மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் நாளேடான ‘தீக்கதிர்’ - புட்டபர்த்தி சாய் பாபா காலில் - கலைஞர் துணைவியார், கலைஞர் முன்னிலையிலேயே விழுந்ததை நியாயப்படுத்தி எழுதியது. மார்க்சிஸ்ட் கட்சித் தலைவரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத்தின் மனைவி கோயிலுக்குப் போக விரும்பினால், ஈ.எம்.எஸ். உடன் சென்று, வெளியே நிற்பார் என்று உதாரணங்களைக் காட்டி எழுதியது அந்த ஏடு! ஆன்மீக சிந்தனைகளும் வளர வேண்டும், பகுத்தறிவும் வளர வேண்டும் என்று ‘புத்திமதி’களை எல்லாம்கூட ‘தீக்கதிர்’ கூறியது.

அதே ‘தீக்கதிர்’ ஏட்டில் கடந்த 26 ஆம் தேதி இலக்கியச் சோலை பகுதியில் - பகுத்தறிவுக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவதற்கு பத்திரிகைகள் துணை போகக் கூடாது என்று கட்டுரை ஒன்று வெளிவந்திருக்கிறது. அதாவது அரசியல் என்று வந்தால் ‘ஆன்மீகம்’; கலை இலக்கியம் என்று வந்தால் ‘பகுத்தறிவு’ என்ற இரட்டை அணுகுமுறை போலும்!

கேரளாவில் - மார்க்சியவாதிகள் ‘ஜனசக்தி’ என்ற நாளேட்டை நடத்துகிறார்கள். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பத்திரிகை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கோயிலுக்குப் போவதை கடந்த வாரம் விமர்சித்திருந்தது அந்த நாளேடு. கேரள உள்துறை அமைச்சர் பாலகிருஷ்ணன் சார்பாக மலப்புழா கோயிலில் விசேட அர்ச்சனை நடந்ததாம். அரசியலில் அவரது எதிரிகளை ஒழித்துக் கட்டுவதற்காக இந்த விசேட அர்ச்சனை நடந்ததாக ‘ஜனசக்தி’ செய்தி வெளியிட்டது. அமைச்சர் இந்த செய்தியை மறுத்தார்.

‘ஜனசக்தி’ ஆதாரத்துடன் செய்தியை உறுதிப்படுத்தியது. முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கு எதிரணியில் இருப்பவர் பாலகிருஷ்ணன். எனவே, இந்த செய்தியை வெளியே சொன்னவர் யார் என்பதைக் கண்டறியும் படி, உளவுத்துறைக்கு உள்துறை அமைச்சர் என்ற முறையில் உத்தரவிட்டுள்ளாராம்!

“முதல்வர் அச்சுதானந்தன் மகன் அருண்குமார் சபரிமலைக்குப் போய் தரிசனம் நடத்தினாரே, அதை ஏன் ‘ஜனசக்தி’ வெளியிடவில்லை” என்று பாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் விஜயன், மலையாள நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

விரைவில், கோயில் தரிசனத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் வேறு பல மார்க்சிய தலைவர்களின் குடும்பங்கள் பற்றிய செய்திகள் ‘ஜனசக்தி’யில் வெளிவரப் போகிறதாம். குடும்பத்தினர் கோயிலுக்குப் போவதும், சாமியார் காலில் விழுவதும், அவர்களது தனி உரிமை என்று ‘தீக்கதிர்’ காட்டும் வழியை ‘ஜனசக்தி’ பின்பற்றவில்லை! அதனாலேயே ‘மார்க்சிய ஆன்மீகப் புரட்சிகள்’ வெளிவரத் துவங்கியிருக்கின்றன.

வங்காள மார்க்சிஸ்டுகள்

வங்காள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தங்களது வங்காளி உணர்வை நாடாளுமன்றத்தில் எல்லை மீறியே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சென்னையில் - கடல்சார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்து விட்டது. அதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அமைச்சர் டி.ஆர்.பாலு தாக்கல் செய்ய வந்தபோது, மேற்கு வங்க மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் அமைச்சரை சூழ்ந்து கொண்டு, மசோதாவை சமர்ப்பிக்க விடாமல் தடுத்தனர்.

அமைச்சரை பாதுகாக்க விரைந்த தி.மு.க. உறுப்பினர்களோடு கை கலப்பிலும் இறங்கிவிட்டனர். நடந்த சம்பவத்துக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இதற்கெல்லாம் தமிழ்நாட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரிடம் வங்காள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் பாடம் கற்க வேண்டும் என்று நாம் பரிந்துரைக்கிறோம். ‘தமிழன்’, ‘தமிழின உணர்வு’ என்பதெல்லாம் தங்களிடம் நெருங்கவே கூடாது என்பதில், அவ்வளவு உறுதியாக இருப்பவர்கள்.

ஈழத்தில் விடுதலைப் புலிகளை சிங்கள ராணுவம் தாக்கி சாகடித்தாலோ அல்லது விடுதலைப்புலிகளின் படகுகளை மூழ்கடித்து விட்டாலோ, ‘தீக்கதிர்’ நாளேடு மகிழ்ச்சிக் கூத்தாடி செய்தி வெளியிடும். தமிழன் என்ற உணர்வை கொன்று நசுக்கி எறிந்து விட வேண்டும் என்பதில் அப்படி ஒரு கடுமையான பத்தியம்!

பொடா சட்டத்தில் - பழ. நெடுமாறன் உள்ளிட்ட பல தமிழ் உணர்வாளர்கள், ஜெயலலிதா ஆட்சியில் கைது செய்யப்பட்டபோது, ‘பொடா’ எதிர்ப்பு முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் டி.கே. ரெங்கராஜன் கலந்து கொண்டார். கூட்டத்தின் நிறைவில் ‘பொடா’ சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும்போது, டி.கே. ரெங்கராஜன் ஒரு நிபந்தனை வைத்தார்.

‘பொடா சட்டடத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது சரி; ஆனால் பொடாவில் கைதான பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் போடுவதை எங்கள் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை’ என்றார். அவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களாம்! விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளாம்! எனவே ‘தமிழின’ உணர்வை வெளிப்படுத்தக் கூடாது என்பதில் அப்படி ஒரு கொள்கை உறுதி!

வெடிகுண்டு வழக்கில் தான் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் கேரளாவைச் சார்ந்த மதானி. ஆனால், கேரள மார்க்சிஸ்ட் கட்சி முதல்வர் அச்சுதானந்தன், தமிழகம் வந்து, முதலமைச்சரை சந்தித்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை தர வேண்டும் என்றும், பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்.

வங்காள, கேரள மார்க்சிஸ்டுகள் இப்படி எல்லாம், இன உணர்வோடு செயல்படுவதால் எங்கள் தமிழ்நாட்டு மார்க்சிஸ்டுகளின் கொள்கை உறுதியை, யாராலும் அசைக்கக் கூட முடியாது!

“இது அபாண்டம்! நாங்களும் அதே வங்காளி - மலையாளி உணர்வுடன் தான் இங்கே செயல்படுகிறோம். வீணாக எங்களை குறை காணாதீர்கள்’ என்று அவசர அவசரமாக மறுக்கிறார், தமிழ் நாடு ‘காம்ரேடு’.

நியாயம் தான்; இதோ வாயை மூடிக் கொண்டோம்! ‘கப் சிப்’.

Pin It