‘இனவியல்: ஆரியர்-திராவிடர்--தமிழர்' கட்டுரைக்கு எதிர்வினையாக ‘புராணங்கள் வரலாறாகுமா?’ என்ற கேள்வியை புலவர் க.முருகேசன் எழுப்பியிருந்தார் (தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், மே1--15,2011). புரா ணங்கள் உறுதியாக வரலாறில்லை.ஆனால் புராணங்களின் அடிப்படையில் தவறான கோட்பாடுகள் இதற்கு முன்னரே கட்ட பட்டிருந்தால், அப்புராணங்களை குறுக்கு வெட்டு நெடுக்கு வெட்டு செய்து, அக்கு அக்காகப் பிரித்து ஆய்வு செய்ய வேண்டியது ஒரு வரலாற்றாளனின் கடமை.

பல்லவர் வரலாற்றை பாகவத புராணத்திலிருந்து தொடங்குவதாகவும், மனுவை முன்னிறுத்துவதாகவும் கடிதத்தில் புலவர் க.முருகேசன் குறைபட்டிருக்கிறார். இனவியல் கட்டுரை மனுதர்ம நூலையும் பாகவத புராணத்தையும் தோண்டித் துருவி பார்ப் பதற்கு என்ன காரணம்? தென்னிந்திய மக்களைக் குறிக்க 'திராவிடர்' என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் இராபர்ட் கால்டுவெல்(1856). கால்டுவெல் அந்த சொல்லை முறையாகப் புரிந்து கொள்ளவில்லை. குறைப் புரிதலின் காரணமாக தவறான பொருளில் பயன்படுத்தி விட்டார். அதை இனவியல் கட்டுரைத் தொடர் விளக்கி யிருக்கிறது.

’திராவிடர்’ என்ற சொல்லைக் கால்டுவெல் எங்கிருந்து பெற்றார்? அந்த சொல் கால்டு வெல்லின் கண்டுபிடிப்பா? 'திராவிடர்' என்ற சொல்லை அவருக்கு வழங்கிய அந்த மூல ஆவணம் எது?

’திராவிட' என்ற சொல் ‘தமிழ’ என்ற சொல்லிலிருந்துதான் வந்திருக்க முடியும் என்பதையும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கூட ‘திரமிள’ என்ற சொல் தமிழகத்தை சுட்டப் பயன்பட்டிருப்பதையும் இனவியல் கட்டுரை (இயல்06) சுட்டிக் காட்டியிருக்கிறது.

ஆனால் இதே சொல், பின்னர், சேர,சோழ, பாண்டியர் அல்லாத ஒரு அரசக்குடியினரைக் குறிக்கும் சொல்லாக சமஸ்கிருத இலக்கியங் களில் வருகிறது. இச்சொல் ஓர் அரசக்குடியி னரை அல்லது ஒரு கூட்டத்தாரைக் குறிக்கும் சொல்லாக கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் மாறிப்போனது. இக்கூட்டத்தாரைக் குறித்து வந்த ‘திராவிடர்’ என்ற சொல்லைத் தான் எடுத்துக் கொண்டு அதை தென்னிந்திய மக்களைக் குறிக்கும் இனப்பெயராகக் கால்டு வேல் பயன்படுத்தியிருக்கிறார்.

மனுஸ்மிருதியிலும், பாகவதப் புராணத் திலும், ‘’திராவிடர்’ என்ற சொல்வருகிறது என்று கூறி புராணத்தைச் சான்றாக ஏற்றவர் கால்டுவெல். ‘’உயர் நிலையிலிருந்து வீழ்ந்து பட்ட சத்திரியர்களை மனுஸ்மிருதி குறிப் பிடுகிறது; அதில் திராவிடர் என்போர் மட்டுமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள், "திராவிடர்" என்ற சொல் தென்னிந்தியக் குடிகள் அனைவரையும் குறிப்பிடும் சொல்லாகவே தோன்றுகிறது’ என்றும் இதே பொருளில் பாகவத புரணத்திலும் சத்ய விரதன் என்பவன் திராவிட தேசத்து அரசன் என்று குறிப்பிட பட்டிருக்கிறது’ என்றும் இராபர்ட் கால்டு வெல் கூறுகிறார் கால்டுவெல்லே கூறுகிறபடி “திராவிடர்” என்ற சொல்லை வழங்கிய மூல ஆவணம் மனுஸ்மிருதியும், பாகவத புராண மும்தான்.

மனுஸ்மிருதியும், பாகவதபுராணமும், வழங்கிய சொல்லை எடுத்துக் கொண்டு அதை ஒட்டு மொத்தத் தென்னிந்திய மக்களுக்கும் இனப் பெயராகச் சூட்டிய கால்டுவெல் குற்றவாளி இல்லை; அச்சொல்லை அப்படியே எவ்வித ஆய்வும் இன்றி ஏற்றுக் கொண்டு கட்சிகள் கட்டிய அரசியல்காரர்கள் குற்றவாளி இல்லை; இந்த அபத்தத்தைச் சுட்டிக்காட்டி, மனுஸ்மிருதியையும், பாகவதபுராணத்தையும் தோண்டித் துருவி ‘திராவிடம்’ என்ற சொல் உண்மையில் எவரைக் குறித்தது என்பதை அம்பலத்துக்குக் கொண்டு வரும் இனவியல் கட்டுரையாளர் தான் குற்றவாளியா?

‘திராவிடர்’ என்ற சொல்லை ஏற்குமுன், மனுவையும் பாகவத புராணத்தையும் எவரும் கேள்விக் குள்ளாக்கவில்லை. இனவியல் கட்டுரை இப்போது கேள்வி எழுப்புகிறது; ஆய்வுக்கு உட்படுத்துகிறது. இது தவறாகுமா? ‘இனவியல்’ கட்டுரைத் தொடர் மனுஸ்மிருதி யையும், பாவகத புராணத்தையும் ‘திராவிடர்’ பற்றிய ஆய்வில் பயன்படுத்தியுள்ளதாகக் குறைபடும் ஆர்வலர்கள், முன் உள்ள கேள்வி இதுதான்: 'உங்களுக்கு திராவிடர் என்ற சொல்லை வழங்கிய மூல ஆவணம் எது?’ (கால்டுவெல் கடன் பெற்றவர்).

மகாபாரதம் போன்ற சமஸ்கிருத இலக்கியங்கள், தென்னிந்தியப் பகுதியில் ‘சேரர், சோழர், பாண்டியர் இவர்களோடு நான்காவ தாக ‘திராவிடர்’ என்ற அரசக்குடியினரையும் குறிப்பிடுகின்றன. சேர, சோழ, பாண்டியர் அல்லாத அந்த அரசக்குடியினர் ‘பல்லவர்கள்’ என்று சான்றுகளின் அடிப்படையிலேயே இனவியல் கட்டுரைத் தொடர் அடையாளம் கண்டது. மற்றபடி, புராண இதிகாசங்கள் பேசும் யுகங்கள், கல்பங்கள், பல கோடி ஆண்டுக் கணக்குகள் இவையெல்லாம் குப்பை என்பது அனைவருக்கும் தெரியும்.

எதிர்வினையாக வெளியிடப்பட்டிருக்கும் கடிதம் பல்லவர்களைத் தமிழர்கள் என்று காட்டுவதில் ஆர்வம் காட்டுகிறது. வரலாற்ற றிஞர் இராசமாணிக்கனார் “மகேந்திர வர்மன், இரண்டாம் நந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன், அபராஜித வர்மன், இவர்களே தமிழ் அறிவு பெற்றிருந்தனர்” என்பது கல்வெட்டுகளிலிருந்து தெரிவதாகக் கூறுகிறார் என்று இனவியல் கட்டுரை எடுத்துக் காட்டியிருந்தது. கட் டுரைக்கு எதிர்வினையாற்றிய புலவர் க.முரு கேசன் “பல்லவர்களின் மொழி தமிழல்ல, அவர்கள் பிறமொழியாளர்கள் என்று தன் வாதத்துக்கு வலுச் சேர்க்க முயல்கிறார் செயராமன்” என்றும், இதன் பொருள் “தமிழ்ப் புலமை பெற்றிருந்தனர் என்பதாகும்” என்றும் குறிப்பிட்டிருந்தார். உண்மையில், பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் என்ற வாதத்தை வலுவாக வைத்தவர் இராசமாணிக்கனார். அவர் இவ்வாறு பதிவு செய்கிறார்.

“பல்லவர் வடவர் ஆதலின் அவர் பட்டயங்கள் எல்லாம் வடமொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. ”(பல்லவர் வரலாறு(2000), பக். 306).

“சங்க காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளங்கிள்ளி, இளந்திரையன் என்பார்க் கும், சிவஸ்கந்த வர்மன், புத்த வர்மன், வீரகூர்ச்ச வர்மன் என்பார்க்கும் தொடர்பு ஏதும் இருந்திருத்தல் இயலாது என்பதைச் சிறிதளவு அறிவுடையாரும் தெளிவுறத் தெறிதல் கூடும் அன்றோ? மேலும் பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராக்ருத மொழியிலும் பெரும் பாலானவை வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் சோழர் மரபினர் ஆயின், இளந்தி ரையன் வழி வந்தவர் ஆயின் தமிழில் எழுதாது, தமிழ் மக்கட்கே புரியாத வடநாட்டு மொழிகளில் எழுதத் துணிந்திருப்பரோ?” (மேலது, பக். 28)

பல்லவர்கள் தங்கள் பட்டயங்களில் தாங்கள் பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று பதிவு செய்துள்ளனர். சில பட்டயங்களில் “பிரம்ம-சத்திரியர்கள்” என்று விவரித்துள்ளனர். இது அவர்களுடைய வாக்குமூலம். பல்லவர்கள் தமிழர்கள் என்று நிறுவ எவர் விரும்பினாலும், அவர்கள் ‘பரத்வாஜ கோத்திரத்தார் அல்லர்’ என்று முதலில் நிறுவியாக வேண்டும்; அது ஒரு காலத்திலும் நடவாது.

பல்லவர் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்கள் பலரை  புலவர் க.முருகேசன் பட்டியலிட்டு, இவ்வாறு குறிப்பிடு கிறார். “இவர்களில் யாரும் பல்லவர்கள் பார்ப் பனர்கள் என்றோ அவர்கள் ஆண்டநாடு திராவிடதேசம் என்றோ குறிப்பிடவில்லை”.

பல்லவர் வரலாற்றை ஆய்வு செய்த பட்டியலில் கண்ட அனைவரும் சிறந்த வரலாற்றறிஞர்கள் தாம். ஆனால், ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் அவர்கள் காணத் தவறியவை உண்டு. இதுவரைக் காணத் தவறிய ஒன்றை அடுத்து வரும் ஆய்வாளர்கள் காணக் கூடாது என்பது இல்லை. இதுவரை பயன்படுத்தப்பட்ட ஆவணங்களையும், தரவு களையும் மறு ஆய்வுக்கு உட்படுத்துவதும், இதுவரைக் காணத் தவறியவற்றை வெளிச் சத்துக்குக் கொண்டு வருவதும், ஆய்வில் அக்கறை காட்டும் ஒருவரின் தலையான பணி அல்லவா?

Comments

4 comments

4
durai ilamurugu
1 சிலர் களப்பிரர்காலத்தில் கல்வெட்டு ப்ராகிருதமொழியிலிருந்தது பல்லவர்காலத்து கல்வெட்டும் செப்பேடுகளும் வடமொழியில் இருந்தன சோழர்கள் காலத்தில் தான் செப்பேடுகள் முழுதும் தமிழிலில் எழுதப்பட்டன என்று சாதித்து வருகின்றனர் அவர்களுக்கு நமது பதில்
• 1 களப்பிரர்கள் தமிழர்கள் அல்லர் கருனாடக இனத்தைச் சேர்ந்தவர்களாயிருக்கலாம் என்று ஊகிக்கப்,படுகிறது அவர்கள் வேற்று மொழியில் ஆனால் தங்களுடைய தாய் மொழியில் அல்லது தம்முடைய சமய மொழியாகிய பாலியில் / பிராகிரத மொழியில் கல்வெட்டுகள் செய்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. களப்பிரர்கள் புத்த , சமண சமயத்தை சர்ந்தவர்கள் ஆனாலும் தமிழுக்கும் தொண்டாற்றி இருக்கிறார்கள் காண்க களப்பிரர் காலமும, வரலாறும் ஆசிரியர்அ.சவரிமுத்து எம். ஏ அன்னைப்பதிப்பகம் திருச்சி
• பல்லவர்கள் தமிழர்கள் இல்லை சிலர் அவர்கள் திராவிடர்கள் என்று சொல்லுகின்றனர் சிலர் அவர்கள் ஆரியர்கள் என்று அழைக்கின்றனர் எப்படி இருந்தாலும் அவர்கள் தமிழர்கள் இல்லை ஆனால் தமிழுக்கும் தமிழ் நாட்டின் சிற்பக்கலைக்கும் அவர்கள் செய்த தொண்டு மிகவும் பெரியது கடல் மல்லை சிற்பங்கள் போல இனி ஒருவர் செய்ய இயலுமோ? தமிழ் நாட்டில் முதல் முதலில் கற்களைக் கொண்டு கோவில்களும் குடவரைக் கோவில்களும் அமைததவர்கள் பல்லவர்களும் அவர்களுக்கு கீழ் குறுநில மன்னர்களாய் இருந்த முத்தரையர்களும் ஆகும் .அதற்கு முன் கட்டப்பட்ட கோவிலகள் எல்லம் செங்கலால் கட்டப்பட்டவையே. பல்லவ மன்னன் ராசசிம்மன் கட்டிய காஞ்சி நகரத்து கைலாச நாதர் கோவிலின் பெரிய வடிவமே தஞ்சைப்,பெரிய கோவிலாகும். ராசராசசோழன் தன்னுடைய கல்வெட்டில் கச்சி நகரத்து பெரிய கற்றளி என்று வியந்து பாராட்டி உள்ளான் விமான அமைப்பும் .கருவறைக்குள் சாந்தார அறை என்பது எல்லாம் பல்லவர்கள் தான் முதலில் செய்தனர் ராசராசசோழன் அதைப் பெரிதாகவும் விரிவாகவும் செய்தான் ஆனால் பல்லவர் காலத்தில் உள்ள உதயேந்திரம் செப்பேடு வடமொழியில் இருக்கிறது எனவே பல்லவர் தமிழ் எதிரிகள் என்று சில தமிழ் முனைவர்கள் மல்லுகட்டுகின்றனர். பல்லவன் தன்னுடைய தாய் மொழியில் செப்பேடு செய்தான் என்றே வைத்துக் கொள்வோம் நம்முடைய கேள்வி தூய தமிழனாகிய ராசராசசோழன் வகையறாக்கள் பாதி தமிழ் பாதி வட மொழி என்று செப்பேடுகள் படைத்தது ஏன்? அவர்கள் செப்பேடுகளில் வடமொழி சரிபாதி உள்ளது ஏன்? அது செல்க சோழர் செப்பேடுகளில் உள்ள பதிவுகளில் பாதி அளவு வடமொழியில் உள்ளது என்பதையே இம் முனைவர்கள் மறைப்பது ஏன்? ஆய்வில் நேர்மை வேண்டாமா? [.
• கல்வெட்டு மொழிகள் பற்றிய சில உண்மைகளைப் பார்ப்போம்
• 1 தமிழகத்தில் சங்ககால செப்பேடுகள் { கி மு முதல் நூற்றண்டு - கி பி 3ஆம் நூற்றாண்டு வரை உள்ள செப்பேடுகள் ஏதும் கிடைக்கவில்லை
• 2தொடக்க கால பல்லவர் செப்பேடுகள் [ கி பி 3 - 5 ஆம் நூற்றாண்டு வரை உள்ள செப்பேடுகள்} பிராகிருத மொழியில் உள்ளவை

• 3 6ஆம் நூற்றாண்டுக்குப்,பின்னர் செப்பேடுகள் தமிழ் மொழியிலும் வடமொழியிலும் எழுதப் பட்டன இவையும் பல்லவர் காலத்தைச் சேர்ந்தவையே ஆகும். இரட்டை மொழிச் செப்பேடுகள் BILINGUALஎன்று அழைக்கப்படும் இவை பல்லவர் காலத்தில்தான் முதலில் எழுதப்,பட்டன . பள்ளன் கோவில் கல்வெட்டு என்று அழைகப்படும்சிம்ம விஸ்ணு காலச் செப்பேடுகள் தான் முதல் இரட்டை மொழி செப்பேடுகள் ஆகும். ஆக முதலில் தமிழிலிலும் செப்பேடுகள் பதிவு செய்தவர்கள் பல்லவர்கள் ஆகும் இநத உண்மையை மறைத்து விட்டு பல்லவன் வடமொழியில் எழுதினான் சோழன் தான் தமிழிலில் எழுதினான் என்று உரைப்பது நேர்மையான ஆய்வு ஆகுமா? பாண்டியர்கள் கதையைப்பார்ப்போம் தமிழ் வளர்த்த பாண்டியர்கள் செப்பேடுகள் எந்த மொழியில் உள்ளன?கிபி 7ஆம் நூற்றாண்டை செர்ந்த நெடுமாறன் [ மாறவர்மன் அரிகேசரி] செப்பேடுகள் சிலவரிகள் வடமொழியிலும் பலவரிகள்தமிழ் வட்டெழுத்திலும் உள்ளன. ஆகவே பாண்டியர்களும் வடமொழியையும் தமிழையும் சேர்த்து பயன்படுத்தியே செப்பேடுகள் செய்திருகின்றனர் தமிழ் மன்னர்களின் வட மொழி மோகம் அலாதியானது. இதில் பல்லவர்களை மட்டும் குற்றம் சொல்ல ஒன்றும் இல்லை
.

2அரசவைசெயல் பாடுகளில் தமிழ் எவ்விதம் இருந்த்து என்பதைக் காண்போம் சோழர்கள் தமிழர்கள் எனவே அரசின் வாய் மொழி செயல்பாடுகள் அனைத்தும் தமிழில் நடைபெற்றிருக்கும் என்று நம்பலாம் அவற்றை பதிவு செய்வது என்பது வடமொழி ,தமிழ் என்று இரண்டு மொழிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன [இப்பொழுது தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி மொழி என்ற பொழுதும் அரசு ஆணைகள் சில தமிழிலும் பல ஆங்கிலத்திலும் வருவதுபோல ] கல்வெட்டுகளில் வட்மொழி கலந்த தமிழே பயன் படுத்தப்பட்டு வந்திருக்கிறது சிலகல்வெட்டுகள் முழுவதும் வடமொழியிலேயே அமைந்துள்ளன. கல்வெட்டுகளை விடவும் அதிக சிறப்பும் நம்பகத்தனமையும் உள்ளவை செப்பேடுகள் ஆகும். இவை அரச முத்திரை இட்ப்பட்டு கம்பிகளில் கோர்க்கப்பட்டுக் காணப்படுகின்றன. இந்த செப்பேடுகளில் சரி பாதிக்குமேல் வடமொழியில் எழுதப்படும். தமிலும் சில வார்த்தைகள் எழுதப்படும் எ.கா திருவாலங்க்காட்டு செப்பேடு முதலாம் ராசேந்திரன் காலத்தைச்சேர்ந்த்து என்று கருதப்படுகிறது இதில்,பெரும்பகுதி வடமொழியில் உள்ளது ஆனைமங்களச் செப்பேடு ராசர்ராசன் காலத்தைசேர்ந்தது இதிலும் சரிபாதி வடமொழியில்காணப்படுகிறது இவை எல்லாம் வரலாற்று ஆவணங்கள் அக்காலத்தில் மன்னன் அளித்த கொடையும் குறுப்பிடும் ஆவணங்கங்கள் ஆகும.அவற்றை வட் மொழியில் ஏன் எழுதவேண்டும்?தமிழ்ச் சோழர்கள் தமிழ் நாட்டு மக்களுக்கு வீட்டு செல்லும் வரலாற்று ஆவணங்களில் சரிபாதிக்கு மேல் வட மொழியில் எழுத வேண்டிய காரணம் என்ன ? இன்று யாரவது ஆங்கிலம் கல்ந்து தமிழ் பேசினால் அவன் தமிழனா? தமிழனுக்கு பிறந்தவனா? தன்னுடைய தலைப்பு எழுத்தை மட்டும் { இனிசியல் } ஆங்கிலத்தில் போட்டு உள்ளானே? இவன் ஆங்கிலேயனுக்குப்,பிறந்திருப்பான!என்று எல்லாம் நக்கலடிக்கும் தூய தமிழ் வாதிகள் ராசராசன் ஆவியிடம் இதைக்கேட்டு சொல்லவேண்டும். " நாகை.ப்பட்டினத்து புத்தர் கோவிலுக்கு நீங்கள் அளித்த கொடையினை தமிழில் மட்டும் பதிவு செய்யாமல் வடமொழியிலும்பதிவு செய்தது ஏன்? என்று கேட்டு சொல்லுவர்களா? மேலும் ஒரு செய்தி தமிழிலில் பதிவுசெய்யப்பட்ட செய்திகளும் வடமொழியில் பதிவு செய்யப்,பட்ட செய்திகளும் ஒரே மாதிரி இருக்குமென்று உறுதி இல்லை அன்பில் செப்பெடுகள் தொடங்கி அண்மையில் திரு இந்தளூரில் கண்டுப்டிக்கப்,பட்ட செப்பேடுகள் வரை இந்த நிலைதான் வடமொழி பகுதிமிகுதியாகவும் புராணக் கதைகள் மிகுந்தும் காணப்படும் அதாவது கடவுள் ,மன்னை வாழத்தும் பகுதிகள் வடமொழியில்!ஒருவேலை இவற்றைத் தமிழில் பதிவு செய்தால் கடவுள் தீட்டுப்பட்டுப,போய்விடுவர் என்ற அச்சமிருந்திருக்குமோ என்ன்வோ? தமிழ் நீச பாடை வடமொழி தேவ பாடை என்று பார்னப்பக் குருக்கள அப்பொழுதே ஓத ஆரம்பித்து வீட்டனரா? முனைர்வகள்தான், சோழனுக்கு காவடித்தூக்கும் முனைவர்கள் தான், விளக்க் வேண்டும் தமிழப்பகுதி தானம் கொடுக்கப்பட்ட நிலத்தின் அளவுகளை ம்ட்டும் சுட்டி நிற்கும் இதுதான் சோழர்களின் தமிழ்த் தொண்டு ! இதைக் கொண்டாடத்தான் தமிழ் நாட்டு மக்களின் வரிப்,பணத்தில் அரசு விழா ஆடம்பர நாட்டியம், பொழுது போக்குக் கூத்து! இவை எல்லாம் தமிழின் பேரில் இதுதான் தமிழின் , தமிழனின் தலை விதிபோலும்.
பரிமள ராசன்
"‘திராவிடர்’ என்பதன் உள்ளடக்கத்தைப் பாருங்கள்! அகராதியில் பொருள் தேடாதீர்!"- தலைவர் கொளத்தூர் தா.செ.மணி.
‘திராவிடர்’ என்ற சொல்லுக்கு, ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்போருக்கு பதிலளித்து மயிலாடு துறை கழகக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார்.

11.3.2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு மயிலாடுதுறை சின்னகடைவீதியில் கழகம் சார்பாக தமிழர்களை சுரண்டும் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இர.ரசீத்கான் தலைமையில் நடைபெற்ற இப் பொதுக் கூட்டம், சமர் பா. குமரனின் இன எழுச்சிப் பாடல்களோடு துவங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழர் உரிமை மீட்பு இயக்கம் இரா. முரளிதரன், சுப்பு மகேசு, ம.தி.மு.க. நகரச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.

பெரியாரின் கொள்கைகளை, அந்தந்த கால கட்டத்தின் தேவையை கருதி நாம் பல்வேறு போராட்டங்களை, பரப்புரைகளை நடத்தி வருகிறோம். பெரியார் தொடக்கக் காலத்தில் சாதி ஒழிப்பை முதன்மை இலக்காகக் கொண்டிருந்தார். 1926 முதல் பெண் விடுதலையைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார். 1928 இல் இருந்து பொது வுடைமை கொள்கைகளையும் இணைத்துக் கொள்கிறார். இதன் வளர்ச்சிப் போக்கில் 1938 ஆம் ஆண்டில் ‘தனித்தமிழ்நாடு’ என்ற முடிவுக்கு வருகிறார். (சாதி பேதமற்ற, பாலியல் பேதமற்ற, பொருளாதார பேதமற்ற சமுதாயத்தை அமைக்க வேண்டுமென்றால் அதற்கு தனித் தமிழ்நாடு தான் தீர்வு என முடிவு செய்கிறார்) இப்படிப்பட்ட கருத்துகளைக் கொண்ட பெரியாரியலை மக்கள் முன்னாள் எடுத்துச் செல்கின்ற நாங்கள், அதனுடைய ஒரு பகுதியாகத்தான், தமிழர்களை சுரண்டும் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளை விளக்கப் பரப்புரையை செய்து வருகிறோம் என்று உரையைத் தொடங்கிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இடஒதுக்கீடு சிக்கல்கள் பற்றியும், இன்று தீண்டாமை ஒழிப்புச் சட்டங்கள் பல இருந்தாலும், அவைகளெல்லாம் நடைமுறைபடுத்தாமல் இருப்பது பற்றியும், ஏன் பழங்குடி மக்கள் எல்லாம் தாக்கப்படுகிறார்கள் என்றால், அவரவர்கள் தங்களுக்கு தேவையான வற்றை தாங்களே உற்பத்தி செய்து கொள்வதை தடுக்க வேண்டும். எல்லோரும் வணிக நிறுவனத்தை நம்பித்தான் இருக்க வேண்டும் என்றச் சூழலை உருவாக்குவதற்காக பழங்குடி மக்கள் எல்லாம் தாக்கப்படுகிறார்கள். இடப்பெயர்வுக்கு ஆளாக்கப் படுகிறார்கள் என்றும் பச்சைவேட்டை பற்றியும் விரிவாக பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர்... “பரப்புரைக் கூட்டங்களில் இந்துமத எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் மட்டுமே இல்லாமல், பொருளியல் சிக்கல்களை பற்றியும் மக்களிடையே விளக்க வேண்டியதும், அதற்கான விழிப்புணர்வை மக்கள் பெற்றிட, இந்திய தேசிய - பன்னாட்டு திட்டங்களுக்கு எதிராக மெல்ல மெல்லவாகிலும், கிளர்ந்து எழ வேண்டும் என்பதை நோக்கமாகவும் கொண்டுதான் இந்த பரப்புரையை நடத்தி வருகிறோம். பெரியார் இறுதியாக நடத்திய மாநாடு தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு... அதோடு இழிவு ஒழிப்புக்காக எடுத்துக் கொண்ட திட்டம்தான் தனித் தமிழ்நாடு பரந்த சந்தை வேண்டும் என்று விரும்புகிற பனியாக்களுக்கு - வியாபார கூட்டத்திற்கு - சொந்த நாடே இல்லாத பார்ப்பனர்களுக்கு - வசதியாகவும் இந்திய தேசியத்தை உருவாக்கிக் கொண்டார்கள்.

ஆனால், நாம் இழிவில் இருந்து விடுபடுவதற் கும், சுரண்டலில் இருந்து விடுபடுவதற்கும் இந்திய தேசியம் தடையாக இருக்கிறது. பார்ப்பன - இந்திய தேசியத்திற்கு எதிராகத்தான் திராவிடர்கள் என்ற அணியை பெரியார் உருவாக்கினார். “திராவிட நாடு வடநாட்டிலிருந்து பிரிந்து, தனியாக இருக்க விரும்பும் காரணம் கூட, இந்து மதத்தால் ஏற்பட்ட இழிவும், ஆரிய ஆதிக்கத்தில் இருக்கும் இழிவும், சுரண்டலும் ஒழிய வேண்டும் என்பதற்கும் ஆகும்” என்ற பெரியாரின் பேச்சு 1945 ஆம் ஆண்டு குடிஅரசில் இருக்கிறது. ஆரியர் திராவிடர் எல்லாம் கலந்து விட்டார்களே எப்படி பிரிப்பீர்கள் என்று அப்போது கேட்டார்கள். பெரியார் சொன்னார்... “அது எனக்கும் தெரியும். நான் இரத்த பரி சோதனை செய்து ஆரியர் - திராவிடர் என பிரிக்க வில்லை. அவர்களுடைய பழக்க வழக்கங்கள், ஆச்சார அனுஸ்டானங்களைப் பார்த்துதான் பிரிக்கிறேன்” என்று கூறினார். சுத்தமான தமிழ் இரத்தம் ஏதாவது கலந்துவிட்டதா என்று இப் போது பல அறிஞர்கள்(?) பிரித்துக் கொண்டிருக் கிறார்கள். பெங்களூரில் கூட ஒரு அறிஞர் இருக்கிறார். இவர் தெலுங்கர், கன்னடர் என்று ஆய்வு அறிக்கை எல்லாம் போடுவார். ஆனால் பெரியார், இனத்தூய்மை பார்த்து யாரையும் பிரிக்கவில்லை. இழிவில் இருந்து விடுபடுவதற்கு, அதற்கு தடையாக இருக்கிற ஒரே மக்கள் கூட்டத்தைத்தான் பிரித்து வைத்தார். இன்னொரு பக்கம் இதற்கு எதிராக பேசியவர்கள் இருந்தார்கள். தமிழ்நாட்டில்கூட ம.பொ.சி. இருந்தார்.

ம.பொ.சி. ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்...

“பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்கு காரணமா னோர் யாரோ, அவர்கள்தான் தமிழ்நாட்டில் தமிழரல்லாதார் ஆதிக்கம் செலுத்த நேர்ந்ததற்கும் காரணம் ஆவார்கள். திராவிட மாயையில் இருந்து விடுபட்டதாக கூறிக்கொண்டு (?) மலையாளிகள் ஆதிக்கத்தை எதிர்த்து புறப்பட்ட பெரியார் ஈ.வெ.ரா. முதலில் பிராமணர் - பிராமணரல்லாதார் கூச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும். அப்போது தான் தமிழர் அல்லாதாரின் ஆதிக்கத்தை எதிர்த்து தமிழர் வாழ்வு பெற முடியும்” என்று ம.பொ.சி. எழுதினார்.

ஆனால், பெரியார் இதில் மாறுபட்டார். யாரை இணைத்துக் கொண்டார், யாரை விலக்கி வைத்தார் என்பதுதான். பெரியாருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு திராவிடர் என்பதன் உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, அகராதியில் பொருள் தேடக் கூடாது. அகராதியில் பார்க்கும் போது பலவற்றை தவறாக புரிந்து கொள்ள நேரிடும். எனது சிறுவயதில் நாங்கள் ஒரு நாடகம் நடத்தினோம். ஒருவர் ஆங்கிலத்தில் சொல்வார். அதை நான் தமிழில் மொழி பெயர்ப்பேன்... “லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்பார். அதற்கு நான் “பெண்களே சாதுவான ஆண்களே” என்று மொழி பெயர்ப் பேன். “ஐ ஏம் கம்மிங் ப்ரம் கிரீன்லேண்ட்”என்பார். “நான் பச்சை நிலத்திலிருந்து வருகிறேன்” என்று மொழி பெயர்ப்பேன். “டூ யூ அண்டர்ஸ்டேண்ட்” என்பார். அதற்கு நான், “நீ அடியில் நிற்கிறாயா” என்பேன். “வெண்டைக்காயும் முருங்கைகாயும் சாப்பிடு” என்ற பொருளில், “ஈட் லேடீஸ் பிங்கர் அண்ட் டரம்ஸ்டிக்” என்பார். “பெண்கள் விரல்களையும் தப்பட்டை குச்சிகளையும் சாப்பிடுங்கள்” என்று மொழி பெயர்ப்பேன். அகராதியில் பார்த்தால் தவறாக இப்படித்தான் மொழி பெயர்க்க முடியும்.

“ஆட்டம்” (atom) என்ற சொல்லுக்கு லத்தீனில் பிளக்க முயாதது என்று பொருள். Dalton’s atomic Theoryசொல்கிறது... atom is indivisible (அணு என்பது பிளக்க முடியாதது) என்பதுதான். அப்போது நிலவிய விஞ்ஞான கொள்கை. ஆனால், இப்போது அதை புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என பிரிக்க முடியும் என்பதும், பிளக்கும் போது வெளிப்படும் ஆற்றலில் (அணு சக்தியில்) இருந்து பல்வேறு ஆக்க வேலைகளையும், அழிவு வேலைகளையும் செய்ய முடியும் எனக் கண்டுபிடித்துவிட்டார்கள். அணுவை பிளக்க முடியாது என்று கருதிக் கொண்டிருந்த காலத்தில், பிளக்க முடியாதது என்ற பொருளுள்ள ‘ஆட்டம்’ என்ற சொல்லை மாற்றிவிடவில்லை. பிளக்க முடியும் என தெரிந்த பின்னாலும் ‘ஆட்டம்’ என்பதை மாற்றவில்லை . ஒரு சொல்லில் ஏற்றப் பட்டிருக்கும் உள்ளடக்கம் தான் முக்கியம் அப்படித்தான் பெரியார், திராவிடர் என்ற சொல்லிற்கு ஒரு உள்ளடக்கத்தை கொடுத்துள்ளார்.

மக்களை பலவற்றிற்காக பிரிக்கலாம். பள்ளியில் மாணவர்களை பாட தெரிந்தவர் - பாட தெரியாதவர் என ஆசிரியர் பிரிப்பார் நாடகம் போடு வதற்காக! விளையாட்டு ஆசிரியர், உயரமானவர்கள் - உயரம் குறைந்தவர்கள் எனப் பிரிப்பார் கூடை பந்து விளையாட்டிற்கு! இரண்டு ஆசிரியர்களுக்கும் நோக்கம் வேறு. அதைப் போலதான் பெரியாரின் நோக்கம் இழிவு ஒழிப்பு. அதாவது சாதி ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு பிரிக்கப்பட்ட பிரிவினைதான் ஆரியர் - திராவிடர். அந்த நோக்கம் இல்லாதவர்கள் மொழி வழியாக நாட்டை மட்டும் பிரித்துக் கொண்டால் போதும் என்று கருதுபவர்கள், இந்த மொழி பேசுபவர்கள், வேறு மொழி பேசுகவர்கள் என்று பிரித்துப் பார்க்கிறார்கள். பெரியாருக்கு தமிழர் என்று மொழி வாரியாக அடையாளப்படுத்துவதைவிட, ‘மனிதர்’ என்று எல்லோரையும் சமப்படுத்துவது தான் நோக்கம். இழிவை நீக்குவதற்கு தேவையான அடையாளங்களைப் பார்த்து பிரித்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது காங்கிரஸ்காரர்கள் எல்லாம் சொன்னார்கள்... உன் மொழி வேறு - என் மொழி வேறு. உன் பழக்க வழக்கம் வேறு - என் பழக்க வழக்கம் வேறு. உன் உடை வேறு - என் உடை வேறு. உன் உணவு முறை வேறு - என் உணவு முறை வேறு, உன் கலாச்சாரம் வேறு - என் கலாச்சாரம் வேறு. ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களா எங்களை ஆள்வது? என்று.

இந்திய நாட்டு விடுதலைக்குப் பிறகு ஆறாயிரம் மைல் இரண்டாயிரம் மைல்களாக குறைந்திருப்பதை தவிர மற்றவை எல்லாம் அப்படியே தானே இருக்கிறது என்று பெரியார் கேட்டார். மைல்கள் குறைந்திருக்கிறதே தவிர, கேள்விகள் அப்படியேதான் இருக்கிறது. உன் மொழி வேறு - என் மொழி வேறு. உன் பழக்க வழக்கம் வேறு - என் பழக்க வழக்கம் வேறு. உன் உடை வேறு - என் உடை வேறு. உன் உணவு முறை வேறு - என் உணவு முறை வேறு, உன் கலாச்சாரம் வேறு - என் கலாச்சாரம் வேறு. நமது அடிமைத்தனம் அப்படியே தான் தொடர்கிறது. நமது அடிமைத்தனத்தை, பன்னாட்டுச் சுரண்டல், பன்னாட்டு சுரண்டலுக்கு துணையாக இருக்கிற பார்ப்பனர்கள் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தித்து பார்க்க வேண்டியிருக்கிறது. சாதி அடிமட்டத்தில் இருக்கிற, எந்த மக்களை பெரியார் உயர்த்த வேண்டும் என விரும்பினாரோ, அந்த மக்களை உயர்த்துவதற்கு, அந்த மக்களை பாதுகாப்பதற்கு - அந்த மக்களின் பொருளியல் வளங்களை பேணுவதற்கு - நமக்கான நாட்டை உருவாக்கிக் கொள்வோம். நமக்கான பொருளாதாரத்தை கட்டமைக்க முயல்வோம். அதுவரை இந்த பொருளாதார சுரண்டல்களை - பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளையை தடுப்பதற்கு நாம் இணைந்து நிற்போம்” என்ற வேண்டுகோளோடு உரையை நிறைவு செய்தார்.
Thirumugam V P Devendrar
The origin of Dhiraavidam : Dhiruvidam had been called as Dhiraavidam after a long time from the Tamil Shangam's age. Dhiruvidam means Thiru + Idam = Dhiraavidam. Thiru denotes the highest status and vidam means the highest place. So it words denotes the land of Marutham where the great Mallars Kings Chera, Chola, Pandiya and Pallava were originated. Hence the word Dhiraavidam means MARUTHAM LAND.

Yours faithfully,

V.P.Thirumugam.
aadhi narkudiyaan
தெலுங்கன் தெலுங்கனாய் வாழும்போது:
மலையாலி மலையாலியாய் வாழும்போது;
கன்னடன் கன்னடனாய் வாழும்போது
தமிழன் மட்டும் திராவிடனாய் சாகவேன்டுமா?

தமிழ் கூரும் நல்லுலகில் திராவிடம் என்பது யேது?

தமிழன் திராவிடன் அல்ல
திராவிடன் தமிழன் அல்ல!

தமிழன் தமிழனாகவே இருப்போம்.....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.