ஈழத் தமிழர் பிரச்சனையில் சர்வதேச ஆங்கில ஊடகங்களின் போக்குகள், தமிழர் தாயகத்தில் புலிகளின் நிர்வாகப் பகுதி மற்றும் சிறிலங்கா ஆக்கிரமிப்பு பகுதி மக்களின் வாழ்க்கை, சிறிலங்கா மற்றும் தமிழீழத்தின் ஊடக செயற்பாடுகள் ஆகியவை பற்றி சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மீட்பு மாநாட்டில் ஜெர்மன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் தெற்காசிய நிலைமைகள் தொடர்பிலான ஆய்வாளருமான டக்மர் எல்மன் விளக்கமளித்தார். சென்ற இதழ் தொடர்ச்சி.

சாதித்திருக்கும் ஈழத் தமிழர்களின் ஊடகங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் - போராட்டச் செய்திகளை தங்களுக்கென்று கட்டமைத்துள்ள ஊடகங்களின் வழியாக மக்களுக்கு கொண்டு செல் கின்றனர். இதில் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளனர். 

நாளேடுகள், பத்திரிகைகள், வெளியீடுகள், இணைய தளங்கள், நூல்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள் வழியாக விடுதலைப் புலிகள் தங்களது போராட்டத்தை போராட்டத்தின் நியாயத்தை சிறிலங்கா இராணுவ ஒடுக்குமுறைகளை- மனித உரிமை மீறல்களை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள்.

ஈழத் தமிழர்களின் உணர்வுகளை- அந்த மக்களின் நோக்கத்தை சரியாகப் படம் பிடித்துக் காட்டுவதில் ஆங்கில மொழி ஊடகத்தை விட- தமிழ் மொழி ஊடகங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.

“மாவீரர் நாள்” வழியாக, ஒலிஒளிக் காட்சிகள், குறுந் தகடுகளை விடுதலைப் புலிகள் வெளியிட்டு பரப்புகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் இணையதளங்களை ஆதரவாளர் களும் நடுநிலையாளர்களும் ஏராளமாகப் பார்வையிடுகின்றனர்.

“தமிழ்நெட்” இணையதளத்தையும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இணையதளங்கள் வழியாக ஈழத் தமிழர்கள் - இந்தியத் தமிழர்கள் - சர்வதேசத் தமிழர்களிடையே நெருக்கமான உறவுப் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படி விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் ஆக்கப்பூர்வமாக இயங்கும்போது, சிறிலங்கா அரசாங்கமோ ஊடகங்களைக் கண்டு அஞ்சுகிறது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பி.பி.சி. ஊடகவியலாளர் நிர்மலராஜன், 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான குழுக்கள்- அவரது வீட்டில் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

தமிழர்களின் அவலங்களை நேரில் கண்டறிய வன்னிப்பகுதிக்குள் அரசு தடையை மீறிச் சென்ற “தி டைம்ஸ்” ஊடகவியலாளர மேரிகோலின்ஸ்சை சிறிலங்கா இராணுவம் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியது.

போர் நிறுத்த ஒப்பந்தம் சிதறுண்டபோது விடுதலைப் புலிகளுடன் தோழமையுடன் இருந்த ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர். பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழ்நெட் இணையதளத்தை உருவாக்கிய தாராக்கி என்று அழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம், 2005ஆம் ஆண்டு ஏப்ரலில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

பல செய்தியாளர்கள், ஊடக நிறுவன பணியாளர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இப்படி போராட்டங்கள் நடக்கும் ஒரு நாட்டில் மனித உரிமைகள் நசுக்கப்படும் நாட்டில் ஊடகங்கள் எப்படி செயற்பட வேண்டும்? என்பது ஒரு கேள்வி.

வன்முறைகள்- போராட்டங்களை- ஊடகங்கள் மேலும் பரவுவதற்கு தூண்டிவிடலாமா என்பது மற்றொரு கேள்வி.

ஜெர்மனிய ஊடக சுதந்திரம்

இது தொடர்பாக ஜெர்மனியில் ஊடகம்- மற்றும் கருத்துரிமை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். ஜெர்மனியின் அரசியல் சட்டம், ஊடக சுதந்திரத்தையும் கருத்துரிமையையும் உறுதி செய்கிறது. ஆனால், அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் உள்ளதைப் போல் தங்கு தடையற்ற சுதந்திரம் வழங்கப்பட வில்லை. ஜெர்மனியில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட சுதந்திரமே வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக நாஜிக்களை ஆதரித்தோ, நாஜிக்கள் சிந்தனைகளையோ பாசிச சிந்தனைகளையோ ஜெர்மனியில் ஆதரித்து எழுத முடியாது- பேச முடியாது. எனவே பேச்சு சுதந்திரத்துக்கு வரையறை உண்டு. அதேபோல் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலமான வர்கள் பற்றி ஊடகங்கள்- தாங்கள் விரும்புகிற செய்திகளை எல்லாம் வெளியிட முடியாது.

தங்களைப் பற்றி தவறாக எழுதிய ஊடகங்களுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் வழக்குத் தொடர்ந்து, நீதிமன்றங்கள் அத்தகைய கருத்துகளை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதே நேரத்தில் எந்த தத்துவத்தையும், அரசியல் கோட்பாட்டையும் சமூகப் பிரச்சனைகளையும் வன்முறைக்கு இடம்தராமல் பேசலாம். அதற்கு ஜெர்மனியில் உரிமை உண்டு. ஜெர்மன் சட்டத்தைப் போலவே ஏனைய ஜனநாயக நாடுகளிலும் வன்முறைகளுக்கு இடமளிக்காத அளவில் கருத்துரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.

சர்வதேச ஆங்கில ஊடகங்கள்

இப்போது எழுந்துள்ள முக்கிய கேள்வி என்னவென்றால் ஊடகங்கள்- அமைதியைக் குலைக்கும் வகையில் செய்தி வெளியிடலாமா? அல்லது ஏற்கெனவே- நிலவி வரும் மிக மோசமான நிலையை படம் பிடித்துக் காட்டுவது தவறா? இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.

சர்வதேச ஆங்கில ஊடகங்களில் பொதுவாக சார்பு நிலையே மேலோங்கி நிற்கும். உதாரணம் கூற வேண்டுமானால், பிரபாகரன் தனிநாடு கோருகிறார் என்பதே, பல ஆண்டு காலமாக சர்வதேச ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட செய்தி.

இதற்கும் ஆதாரமாக, அவரது மாவீரர் நாள் உரையை எடுத்துக் காட்டுவார்கள். ஆனால் பிரபாகரனின் மாவீரர் நாள் உரையின் முழுப் பிரதியை வாசித்தால், ஈழத் தமிழர்களின் உணர்வுகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தீர்வுகளை முன்வைத்தால் பரிசீலிக்கத் தயாராக உள்ளோம். இல்லையேல் தனி ஈழமே தீர்வு என்பதுதான் அவரது மாவீரர் நாள் உரைகளின் உள்ளடக்கமாக இருந்து வந்திருக்கிறது.

இறுதித் தீர்வாகத்தான் தனிநாடு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். அந்த நிலைப்பாட்டில், இதுவரை விடுதலைப் புலிகளிடம் மாற்றமில்லை. “தனிநாடு கேட்கிறார் பிரபாகரன்” என்று செய்தி வெளியிட்ட சர்வதேச ஊடகங்கள் 2001ஆம் ஆண்டு அவரது மாவீரர் நாள் உரையை வெளியிடும்போது “பிரபாகரன் மாறிவிட்டார்- தனிநாடு கோரிக்கையை கைவிடுகிறார்” என்று செய்தி வெளியிட்டார்கள்.

பல நேரங்களில் இந்த ஊடகங்கள் விடுதலைப் புலிகளையும் ஈழத் தமிழர்களையும் சரியாக பிரித்துப் பார்ப்பதில்கூட தவறிவிடுகின்றனர்.

உண்மையில் ஈழத் தமிழர்கள் எதை விரும்புகிறார்கள் என்பது பற்றி, ஊடகங்கள் கவலைப்படுவது இல்லை. இப்போது கூட ஈழத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வை- அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி- சிறிலங்கா அரச தலைவர் விவாதிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

ஆனால் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம், மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளது. அரச- சர்வதேச ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் - சார்புப் போக்கிலும் - தங்களின் விருப்பத் தேர்வு அடிப்படையிலுமே செய்திகளை வெளியிடுகின்றன.

சமாதான முயற்சிகள்

அடுத்து ஈழத் தமிழர் பிரச்சனையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் பற்றி கூற விரும்புகிறேன். சிறிலங்காவில் ஆட்சி மொழியாக ஆங்கிலத்துக்கு பதிலாக சிங்களமும் தமிழும் இருக்கும் என்று 1944ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1956ஆம் ஆண்டு இந்தத் தீர்மானம் முழுமையாக கைவிடப்பட்டு, சிங்களம் மட்டுமே - ஆட்சிமொழி என்று அறிவித்தார்கள். தமிழர்கள் எதிர்த்தார்கள்- போராட்டம் வெடித்தது. பண்டா- செல்வா ஒப்பந்தம் உருவானது. இது முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக முதல் சமாதான முயற்சி. ஆனால் சமாதானம் தொடர முடியவில்லை. எதிர்க்கட்சிகளும் பௌத்த பிக்குகளும் 1958 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை உருவாக்கினர். ஒப்பந்தம் முறிந்தது.

1965இல் தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க மீண்டும் தமிழர்களின் தரப்புக்கும் அய்க்கிய தேசியக் கட்சியின் டட்லி சேனநாயக்கவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உருவானது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி, இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வன்முறையில் இறங்கவே அந்த ஒப்பந்தமும் திரும்பப் பெறப்பட்டது.

ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு தமிழீழம்தான் என்ற கோரிக்கையை முதன் முதலாக விடுதலைப் புலிகள் இயக்கம் முன்வைக்கவில்லை.

1976ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி செய்த பிரகடனம் அது என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டனர். அந்தக் கோரிக்கையைத் தமிழர்கள் ஏற்றனர். தங்களின் ஏற்பை தேர்தல் வெற்றியின் வழியாக தமிழர்கள் வெளிப்படுத்தினர்.

அப்போதே இந்தியாவைப் போல் அதிகாரப் பகிர்வுகளை செய்து கொண்டிருந்தால் அமைதியாக பிரச்சனை முடிந்திருக்கும்.
ஆனால் சிறிலங்கா அதற்குத் தயாராக இல்லை.

1985இல் திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையில் ஈழப் போராளிகள் தமிழீழப் பிரதேசத்தையும் தமிழர் தாயகமாக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்தியா சமாதான முயற்சிகளை மேற்கொண்டது. சிறிலங்கா அரச தலைவர் ஜெயவர்த்தனா, “அதிகாரப் பகிர்வு” என்பது பற்றி மட்டுமே பேசினார். தமிழீழ தாயகப் பிரதேசத்தை அங்கீகரிக்க மறுத்தார்.

1987இல் இராசீவ்- ஜெயவர்த்தனா ஒப்பந்தம் உருவானது. அதன்படி வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறிலங்காவின் தலைமைநீதிமன்றம் அண்மையில் இந்த இணைப்பு செல்லாது என்று அறிவித்துவிட்டது.

2000ஆம் ஆண்டில் சிறிலங்கா இராணுவத்திடமிருந்து இழந்த பிரதேசங்களை விடுதலைப் புலிகள் மீட்டெடுத்து வெற்றியின் விளிம்பில் இருந்தபோது தான், நார்வே முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவானது. இதற்கு சிங்கள தீவிரவாதிகளும் பௌத்த பிக்குகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

போர் நிறுத்த ஒப்பந்தங்களை - நிறைவேற்றும் முயற்சிகளை அரசு எடுக்கவில்லை. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பிறகு, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளை மீறி செயல்படுவது அதிகரித்தது. கடைசியாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாகவே ராஜபக்ச ஆட்சி இரத்துச் செய்துவிட்டது. எனவே மீண்டும் பழைய நிலை திரும்பிவிட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக- பயங்கரவாத அமைப்பு என்று ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை- அதே வேகத்தில், ஊடகங்கள் கண்டிப்பதில்லை. இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள சிறிலங்கா அரசாங்கமானது, இராணுவ ரீதியாக வெற்றிகளைக் குவித்து வருவதாக கூறிவருகிறது. சிறிலங்காவின் இராணுவ வெற்றியைக் கொண்டாடும் ஊடகங்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். இந்த இராணுவ வெற்றி தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வாகுமா? என்றார் பேராசிரியர்; எல்மன் அம்மையாரர்

Pin It