தமிழ் மொழி இன நாட்டிற்குக் கிடைத்த இரட்டைக் குழல் வேட்டெஃகங்கள்.

ஒருவரைத் தொடர்ந்து மற்றொருவர் என அடுத்தூன்றிய நல் ஆளுமைகள்.

தம் 61 ஆம் அகவையில்  ஏறத்தாழ நாற்பது நூல்கள் எழுதியும்,  இதழ்கள் பல நடத்தியும், ஆசிரியப்பணி செய்தும், அரசியலில் ஈடுபட்டும், திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதியும் தமிழ் இலக்கிய உலகில் பேரரசராய்த் திகழ்ந்த பாவேந்தரைப் பதின்ம இளைஞராகத் தம் 19 ஆம் அகவையில் பாவலரேறு அவரைச் சந்திக்கிறார்.. ஏறத்தாழ 42 அகவை இருவருக்கும் வேறுபாடு.

தம்முடைய 12, 13 ஆம் அகவை தொடங்கியே பாவேந்தரின் பாடல்களில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது.

தமிழைத் தன் உயிருக்கு நேரானதாகக் கருதி இயங்கிய பாவேந்தரைத்  தம் வழிகாட்டியர்களுள் ஒருவராய் ஏற்றுக் கொண்ட பாவலரேறுவுக்குத் தமிழே உயிர் மலர்ச்சியாகத் தோன்றியது. தமிழையே தமக்கு இறைவன் என்றுகூட மதிப்பிட்டார்.

தமிழின் மீட்சிக்கென, தமிழர்களின் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகத் தம் வாழ்க்கையையே ஒப்புக்கொடுத்தார்.

தம் உற்றார் உறவினர் என்போரையெல்லாம்கூடத் தமிழ் பொருட்டே அவர்  அமைத்துக் கொண்டார்.

பாவேந்தர் மீது அளவு கடந்த பற்றும் மதிப்பும் கொண்டிருந்தார் பாவலரேறு..  தமக்குக் கிடைத்த ஆசிரியர் திருப்புளிசாமி ஐயாவின் கல்விச் சிறப்பால்  ஆறாம் அகவையிலேயே பாடல்புனையும் ஆற்றல்பெற்ற பாவேந்தர் போலவே, பாவலரேறுவும் தம் ஒன்பதாம் - பத்தாம் அகவையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருக்கிறார். தம் 13.. 14 ஆம் அகவையில் எழுதப்பட்ட மல்லிகை - என்னும் பாவியத்தை ஒழுங்கு செய்து கொண்டு 1952 இல் (அஃதாவது தம் 19 ஆம் அகவையில்) புதுச்சேரி சென்று பாவேந்தர் அவர்களிடம் காட்டியிருக்கிறார்..

அன்றைக்குப் பதின்ம அகவையில் இருந்த பாவலரேறுவின் பாடலில் கருத்துப் பிழை இருக்கிறது என்று கூறி மேலும் பார்க்க மறுத்திருக்கிறார் பாவேந்தர்..

மனம் உடைந்த நிலையில் புதுச்சேரி கடற்கரைக்குச் சென்று உட்கார்ந்தபடியே அவர் அந்த அவலச் சூழலை

சீறுகின்ற நாகத்திடை மணியும், சேற்றில்

சிரிக்கின்ற தாமரையும், காட்டி னூடே

நாறுகின்ற அகில் மரமும், மண்ணுக்குள்ளே

நற்பொன்னும், சிப்பியிடை முத்தும், ஆற்றில்

ஊறுகின்ற நல்லூற்றும், தீயைக் கக்கும்

உயர்மலையில் இயற்பொருளும் இருக்க,

என்போல் தேறுகின்ற பா வலர்க்கிங்(கு) இலக்கியத்தில்

'திறமில்லை' என்கின்றார், என்னே செய்வேன்.

- என்பதாக முதல் பத்தியைக் கொண்ட பாடல் ஒன்றை எழுதியிருந்தார்..

1954 இல் அஞ்சலக எழுத்தராய்ப் பணி கிடைத்த சூழலில் புதுச்சேரியைத் தேர்வு செய்து கொண்டு பாவேந்தருக்காகத் தாம் செய்து கொண்டிருந்த அடவிப் பணியைத் துறந்துவிட்டு  வந்து சேர்ந்தார் பாவலரேறு..

புதுச்சேரியில் வீடொன்று வாடகைக்கு எடுத்துத் தங்கிய பின், சில நாள்கள் கழித்துப்  பாவேந்தரைச் சென்று, தம்மை அறிமுகப்படுத்திப் பாவாணர் அவர்கள் எழுதித் தந்திருந்த  பாடலைக் கொடுத்தபோது நடந்த உரையாடலைப் பாவலரேறு நடையிலேயே அறிவோம்.

“எங்கிருந்து வருகின்றீர்கள் என்று கேட்டார். பொதுவாக, பாவேந்தர் நீங்க வாங்க என்று சொல்லுகின்ற அளவுக்குத் தகுதியிருந்தால்தான் அவர்களை அவ்வாறு அழைப்பார்; இல்லையென்றால் எல்லோரையும் வா போ என்றுதான் கூப்பிடுவார்.

புதுச்சேரி முதலமைச்சராய் அப்போது குபேர் என்பவர் இருந்தார். அவரைக்கூட அப்படித்தான் கூப்பிடுவார். “இந்தாப்பா குபேரு... இந்தப் பையன் படிச்சிட்டு வேலையில்லாம இருக்கிறான். அவனுக்கு ஒரு வேலைகொடு - உடனே கொடு”- என்றுதான் சொல்லுவார். யாராயிருந்தாலும் கட்டளைப் போடுவதுதான். பெரிய அரசரைப் போலவேதான் நடப்பார். நெருங்கியிருந்து பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும், அவருடைய ஆளுமை நிலை!

பழங்கழகக்காலப் புலவர்களிடம்  இருந்த அந்தப் பெருமிதத்தை மூன்று நான்கு புலவர்களிடத்தில்தான் நான் பார்த்திருக்கிறேன். ஒருவர் தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார். இரண்டாவது பாவேந்தர். மூன்றாவது பாவாணர். நான்காவது புலவர் பேராசிரியர் ந.இராமநாதன் அவர்கள். வளைந்து கொடுக்கமாட்டார்கள்.

பாவேந்தரிடம் பாவாணர் என்னைப் பற்றி எழுதின அந்தப் பாட்டினைக்  காட்டியவுடன் பாவேந்தருக்கு மிக மகிழ்ச்சி. பிறகு நான் சொன்னேன். "ஐயா  இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்களை வந்து பார்த்திருக்கிறேன்" என்றேன். அப்படியா எனக்கு நினைவில்லையே' என்றார்.

நான் அப்பொழுது வந்தபோது அவர் சொன்னதைச் சொல்லி வருத்தப்பட்டுத்  திரும்பினேன் என்றும், அப்பொழுது கடற்கரையில் நான் எழுதிய பாட்டையும் எடுத்துச் சொன்னேன். உடனே சொன்னார், 'அப்படியா.. நான் சொன்னேன்? எனக்கு நினைவில்லையே. அப்படிச் சொல்லியிருந்தால் அதை நீ மறந்துவிடு' என்றார்.

நான் எழுதியிருந்த பாடல்களை யெல்லாம் காட்டினேன். அவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தம் மகன் மன்னர்மன்னனைக் கூப்பிட்டு, “இந்தாப்பா, தம்பியை நாம் எங்கெங்கேயோ தேடிக்கொண்டிருந்தோமே.. இதோ இங்கே வந்து விட்டார். இப்படிப்பட்டவரைத்தானே நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்" என்று குறிப்பிட்டார்.

அவர் எப்படித் தேடினார்? யாரைத் தேடினார் என்று எனக்குத் தெரியவில்லை. உண்மைத் தமிழ் உணர்வுடைய ஒருவரை அவர் பார்க்க விரும்பியிருக்கலாம். அடுத்தபடி என்னைப்பற்றிக் கேட்டார். அஞ்சல் துறையில் பணியில் சேர்ந்திருப்பதை நான் குறிப்பிட்டேன்.

இதெல்லாம் நமக்கு ஒத்துவராது; அதிகாரம், பதவி இந்த வேலைகளை யெல்லாம் தூக்கிப் போட்டுடுங்க.. நீங்க அதிலெல்லாம் இல்லாமல் தமிழுக்காகவே இருங்கள் - ஈடுபடுங்கள்" என்று சொன்னார்.

அவர் வாழும் தெருவிலேயே வீடு பார்க்குமாறு மகனிடம் சொன்னார். 'இந்த ஊரு ஒரு ‘மோச’மான ஊரு . யாரிடமும் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டாம். உங்க 'ஆபீசு' முடிந்தவுடனேயே நேரா இங்கேதான் வரணும். இங்கேதான் இருக்கணும் என்றார். அன்றிலிருந்து ஓர் ஆறு ஆண்டுகள் அவரோடு நெருங்கிய தொடர்பு அவரின் குடும்பத்தோடும் தொடர்பு எனக்கு இருந்தது.

இந்நெருங்கிய தொடர்பால், பாவேந்தருடையனவும், அவர் குடும்பத்திடையவுமான இன்ப, துன்ப நிகழ்ச்சிகள் அனைத்திலும் பாவலரேறு பங்கெடுத்தார். சிற்சில நேரம் பாவேந்தரின் மெல்லுணர்வுகளுக்கும், வல்லுணர்வுகளுக்கும் தாம் தாக்கமுற்றிருந்ததாக அவரே பதிவு செய்திருக்கிறார்.

..............

1955-ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களின்  மகன் மன்னர்மன்னன் - சாவித்திரி திருமணம் புதுச்சேரியில் நடைபெற்றது.. அத்திருமணத்திற்குப் பாவாணர், தமிழ்மறவர் புலவர் வை. பொன்னம்பலனார் கோவை அய்யாமுத்து, டார்பிட்டோ சனார்த்தனம் உள்ளிட்ட  பலரும் வந்திருந்தனர்.

புலவர் பொன்னம்பலனார் அவர்களும், பாவாணர் அவர்களும் பாவலரேறுவுக்கு முறையே இடைநிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் ஆசிரியர்களாக இருந்தவர்கள்.

திருமணம் முடிந்து அனைவரும் ஒன்றாகத் திருமணப் பந்தலின் ஒரு மூலையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது பாவேந்தரும் வந்து அவர்களுடன் அமர்ந்து பேச்சில் கலந்து கொண்டார்.

பேச்சுக்கிடையில், புலவர் பொன்னம்பலனார் பாவேந்தரிடம் பாவலரேறுவைக் காட்டி இவர் (ஐயா பெருஞ்சித்திரனார்) பள்ளியில் என்னுடைய மாணவராக இருந்தவர் - என்று பெருமையாகக் கூறினார். அதைக் கேட்ட பாவாணர், 'அப்படியா, ஆனால் கல்லூரியில் அவர் என்னுடைய மாணவர்' என்றார். இவற்றைக் கேட்ட பாவேந்தர் இன்னும் சற்று அழுத்தமாக வெடுக்கென்று 'அது' அப்போது.. இப்போது இவர் என் மாணவர் என்றார். அதைக் கேட்ட மூவருமே பெருமிதமாகச் சிரித்துக் கொண்டனர். அப்பொழுது அம்மூவரை விடவும் தமக்கு மிகவும் பெருமிதமாக இருந்தது -  என்று பாவலரேறு தென்மொழியில் பதிவு செய்து இருக்கிறார்.

பாவலரேறு  அவர்களுக்குத் தூய தமிழ் உணர்வூட்டியவர் பொன்னம்பலனார், வை. சுப்பிரமணியனார் போன்ற பள்ளி ஆசிரியர்களும், நடேசனார், பாவாணர் போன்ற கல்லூரி ஆசிரியர்களுமே ஆன நிலை இருந்தாலும் இலக்கிய ஈடுபாட்டு உணர்ச்சிக்குப் பாவேந்தரையே முதன்மையராக அவர் அறிந்திருந்தார்.

பாரதிக்குத் தமிழ் ஈடுபாடு இருந்தாலும் அவர் தமிழை  வளர்ப்பதற்காகவோ பரப்புவதற்காகவோ மக்களிடையே இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவோ செயல்பட்டவர்  அல்லர் என்பது பாவலரேறுவின் தெளிந்த வெளிப்பாடு.

ஆனால் அதே போது தமிழைத்  தம் உயிரென எண்ணி மதித்துப் பரப்பும் நோக்கில் தமிழியக்க உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டு இயங்கியவர் பாவேந்தரே. என்று பாவலரேறு மதிப்பிட்டிருக்கிறார்..

                                   ................

கண்ணதாசன் நடத்தி வந்த தென்றல் இதழில் இலக்கியப் போட்டி ஒன்று 1955 இல் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்ந்தெடுக்கப்படும் பாவியத்திற்கு ஆயிரம் உருபா பரிசுத்தொகை என்பதாக அறி­வித்திருந்தார்கள். தேர்வாளராகப் பாவேந்தர் அமர்த்தப்பட்டிருந்தார்.

பாவேந்தர் அவர்களின் வலியுறுத்தத்தால் பூக்காரி என்னும் தம் பாவியத்தைத் திருத்தத்துடன் கொய்யாக்கனி எனப் பெயர் மாற்றம் செய்து  போட்டிக்கு அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் பாவலரேறு.

போட்டிக்கான தேர்வாளராகப் பாவேந்தர் அவர்கள் அகற்றப்பட்ட  நிலையில் போட்டிக்கு அப்பாவியத்தை  அனுப்ப வேண்டாம் எனப் பாவேந்தர் அறிவுறுத்தியதோடு அதைத் தன்னுடைய பழநியம்மாள் அச்சகத்திலேயே அச்சிட்டுத் தந்துவிடும்படி தன் மகனார் மன்னர்மன்னன் அவர்களிடம் பாவேந்தர் கையளித்தார்..

கொய்யாக்கனி பழநியம்மாள் அச்சகத்திலேயே அச்சாகிக் கொண்டிருந்த இடை நாள் ஒன்றில் பாவேந்தர் அவர்கள் தாமாகவே கொய்யாக்கனிக்கு மதிப்புரை ஒன்றை  எழுதித் தந்திருந்தார் என்பது மிகவும் சிறப்புடையது.

அதுகுறித்துப் பாவலரேறு வரிகளிலேயே அறிவது நல்லது..

பாவேந்தரின் கட்டளைப்படி, திரு. மன்னர்மன்னன் கொய்யாக்கனியை அச்சேற்றினார். அஃது அச்சாகி முடியுந் தறுவாயிலிருந்த பொழுது ஒருநாள் மாலை நான் பாவேந்தரின் 'பழநியம்மாள்  அச்சக'த்திற்குச் சென்றேன். அங்கிருந்த மன்னர்மன்னன் என்னிடம், "நீங்கள் தலையிடம் (பாவேந்தரை நாங்கள் 'தலை'யென்று சுருக்கமாக அழைத்துக் கொள்வோம்) ஏதாவது, கொய்யாக்கனிக்கு மதிப்புரை கேட்டீர்களா?' என்றார். நான், 'இல்லையே, நான் ஏன் மதிப்புரை கேட்பேன்?" என்றேன்.

அவர் என்னைக் கேட்டதிலிருந்து, பாவேந்தர் அதற்கு நான் கேளாமலேயே மதிப்புரை ஒன்று தந்திருப்பார் என்று உயர்த்துணர்ந்து கொண்டு மன்னர்மன்னனிடம் அவ்வாறு பிலுக்கினேன். அதற்கு அவர், நீங்கள் கொடுத்து வைத்தவர்தாமையா! (அவர் பயன் படுத்திய சொல் 'அதிர்ஷ்டக்காரர்' என்பது.) அருமையான மதிப்புரை ஒன்று எழுதிக் கொடுத்திருக்கிறார். நான் அறிந்த வரையில் அவர் இப்படி யாருக்குமே எழுதிக் கொடுத்ததில்லை; அவனவன் - மதிப்புரை வேண்டுமென்று கேட்டுத் தவங்கிடப்பான். இறுதியில் வேண்டா வெறுப்பாகக் கிண்டலாகவோ, ஏனோ தானோ வென்றோ எழுதிக் கொடுப்பார். இறுதியில் அதையும் வாங்கிக் கொண்டு போவார்கள். நீங்கள் கேளாமலேயே உங்களுக்கு மிகவும் சிறப்பாக எழுதிக் கொடுத்து விட்டாரே; வியப்புதான்! (அவர் பயன்படுத்திய சொல் ஆச்சரியந்தான்' என்பது.) என்று கூறி, மதிப்புரை எழுதியிருந்த தாளை என்னிடம் கொடுத்தார். அதைப்படித்துப் பார்த்தவுடன், பாவேந்தர் என் மேல் கொண்டிருந்த கள்ளமற்ற மெய்யன்பையும், மதிப்பையும் அறிந்து உள்ளம் உருகி நின்றேன். என் கடை விழிகளில் 'நன்றிக் கண்ணீர்' துளிர்த்தது.

பாவேந்தர் கொய்யாக்கனிக்குக் கொடுத்த மதிப்புரையைப் பற்றி இரண்டொரு சொற்கள் சொல்லியாகல் வேண்டும். நூலைப்பற்றிய செய்தி கொஞ்சந்தான் அதில் வருகிறது. மற்ற செய்தியெல்லாம் என்னைப் பற்றியதுதான். என்னை அவர் விளங்கிக்கொண்ட தன்மை அவ்வரிகளில் ஆழப் பதிந்திருந்தது. வெறும் சொற்களாக அவற்றைப் பாவேந்தர் பயன்படுத்திவிடவில்லை. அதில் அவர் பயன் படுத்திய ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு; உணர்வுண்டு! அதிலுள்ள அத்தனைச் சொற்களிலும் அவரின் தூய தமிழுள்ளம் - கனிவு நிரம்பிய குழந்தையுள்ளம் - பொறாமையற்ற சான்றாண்மையின் பெருந்தகையுள்ளம் பதிந்து, மெய்ம்மை சாற்றி நின்றது. அதில் அவரின் சிரிப்பு துள்ளியது; நகைச்சுவை பொதுளிநின்றது; உவகை ஊஞ்சலாடியது, அன்பு குமிழியிட்டது; அறிவுச் சுடர் வீசியது: என்பால் அவர் வைத்த நம்பிக்கையின் ஈரம் கசிந்து நின்றது; அதில் என் தமிழ் உள்ளத்தையும், அதில் கொப்பளிக்கும் உண்மை உணர்வையும், அதன் சூட்டையும், குளிர்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார். என் அறிவின் வலிந்த கொள்கையைச் சுட்டியிருந்தார். அவரொடு நான் பழகிய பண்பு வழுவாத தொடர்பை உறுதிப்படுத்தியிருந்தார்; எல்லாவற்றுக்கும் மேலாக என் எதிர்காலத்தையே வாழ்த்தி நிலைப்படுத்தியிருந்தார்! மொத்தத்தில், அவர் அம் மதிப்புரையில் பயன்படுத்திய சொற்களில் அவரின் பாடல் உள்ளம் கொழுமை கொண்டது. வண்ணமாலைகளின் சுடர்க் கற்றைகளை வீசி, ஒரு பாவலனின் உள்ளத்தை வேறு ஒரு பாவலன் அறியும் படைப்புக் கமுக்கத்தை உலகுக்குப் புலப் படுத்தியிருந்தார். இவ் வனைத்துச் சிறப்புகளையும் உள்ளடக்கிய அவ்வயிர வரிகள் என் உள்ளத்தில் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி உணர்வு மூட்டத்தில் மூழ்குவித்தன. இன்று நினைத்தாலும், அன்றைய மாலைப் பொழுதின் தென்றல் வீச்சு என் உயிரைக் குளிர்விக்கின்றது.

அப்பாவேந்தர் பெருமகனார் கொய்யாக்கனிக்குத் தந்த மதிப்புரை இது தான்!

கள்ளம்  எப்படி  அப்படிக்

கடுகளவும்  இலாத  நெஞ்சினார்;  முக்

கனிகள்  எப்படி  அப்படிப்

போன்ற முத்தமிழின்மே லன்பர்;

குள்ளம்  எப்படி:  அப்படி

இலாப்பெருங்  கொள்கை  யுடையார்;

குரைகடல்  எப்படி  அப்படிக்

குணநிறை   துரைமாணிக்  கனார்!

வெள்ளம்  எப்படி  அப்படிச்

செந்தமிழ்ச்  சொற்பெருக்  கேற

மேன்மை  எப்படி  அப்படிப்

பட்டதோர்  நடையிற்றம்  நல்ல

உள்ளம்  எப்படி  அப்படிப்

தந்ததோர்  உயர்தமிழ்  நூல்தான்

உலகம்  எப்படி.  அப்படிப்

பட்டதோர்  நிலைகொள்கொய்  யாக்கனியே!

                                                ...................

அதன்பின்னர், அக்கால இடைவெளியின் நடுவில், பாவேந்தர்க்கும் அவர் ஒரே மகன் மன்னர் மன்னனுக்கும்(அவரது இயற்பெயர் கோபதி) ஏற்பட்ட மனத்தாங்கல் பிரிவில், இருவரையும் இணக்கம் செய்த பலருடைய முயற்சிகளில் பாவலரேறுவின் (அவர்தம் 27,28 அகவையிலேயே) பங்கு மிகவும் அதிகம். இப்படி, அந்த ஐந்தாறாண்டு இடைவெளிப் போழ்தில், எத்தனையோ தொடர்புகள், ஈடுபாடுகள், விருப்பு வெறுப்புகள்! மொத்தத்தில் பாவேந்தருடைய அன்புக்கும், அரவணைப்புக்கும், நம்பிக்கைக்கும். நட்புக்கும், உள்முக வெளிமுகச் செயற்பாடுகளுக்கும் உரியவராகப் பாவலரேறு  இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

பாவேந்தருடைய மறைவிற்குப் பின்னர், அவரின் குடும்பச் சொத்துகளையும், கொடுக்கல் வாங்கல்களையும், பொறுப்புகளையும் ஆய்வு செய்து கணக்கிட்டு, அவருடைய குடும்பத்தார்க்குப் பகிர்ந்தளித்த வகையில், ஓர் ஐவர் ஆயத்தை (பஞ்சாயத்தை) அமைத்தும் அதற்குத் தலைவராகவும் பாவலரேறு செயற்பட்டார் என்பது முகாமையானது. அந்த அளவுக்கு அவரோடும் அவர் குடும்பத்தாரோடும் நெருக்கமாகியிருந்தார்.

தமிழின் விடுதலைக்காக, தாம் சிறைப்பட்டதோடு தம் அரசு அலுவலையும் இழந்திருந்த பாவலரேறு. மிகக் கடுமையான வறுமையில் உழன்றபடியே மொழி இன நாட்டு உரிமைகளுக்குப் போராடினார்.

தாம் வறுமையுற்ற நிலையிலும் தமிழ் அறிஞர்கள் பிறரின் துன்பங்களை அறிந்து அவர்களுக்காகத் தம் வறுமை சூழலிலும் துணை நின்றவர் பாவலரேறு.

பாவேந்தர் குடும்ப நலக் கொடை திட்டம் - என்கிற பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்து ஏற்பாடு செய்து பாவேந்தர் அவர்களின் துணைவியார் பழனியம்மாள் அவர்களின் பெயருக்குத் தொகை அனுப்பிட வேண்டுமென அறிக்கை விடுத்தார் பாவலரேறு. அதன்படி தென்மொழியின் சார்பில் அக்கால் 1937 உருவா திரட்டி அளிக்கப்பட்டது.

                                             ..................

தொடக்கக் காலத்தில், பாவேந்தரின் தனித்தமிழ்ப் பற்று அவ்வளவாக வெளிப்படவில்லை. தம் பிள்ளைகளுக்குக்கூட சரசுவதி, கோபதி, வசந்தா, இரமணி போன்ற வடமொழிப் பெயர்களையே சூட்டியிருந்தார். தாம் எழுதிய தொடக்கக் கால நூல்களிலும் நாடகங்களிலும் பாவியங்களிலும் பெரும்பாலும் வடமொழிப் பெயர்களையும் வடமொழிச் சொற்களையும் அளவின்றிக் கலந்தே எழுதி வந்தார். இதற்குக் காரணம் முப்பது நாற்பதாண்டுகளுக்கு முன் தமிழர்க்கிருந்த வடமொழி மயக்கமும் தூயதமிழ் உணர்வுக் குறைவுமே ஆகும். ஆனால், பிற்காலத்தில் படிப்படியாக இந்நடை முறையைக் குறைத்துக்கொண்டு, மறைமலையடிகளாரைப் பின்பற்றித் தூயதமிழ் நடையை மேற்கொண்டார். அதன் பின்னர், தாம் எழுதிய பாவியங்களிலும் நாடகங் களிலும் வரும் உறுப்பினர்களுக்கெல்லாம் மாவரசு, நாவரசு, வேடப்பர், அழகர், புலத்திறல், வையத்திறல், நல்லமுத்து, நகைமுத்து, மலர்க்குழல், கரும்பு. மின்னொளி, முத்து நகை,பொன்னி, முள்ளி, அழகம்மை, பச்சைக்கிளி முதலிய அழகிய தூய தனித்தமிழ்ப் பெயர்களாகவே சூட்டியிருக்கிறார். அத்துடன் அவரெழுதிய பாடல்களிலும் பலவிடங்களில் தமிழை வலியுறுத்தியிருக்கின்றார். அதற்காகவே தமிழியக்கம்'  என்றொரு நூலும் எழுதி, அதில் தூயதமிழ்க் கொள்கையைப் பலதுறைகளிலும் வலியுறுத்திப் பேசியிருக்கின்றார். இவற்றோடு 'வந்தவர் மொழியா, செந்தமிழ்ச் செல்வமா? என்றோர் -  ஆய்வுத்  தொடரையும் எழுதி, வடமொழியாளர் வடமொழிச் சொற்கள் என்று இட்டுக்கட்டிப் பேசி வரும் பல சொற்களைத் தூயதமிழ்ச் சொற்களே என்று நிலை நாட்டியுள்ளார். மொழியாய்வு நிலையிலும் சொல்லாய்வு நிலையிலும் அவர் காட்டிய ஆய்வு முடிவுகளில் ஒருசில பொருத்தமற்றனவாகவும், பிழைப்பட்டனவாகவும் இருப்பினும் அவர் கொள்கையும் முயற்சியும் மிகவும் பாராட்டவும் மதிக்கவும் தக்கனவாகும்.

என்று பாவலரேறு பாவேந்தரின் தூயதமிழ் ஈடுபாடுகள் குறித்து விளக்கப்படுத்தியிருக்கிறார்.

பாவேந்தரின் பெருஞ்சிறப்புகளும் படைப்புமுறைகளும், - பாடுபொருளும், வெளிப்பாடுகளும், - தமிழுணர்வும், குமுக நோக்கமும், - பாவியங்களும், சொல்லாட்சியும் - எனும் விரிவான ஆய்வுகள் பாவலரேறுவின் படைப்புகளோடு ஒப்புமைப்படுத்தி முனைவர் கடவூர் ப. மணிமாறன் உள்ளிட்ட சிலர் செய்திருப்பது விரிவான பார்வைக்குரியவை. அவை பல கோணங்களில் மேலும் அறியத்தக்கன.

அந்த ஆய்வுகளில் பாவலரேறு அளித்திருந்த செவ்வியும், பாவேந்தர் நூற்றாண்டுக் குழுவில் இருந்து தமிழ்நாட்டரசுக்குப் பாவலரேறு அளித்த ஏடலும், தென்மொழியில் எழுதப்பெற்ற கட்டுரைகளும் பாவேந்தர் குறித்த பாவலரேறுவின் பன்முக மதிப்பீட்டைக் காட்டுவனவாக அமைந்தவை.

                                             ..................

தம் வாழ்நாளில் வேறு எவருக்கும் எழுதிடாத வகையில் 14 பாடல்களைப் பாவேந்தருக்காகப் பாவலரேறு பல சூழல்களில் எழுதி இருக்கிறார். எண்ணற்ற கட்டுரைகளை, குறிப்புரைகளை வரைந்திருக்கிறார்.

திட்டங்கள் பல வரைவு செய்து அரசிடம் அளித்து வலியுறுத்தியிருக்கிறார்.

பாவலரேறு கலந்து கொண்ட 14  பாட்டரங்கங்களில் ஏழு பாட்டரங்குகள் பாவேந்தர் பற்றியவை..

பாவேந்தர் அவர்கள் மறைவின் பொழுது வெளிவந்த தென்மொழி பாவேந்தர் அவர்களின் நினைவுச் சிறப்பிதழாகவே ஏராளமான செய்திகளோடு வெளிவந்தது.

அதோடு மட்டுமே அல்லாமல் அதன் பிறகு 1966 மே மாதம், 1967 மே மாதம், 1968 மே மாதம் ஆகிய  ஆண்டுகளில் தொடர்ந்து பாவேந்தருக்குத் தென்மொழி நினைவிதழைச் சிறப்பாகச் செய்திகளின் தொகுப்புகளாகக் கொண்டுவந்தார்..

அந்தச் சிறப்பு இதழ்களிலே பாவேந்தரைப் பற்றிப் பிறருக்கு அறியக் கிடைக்காத எண்ணற்ற குறிப்புச் செய்திகள் சுவைப்படவாக வெளியிடப்பெற்றன.

1967 இல் பாவேந்தர் மறைந்த மூன்றாம் ஆண்டு நினைவிதழில் பாவலரேறு எழுதிய பாடல் தமிழ் நெஞ்சங்களைத் தொடுவனவாக இருந்தது..

“அன்புள்ள பாவேந்தே! வணக்கம். இங்கே

அனைவருமே நலமெனினும், ஐயா, நீங்கள்

தென்புதுவைத் திருமண்ணை - தமிழகத்தைத்

தீந்தமிழர் தமைப் பிரிந்த நாளி னின்று

தென்பில்லை உளத்தினிலே! ஊக்க மில்லை;

திருவளர்ந்த தமிழகத்தில் செழிப்பு மில்லை;

அன்பில்லை தமிழர்க்குள்; ஆர்வ மில்லை;

அனைத்துலக வாழ்க்கையிலும் அமைதி இல்லை!..” 

                                             .....................

இவ்விருபதாம் நூற்றாண்டு, தமிழ்மொழி யின் - தமிழினத்தின் -மறுமலர்ச்சிக் காலம் என்று சொன்னால் மிகையாகாது; தவறும் ஆகாது. இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில்தான் திராவிட இயக்கவுணர்வின் கீழ்வான விடியல் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாசுப் புலர்வாங்கத் தொடங்கியது. அந்த விடியல் வெளிச்சத்தின் பல்வேறு வகையான ஒளிக்கற்றைகளில் ஒன்றுதான் பாவேந்தர் பாரதிதாசன் என்னும் தமிழ் ஒளிக்கற்றை! அவ்-வொளிக்கற்றை பாய்ச்சிய இனவுணர்வுக் கனல்தான், தமிழ்த் தென்றலைப் புரட்சிப் புயலாக வேகமெடுத்து வீசச் செய்தது. ஆம், தென்பொதிகைத் தென்றல் போல் அமைந்து தவழ்ந்த தீந்தமிழ் இலக்கியம், பாவேந்தரின் பகுத்தறிவுப் புலமை தோய்ந்து. மொழியுணர்வுப் புயலாக வளர்ந்து, இன நலச்  சூறாவளியாக மாறி வீசத் தொடங்கியது.

என்று பாவேந்தரைப் பறைசாற்றினார் பாவலரேறு..

பெரியாரையும் பாவேந்தரையும் பட்டிமன்றங்களுக்கும் பாட்டரங்கங்களுக்கும் மட்டும்தாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா? - என்று  பாவலரேறு  கேள்வி எழுப்பினார்..

மூவேந்தர் எல்லாரும் மீண்டும் பிறப்பெடுத்துப்

பூவேந்த ராய்ஆட்சி பூண்டாலும் - பாவேந்தே!

உன்போல் புகழ்பெறவும் ஒல்லுமோ? ஒண்டமிழில்

மின்போல் கதிர்போல் மிளிர்ந்து !

என்று பாவேந்தர் புகழ் பாடல்கள் எழுதி மெச்சினார்.

இன்றைக்கே எழாமல்,நீ

என்றைக்குத் தான் எழுவாய்?

எண்ணிப் பார்ப்பாய்!

என்றைக்குக் காலமினி ஏற்றபடி

கனிந்துவரும், இந்நாள் போல ?

குன்றைத்தூள் செய்கின்ற வல்லுணர்வை

உன்நெஞ்சில் குவிக்கும் வண்ணம்

என்றைக்குப் பாவேந்தன் இனியொருகால்

எழுந்துவந்தே எழுதித் தீர்ப்பான்

பாவேந்தர் வாழ்ந்த இந்தக் காலத்திலேயே எழுச்சியுறாத தமிழகம் இனி எப்பொழுது எழுச்சிபெறும் என்கிற உணர்வில் அவர் எழுப்பிய கேள்வியை உள்ளடக்கிய பாடலின் கருத்து  தமிழர்கள் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டுவது.

இன்றைக்குப் பாவேந்தர் பாரதிதாசனாரும் நம்மிடையே இல்லை.. பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் நம்மிடையே இல்லை.

ஆனால் அவர்கள் அளித்த பாடல்கள் துமுக்கிகளாக.. வேட்டெஃகங்களாக.. தகரிகளாக..

தமிழர்களிடையே குவிந்து கிடக்கின்றன..

தமிழர்கள் நாம்தாம் அமிழ்ந்து கிடக்கின்றோம்.. எழும் நாள் எந்நாளோ..?

- பொழிலன்