தற்காலம் நமது நாட்டுக்கு வேண்டியது வர்ணாஸ்ரமமாகிற (மக்களுக்குள் ஆண்டானடிமை, உயர்ந்தோன், தாழ்ந்தோன் வேறுபாட்டுகளை விர்த்தி செய்கிற) வெறியைக் கிளப்ப மக்களுக்குள் பரப்பி வர வேண்டுமா? அல்லது மக்கள் யாவரும் பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை என்கிற சமத்துவக் கொள்கைகளைக் கிளப்பி அவைகளை மக்களுக்குள் பரப்பி வர வேண்டுமா? ஆகிய இந்த இரண்டு கேள்விகளைப் பற்றியும் நமது மக்களிருக்கும் நிலைமையையும், அந்தஸ்தையும் பற்றியும் யோசித்து தற்காலம் இவ்வித வேறுபாடுகளை ஒழித்து வந்திருக்கிற அந்நிய நாட்டு மக்கள் நிலைமையையும் அந்தஸ்தையும் கவனித்துப் பார்த்தால் நம் நாட்டின் மக்களுக்கு இத்தருணத்திற்கு வேண்டியது எது என்பது விளங்காமற் போகாது. ஆகையால் வர்ணாஸ்ரம மொழிந்த சமத்துவக் கொள்கையாகிற நன்மருந்தே இன்றியமையாத சாதனமாகும். ஏனெனில் நம் நாட்டு மக்களை வெகு காலமாகப் பீடித்து அடிமை, அறியாமையாகிய கொடிய நோய்வாய்ப்படுத்தி உருவழித்து வரும் சமயம், சாதி, ஆச்சிரமம் முதலியவைகளுக்கு தாத்காலிகத்திற்கேற்ப உய்விக்கக் கூடியது அம்மருந்தேயாகும்.

உதாரணமாக வர்ணாச்சிரப் பேதமில்லாத (பிறப்பினால் உயர்வு தாழ்வில்லாத) கிருஸ்துவ, முஹம்மதிய, புத்த என்கிறவைகளுக்குட்பட்ட ஜன சமூகஸ்தர் இன்றைக்கும் அரசாட்க்ஷி புரிந்து வருவதும் வேற்றுமைக்குட்பட்ட நம்மவர்கள் வேற்றுமைக்குட்படாத முன் சொன்னவர்களால் ஆளப்படுவோர்களாக வாழ்விலும், பேச்சிலும், எழுத்திலும், நடத்தை அநுபவம் முதலியவைகளிலும் சுதந்திரங்களை இழந்து அடிமைகளாகவும் அறியாமையால் சூழப்பட்டவர்களாகவுமே வாழ்ந்து வருவது நிதர்சனமாகப் பார்த்து வருகிறோம். இன்னமும் சொல்லப் புக்கால் உலகத்தில் சிறந்து மேம்பாடடைந்து வரும் வளர்ச்சிக்கு ஆதாரமாயுள்ள நாகரீக முதிர்ச்சியின் பயனாய் ஏற்பட்டிருக்கிற மதமொழிப்பு என்னுங் கொள்கையினால் மதமென்பதேயில்லாத ஒரு தேசத்தில் (ரஷ்யாவில்) பார்த்தால் மக்களுக்குள் பிறப்பினால் உயர்வு, தாழ்வில்லை என்பதோடு ஏழை, பணக்காரன் என்னும் வேறுபாடுகூட ஒழிந்து யாவரும் சமமென்பதைக் காண்கிறோம்.periyar karunadhini karunchettai feb142014இப்படியாக மேன்மேலும் நாகரீகம் விருத்தியாகி அதன் மூலம் மக்கள் விடுதலையடைந்து சமூகம் விருத்தியடைந்து வரும் இக்காலத்திலும் அவ்வித விருத்திகளுக்கு முள்வேலி இட்டது போலுள்ளதற்கேற்றபடியாகிற வர்ணாச்சிரம தர்மம் இருக்க வேண்டுமென்றும், அதன் பயனாக ஒரு சிலர் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு விட்டார்கள், அவர்களை உத்தரிக்க மீண்டும் அவ்வித வர்ணாஸ்ரமத்துக்குட்பட்ட ரீதியாக ஆதரிக்க வேண்டும், அதற்காக நிதி திரட்ட வேண்டுமென்றும், அந்நிதிக்கு எவரும் தங்களால் இயன்றவைகளை என்னிடம் தாருங்கள் என்றும் சொல்லி சர்வ வல்லமையுள்ள வஸ்துவென்று சொல்லப்படுகிறதே உருவெடுத்து வந்தது என்று வைத்துக் கொண்டாலும் அப்படிப்பட்ட ஒரு பெரியார் எவராயினும் அவரை நம்நாடு தற்போதிருக்கும் இவ்வித நிலைமைகளிலும் வரவேற்கலாமா? அல்லது பஹிஸ்கரிக்கலாமா? வென்பதை நமது நேயர்களுக்கே யோசித்துப் பார்க்கும்படி விட்டுவிடுகிறோம்.

இன்னமும் நாம்தான் இவ்விதம் யோசிக்கிறோமாவென்றால் வர்ணாச்சிரமங்களை நிலை நாட்டி வைப்பதற்கென்றே பரம்பரையாக இருந்து வருபவர்களுக்கெல்லாம் குரு அதாவது ஜகத்குரு சங்கராச்சாரியாரும் கூட இத்தகைய பெரியாரின் தன்மையைக் கண்டித்து வருகிறார். உதாரணமாக, பூரி சங்கராச்சாரியார், தேவகோட்டையில் சில வாரங்களுக்கு முன்பு பேசியிருப்பதை வாசகர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறோம்.

அதாவது "காந்தி ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு தீண்டாமை யொழிப்பு பேச உரிமையில்லையென்று வேதங்களில் 259 ஆதாரங்கள் இருப்பதாகவும், விக்கிரக ஆராதனை ஒழிப்புக்காரரான ஆர்ய சமாஜத்தாரையும் அவர் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்றும், வடஇந்தியாவில் ஆரிய சமாஜிகள் ஆதிதிராவிடர்களுக்கு ஆலயப் பிரவேசம் வேண்டுமென பலத்த பிரசாரம் செய்கிறார்களென்றும், மத்தியில் ஏதும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் நான் சொல்லுகிறேன் என் அபிப்பிராயம் அப்படித்தான் செய்ய வேண்டுமென்பதுதான் வீரர்கள் வழக்கமென்றும், இயேசுக் கிறிஸ்து, மகம்மது முதலியவர்கள் அப்படித்தான் செய்தார்களென்றும், ஆனால் காந்தியோ "வருணாச்சிரமம் உண்டு, ஆதிதிராவிடருக்கு கோவில் பிரவேச உரிமையும் வேண்டும்" என்று சொல்லுவது வீரர் வாழ்க்கை யாகாதென்றும், அவர் சூழ்ச்சி செய்து மக்களை ஏய்க்கப் பார்க்கிறார் என்றும், அதற்கு ஏமாறக் கூடாதென்றும் கூறி, மேலும் குறிப்பிட்டதாவது நாஸ்திகத் தலைவர்கள் பலரை எனக்கு நேரில் தெரியும். அவர்களுக்கு வேதத்தில் நம்பிக்கை யில்லை யென்று சொல்லிக் கொண்டு அவர்கள் கொள்கையை பிரசாரம் செய்கிறார்கள். அவர்கள் நேர்மையை நான் போற்றுகிறேன். ஆனால் காந்தியோ சூழ்ச்சி செய்கிறார்" என்பதாகும்.

மற்றும் இப்பெரியார் யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு உத்தரிக்கப் போகிறார்களோ, அத்திருக்குலத்தடியார்களாகிற ஹரிஜனங்களென்று சொல்லப்பட்டவர்கள்கூட சென்னையிலும், கொச்சி, திருவாங்கூர் முதலிய மலையாள நாடுகளிலும் விருதுநகர் போன்ற இடங்களிலும் இன்னும் மற்ற பிரதேசங்களிலுள்ளவர்கள் ஆங்காங்கே கூட்டங் கூட்டமாகச் சேர்ந்து எங்களை உத்தரிக்க தாங்கள் வேண்டுவதில்லை என ஆயிரம், பதினாயிரம், லக்ஷம் கையெழுத்திட்ட அறிக்கைப் பத்திரங்களையும் அப்பெரியார் முன் சமர்ப்பிக்கப்பட்டும் வந்திருக்கிறது.

இது மட்டுமல்ல இன்னும் இப்பெரியாருக்கு இவர் செல்லுமிடங்களிலெல்லாம் பகிஷ்காரங்களும் நிகழுமென்பதற்கு அநேக அறிகுறிகளும் காணப்படுகின்றன.

நம் நாட்டிற்கு இவ்விதமாக அவசியப்பட்டிருக்கிற இப்பெரியார் பின் எதற்காக இங்கெல்லாம் விஜயம் செய்கிறார்? யார் யார் பெயரால் யார் யாரைப் பிழைக்க வைக்கப் பார்க்கிறார்? இவ்வித சுற்றுப் பிரயாணங்களாலும் நிதி திரட்டல், முடிச்சு வாங்கல்களாலும் யாருடைய முன்னேற்றம் விருத்தி? யாருடைய முன்னேற்றம் பாழ்? லாபம் யாருக்கு? நஷ்டம் யாருக்கு? என்பவைகளும் நம் நாட்டு மக்களுக்கு நிலைமைக்கு வேண்டுவது யாது? என்பவைகளைச் சிந்தித்து ஏற்ற வழிகளில் அவரவர்கள் கடமைகளைச் செய்ய முற்பட வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

(புரட்சி தலையங்கம் 04.02.1934)

Pin It