விடுதலைப் புலிகள் தலைமை தாங்கி முன்னெடுத்து வரும் தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் நல்கிய உதவி அளப்பரியது. எல்லாவற்றையுமே முழுமையாக இங்கு ஆவணப்படுத்த முடியாதபோதும், ஒரு சில முக்கிய சம்பவங்களையாவது பதிவு செய்வது வரலாற்று ரீதியாகப் பயன்படும் எனக் கருதுகிறேன். இப்பொழுது தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற சொல்லை உச்சரிப்பதே சட்ட விரோதமான ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் வளர்த்து விட்ட அ.தி.மு.க. கட்சியும், அதன் தலைமையும் இன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி நிற்கின்றன. ஆனால் அன்று எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ மக்களின் விடுதலைக்காக மிகவும் துணிச்சலான காரியங்களைப் புரிந்து எமக்கு கை கொடுத்து உதவியிருக்கிறார்.
ஒரு தடவை சென்னைத் துறைமுகம் ஊடாக ஆயுதங்களை தருவிக்க முயன்றோம். எமக்கான நவீன ஆயுதங்கள் அடங்கிய கொள்கலனுடன் வெளி நாட்டுக் கப்பல் ஒன்று சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. துறைமுகம் ஊடாக ஆயுதக் கொள்கலனை வெளியே எடுக்க நாம் செய்த பகீரத முயற்சிகள் பயனளிக்கவில்லை. சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான் உமா மகேஸ்வரன் ஒழுங்கு செய்த ஆயுதக் கப்பல் ஒன்று இந்தியப் புலனாய்வுத் துறையினரால் கைபற்றப்பட்டது. பல கோடி பெருமதியான ஆயுதங்களை புளொட் இயக்கம் இழக்க நேரிட்டது. புலிகளுக்கும் இந்தக் கதி நேரக் கூடாதென விரும்பினோம். ஆயுதங்களை பறி கொடுக்காமல் வெளியே எடுப்பதற்கு எம்.ஜி.ஆரின் உதவியை நாடுவதே ஒரேயொரு வழியாக எனக்குத் தென்பட்டது. பிரபாகரனும் நானும், எம்.ஜி.ஆரிடம் சென்றோம். நிலைமையை எடுத்து விளக்கினோம்.
“நீங்கள் கொடுத்த பணத்தில் இந்த ஆயுதங்களை வாங்கியிருக்கிறோம். சென்னைத் துறைமுகத்தில் ஒரு கப்பலில், ஒரு கொள்கலனுக்குள் இந்த ஆயுதங்கள் இருக்கின்றன. எப்படியாவது அதனை வெளியே எடுத்துத் தர வேண்டும். நீங்கள் மனம் வைத்தால் முடியும்” என்று கேட்டோம். எதுவித தயக்கமோ, பதட்டமோ அவரிடம் காணப்படவில்லை. “இதுதானா பிரச்சினை? செய்து முடிக்கலாம்” என்று கூறிவிட்டு, துறைமுக சுங்க மேலதிகாரிகளுடன் தொலைபேசியில் கதைத்தார். பின்பு எம்மிடம், ஒரு சுங்க அதிகாரியின் பெயரைக் குறித்துத் தந்து, அவரைச் சந்தித்தால் காரியம் சாத்தியமாகும் என்றார் முதலமைச்சர். அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு நாம் மகிழ்வுடன் வீடு திரும்பினோம்.
சென்னைத் துறைமுகத்திலிருந்து ஆயுதக் கொள்கலனை மீட்டு வரும் பொறுப்பை கேணல் சங்கரிடம் கையளித்தார் பிரபாகரன். ஒரு சில தினங்களுக்குப் பின்னர் ஒரு நாள் இரவு தமிழ்நாட்டுக் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பாரம் தூக்கி பொருத்திய கனரக வாகனத்தில் எமது ஆயுதக் கொள்கலன் சென்னை நகரம் ஊடாகப் பவனி வந்து நாம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இறக்கப்பட்டது. அதில் ஒரு தொகுதி ஆயுதங்கள் திருவான்மியூரில் நாம் வசித்த வீட்டில் குவிக்கப்பட்டன. ஏவுகணைகள், தானியங்கித் துப்பாக்கிகள், ரவைப் பெட்டிகள், கைக்குண்டுகளாக வீடு நிறைந்திருந்தது. அவை வீட்டிலிருந்து அகற்றப்படும் வரை என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.
எந்தப் பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக ஆயுதங்களாகப் பெற்றுத் தந்ததற்காக எம்.ஜி.ஆருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார் பிரபாகரன். அந்தப் பேருதவியின் நினைவுச் சின்னமாக இறக்கப்பட்ட ஆயுதங்களிலிருந்து ஒரு புதிய ஏ.கே.47 ரக தானியங்கித்துப் பாக்கியை எம்.ஜி.ஆரிடம் கையளித்தார் பிரபா. அந்தத் துப்பாக்கியை கழற்றிப் பூட்டி அதன் செயற்பாட்டு இயக்கத்தையும் விளங்கப்படுத்தினார். எம்.ஜி.ஆருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இந்தச் சம்பவம் நிகழ்ந்து நீண்டகால இடைவெளியின் பின்னர் ஒரு தடவை சுகவீனமுற்றிருந்த முதலமைச்சரை நான் சந்திக்கச் சென்றேன். பிரபாகரனை சுகம் விசாரித்தார். தமிழீழத்தில் சௌக்கியமாக இருக்கிறார் என்றேன். அப்பொழுது தனது படுக்கையில் தலையணிகளின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஒரு ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்துக் காண்பித்து, “இது பிரபாகரன் தந்த நினைவுப் பரிசு” என்று பெருமிதத்துடன் சொன்னார்.
எமக்கு தேவை ஏற்பட்ட வேளைகளில் எம்.ஜி.ஆர். அளித்த நிதி உதவிகளை ஆதாரமாகக் கொண்டே இயக்கம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு தடவை எமக்கு பெருமளவில் நிதி தேவைப்பட்டது. தலைவர் பிரபாகரன் அவர்கள் என்னை எம்.ஜி.ஆரிடம் தூது அனுப்பினார். நான் எம்.ஜி.ஆரை சந்தித்த பொழுது முதல்வருடன் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனும் இருந்தார்.
“இராணுவ - அரசியல் ரீதியாக எமது விடுதலை இயக்கம் பெருமளவில் வளர்ச்சி கண்டுவிட்டது. பல்வேறு வேலைத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டி இருக்கிறது. இம்முறை பெரிய தொகையில் பணம் தேவைப்படுகிறது. தம்பி பிரபாகரன் உங்களைத் தான் நம்பியிருக்கிறார்” என்றேன்.
“பெரிய தொகையா? எவ்வளவு தேவைப்படுகிறது?” என்றார் முதல்வர்.
“ஐந்து கோடி வரை தேவைப்படுகிறது” என்றேன்.
எம்.ஜி.ஆர். அவர்கள் திரு. பண்ருட்டி இராமச்சந்திரனைப் பாhத்து, “மாநில அரசு மூலமாக ஏதாவது செய்யலாமா?” என்று கேட்டார்.
அமைச்சர் சில வினாடிகள் வரை சிந்தித்து விட்டு, “போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்து மக்களுக்கென தமிழ்நாட்டு அரசால் திரட்டப்பட்ட நிதி இருக்கிறது. நான்கு கோடிக்கு மேல் வரும். அந்த நிதியை இவர்களுக்குக் கொடுக்கலாமே? ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு இந்நிதி வழங்கப்படுவதில் தப்பில்லை அல்லவா?” என்றார்.
“அப்படியே செய்யுங்கள். இந்த விசயத்தை உங்கள் பொறுப்பில் விடுகிறேன்” என்றார் எம்.ஜி.ஆர்.
இதனையடுத்து அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்களின் இல்லத் திற்கு இரவு பகலாக அலைய வேண்டியிருந்தது. “தமிழ்நாட்டு அரசின் பொறுப்பிலுள்ள நிதி என்பதால், ஒழுங்கான முறையில் செய்ய வேண்டும். உங்களது தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் வாயிலாக அதிகாரபூர்வமான வேலைத் திட்டம் ஒன்று தயாரித்துத் தாருங்கள். இத் திட்டம் நான்கு கோடி ரூபா வரையிலான செலவீனங்களைக் கொண்டிருக்க வேண்டும்” என்றார் அமைச்சர். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு மருத்துவமனை நிர்மாணத்திற்கான வேலைத் திட்டத்தைத் தயாரித்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் அமைச்சரிடம் கையளித்தேன். இறுதியாக ஒரு அரச செயலகத்தில் வைத்து நான்கு கோடி ரூபாவுக்கான காசோலை எனக்கு கையளிக்கப்பட்டது.
இந்த நிதி விவகாரத்தில் அரச அதிகாரிகள் பலர் ஈடுபட்டதால், தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு செய்தி கசிந்து விட்டது. மறுநாள் காலை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கிலப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக இவ் விவகாரமும் அம்பலமாகியது. அது ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டு அரசு நிதியுதவி செய்வதாகவும், தமிழக முதலமைச்சர் இலங்கையின் இறைமையை மீறுவதாகவும், ஜனாதிபதி ஜெயவர்த்தனா இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தியிடம் கடுமையாக ஆட்பேசம் தெரிவித்தார். ராஜீவ் காந்தி உடனடியாகவே எம்.ஜி.ஆரிடம் தொடர்பு கொண்டு தமது ஆட்சேபத்தைத் தெரிவித்தார்.
அன்று மாலை தன்னை அவசரமாக சந்திக்குமாறு எம்.ஜி.ஆர். எனக்கு அழைப்பு விடுத்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கவலையோடு நான் முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்றேன். அங்கு முதல்வருடன் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் இருந்தார்.
ஆத்திரத்துடன் காணப்பட்டார் எம்.ஜி.ஆர். ஜெயவர்த்தனா ராஜீவிற்கு முறையிட்டதையும், ராஜீவ் தனக்கு ஆட்சேபணை தெரிவித்ததையும் விவரமாகச் சொன்னார். சிங்கள வெறியன் என்றும், ஈழத் தமிழர்களுக்கு கொடுமை இழைப்பவன் என்றும் முதலில் ஜெயவர்த்தனாவைத் திட்டித் தீர்த்தார். ராஜீவையும் விட்டு வைக்கவில்லை. துணிவில்லாதவர் என்றும், பயந்த பேர்வழி என்றும் ராஜீவிற்கும் திட்டு விழுந்தது. “ஈழத் தமிழர்களுக்கு திரட்டிய நிதியை அந்த மக்களின் உரிமைக்காகப் போராடும் விடுதலை இயக்கத்திற்கு கொடுப்பதில் என்ன தவறு? இதனை பிரதம மந்திரி புரிந்து கொள்ளவில்லையே” என்று ஆதங்கப்பட்டார் முதல்வர்.
“அந்தக் காசோலையை வைத்திருக்கிறீர்களா? வங்கியில் போடவில்லை அல்லவா?” என்று கேட்டார்.
“அந்தக் காசோலை என்னிடம் தான் இருக்கிறது” என்றேன். அதனை அமைச்சரிடம் திருப்பிக் கொடுக்கும்படி சொன்னார்.
“நாளை இரவு வீட்டுக்கு வாருங்கள். எனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி தருகிறேன்” என்றார். போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் எம்.ஜி.ஆருக்கும், அமைச்சர் பண்ருட்டிக்கும் நன்றி சொல்லி விட்டு புறப்பட்டேன். வீடு திரும்பியதும், நடந்ததை எல்லாம் பிரபாகரனுக்கு எடுத்துச் சொன்னேன். முதல்வரின் பெருந்தன்மையைப் பாராட்டினார் பிரபாகரன். மறுநாள் இரவு எம்.ஜி.ஆரின் பாதாளப் பண அறையிலிருந்து நான்கு கோடி ரூபாய் புலிகளின் கைக்குக் கிட்டியது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் மத்தியில் நல்லுறவு நிலவியது. எமது இயக்கத்தின் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டிருந்த அன்பும் மதிப்புமே இந்த நல்லுறவுக்கு ஆதாரமாக விளங்கியது.
இவ்வாறு அன்டன் பாலசிங்கம் எழுதியுள்ளார்.