abel sepகாணாமல் போவதும் காணாமலடிப்பதும் நம் வாழ்க்கையில் அடிக்கடி நிகழக் கூடியவைதான். சிறு வயதில் விளையாட்டுப் பொருட்கள் காணாமற்போய் விடும். பள்ளி செல்லும் போது எழுதுகோல், குறிப்பேடு, சிற்றுண்டிப் பேழை என்று எதையாவது தொலைத்து விட்டுப் பெற்றோரிடம் திட்டு வாங்குவதுண்டு.

நான் காணாமலடித்தவை எல்லாவற்றையும் வெளியில் சொல்ல மாட்டேன். முடிந்த வரை மறைத்து விடுவேன். தெரிந்து நான் தொலைத்தவற்றை மட்டும் பட்டியலிட்டு நிலைப்பேழையில் ஒட்டி வைப்பார் அப்பா.

ஒவ்வொரு திருவிழாக் கூட்டத்திலும் குழந்தைகள் தொலைந்து போவதும் திரும்பக் கிடைப்பதும் வாடிக்கைதான். பண்டிகைக் காலங்களில் கடைத்தெருவில் குழந்தைகள் காணாமற்போய் ஒலிபெருக்கியில் அறிவித்துத் தேடிப் பிடிப்பதும் உண்டு. குழந்தையை யாராவது கடத்திப் போன செய்திகள் பிற்காலத்தில்தான் கேள்விப்படுகிறோம்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது போதிய வருகைப் பதிவு இல்லாமல் அப்பாவுக்கு அஞ்சி ஓடிப் போனேன். என்னைக் காணவில்லை என்று ஒரே களேபரம்! ஜெயகாந்தன் நடத்திய ஜெய பேரிகை நாளேட்டில் ”தியாகராஜனைக் காணவில்லை, எதிரிகளால் ஆபத்தா?” என்று போட்டிருந்த செய்தியை நானே படித்தேன். இயக்கத்துக்காக நான் ’காணாமல் போய்’ தலைமறைவான போது யாரும் என்னைத் தேடவில்லை.

காணாமல் போவதும் மீண்டு வருவதும் காணாமல் அடிப்பதும் தேடிப் பிடிப்பதும் நம் வாழ்வில் சுவையான நினைவுகள். குழந்தைகளோ முதியவர்களோ காணாமல் போகும் போது காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்வதும் ஏடுகளில் விளம்பரம் கொடுப்பதும் இப்போதும் அடிக்கடி நிகழ்கின்றன. சில நேரம் காணாமல் போனவர்கள் கிடைக்காமலே போய் அந்தக் குடும்பங்களின் மகிழ்ச்சி நிரந்தரமாகவே காணாமல் போவதும் உண்டுதான்.

காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் கடமை அரசின் காவல்துறைக்கு உண்டு. ஆனால் காவல் துறையே மனிதர்களைக் காணாமலாக்குவது என்ற கொடுமையை இப்போது அடிக்கடி கேள்விப்படுகிறோம். 1970 செப்டெம்பரில் சிறைப்பட்ட பிறகுதான் முதன் முதலாக இந்தக் கொடுமையைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

தமிழ்நாட்டில் நக்சல் இயக்கம் எனப்படும் மார்க்சிய-லெனினியக் கட்சியை நிறுவிய தலைவர்களில் ஒருவர் தோழர் எல். அப்பு. என்னை விசாரித்த ’கியூ’ பிரிவு அதிகாரிகள் ”அப்புவைப் பிடித்துச் சுட்டுப் போடுவோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அது ஒருபோதும் நடக்காது என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் அந்த அதிகாரிகளில் ஒருவர் என்னிடம் “அப்புவைப் பிடிச்சாச்சு” என்று சொல்லி விட்டுப் போனார். பிடித்த காவல்துறை அதிகாரிக்கு உடனே பதவி உயர்வு தரப்பட்டிருப்பதாகவும் சொன்னார். கியூ பிரிவு அதிகாரிகள் எல்லோரும் அடுத்த சில நாள் எங்கோ போய் விட்டார்கள்.

அவர்கள் திரும்பி வந்த போது, அப்புவைப் பிடிக்கவில்லை, அது தவறான செய்தி என்று சொல்லி விட்டார்கள். நானும் நம்பி விட்டேன். பிறகு 1972 தொடக்கத்தில் தோழர் புலவர் கலியபெருமாள் சிறைப்பட்ட போது அவர் சொல்லித் தெரிந்து கொண்டேன்: தோழர் அப்புவை வேலூரில் வைத்துப் பிடித்தது உண்மை; ஆனால் அதன் பிறகு என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

நாகை அமர்வு நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நானும் தோழர்களும் நிறுத்தப்பட்ட போது, “இந்தக் காவல்துறை ஓநாய்கள் ஓர் உத்தமரின் உயிரைக் குடித்து விட்டு வந்துள்ளன” என்று குற்றஞ்சுமத்திப் பேசினேன். நீதிபதி, வழக்கறிஞர்கள் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி! நான் தோழர் அப்பு பற்றி விரிவாகப் பேசினேன். அப்புவை நீதிமன்றத்தில் நிறுத்துவதாகக் கற்பனை செய்து அடுத்தடுத்த நாள்களில் நாடகமே நடத்தினோம்.

தோழர் அப்புவைக் காவல்துறை வலிந்து காணாமலாக்கி விட்டது என்ற செய்தியை அம்பலமாக்கிய பின்னும் அரசு அசைந்து கொடுக்கவே இல்லை. அப்பு காணாமலாக்கப்பட்டது பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மனிதவுரிமை அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தன. அப்பு தலைமறைவாக இருப்பது போலவும் காவல்துறை அவரை வலைவீசித் தேடி வருவது போலவும் அரசும் காவல்துறையும் சொல்லிக் கொண்டிருந்தன.

1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் அஇஅதிமுக வென்று எம்ஜிஆர் ஆட்சியமைத்த பின், அப்பு என்ன ஆனார் என்று கண்டுபிடிப்பதற்காக நீதி விசாரணைக்கு ஆணையிடப்பட்டது, நீதியர் காதர் விசாரணை ஆணையராக அமர்த்தப்பட்டார். நான் அப்போது சேலம் சிறையில் இருந்தேன். ஆணையத்தின்முன் நான் சான்றியமளித்தேன்.

வழக்கறிஞர் தோழர் பிவி பக்தவத்சலம் முன்னிலையாகி அப்புவைக் காவல்துறை வலிந்து காணாமலாக்கி விட்டதாக வாதிட்டார். இறுதியில் நீதியரசர் காதர் காவல்துறையின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று முடித்துக் கொண்டார்.

அப்புவைக் காணாமலாக்கிய காவல்படைக்குத் தலைமை ஏற்றவர்தான் அப்போது முதல்வரின் பதுகாப்புப் படை அதிகாரியாக இருந்தார் என்பது கருத்துக்குரிய செய்தி. இன்றும் காவல்துறைப் பதிவேடுகளில் அப்பு தலைமறைவாகவே இருக்கிறார், காவல்துறை அவரைத் தேடிக் கொண்டே இருக்கிறது.

எனக்கு நன்கு தெரிந்து காணாமலாக்கப்பட்ட மற்றொரு தலைவர் தோழர் என், வெங்கடாசலம். தஞ்சை வட்டத்தில் மார்க்சியக் கட்சியின் (சிபிஎம்) செயலாளராக இருந்து வந்தார். சாதி ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிராகத் தொடர்ந்து பல போராட்டங்களை ஒழுங்கமைத்தார். காவல்துறைக் கொடுமைகளையும் அம்பலமாக்கி நீதிக்காகப் போராடினார். நெருக்கடி நிலைக்காலத்தில் மிசா சட்டப்படி திருச்சிராப்பள்ளி சிறையில் ஓராண்டுக்கு மேல் இருந்த போது நேரில் பழகினோம்.

1977 செப்டெம்பர் 21ஆம் நாள் இரவு தோழர் என்.வி. தஞ்சையிலிருந்து தொடர்வண்டி ஏறி சோளகம்பட்டி நிலையத்தில் இறங்கினார். அங்கிருந்து தன் ஊராகிய இராயமுண்டான்பட்டி நோக்கி நடக்கலானார். ஆனால் ஊர் போய்ச்சேரவில்லை. இரண்டு மூன்று நாள் எந்தத் தகவலும் இல்லை. தஞ்சையில் இருப்பார் என்று வீட்டாரும், வீட்டில் இருப்பார் என்று தோழர்களும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். இரண்டு இடத்திலும் இல்லை என்று பிறகுதான் தெரிந்தது.

சோளகம்பட்டிக்கும் இராயமுண்டான்பட்டிக்கும் நடுவில்தான் ஏதோ நடந்திருக்க வேண்டும்! சாதி ஆளுமைக்காரர்களான என்வியின் உறவுக்காரர்கள் சிலர் வழிமறித்துக் கடத்திப் போய்க் கொன்று விட்டார்கள் என்று நெடுநாள் கழித்தே தெரிந்தது. காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் சார்பில் தோழர்களே நடவடிக்கை எடுத்தார்கள்.

2009 மே முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களில் நான் நன்கறிந்த ஒருவர் வே. பாலகுமாரன். அப்போது அவர் ஈரோஸ் அமைப்பின் தலைவராக இருந்தார். அவரோடு நெருக்கமான வைகறைவாணன் உள்ளிட்ட தோழர்கள் எனக்கும் நெருக்கமாக இருந்தார்கள்.

1989-90 காலத்தில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இந்திய அரசு சார்பில் தனித்தனியாக அனைத்துக் குழுக்களோடும் பேச்சுவார்த்தை நடத்தினார். அருகாமைப் பேச்சுகள் (Proximity Talks) என்று பெயர். அதற்காகச் சென்னை வந்திருந்த பாலகுமாரனை சந்திக்க வைகறை ஏற்பாடு செய்து கொடுத்தார். சில மணி நேரம் விரிவாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

ஈழப் போராட்டம், இந்திய இலங்கை உடன்படிக்கை, விடுதலைப் புலிகளின் போர், தமிழ்நாட்டு அரசியல் என்று பெரும்பாலும் எங்களுக்கிடையே ஒத்த கருத்தே நிலவியது. தாயகத்தில் அவரும் ஈரோசும் என்ன செய்ய வேண்டும் என்பது வரை விரிவாகப் பேசினோம். பிறகு நடந்தவை நாமறிந்தவையே.

புலிப்படையில் ஈரோஸ் இணைந்து விட்டது. பத்தாண்டு காலத்துக்கு மேல் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கினார். மெய்ந்நிலை அரசில் அவர் முகன்மைப் பங்கு வகித்தார். அவ்வப்போது நல்ல தொடர்பில் இருந்தோம். 2009இல் போர் தீவிரமைடந்த பிறகுதான் தொடர்பிழந்தோம்.

போர் முடிந்த பிறகு ஆயிரக்கணக்கில் காணாமலாக்கப்பட்டவர்களில் பாலகுமாரனும் ஒருவர் என்று தெரிந்த போதும் அவர் எங்காவது சிறையில் உயிருடன் இருப்பார் என்ற நப்பாசை இருந்தது. அவரும் மகனும் காட்டுக்குள் உட்கார்ந்திருக்கும் படம் வந்தது. ’தமிழ்த் தேசம்’ ஏட்டில் அவரைப் பற்றி எழுதும் போது அவருக்கு வீர வணக்கம் செலுத்துவதா இல்லையா என்று குழம்பினோம். ஒரு வேளை அவர் எங்காவது உயிருடனிருந்தாலும் அவர் இல்லை என்ற நம் செய்திக்காகவே பகைவன் அவரைக் கொன்று விடுவானோ என்ற அச்சம் இருந்தது.

இனியோர் ஐயமில்லை, பாலகுமாரனையும் அவர் மகனையும் கொடியவர்கள் தீர்த்துக் கட்டி விட்டார்கள். புதுவை இரத்தினதுரை, திலகர், யோகி என்று எத்தனையோ கலைஞர்கள், அறிஞர்கள், தலைவர்களைக் காணாமலாக்கி விட்டார்கள். இது ஏதோ வெறும் அடக்குமுறையன்று, இனவழிப்புத் திட்டத்தின் ஒரு கூறு எனபதற்கு இந்தப் பெருமக்கள் படுகொலை செய்யப்பட்டதே போதிய சான்று.

அர்மீனிய இனக் கொலை, யூத இனக்கொலை என்று ஒவ்வொரு இனக்கொலையிலும் பெருந்திராளான மக்கள் கொல்லப்பட்டதோடு அறிஞர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டார்கள். ஈழத்திலும் நடந்தது இதுவே என்பதற்கு பாலகுமாரன், புதுவை இரத்தினதுரை போன்றவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டது முகன்மைச் சான்றாகும்.

வலிந்து காணாமலாக்குதல் என்ற கொடுமை இனவழிப்பின் ஒரு கூறே ஆகையால் அதற்கு நீதி தேடும் முயற்சி இனவழிப்புக்கு நீதி பெறும் போதுதான் நிறைவு பெறும். மறைந்த உறவுகளைக் கண்டெடுக்கும் முயற்சி என்பது இனவழிப்புக்கு நீதி பெறும் முயற்சியின் ஒரு பகுதியே என்ற புரிதலோடு காணாமலாக்குதலைக் காணாமலாக்க அயராது உழைப்போம்! இது ஒரு நெடும் பயணம். ஆனால் தனிவழிப் பயணம் இல்லை என்பது உறுதி!

- தியாகு