சனாதனம் நல்லது என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து கொண்டு வருகிறது. இன்றைய கால கட்டத்தில் தோழர் திருமாவளவன் மூலமாகத் தான் அந்தச் சொல்லின் ஆபத்து என்ன என்ற விளக்கம் மக்களுக்குத் தெரிகிறது, அவரைப் பாராட்டுகிறேன். இதை என்னவாக சொல்வது என்று நிறைய பேருக்கு குழப்பம் உள்ளது. இந்துத்துவப் பயங்கரவாதம் என்று சொல்லலாம்? சாதாரணமாக திருநீர் பூசிக்கொண்டு யாருடனும் சண்டைக்கு போகாத ஒரு சகோதரருக்கு நம்மை பயங்கரவாதி என்று சொல்கிறார்களோ என்று தோன்றுகிறது. நான்பாட்டிற்கு கோவிலுக்கு போகிறேன், திருநீர்பூசுகிறேன், படையல்போடுகிறேன், கடாவெட்டுகிறேன், என்னைப் போய் ஏன் பயங்கரவாதி என்று சொல்கிறீர்கள், என்று அவர் கேட்டால் உன்னைச் சொல்லவில்லை என்று சொல்ல வேண்டி இருக்கிறது. காவி பயங்கரவாதம் என்றாலும் காவி என்பது எல்லாமே பயங்கரவாதம் கிடையாது. வள்ளலாரும் காவியும் வெள்ளுடையும் தான் அணிந்தார். "செங்கல்பொடிக் கூரை வெண் பல் தவத்தவர்" என்று ஆண்டாள் பாடினார், (கூரை என்றால் ஆடையைக் குறிக்கும்) காவி என்பது செங்கல் பொடி போன்ற நிறம்; ஆரஞ்சு நிறம் போன்று இருக்காது, நம்ம ஊரு காவி செங்கல்பொடி போன்று அமைதியாதான் இருக்கும். வடநாட்டுக் காவி தான் ஆரஞ்சு பான்டாகலரில் இருக்கும்.

ambedkar 351அதே போன்று நமது உறவினர்கள், நண்பர்கள், எல்லாரும் பக்தியானவர்கள், அவர்கள் பயங்கரவாதிகள் கிடையாது. அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுப்பவர்கள் கிடையாது, அடுத்தவருடைய கோவிலை இடிக்கவேண்டும் என்று சொல்பவர்கள் கிடையாது. அப்படியே என்றோ அப்படிப்பட்ட ஒரு தப்பு நடந்திருப்பதைப் பேசினால், போப்பா, சும்மா பழையதை பேசிக்கொண்டிருக்கிறாய். இன்றைக்கு எல்லோரும் தாயாய்ப் பிள்ளையாய்ப் பழகிக் கொண்டிருக்கிறோம், சேர்ந்து வாழும் வழியைப் பாருங்கள் என்று சொல்பவர்கள் தான் நம்முடைய மக்கள்.

ஆனால், இவர்களிடம் அந்த பயங்கரவாதம் எந்தப் பெயரில் பரப்பப்படுகிறது? நம்மோடு வாழ்கிற மக்கள் மீதான வெறுப்பு எந்தத் தத்துவத்தால் பரப்பப்படுகிறது? என்று பார்த்தால், அதனுடைய உண்மையான பெயர் சனாதனம்.

சனாதனத்தை, தர்மம் என்று ஏன் சொல்கிறீர்கள்? என்று கேட்பர்கள், அதற்குப் பெயர் சனாதன தர்மம் தான், இந்த தர்மம் ஒருவருக்கு சரியானதாக இருக்கும் இன்னொருவருக்கு சரியானதாக இருக்காது. அதுதான் சனாதன தர்மம், தர்மசங்கடம் என்பதற்கு என்ன அர்த்தம், செய்யலாமா? கூடாதா? என்ற குழப்பம் என்று அர்த்தம். தமிழில் தர்மம் என்கிற சொல் இல்லை, தமிழில் தர்மம் என்றால் பிச்சை போடுவது என்பது பொருள். சரியானது என்ற பொருள் இல்லை.

"ஈன்றாள் பசி காண்பானாயினும்; செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை" என்றது திருக்குறள்

பெற்ற தாய் பசியாக இருந்தால் அன்றைய நல்ல மகன்கள் கவலைப்பட்டிருக்கிறார்கள், அம்மாவிற்கு உதவி செய்திருக்கிறார்கள், அம்மா பட்டினி கிடந்து, கூலிவேலை செய்து, சம்பாதித்து வருவதை, ஏம்மா இதுதான் சோறா? என்று சொல்லி தட்டை எடுத்து வீசாமல், அம்மா பசியுடன் இருந்தால், அவரது பசியாறுவதற்காகப் போய் திருடிக் கொண்டு வந்து கொடுத்திருப்பார்கள். அம்மா என்ற சொல் மனதைத் தொடுகிற ஒரு சொல். அந்த அம்மாவிற்காகக் கூட சான்றோர் பழிக்கிற வேலையை நீ செய்யக்கூடாது என்று உரைப்பதற்குப் பெயர் தர்மம் இல்லை, அதன் பெயர் அறம்.

இந்த "அறம் எதற்கும் வளைந்து கொடுக்காது, தமிழில் நியாயத்திற்கான சொல் அறம். சமஸ்கிருதத்தில் தர்மம். அந்த தர்மம் கிருஷ்ணன் மூலமாக வந்து விளையாடும் தந்திரக்காரர்களை அறிவாளி என்று நம்பவைக்கும் உண்மையில் அறிவாளி வேறு தந்திரக்காரர் வேறு. திருடன் என்றால் அவர் அறிவாளி தான். ஆனால் அறிவாளி எல்லாம் திருடன் கிடையாது. நாம் பொதுவாக நினைப்பது என்னவென்றால் நல்லவர் என்றால் அவரை ஏமாற்றலாம் என்று நினைக்கின்றோம். அவர் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருந்தால் ‘என்னது? இவரைப் போய் நல்லவன் என்று நினைத்தேன்” என்பார்கள். அப்பொழுது தான் புரிகிறது ஒருவரை நல்லவர் என்று நினைக்காமல் முட்டாளாக நினைத்திருக்கிறாய். நல்லவரை முட்டாளாகவும் கெட்டவரை அறிவாளியாகவும் நினைத்துக் கொள்கிறோம். இதற்குக் காரணம் என்னவென்றால் உயர்ந்த தலைவர்களாக, வழிகாட்டியாக காட்டப்பட்ட புராணபுருஷர்கள் எல்லாம் இப்படிப்பட்ட தந்திரசாலிகள், கெட்டவர்கள் அவர்கள் பின்பற்றியது தர்மம். அந்த தர்மத்தின் பெயர் வருணாசிரம தருமம், இந்த வர்ணாசிரமதர்மம் என்பது அழியாதது, அதற்கு பெயர் தான் சனாதனதர்மம்.

வருணாசிரமம் என்பது அவர்களது தர்மம், நமக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை சனாதனமும் அவர்களின் தர்மம், அதுவும் நமக்கில்லை. இது இரண்டையும் கொண்டு வந்து நம் தலையில் கட்டும்பொழுது தான் அது பயங்கரவாதம். ஒரு இசுலாமியர் இசுலாமியராக வாழ்வதில் நமக்கு என்ன பிரச்சனை. ஆனால், நீங்களும் இசுலாமியர் தான் அதனால் எங்களைப் போல் மாறுங்கள் என்று சொன்னால் அது பிரச்சனை. உங்கள் உடை வேறு எங்கள் உடை வேறு என்று சொன்னால் அது தப்பில்லை. ஆனால் நீங்களும் இப்படித்தான் உடுத்தவேண்டும் என்பது, நாங்கள் பன்றி சாப்பிடமாட்டோம், எனவே நீங்கள் பன்றியை வெட்டவே கூடாது என்று சொன்னால் அதற்குப் பெயர் பயங்கரவாதம். மக்கள் அதிகமாக வாழும் நாட்டில் அவர்கள் தங்களுக்குச் சட்டமாகக் போட்டுக்கொள்ளலாம். ஆனால், எந்த மக்கள் அதிகமாக வாழும் நாடாக இருந்தாலும், மற்றவர்களுடைய உணவில் கை வைத்தால் அதற்கு பெயர் பயங்கரவாதம். அதனால் தான் அரபுநாடுகளில் கூட இங்கு பன்றிக்கறி விற்கப்படும் என்று போடப்பட்டுள்ளது, அங்கு யார் சாப்பிட்டால் குற்றம் என்றால் இசுலாமியர் சாப்பிட்டால் குற்றம், வெளிநாட்டவர், வெள்ளைக்காரர், இந்தியர் சாப்பிட்டால் குற்றம் கிடையாது.

அதே போல ஒருவர் மாட்டுக்கறி சாப்பிடுவார் என்று சொன்னால் அவர் சாப்பிடுவதை நீங்கள் குற்றம் என்று சொல்லக்கூடாது. சில இடங்களில் சாப்பிடாதவரைப் பார்த்து பரவாயில்லை சாப்பிடுங்கள் என்று சொல்லி விரும்பாத உணவை அவர் தட்டில் போட்டால்தான் குற்றம், அது வன்முறை. அதே போல மாட்டுக்கறி சாப்பிடும் எங்கள் தம்பியைச் சாப்பிடாதே, எனது ஜீவகாருண்யம் பாதிக்கிறது என்று சொன்னால் அது குற்றம். விரும்பாதவரை சாப்பிடச் சொல்வதும் குற்றம். உண்பவரைத் தடுப்பதும் குற்றம். இரண்டும் குற்றம் தானே, ஆனால் இந்த நாட்டில் எந்த குற்றம் நடக்கிறது, சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது, என்று சிந்தியுங்கள்.

எனவே, அரசியல் சட்டம் எல்லாருக்கும் சமவாய்ப்பைக் கொடுத்தாலும் இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதை பறித்துக் கொண்டிருப்பது எது, அது தான் சனாதனதர்மம். அரசியல் சாசனத்தை செயலிழக்கச் செய்கிற சனாதனதர்மத்தை உயர்த்திப் பிடிக்கின்ற தார்மீகர்களின் கையில் ஆட்சி இருக்கிறது.

வரலாற்றை எடுத்துப் பார்த்தீர்களானால் ரிக்வேதத்தில் புருஷ சூக்தம் எனும் பகுதியில் பிரம்மன் எனும் பிரகஸ்பதியின் முகத்திலிருந்து பிராமணன் தோன்றினான், தோளில் இருந்து சத்திரியன் தோன்றினான், தொடையில் இருந்துவைசியன் தோன்றினான், காலில் இருந்து சூத்திரன் தோன்றினான், என்று வர்ணங்களின் தோற்றம் பற்றி கூறப்பட்டுள்ளது. அது வேதத்தின் கடைசிகாலம், அங்கு ஆரம்பித்தது மனுஸ்மிருதியில் சட்ட வடிவமாகிறது. மனுதர்மத்தை தான் நமது மன்னர்கள் காப்பாற்றினார்கள். மன்னர் கேட்கிறார் மந்திரி நம் நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா? மனுநீதி தவறாமல் ஆட்சி நடக்கிறதா? ஆட்சி எப்படி நடக்க வேண்டும்? என்று.

மனுநீதி என்ன சொல்கிறது, யார் யாருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம், யார் படிக்கலாம், யார் படிக்கக்கூடாது, ஒவ்வொரு குடும்பமும் எப்படி நடக்கனும், பெண்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும், என்பதைச் சட்டமாகச் சொல்கிறது. பெற்ற பெண்குழந்தையை வயதுக்கு வருவதற்கு முன்னால் கல்யாணம் செய்து கொடுத்துவிட வேண்டும். கல்யாணம் செய்து கொண்ட பெண் எப்படி நடந்து கொள்ளவேண்டும். ஒரு கணவர் மனைவியை அடித்தால் எப்படி நடந்து கொள்ளவேண்டும், சத்தம் போடக்கூடாது, கத்தி அழக்கூடாது, கணவர் முன்னால் மண்டியிட்டுச் சத்தமின்றி கண்ணீர் மல்கக் கைகளைக் கூப்பி என் கடவுளே உங்களைக் கோபப் படுத்திவிட்டேனே, இனிமேல், இப்படிக் கோபப்படுத்தமாட்டேன் என்று மன்னிப்பு கேட்கவேண்டும், என்றல்லாம் கட்டளையிடுகிறது "மனு தர்மம்" (கூட்டத்தினர் சிரிப்பு)

 இதற்கு பெயர் தான் சனாதனம். இந்த ஆதிக்கத்தை தனக்கு (இது போன்ற கூட்டங்களுக்கு இங்கு வந்திருக்கக்கூடியவர்கள் உங்கள் வீட்டுப் பெண் ஒருவரை அழைத்து வரவேண்டும்), இன்னொருவர் அடிமையாக இருப்பதை ஒருவரைக் கொடுமைப் படுத்துகிற கொடூரத்தை ரசிக்க வைக்கின்ற மனநிலைக்குப் பெயர் தான் சனாதனம். சனாதனதர்மம், "அடிப்பதைப் பற்றி சொன்னபோது உங்களுக்கு சிரிப்பு வந்தது" யார் மேலேயே கோபம், வந்தால் அதன் விளைவாக அள்ளி விடுகிறீர்கள். செந்தமிழ் சொற்பிறப்பு, அகரமுதலியில் இல்லாத சொற்கள் எல்லாம் வரும், அகராதியில் இல்லாத வார்த்தை எல்லாம் வரும், எல்லாம் யாரைப்பற்றி வரும் பெண்களைப் பற்றி வரும். அது உங்களுக்கு நன்றாக இருக்கும், அடி வாங்கும் உங்கள் சகோதரிக்கு நன்றாக இருக்குமா? அடி வாங்கிக் கொண்டிருந்த உங்கள் அம்மாவிற்கு நன்றாக இருக்குமா? இந்த தர்மம் காப்பாற்றப்படட்டும் என்று அவர்கள் சொல்வார்களா? எடுடா விறகு கட்டையை என்று சொல்லமாட்டார்களா? இன்னும் மரியாதையாகக் கூட சொல்வார்கள். இது தான் தர்மம், இதை நம்புங்கள் என்று சொன்னால் அடிவாங்குகிற பெண்ணிற்கு கோபம் எப்படி வருமோ அது போல சாதியில் உங்களைச் சொல்லும் பொழுது வருகிறதா? (கைத் தட்டல்)

பார்ப்பனரல்லாதவர் எல்லோரையும் சூத்திரன் என்று சொல்லும் பொழுது கோபம் வருகிறதா? இந்த இடத்தில் நமக்கு சமூகமாகக் கோபம் வருகிறதல்லவா? அதே கோபம் ஒவ்வொரு படிநிலையில் தனக்கு கீழே ஒருவர் அதற்கு கீழே ஒருவர், அவர்களுக்கும் கீழாக அவரவர் வீட்டுப் பெண்கள் என்று சொல்லிச் சொல்லி மனிதனை மனத்தளவில் கொடூர நோயாளியாக்கிய தர்மத்திற்குப் பெயர் தான் சனாதனதர்மம், அது யாரையும் விட்டு வைக்காது. நம்மைப் பொறுத்தவரை பார்ப்பான் என்றால் சாமி. சாமிக்கே அவர்தான் சாமி. வக்கீல்சார், குமாஸ்தா சாமி. ஓட்டல் மேனேஜரை யோவ் என அழைப்பதும் சர்வரை சாமி என அழைப்பதும் நடந்து வருகிறது.

நமக்கு தான் அப்படியே தவிர அவர்களுக்குள்ளும் பேதம் இருக்கிறது. அதில் புரோகிதர் இருக்கிறார் - அவர் கோவிலில் இருப்பார், வாத்தியார்கள் இருக்கிறார்கள்- அவர்கள் சடங்குகள் செய்கிறார்கள். இதைத் தாண்டி சவுண்டி என்கிற சமூகம் இருக்கிறது- அவர்கள் பிணம் தூக்குபவர்கள், கேள்விப்பட்டதுண்டா? அந்த சவுண்டிகள் எங்கிருந்து வருகிறார்கள்? வேறு சாதிக்காரர்களா? கலப்புத் திருமணம் செய்தவர்களா? பார்ப்பனர்களிலேயே ஏழ்மையினால் அங்கு போனவர்கள் ஒரு கிலோ நெய், வாங்கச் சிரமப்படும் 65,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஏழைகள் அல்ல. 10 சதவிகித ஏழைகள் இல்லை. மிகக்கொடூரமான முறையில் ஒதுக்கப்பட்டு சுடுகாட்டிற்கு அருகில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். பார்ப்பனர் வீடுகளில் பிணம் சுமப்பவர்கள் அவர்கள் சாப்பிடும் சாப்பாடு சவுண்டி சாப்பாடு, அவர்களும் வேறு நபர்கள் வீட்டில் சாப்பிட மாட்டார்கள். பார்ப்பனர் வீட்டில் தான் சாப்பிடுவார்கள், அங்கு நிற்பவர்களில் பல பேர் சொந்தக்காரர்களாக இருப்பார்கள். அந்தப் பையனுடன் வளர்ந்தவர்களாக இருப்பார்கள், அந்த வீட்டில் போய் சவுண்டி சாப்பாடு சாப்பிடுவதற்கு அந்த இளைஞர்கள் படுகின்ற வேதனை மிகக்கொடுமை.

யாராவது சொந்த சாதியில் ஒரு வெட்டியான் சாதியை வைத்திருப்பார்களா? ஏன் அப்படி இருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இந்த சனாதனம் என்கின்ற மனநிலை அதை உருவாக்கும். உயர் சாதிக்காரர்கள் தனது வேலை என்று திறந்தவெளி எல்லாமே கீழ் எதையுமே செய்யக்கூடாது, ஏன் இந்தியாவில் கழிவறை கட்டுகிறோம், தண்ணீர் வைக்கிறோம். ஆனால்கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா? எங்காவது குறிப்பாகப் பெண்களால் பப்ளிக் டாய்லெட்டுக்கு போகமுடியுமா? ஆண்களுக்கு திறந்தவெளி எல்லாமே டாய்லெட்டுதான். கழிப்பறைகளில் தண்ணீர் இருந்தால் கூட ஏன் சுத்தமாக இல்லையென்றால், தன்னுடைய மலத்தைக் கூட சுத்தம் செய்வது என்வேலை இல்லை அதற்கு ஒரு ஜாதி இருக்கிறது என்று பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. நம் வீட்டில் இருக்கும் கழிப்பறையைக் கூட சுத்தம் செய்வதற்கு வேறு ஒருவர் வருவார் என்று உடல் உழைப்பை ஜாதியாக்கி மனிதர்களை கேவலப்படுத்திய அந்த சனாதனம்தான் இன்றைக்கு இந்தியாவில் பல்வேறு வகையில் ஏராளமான பொருட் செலவில் வளர்க்கப்படுகிறது. இந்த அடிப்படையை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

முடிவுரையில் சொல்ல நினைப்பது என்னவென்றால் இன்றைக்கு இருக்கும் அரசியல் சாசனம் பல்வேறு சிக்கல்களை உடையது என்பது உண்மைதான். ஆனால் இந்த சிக்கல்களோடு இந்த அரசியல் சாசனத்தை கொண்டு வருவதற்குத்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பாடுபட்டார். இரண்டாவதாக காந்தியையும் கான்ஸ்டிடியூஷனையும் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்க்க வேண்டும். காந்தி இந்தியாவின் தேசிய இயக்கத்தின் தலைவர் ஆனால் அவர் பட்டியலின மக்களின் பிரச்சனையை எப்படிப் பார்த்தார், அவரை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எப்படி எதிர்கொண்டார், இந்த வரலாற்றை எழுதினால் காந்தியினுடைய வாழ்க்கை நமக்கு உவப்பாக இருக்காது. ஆனால் இன்றைய இந்தியா கோட்சேக்களை கும்பிடுகிறவர்களால் நடத்தப்படுகிறது. கோட்சேவினுடைய அஸ்தியை பாதுகாக்கின்றவர்களுடைய ஆட்சியாக இருக்கிறது.

இந்த கோட்சேக்களின் கும்பலில் காந்தி வேறு மாதிரியான மரியாதைக்குரியவர். மதச்சார்பின்மைக்காக அவர் நம்பிய கருத்திற்காக கொல்லப்பட்ட மாமனிதர். கொல்லப்பட்ட காந்தியின் மீது கொண்ட மரியாதையால் தான் காந்திதேசம் என்று இந்த நாட்டிற்கு பெயர் வைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார். அப்படித்தான் இந்திய அரசியல் சாசனமும் பல குறைகளை உடையது தான். அதை நானே கொளுத்துவேன் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னார், ஆனாலும் இந்தியாவில் இன்றைக்கு வரை நாம் இந்த அளவிற்காகவாவது உரிமையுடன் இருப்பதற்கு காரணம் அவர் உருவாக்கிய அரசியல் சாசனம் தான். இன்றைக்கு அதை ஒழிக்க வேண்டும், என்று சொல்பவர்கள், அதாவது சனாதனிகள் அன்றைக்கே அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னார் என்பதாகச் சொல்ல வருகிறார்கள். அரசியல் சாசனங்களை ஒழித்துவிட்டு எதைக் கொண்டு வரபோகிறீர்கள் என்றுகேட்டால், இருபது ஆண்டுகளூக்கு முன்பு தி ஏசியன் ஏஜ் என்கிற ஆங்கிலப் பத்திரிகையில் தி டிராப்ட் கான்ஸ்டிடியூஷன் ஆப் ஆர்.எஸ்.எஸ். (The Draft Constitution of RSS) என்று இரண்டு பக்க செய்தி வெளிவந்தது, அதில் என்ன சொல்லப்பட்டதென்றால், ஆர்.எஸ்.எஸ். ஏற்கனவே தனது அரசியல் சாசனத்துடன் தயாராக இருக்கிறது. அந்த கான்ஸ்டிடியூஷன்-படி இந்த நாடாளுமன்றத்திற்கு மரியாதை கிடையாது. நாட்டை ஆளப் போவது குருசபா என்று அன்றைக்கே எழுதி வைத்திருக்கிறார்கள். இன்று நாட்டை ஆள்வது யார்? ஆர்.எஸ்.எஸ்-ன் குருசபை நாட்டை ஆள்கிறது. அவர்கள் தான் அரசை நடத்துகிறார்கள். ஏன் பிரதமர் நாடாளுமன்றம் நடக்கும் பொழுது வெளிநாட்டிற்கு போகிறார்? ஏன் உடனே திரும்புவதில்லை?

வழி தெரியாமலா? ரிடர்ன் டிக்கெட்டை விட்டுவிட்டாரா? நாடாளுமன்றத்தின் மீது அவர்களுக்கு மரியாதை இல்லை. நாடாளுமன்றத்தை அவர்கள் மதிக்கவில்லை, எங்களுக்கு நாடாளுமன்றம் தேவையில்லை. எங்களுடைய சட்டம் வேறு ஆர்.எஸ்.எஸ்.இன் திட்டத்தைப் பற்றி அன்றைக்கு அந்தப் பத்திரிக்கையில் எழுதியதை இன்றைக்கு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குறிக்கோளை நோக்கிப் போவதற்கு நமது அரசியல் சாசனத்தை குறைபாடுடையது, என்றும் அதை அண்ணல் அம்பேத்கர் அவர்களே எதிர்த்தார் திரும்ப திரும்பச் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட இடத்தில் தான் நாம், ஜனகனமன என்று புரிகிறதோ இல்லையோ அது தான் தேசியகீதம் என்கிறோம். அது எப்பொழுது நல்ல தேசியகீதமாக தோன்றுகிறது என்றால் வந்தேமாதரம் பாடு என்று சொல்லும் பொழுது, எங்களுக்கு ஒரே தேசியகீதம் அது ஜனகனமனதான், என்கிறோம் அல்லவா? அதே போல் இன்றைக்கு இந்திய அரசியல் சாசனத்தை அழிக்க நினைக்கின்ற சனாதனத்தை, ஒழிக்க நமது அரசியல் சாசனத்தைக் காக்க வேண்டும்.

ஆகவே சனாதனப் பயங்கரவாதத்தைந் புரிந்து கொள்வதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக இந்த கருத்தரங்கை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். இந்த வாய்ப்பை அளித்ததற்காக விடுதலைச் சிறுத்தைகளுக்கு நன்றி கூறுகிறேன், வணக்கம்.

(11.01.2019 அன்று சென்னை அடையாறு திருவாவடுதுறை ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சனாதன பயங்கரவாதம் எதிர்ப்புக் கூட்டத்தில் பேசியது)

Pin It