‘சிலம்புச் செல்வர்’ என்று செந்தமிழ்நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப்படும் தமிழறிஞர் ம.பொ. சிவஞானம் ஆவார். ‘மயிலாப்பூர் பொன்னு சாமி சிவஞானம்’ ஆகிய இவர் சுருக்கமாக ம.பொ.சி. என்றே எல்லோராலும் அறியப் பட்டார். அன்னாரின் சிலை திறப்பு விழா கடந்த 9.2.2011 அன்று சென்னை தியாகராய நகர் போக் சாலை சந்திப்பில் சிறப்பாக நடைபெற்றது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ம.பொ.சி. சிலையைத் திறந்து வைத்தார். 13.2.2011 அன்று தலைமைச் செயலகத்தில் ம.பொ.சி.யின் குடும்பத்தினரை அழைத்து நிதி உதவியும் வழங்கினார்.
இளமையும் வறுமையும்
1906 சூன் 26இல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதி யில் பிறந்த ம.பொ.சி.யின் குடும்பம் கொடிய வறுமையில் சிக்கித் தவித்தது. பள்ளியில் மூன்றாம் வகுப்பை அடைந்த ம.பொ.சி. பாடப் புத்தகங்கள் வாங்கவும் காசில்லாமல் மூன்று மாதத்தோடு தன் படிப்பை முடித்துக் கொண்டார். பத்து வயது தொடங்கும் முன்பே பத்து ரூபாய் முன்பணம் கிடைக்கும் என்பதற்காகத் தன் பெற்றோரால் வேலைக்கு அனுப்பப்பட்டார்.
“என்னுடைய வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட பெரிய விபத்து ஒன்று உண்டு என்றால், கல்வி பயில வேண்டிய பருவத்தில் பாட்டாளியாக மாறிய கொடுமையாகும்” என்று அவரே உளம்நொந்து கூறியுள்ளார்.
போற்றத்தக்க பொதுவாழ்வு
கட்டடத் தொழிலில் சிற்றாள் வேலை, பீடி சுற்றும் தொழில், நெசவு வேலை எனப் பல இடங்களில் அலைந்த ம.பொ.சி. இறுதியில் அச்சுக் கோக்கும் தொழிலாளி ஆனார். அஃது அவருக்கு வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை தந்தது. அச்சுக் கூடத்தையே கல்விக் கூடமாக மாற்றிக் கொண்டு பற்பல நூல்களை அவர் ஆழமாகக் கற்றுத் தேர்ந்தார். இளங்கோ வடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் எல்லையற்ற ஈடுபாடு காட்டிச் சிலம்புச் செல்வராய் மிளிர்ந்தார். அவருடைய நாவன் மையும் எழுத்துவன்மையும் எல்லோர் மனங்களையும் கொள்ளைக் கொண்டது.
அவர் இந்திய தேசிய அரசியலில் காந்தியாரின் கருத்து களால் கவரப்பட்டார். 1927இல் முறைப்படி காங்கிரசுக் கட்சியில் உறுப்பினரானார். காங்கிரசுக் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று நாடறிந்த முன்னணித் தலைவர் களில் ஒருவரானார். பலமுறை சிறைப்பட்டார்.
தமிழரசுக் கழகம்
காங்கிரசுக் கட்சியில் இருந்துகொண்டே 21.11.1946 அன்று ம.பொ.சி. ‘தமிழரசுக் கழகம்’ என்ற பொது அரசியல் அமைப்பைத் தோற்றுவித்தார். ‘சுதந்தர, சோசலிச, தன்னுரி மைத் தமிழ்க் குடியரசு’ என்பதைத் தன் அமைப்பின் அரசியல் கோட்பாடாக அவர் அறிவித்தார். ‘தமிழகத்தில் தமிழரசு’ என்ற தலைப்பில் அவர் எழுதிய அரசியல் கட்டுரையின் சில பகுதிகள் பின்வருமாறு :
“புதிய தமிழகத்தின் பொருளாதாரக் கொள்கை பொதுவு டைமையேயன்றித் தனிவுடைமை அன்று. இந்தப் பொதுவு டைமை இலட்சியமானது தமிழர் பண்பாட்டின் படியும், தற்கால விஞ்ஞான ரீதியாக வகுக்கப்பட்ட முறைகளின் படியும் நிறைவேற்றப்படும்.
மதவிஷயங்களில் அரசாங்கம் பூரண நடுநிலை வகிக்கும். மனிதனுக்கு மனிதன் உயர்வு தாழ்வு கற்பிக்கும் பழக்கவழக்கங்கள் சட்டப்படி தடுக்கப்படும்...
மேற்சொன்ன வகையில் ஒரு புதிய தமிழகத்தைச் சிருஷ்டிக்கத் தமிழரசு ஒன்றினால் தான் முடியும். அத்தகைய அரசு வேண்டுமென்று முரசு கொட்டுவோம்!” (தமிழ்முரசு, மே 1946)
பொதுவுடைமை இலட்சியம், தமிழர் பண்பாடு, மனிதரி டையே உயர்வு தாழ்வு கற்பிக்கும் தத்துவங்களுக்குத் தடை, மதவிஷயங்களில் நடுநிலை என்றெல்லாம் ம.பொ.சி. பேசி னாலும் இத்தனைக் கொள்கைகளுக்கும் எதிராக இருந்த இராசகோபாலாச்சாரியுடன்தான் அவர் அரசியல் நடத்தினார். அவரைத்தான் தன்னுடைய ஞான குருவாக ஏற்றுக்கொண் டார். தன்னைப் போல் எளிய குடும்ப நிலையும் சமூகப் பின்னணியும் கொண்ட காமராசருக்கு எதிராகவே எப்போதும் களத்தில் நின்றார்.
தமிழ்க் கலாசாரம், தமிழர் பண்பாடு என்று ம.பொ.சி. யால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட எல்லாவற்றையும் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட குல்லுகப் பட்டர் இராசகோபாலாச்சாரி ஆவார். தான் வாழ்ந்த ஒவ்வொரு நொடியையும் பார்ப்பனிய மேலாதிக்கத்தின் நலனுக்காயும், தமிழினத்தின் அழிப்பிற்காயும் செலவிட்ட தன்னிகரற்ற ஆரியப் பார்ப்பனர் அவர்!
அதனால்தான் தந்தை பெரியார் ‘ஆச்சாரியார் தான் பிடித்த முயலுக்கு நான்கு கால் என்றால், மூன்று கால் என்று சொல்லுங்கள். அவர் வடக்கே நடக்கச் சொன்னால் நீங்கள் தெற்கே செல்லுங்கள்’ என்று தமிழர்களுக்கு அறிவுறுத்தினார்.
குலக்கல்வித் திட்டத்திற்கு ஆதரவு
இராசாசியின் வஞ்சக மூளையில் வடிவெடுத்த கொடிய திட்டந்தான் ‘குலக்கல்வித் திட்டம்’ என்பது. ‘பாதி நேரம் படிப்பு, மீதிநேரம் அப்பன் குலத்தொழில்’ என்னும் பச்சை யான மனுதரும நெறிக்குப் பாதை போட்ட ஆச்சாரியாரின் இந்தக் கொடிய கல்வித் திட்டத்தை எதிர்த்துத் தமிழ்நாடே கொந்தளித்து எழுந்தது. வஞ்சகப் பார்ப்பன ஆட்சியை ஒழிக்காமல் தமிழர்க்கு வாழ்வில்லை என்று முடிவோடு வரிப்புலியாய்ச் சீறிப் பாய்ந்தார் பெரியார்.
குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த போது, அந்தக் கல்வித் திட்டத்தை ஆதரித்து ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. ஆச்சாரியாரின் நிலையை அரணிட்டுக் காக்க நாடெங்கும் ஊர்வலங்கள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்தது. தி.க., தி.மு.க. மட்டுமல்ல காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த காமராசரும் குலக்கல்வித் திட்டத்தைக் கண்டித்தார். ம.பொ.சி. அந்தக் காமராசரைக் கூட விட்டு வைக்கவில்லை.
‘புதிய கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பேசினார் காமராசர். கல்வித் திட்டம் சரியா, தவறா என்பதில் அவருக்குக் கவலை யில்லை. இராசாசி ஆட்சியை வெளியேற்றித் தான் அதிகாரத் திற்கு வர அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்”. (ம.பொ.சி. ‘எனது போராட்டம்’, பகுதி 2; பக்கம் 392)
ஆனாலும் அலைகடலெனத் தோன்றிய மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல் இராசாசி ஆட்சியை விட்டு ஓடினார். அவரின் கேடான குலக்கல்வித் திட்டம் சவக் குழிக்குப் போனது. தமிழகத்தில் கல்வி மறுமலர்ச்சிக்குக் கால்கோளிட்ட காமராசரின் ஆட்சி மலர்ந்தது.
திராவிட இயக்க எதிர்ப்பு
வருணாசிரம தருமத்தை வேரோடு கிள்ளி எறிதல், சாதி ஏற்றத்தாழ்வுகளைத் தரைமட்டமாக்குதல், மானுட சமத்துவம் பேணுதல் உள்ளிட்ட உயரிய குறிக்கோள்களுடன் உருவான தே திராவிட இயக்கமாகும். ஆனால் ‘தமிழரசுக் கழகம்’ என்ற பெயரில் இயக்கங்கண்ட ம.பொ.சி. பார்ப்பனியத்திற்குப் பாலூட்டுதல், பழமைக்கும் மூடநம்பிக்கைக்கும் பட்டுக் கம்பளமும் விரித்தல், ஆரியத்திற்கு அடிமைத் தொண்டு புரிதல் போன்ற வீடணஆழ்வார் வேலைகளை ஆராவாரத்தோடு மேற் கொண்டார்.
“ம.பொ.சி. 1951இல் திராவிட இயக்கப் பிரச்சாரத்தை எதிர்த்து மாநாடு நடத்தினார். ‘திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு’ எனும் பெயரில் 1951 மார்ச்சு முதல் 1951 நவம்பர் வரையில் மாநாடுகளை நடத்தினார். இந்த மாநாடுகள் தமிழரசுக் கழகம், காங்கிரசு பெயரால் நடத்தப்படாமல் ‘திராவிட இயக்க எதிர்ப்பு முன்னணி’ சார்பாக நடத்தப்பட்டன.
பகுத்தறிவாதம், மூடநம்பிக்கைகளை ஒழித்தல், இனவு ணர்ச்சி என்ற பெயரால் தமிழகம் மரபு, பண்பாடு, ஆன்மிகம் ஆகியவற்றில் இருந்து திசை தவறிச் செல்லாமல் கட்டிக் காத்தன திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகள்”. (நூல் : இந்திய இலக்கியச் சிற்பிகள்; ம.பொ. சிவஞானம் - பெ.சு. மணி, பக்.14)
இந்துத்துவக் குரல்
தமிழரசுக் கழகத்தின் கொள்கைகளில் ஒன்றாக ‘மத விஷயங்களில் அரசாங்கம் பூரண நடுநிலை வகிக்கும்’ என்பது குறிப்பிடப்பட்டிருந்தாலும் ம.பொ.சி. தன் வாழ்நாள் முழுவதும் இந்துத்துவக் கருத்தியலையே பற்றி நின்றார்.
சங்ககால இலக்கிய மரபுகள், பெரும்பாலும் ஆரியக் கருத்தியல்கள் அதிகம் சாராத தனித்தன்மை கொண்டவை. எனினும் வேத மதக்கலப்பும் ஒருகுலத்துக்கு ஒரு நீதி என்னும் வருணக் கலப்பும் தாம் தொல்தமிழ் மக்களின் இயற்கை சார்ந்த பண்பாட்டுக் கூறுகளைத் தகர்த்தன. இக்கோட்பாட்டை ம.பொ.சி. ஏற்க மறுத்தார்.
தமிழ், சைவம், வைணவம், வைதீகம், இராமாயணம், பெரியபுராணம், நாயன்மார்கள், ஆழ்வார்கள், தெய்வீகம், இறைநம்பிக்கை என்பவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து, ம.பொ.சி. மூடநம்பிக்கைகளுக்கு முட்டுக்கொடுக்கும் திருப்பணி யைச் சிறப்பாகவே செய்தார்.
‘தமிழருக்கே உரிய சங்ககாலத்து இலக்கிய மரபுகளும் வாழ்க்கை நெறிகளும், ஆரியமொழியும் மரபும் தமிழில் கலந்த சமய சகாப்தத்திலே திட்டமிட்டுப் புறக்கணிக்கப் பட்டனவென்பது தவறாகும்.
தமிழ்ப் பற்றும், தமிழினப் பற்றும் சமய சகாப்தத்திலே புறக்கணிக்கப்பட்டு மூடநம்பிக்கைகள் நிரம்பிய சமயவாதமே தமிழர்மீது ஆதிக்கம் செலுத்தியது என்பது இலக்கிய ஆய் வாளர்கள் சிலருடைய தவறான வாதம். இதுவும் தவறு.
இனக்கலப்பும் மதக்கலப்பும் ஏற்பட்ட சமய சகாப்தத்திலே தமிழருடைய பண்பாடு அழிந்தொழிந்து விட்டது என்று இலக்கிய ஆய்வாளர்களிலேயும் சிலர் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு”. (மேற்படி நூல், பக்.107)
3.3.1976இல் சென்னையில் உள்ள சங்கரமடத்தில் மறைந்த ‘பெரிய பெரியவாள்’ சந்திரசேகர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்து மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ம.பொ.சி. தன்னை ஒரு தமிழனாக எண்ணுவதை விட இந்துவாக எண்ணுவதில் அதிகப்பெருமிதங் கொண்டார்.
“நான் தமிழன் என்னும் இனவுணர்வுடையவன். தமிழ் பேசும் எல்லா மக்களுக்கும் இந்த உணர்வு வேண்டு மென்றும் எண்ணுபவன். ஆயினும், தமிழன் என்ற வகை யிலே எனக்கு இந்த உலகிலுள்ள உறவினர்கள் சுமார் நாலரைக் கோடிப் பேர்தான்... நாம் இந்துவாக இருப்பதால் ஐம்பது கோடிக்கு மேற்பட்ட மக்களோடு உறவுகொள்ள முடிகிறது. என்னைப் பொருத்தவரையில் இந்த உறவுக்காகத் தான் நான் இந்துவாக இருக்கிறேன். இனியும் அப்படியே இருக்க விரும்புகிறேன்”. (ம.பொ.சி. ஆன்மீகமும் அரசியலும், பக்.73)
அப்படியானால் உலகில் அதிக மக்கள் எண்ணிக்கை கொண்ட மதம் புத்த மதந்தான். ம.பொ.சி. புத்த மதத்தில் சேர்ந்திருந்தால் இன்னும் கோடிக்கணக்கான மக்களோடு உறவு கொண்டிருக்க முடியுமே! ஆனால் இந்துத்துவ மாயைக்கு ஆட்பட்டுவிட்ட ம.பொ.சி.க்கு அப்படிச் செய்ய முடியாது.
“வேதா கமங்களென்று வீண்வாத மாடுகின்றீர்
வேதா கமத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னதலால் உண்மைவெளி தோன்ற உரைத்தலிலை
என்ன பயனோ இவை?”
என்று பார்ப்பனியத்தை நத்தி வாழ்ந்த பழமைக் குருட்டு நம்பிக்கையாளர்களைப் பார்த்து வேதனையோடு பாடினார் வடலூர் இராமலிங்க வள்ளல்.
இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு மொழி - இன மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் மத நம்பிக்கையும் தனித் தனி. ஒவ்வொருவரும் அவரவர் சார்ந்த மத நம்பிக்கை களோடு வாழ முழு உரிமையுடையோர் ஆவர். ஆனால் இங்குள்ள இந்து மத வெறியர்கள் இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே உரிய நாடு என்று ஓலமிடுகிறார்கள். இந்திய ஒருமைப்பாடு காக்கப்பட இந்து மதமும் காக்கப்பட வேண்டும் என்று உரத்துக் குரல் எழுப்புகிறார்கள். அருமைத் தலைவர் ம.பொ.சி. அத்வானியின் குரலாகப் பின்காணுமாறு முழங்குகிறார்:
‘என் இந்திய நாட்டு மதம் - இந்து மதம் அழியக் கூடாது. அழிப்பாருண்டானால், உயிர் கொடுத்தும் காக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களைப் போலவே எனக்கும் உண்டு. இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு இந்து மதம் பெரு மளவுக்குப் பயன்பட்டு வந்திருக்கின்றது. ஆகவே இந்து மதம் அழியுமானால், இந்தியாவின் ஒருமைப்பாடு நலிந்து போகும் என்று நம்புபவர்களில் நான் ஒருவன்’. (இந்திய இலக்கியச் சிற்பிகள், ம.பொ. சிவஞானம் - பெ.சு. மணி, பக்.113)
சமற்கிருதத்தின் மீது தாளாப் பற்று
ம.பொ.சி.யின் இந்துமதப் பற்று சில நேரங்களில் தமிழைத் தாழ்த்தியும், ஆரிய மொழியான சமற்கிருதத்தை உயர்த்தியும் பேசுவதைக் காணும் போது அதிர்ச்சியாக உள்ளது.
* ஆலயங்களில் அருச்சனை தமிழில் நடைபெற வேண்டு மென்ற கோரிக்கை நமக்கு உடன்பாடே. ஆனால் இங்கு ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது முற்றிலும் சமயத் தொடர்புடைய பிரச்சனை. இந்தப் பிரச்சனையில் வடமொழிக் காழ்ப்புக்கு இரையாகக் கூடாது.
* சமற்கிருதம் இந்துக்களின் பொதுமொழியாக இருப்பதன் காரணமாக, இம்மொழியில் அருச்சனையை விரும்பு வோர்க்கும் தடைசொல்லத் தேவையில்லை. இது இந்து மதத்தவரின் ஒருமைப்பாட்டுக்கும் உதவி புரியும். (ம.பொ.சி.யின் நூல் : தமிழும் சமற்கிருதமும்)
வழிபாட்டு மொழியாக மட்டுமல்லாமல், சமற்கிருதத் தைப் பிழையறக் கற்ற புரோகிதரைக் கொண்டு தமிழர்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களைப் பார்ப்பனரை வைத்தும் நடத்திக் கொள்ளலாம் என்பதுதான் ம.பொ.சி.யின் உள்ளக் கிடக்கையாகும்.
இந்திக்கு ஆதரவு
வல்லாண்மை கொண்ட மொழியாக இங்கே இந்தி திணிக்கப்பட்ட போது தமிழகமே கொதித்தெழுந்து போர்க் கோலம் பூண்டது. தம் தள்ளாத வயதிலும் தார் சட்டியைத் தூக்கிக் கொண்டு தந்தை பெரியார் இந்தி எழுத்துகளை அழித்தார். அப்படி அவர் இந்தியை அழித்துச் சென்ற இடங்களுக்கெல்லாம் ம.பொ.சி. சென்று மறுபடியும் இந்தி எழுத்துக்கள் அங்கே தோன்றச் செய்தார்.
தமிழே ஆட்சிமொழி - கல்வி மொழி - அலுவல் மொழி
இந்திக்கும், வடமொழிக்கும் ஆதரவாக ம.பொ.சி. எடுத்த நிலைப்பாடுகள் அவரின் இந்திய - இந்துத்துவ பற்றுக் காரணமாய் வெளிப்பட்டவை. என்றாலும் ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்கிற அரசியல் முழக்கத்தை அவர் தம் வாழ்வின் இறுதிக்காலம் வரை விடாமல் தூக்கிப் பிடித்தார். ‘ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை’ என்கிற அவரின் அருமையான நூலில் தாய்மொழியின் மேன்மை குறித்த மேலான கருத்துகள் மிகச் சிறப்பாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன.
ஆங்கில மோகத்தால் கொண்ட அடிமைப் புத்தியில் இங்குள்ள திராவிடக் கட்சிகள் பல இந்தித் திணிப்பை முன்நிறுத்தித் தமிழ் மொழி வளர்ச்சிக்குக் கேடு செய்ததை, ம.பொ.சி. அச்சமின்றி இடித்துரைத்தார்.
* பதினைந்தாண்டு காலக் கட்டத்திற்குள் ஆங்கிலத்தின் இடத்தை இந்தி அடையாதபடி தமிழராகிய நாம் தடை போட்டோம் என்பது உண்மைதான். ஆனால், நமது தடையையும் தகர்த்துக் கொண்டு இந்தி மொழி ஆங்கிலத்தின் இடத்தைப் பிடிப்பதிலே முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. (ஆங்கிலம் வளர்த்த மூட நம்பிக்கை, பக்.27)
* உண்மை என்னவென்றால், தமிழக அளவில் ஆட்சி மொழியாக - பல்கலைக்கழகங்களில் பாடமொழியாக - நீதிமன்றங்களில் நிர்வாக மொழியாக இனியும் ஆங்கிலமே நீடிக்குமானால் எதிர்காலத்தில் ஆங்கிலத்தை விரட்டி இந்தி மொழி அந்த இடங்களில் அழுத்தமாக அமர்ந்து விடுவது சாத்தியமாகும். அதற்காகவேனும் உடனடியாகத் தமிழக அளவில் அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்திற்கு பதில் தமிழை அமர்த்தியாக வேண்டும். (மேற்படி நூல், பக்.29)
* ஆங்கில மொழியானது உலகத்தைப் பார்க்கும் சாள ரமாக இருப்பதைக்கூட நான் வரவேற்பேன். உலகம் என்பது ஒருதிசை மட்டுந்தானா? எட்டுத் திசையையும் நான் பார்க்க வேண்டுமானால் ஆங்கில மொழிச் சாளரம் ஒன்று மட்டும் போதுமா? ஒரு வீட்டுக்கு ஒரே சன்னல் இருப்பது வழக்கமில்லையே!
இப்படியாய் மூன்றாம் வகுப்பைக்கூட மூன்று மாதம் மட்டுமே படித்த ம.பொ.சி. ஒரு மாபெரும் அறிஞராகத் தாய்மொழியின் தேவைபற்றிச் சிந்தித்திருப்பது வியப்பைத் தருகிறது. திராவிட இயக்கத் தலைவர்கள் பெரும்பாலோர் ‘இந்தி எப்போதும் இல்லை; ஆங்கிலமே எப்போதும்! என்கிற சிந்தனைக்கு ஆட்பட்டுப் போனது தமிழர்க்கு நேர்ந்த பெருங்கேடே ஆகும்.
வடவெல்லைப் போராட்டம்
தமிழகத்தின் வடவெல்லைப் பகுதியில் அமைந்த திருத்தணி உள்ளிட்ட ஊர்களைத் தமிழ்நாட்டோடு இணைத் ததில் ம.பொ.சி. ஆற்றிய பங்கு ஈடிணையற்றதாகும். தமிழறிஞர் மங்கலங்கிழாரும் விநாயகம் உள்ளிட்ட மற்றவர் களும் இப்போராட்டத்தில் ம.பொ.சி.யுடன் இணைந்து மக்கள்திரள் போராட்டங்கள் பல நடத்தி வெற்றி கண்டனர். தெலுங்கர்களின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டுத் தமிழகத்தின் தலைநகரமான சென்னை, தப்பிச் செல்லாமல் காத்ததிலும் ம.பொ.சி.யின் பங்கு மாட்சிமை மிக்கது.
தென்தமிழ்நாட்டில் கேரளத்திற்கு இரையானது போக எஞ்சியிருந்த சில பகுதிகளை மீட்டுத் தமிழ்நாட்டோடு இணைத்ததில் நேசமணி உள்ளிட்ட பெருமக்களுக்குப் பெரும் பங்கு உண்டு. இதில் ம.பொ.சி.யின் பங்கு அளவானதே!
இன்றுள்ள எல்லாக் கேடுபாடுகளுக்கும் பெருமளவில் காரணமாய் இருப்பது இந்தியத் தேசியம் தான். இந்தியத் தேசியம் என்பது இந்துப் பாசிச - பார்ப்பனிய பயங்கர வாதத்தின் மீது கால்கொண்டு நிற்கிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள தேசிய இனங்கள் யாவும் தமக்குள் முரண்பட்டு முட்டி மோதிக் கொள்வது தில்லியில் உள்ள ஓநாய்களுக்குத் தித்திப்பான செய்திதான்.
இந்தியா ஓர் ஒற்றைத் தேசமல்ல என்று ஓங்கிக் குரல் கொடுத்தவர் பெரியார். ஒடுக்குண்ட உழைப்புச் சாதி மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடி யவர் பெரியார். மானிட இனத்தையே சாதியின் பேரால் வெட்டிக் கூறுபோட்ட மாபெரும் கொடுமையை எதிர்த்துச் சமரசமின்றிப் போர்த்தொடுத்த தன்மான வேங்கையவர். வரலாறு நெடுகிலும் பார்ப்பன பயங்கரவாதம் நிகழ்த்திய படுகொலைகள் எண்ணற்றவை. சூத்திரச் சாதி மக்களின் (சூத்திரச் சாதி என்பது தாழ்த்தப் பட்டோரையும் உள்ளடக்கி யதே) துயர்நீக்கப் பாடுபடுவதையே தன் இறுதி இலக்காகக் கொண்டு பெரியார் செயல்பட்டார். இந்தப் பணியில் ஆரியக் கொடும்பார்ப்பனர்களில் அளவிறந்த கொடுமைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பெரியாரின் ‘தமிழ்நாட்டு விடுதலை’ என்பதைப் பார்ப்பனியம் ஒழித்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்றே கொள்ளலாம்.
அரசியல் களத்தில் பெரியாரின் பார்ப்பன - பனியா ஒழிப்புச் செயற்பாடுகளுக்கு இராசாசி மிகப்பெரும் அறைகூவ லாய் நின்றார். தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு என்று பேசிய ம.பொ.சி. காலமெல்லாம் இராசாசி யின் மெய்க்காவலர் போல் பின்தொடர்ந்தார். பெரியாரின் ஆரியப் பார்ப்பன இந்துத்துவா எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மறுப்புக் குரல் எழுப்ப மனுவின் மைந்தர்கள் ம.பொ.சி. யைக் கறிவேப்பிலைக் கொத்தைப் போல் பயன்படுத்திக் கொண்டார்கள்.
ம.பொ.சி. தனது வாழ்க்கை வரலாற்று நூலில் இராசாசி யின் அடியாளாக இருந்ததைப் பற்றிப் பெருமையோடு பின்வருமாறு எழுதுகிறார்.
“என் தலைமையை எதிர்ப்பவர்கள் என்னைவிட அதிக மாகக் கிராமணியாரையே தாக்குகிறார்கள். அதற்குக் காரணமுண்டு. கிராமணியார் வீர அபிமன்யு போன்றவர். என்னால் உடைக்க முடியாத எதிரிகளின் வியூகத்தை உடைத்து அவர் என்னை உள்ளே அழைத்துச் செல்கிறார். அதனால் என்னை எதிர்ப்பவர்கள் அவர் மீது அதிகம் ஆத்திரப்படுகிறார் கள்”. (ம.பொ.சி. எனது போராட்டம், பகுதி 1, பக்கம் 382)
திராவிடக் கட்சிகளை எதிர்த்து அரசியல் நடத்திய ம.பொ.சி. திராவிடக் கட்சிகள் ஆண்டபோதுதான் பதவிகள் பெற்றார். அண்ணா காலத்தில் ‘உதயசூரியன்’ சின்னத்தி லேயே வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ‘சென்னை மாநிலம்’ ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் பெற்ற விழா நாளில், அந்த விழாவிற்குத் தலைமை தாங்கும் தகுதியையும் பெருமையையும் அண்ணா ம.பொ.சிக்கு வழங்கி னார். கலைஞர் காலத்தில் மேலவைத் துணைத் தலைவ ராயும் எம்.ஜி.ஆர். காலத்தில் அதன் தலைவராயும் ம.பொ.சி. விளங்கினார்.
ஈழமக்களின் துயர்களைப் பற்றி தனியே நூல் எழுதிய ம.பொ.சி. இராசிவ்காந்தி அனுப்பி வைத்த அமைதிப் படையின் செயல்களை ஆதரித்துக் கூட்டங்களில் பேசினார். இறுதியில் தன் அரசியல் வாழ்வை மீண்டும் காங்கிரசில் சேர்ந்து கரைத்துக் கொண்டார்.
“தமிழரசுக் கழகம் எந்தெந்தக் கொள்கைகளுக்காகத் தோன்றியதோ, அவை ஆட்சிக்குப் போகாமலே காங்கிரசுக் கட்சியைப் பயன்படுத்தி நிறைவேற்றி விட்டதால், காந்தியடிகள் போதனைப்படி அது தேவைப்படவில்லை. காங்கிரசோடு கலந்துவிட்டது” என்று சொல்லித் தன் கட்சியையும் காங்கிரசில் கரைத்துவிட்டார்.
ம.பொ.சி.யி.ன் புகழுக்கு மாவிளக்கு ஏற்ற நாட்டில் சில நவீன சீடர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். சிலம்புச் செல்வரின் வரலாற்றுப் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால் அவரின் புகழ் பாடும் அதேநேரத்தில் பெரியாரைக் குப்புறக் கவிழ்த்து முதுகில் குத்தும் வேலை யையும் செய்கிறார்கள்.
1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்று முதன்முதலில் குரலெழுப்பியவர் தந்தை பெரியார் தான்.
சாவு தன்னை ஆரத்தழுவ வரும் இறுதிக் காலத்திலும் பெரியார் நிகழ்த்திய இறுதிப் பேருரையில் (19.12.1973) தமிழ்நாடு தனியே பிரிய வேண்டும் என்றே முழங்கினார்.
ஆனால் தமிழகத்தைச் சுதந்தர நாடாக்க வேண்டும் என்ற நோக்கோடு 1946இல் தமிழரசுக் கழகம் கண்ட ம.பொ.சி. தன் வாழ் வின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் காங்கிரசில் போய்க் கரைந்தார். காலங்கள் மாறலாம். கடந்த கால வரலாறு கூடவா மாறிப்போகும்?