகளையும் செய்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலைக்காக அவர்கள் செய்த போராட்டங்கள் மற்றும் தியாகத்தைப் பற்றி விரிவாக எழுத வேண்டிய தேவை உள்ளது)
- தமிழ்வேந்தன்