நவம்பர் புரட்சியின் வெளிச்சத்தில் இந்திய புரட்சியை முன்னெடுப்போம் என்ற தலைப்பில் தீக்கதிர் ஏட்டில் (07/11/24) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையின் மீதான எனது கருத்துகள்.
தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் 1917 ஆம் ஆண்டு ருசிய நாட்டில் தோழர் இலெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி வகுத்த "புதிய ஜனநாயகப் புரட்சி" என்னும் சோசலிச புரட்சிக்கு முந்திய இடைநிலைக் கட்டத்தைக் கடப்பது குறித்தானே இலெனினிய அணுகுமுறைப் பற்றி மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இன்னும் ஒரு படி மேலே போய் சொன்னால் மார்க்சியத்திற்கு இலெனின் வழங்கிய பங்களிப்பாக உலகம் முழுவது மார்க்சியம் இலெனியமாக வளர்ச்சியுற்றது.
மாபெரும் தோழர் இலெனின் வகுத்த இந்தப் பாதையில் தான் தோழர் மாசேதுங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், ஹோசிமின் தலைமையிலான வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும் தமது பயணத்தை தொடர்ந்தன. அதில் முன்னேறியும் விட்டன.
சோசலிசக் கட்டுமானத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஏற்பட்ட தத்துவார்த்த அணுகுமுறைக் குறைபாடுகளும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏற்பட்ட கட்டுக்கடங்காத முதலாளியத்தின் வளர்ச்சிப் போக்குகளும் சோசலிசத்தை பின்னடைவுக்கு உள்ளாக்கி உள்ளது என்பதை தோழர் கே .பாலகிருஷ்ணன் அவர்கள் மிகச் சரியாகவே ஒப்புக் கொள்கிறார்.
அதே நேரத்தில் இந்திய நிலைமைகளைப் பற்றி பேச வந்த தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் இந்திய சமூகத்தில் உழைப்பாளி மக்களை சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் பிரித்து அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
உலகிலேயே இல்லாத புதிய கோட்பாடான பார்ப்பனியம் பற்றியும் பார்ப்பனியத்தின் அடிப்படையாக இருக்கிற மனுதர்மம் பற்றியும் இங்குள்ள சாதியக் கட்டமைப்பு எவ்வாறு உழைக்கும் மக்கள் ஒன்று திரள தடையாக இருக்கிறது என்பது பற்றியும் எதுவுமே பேசாமல் கடந்து சென்று விடுகிறார்.
இந்திய நிலைமைகளில் அது மட்டுமல்லாது, இங்குள்ள இன்னொரு குறிப்பான சமூக சிக்கலாக பார்ப்பனியத்தை அடிப்படையாகக் கொண்ட சமஸ்கிருத அடிப்படையிலான இந்தி மொழியை கொண்டு இந்திய தேசியம் கட்டமைக்கப்பட்டிருப்பதும், இந்தியாவில் உள்ள அனைத்து மொழி வழி தேசிய இனங்களும் இறையாண்மையற்ற அடிமைத் தேசிய இனங்களின் மாநில அரசுகளாக சுருக்கப்பட்டு இருப்பதும் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
மாபெரும் சோசலிச சோவியத் நாட்டில் தேசிய இனப் பிரச்சனையை தீர்த்ததில் இலெனின் அவர்களின் பங்களிப்பு என்பது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை தோழர் ரோசா லுக்சம்பர்க் அவர்களுக்கு எதிரான கருத்துப் போராட்டத்தில் இலெனின் வளர்த்தெடுத்துதான்.
அந்த சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் ஜார் ஆட்சியினால் ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இன மக்களையும் ருசிய நாட்டின் ஜார் மன்னனின் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தோடு இலெனின் இணைத்தார் .
எனவே தான் அங்கு சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் உருவானது -United States of Socialist Soviet Republic -USSR உருசிய தேசம் அங்கு உருவாக்கப்படவில்லை .
ஆனால் இந்திய நிலைமைகளில் இங்கு பல்வேறு தேசிய இனங்கள் தனித்த அரசுகளாக அமைவதற்கான அனைத்து தகுதியும் பெற்றிருந்தது. அந்த தேசிய இனப் போராட்டங்கள் மொழிவழி தேசிய இனங்களுக்கான அரசு தேவை என்ற அடிப்படையைக் கொண்டு வந்தது.
ஆனால் மாபெரும் ருசிய அனுபவத்திற்கு நேர் எதிராக இங்கு அனைத்து தேசிய இனங்களின் இறையாண்மை உரிமை பறிக்கப்பட்டு இந்த தேசிய இனங்கள் இந்திய சிறையில் பூட்டப்பட்டது தான் வரலாறாகும் .
இன்று அரசியல் அரங்கில் வரும் பிரச்சனைகளில் மிக முக்கியமான பிரச்சனைகளாக இருக்கின்ற சாதிய ஒடுக்கு முறைகளும், மொழி வழி தேசிய இன மாநில அரசுகளை டெல்லி அரசு ஒடுக்குவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நீண்ட நெடிய போராட்டத்தில் உருவான மொழி வழி மாநிலங்களை ஒழித்து விட்டு ஒரே நாடு, ஒரே தேர்தல் ,ஒரே வரி ,ஒரே இந்தி மொழி என்பதெல்லாம் இந்தியாவில் நடந்தேறிய வரலாற்றுப் பிழையின் தொடர்ச்சியாகும்.
இந்திய அரசு கட்டமைப்பை உருவாக்கியவர்கள் இந்தியாவின் ஆளும் வர்க்கமான டாட்டா, பிர்லா, கோயங்கா, கோத்தாரி மொரார்ஜி, கோத்தரேஜ் போன்ற பார்ப்பன- பனியா காயஸ்த இரு பிறவி ஆதிக்க சாதியின் முதலாளிகளும் நில பிரபுக்களும் தான்.
இந்த உண்மைகளை நாம் இந்திய நிலைமைகளில் பேசித்தான் ஆக வேண்டும்.
காயஸ்த இரு பிறவியாளர்கள் என்று பேரறிஞர் அம்பேத்கர் அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட இவர்களைப் போல் எந்த பட்டியல் சாதியிலிருந்தும் இந்தியாவில் ஒரு முதலாளியையோ ஒரு நிலபிரபுவையோ காட்டவே முடியாது .
அப்படி இருக்கும்போது இந்திய நிலைமைகளில் சுரண்டும் அதிகாரம் பெற்ற வர்க்கமாக நிலப் பிரபுக்களாகவும், இந்திய பெரு முதலாளிகளாகவும் பார்ப்பன-பனியா சாதியினர் உருவெடுத்தார்கள்.
விதிவிலக்காக தமிழ்நாட்டில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பெரும் மூலதனம் கொண்டவர்களாக உருவெடுத்தார்கள்.
உழைக்கும் மக்கள் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் அடிமைநிலையில் வைக்கப்பட்டார்கள்.
சூத்திர, பஞ்சம சாதி மக்களை பெருவாரியாகக் கொண்டிருக்கிற ஒவ்வொரு தேசிய இனமும் அரசு உரிமை மறுக்கப்பட்ட அடிமைத் தேசிய இனங்களாகவே தொடர்ந்து வைக்கப்பட்டது.
இங்கு சமூக நீதிக்கான போராட்டம் வர்க்கப் போராட்டத்தோடு இணைந்த ஒன்றாக புதிய குணாம்சம் கொண்ட வகையில் அமைந்தது இங்குள்ள அரசியல் சிறப்பு நிலைமைகள் ஆகும்.
இந்த முரண்களைப் பற்றி தோழர் கே.பாலகிருஷணன் அவர்களின் கட்டுரை பேசாதது நாம் இன்னும் போதிய அளவு விவாதிக்க வேண்டி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் போன்ற தமிழ் அறிஞர்கள் பல்வேறு புதிய செய்திகளை வளர்த்தெடுத்து பேசி வருகிற இந்தக் காலகட்டத்தில் கட்சியின் பார்வையிலும் கட்சியின் திட்டத்தின் மீதும் மறு ஆய்வு தேவைப்படுகிறது என்பதை தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் கட்டுரையின் மீதான எனது கருத்துரையாக முன்வைக்க விரும்புகிறேன்.
இது குறித்து நாம் விரிவான உரையாடலுக்கு அணியமாக வேண்டிய நேரம் இது என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
- கி.வே.பொன்னையன், தலைவர், தற்சார்பு விவசாயிகள் சங்கம்