வாக்குத் திருட்டு தொடர்பாக நவம்பர் முதல் கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இராகுல் காந்தி, “இந்தியாவில் இளைஞர்களிடம்தாம் உண்மை மற்றும் அகிம்சையின் அடிப்படையில் சனநாயகத்தை மீட்டெடுக்கும் ஆற்றல் இருப்பதாகவும், நமது நாட்டை மீண்டும் உண்மை, ஞாயம், சமத்துவம் ஆகியவற்றின் பாதைக்குத் திருப்புவது இளைஞர்களின் பொறுப்பு என்றும் உங்கள் குரல் தான் சனநாயகத்தின் உயிர்” என்றும் பேசினார்.
அவர் இளைஞர்கள் என்று குறிப்பிட்டுப் பேசியது ‘இசட்’ தலைமுறை பற்றியே. இன்று உலகம் முழுக்க இந்த இசட் தலைமுறை (Generation Z) பற்றிய பேச்சு தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக உச்சரிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில்கூட, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி, நேபாளத்தில் ‘ஜென் இசட்’ தலைமுறையினர் நடத்திய புரட்சியைப் போல தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற இளைஞர்கள் புரட்சி செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
த.வெ.க ஆதவ் அர்ஜுனாவோ “இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாய்க் கூடி நேபாளத்தில் அதிகாரத்திற்கு எதிரானப் புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்” என்று பேசுகிறார்.
இப்படி எல்லோரோடும் பேசப்படுகிற இந்த நுண் (இசட்) தலைமுறை எது? ஏன் இவர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
மனித தலைமுறைகளை ஆண்டு வாரியாக பிரித்து வகுப்பது ஒரு முறையாகும். அப்படி, 1995 ஆம் ஆண்டிற்கும் 2012 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களை “இசட்” தலைமுறையினர் என வகைப்படுத்துகின்றனர். இத்தலைமுறைக்கு முன்னர் பிறந்தவர்களை ஒய் தலைமுறையினர் என்றும், இத்தலைமுறைக்குப் பின் பிறந்தவர்களை ஆல்பா தலைமுறையினர் என்றும் அழைக்கின்றனர்.
இவர்களை, சூம் (zoom) (தலைமுறையின் வாழ்க்கையின் வேகம் மற்றும் வேகத்திற்காக) மற்றும் பூமர் (boomer) (அவர்களுக்கு முந்தைய தலைமுறை) ஆகிய சொற்களை இணைத்து சூமர்கள் என்கிறார்கள். இது சுருக்கமாக இசட் (Z) என்று குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஜெனரேசன் என்பது ஷென் (GEN) என்று சுருக்கப்பட்டு ஜென் இசட் (Gen-Z) என்ற சொல்லால் இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்.
இந்த தலைமுறையினர் மின்னணுமயமான உலகில், இணையம் மற்றும் திறன் பேசி (ஸ்மார்ட்போன்)களோடு வளர்ந்தவர்கள். முகநூல், கீச்சகம் (டிவிட்டர்), புவனம் (வாட்ஸ் அப்) உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அவர்களது உயிர் துடிப்பான இயக்கமாக உள்ளன.
இவற்றின் மூலம் தங்கள் அரசியல் உள்வாங்குதல் / வெளிப்படுத்துதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது, இந்த இசட் தலைமுறையினர்தான் தங்கள் நாடுகளில் நிலவும் வறுமை, வேலையின்மை, ஊழல் ஆட்சி போன்றவற்றிற்கு எதிராக இலக்கக்கணக்கில் ஒன்று திரண்டு அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நேபாளம்
நேபாளத்தில், இளம் போராட்டக்காரர்கள் தங்கள் நாட்டு அரசாங்கத்தையே கவிழ்த்ததை நாமறிவோம். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாக இளைஞர்கள் உள்ளம் எரிந்து கொண்டிருந்தது. செப்டம்பர் 4, 2025 அன்று நேபாள அரசு படவரியம் (இன்ஸ்டாகிராம்), முகநூல் போன்ற சமூக ஊடகத் தளங்களுக்கு “ஒழுங்குமுறை” என்ற பெயரில் திடீர் தடை விதித்தது.
இந்தத் தடையானது உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்த சினத்தைத் தெருவில் இறக்கியது. நுண் (இசட்) தலைமுறை இளைஞர்கள் நேபாளத் தலைநகர் காத்மாண்டு உட்பட வீதிகளில் இறங்கினர். ஆட்சி மாற்றத்தையே உருவாக்கிவிட்டனர்.
(இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்க மில்லீனியம் சேலஞ்ச் கார்ப்பரேசன் (விசிசி) மற்றும் அமெரிக்காவின் சனநாயகத்திற்கான தேசிய அமைப்பிடம் (National Endowment for Democracy) நிதியுதவி பெறும் ஹமி நேபாள் (Hami Nepal) போன்ற அமைப்புகள் பின்னணியில் இருந்தது வேறு செய்தி.
வங்கதேசம்
2024- இல் வங்கதேசத்தில் நடந்த அடக்குமுறையை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கூறலாம். வங்கதேசத்தின் 17 கோடி மக்களில் பெரும்பாலோனார் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர்.
அரசு கொண்டு வரும் திட்டங்கள் பணக்காரர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறி இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
போராட்டக்காரர்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்க, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது, நாட்டின் சில பகுதிகளில் இணைய இணைப்பு மீண்டும் துண்டிக்கப்பட்டது. அவாமி லீக் அரசு இணையத்தை முடக்கியது, டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எதிர்ப்பாளர்களைக் கைது செய்தது. மாணவ ஆர்வலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இது மக்களுக்கு மேலும் சினத்தை உருவாக்கியது. இதன் விளைவாக மக்கள் போராட்டத்தின் புதிய அலை உருவானது. இறுதியாக வங்கதேசத் தலைமை அமைச்சர் தப்பி ஓட வேண்டியதாகி விட்டது.
மொரோக்கோ
மொராக்கோவில் இளைஞர்கள் தலைமையிலான தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் செப்டம்பர் 27, 2025 அன்று தொடங்கின. ஜென் இசட் 212 மற்றும் மொராக்கோ யூத் வாய்ஸ் எனப்படும் பரவலாக்கப்பட்ட, பெயர் குறிப்பிடப்படாத கூட்டு அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களில், பொதுக் கல்வி மற்றும் மருத்துவ நலன் சார்ந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மொராக்கோவில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் வேலையில்லாமல் இருப்பதால் இந்தப் போராட்டங்கள் பற்றி எரிந்தன. ஜென் இசட் 212 என்று அறியப்படும் தலைவர் இல்லாத இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டங்கள், அந்நாட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. இவை, மொராக்கோவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாக மாறியது. நாடு முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஏறத்தாழ 70% பேர் 18 அகவை கூட நிரம்பாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மடகாஸ்கர்
ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் நீண்ட காலமாக நிலவி வரும் கடுமையான மின்வெட்டு மற்றும் குடிநீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் தொல்லைக்குள்ளாகி வருகின்றனர். இதைக் கண்டித்து, அண்மைக் காலமாகத் தலைநகர் அண்டனானரிவோவில் இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தைத் தொடங்கினர். ‘ஜென் இசட்’ மற்றும் ‘லியோ டெலஸ்டேஜ்’ என்ற பெயர்களில் சமூக வலைதளங்கள் மூலம் இவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர்.
கென்யா
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில், வரியைப் பல மடங்கு உயர்த்தக் கூடிய “நிதி மசோதா 2024” என்ற மக்கள் பகை சட்டம், கடந்த சூன் மாதம் 25- ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது நடுத்தரவகுப்பை மேலும் சுரண்டி முதலாளிகளுக்குக் கடன் தள்ளுபடி வழங்குகிறது.
இதனால், அந்நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்தது; மசோதா நிறைவேற்றப்படுவதற்கு எதிராக நாடாளுமன்றத்தைக் கைப்பற்று (Occupy Parliament) என்ற முழக்கத்தின் மூலம் சமூக ஊடகங்களில் இளைஞர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. இதன் விளைவாக இலக்கக்கணக்கான இளைஞர்கள் திரட்டப்பட்டு சட்ட முன்வரைவு (மசோதா) நிறைவேற்றப்பட்ட அன்று, நாடாளுமன்றம் முற்றுகையிடப்பட்டுத் தீ வைக்கப்பட்டது.
பிலிப்பைன்ஸ்
ஊழலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்துகின்றனர், “நாங்கள் வறுமையில் வாழும்போது, அவர்கள் எங்கள் வரிகளை ஆடம்பர கார்கள், வெளிநாட்டு பயணங்கள் மற்றும் வணிக ஒப்பந்தங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது.” என்ற மாணவனின் குரல் டிரெண்டிங்கானது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில், நாடு பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் ஜென் இசட் இளைஞர்களின் போராட்டம் குறித்து, “கடந்த 15 ஆண்டுகளாக டிஜிட்டல் இணைப்பால் உருவான இளைஞர்கள் தலைமையிலான உலகளாவிய போராட்ட அலைகளின் சமீபத்திய அலை” என்று ஜெர்மனியின் ‘இன்ஸ்டிட்யூட் ஃபார் க்ளோபல் அண்ட் ஏரியா ஸ்டடீஸ்’ நிறுவனத்தின் ஜான்ஜிரா சோம்பட்பூன்சிரி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“இளைஞர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெகுஜன இயக்கங்களை நடத்துவது புதிதல்ல,” என்று கூறும் சர்வதேச அமைதிக்கான அமெரிக்க சிந்தனைக் குழுவான கார்னகி எண்டோமென்ட்டின் மூத்த ஆய்வாளர் ஸ்டீவன் ஃபெல்ட்ஸ்டீன்,
2001-ல் பிலிப்பைன்ஸில் நடந்த இரண்டாம் மக்கள் சக்தி புரட்சியில் எஸ்எம்எஸ் உரைச் செய்திகள் முக்கிய பங்கு வகித்தன. இது தான் டிஜிட்டல் கால போராட்டங்களின் தொடக்கமாக அமைந்தது என இந்த நிகழ்வை இன்னும் பின்னோக்கி பார்க்கிறார்.
ஆனால், இப்போது மொபைல் போன்கள், சமூக ஊடகங்கள், மெசேஜிங் ஆப்கள், மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் பரவலான பயன்பாடு மக்களை ஒன்றிணைப்பதை மிக எளிதாக்கியுள்ளது. இதுதான் ஜென் சி வளர்ந்த சூழல். இப்படித்தான் அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் ஒருங்கிணைப்பதும் இதன் இயல்பான வெளிப்பாடு தான்,” என்று கூறுகிறார். இதை நாம் எல்லா நாடுகளுக்கும் பொருந்திப் போவதைப் பார்க்க முடிகிறது.
இந்தியாவில், குறிப்பாக மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்கள் மைத்தேயி சமூக ஆண்கள் கும்பல் ஒன்றால் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ ஒன்று 2023 இல் (ஜூலை 19) வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதும், மணிப்பூரில் லட்சக்கணக்கான குக்கி இன மக்கள் கிளர்ந்தெழுந்ததையும் நாம் பார்த்திருக்கிறோம்.
அதே போல், தமிழ்நாட்டில் 2017 இல் நடைபெற்ற சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் என்பது இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். சல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டுக்கு வெளியேயும் தைப் புரட்சி, மெரீனாப் புரட்சி, இளைஞர்கள் புரட்சி என்று பல்வேறு பெயர்களால் இன்றும் குறிக்கப்படும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் பல லட்சக்கணக்கான இளைஞர்களை எந்தக் கட்சியின் தலைமையும் இல்லாமல் திரட்டியதை நாமறிவோம். சமூக ஊடகங்கள் இதில் பெரும் பங்காற்றின. இப்படி சமீப காலமாக இணைய ஊடகங்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டங்கள் நடக்க தொடங்கி உள்ளன.
சமூக ஊடகங்களின் மூலம் பதியப்படும் பதிவுகள் இப்போது முன்பை விட மிகவும் வேகமாகவும் தொலை தூரங்களுக்கும், மூளை முடுக்கெல்லாம் பரவுகின்றன. இது கோபத்தையும் ஒற்றுமையையும் அதிகரிக்கிறது.
“சமூக ஊடகங்கள், சாதாரண பதிவுகளை அரசியல் ஆதாரமாக மாற்றிவிட்டன. பல சமயங்களில் அவை மக்களை ஒருங்கிணைக்கும் குரலாக மாறுகின்றன” என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர் அதீனா சரன்னே ப்ரெஸ்டோ கூறுவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில், அப்போராட்டங்கள் கடும் அடக்குமுறைக்கும் ஆளாக்குகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். போராட்டத்தை வழிநடத்த அரசியல் அனுபவமுள்ள தலைமையற்ற இயக்கங்கள் போராட்டத்தின் தன்மையை மாற்றிவிட வாய்ப்பு உள்ளன.
சமூக ஊடகங்கள் நீண்டகால மாற்றத்திற்காக வடிவமைக்கப்படவில்லை. அவை அல்காரிதம்கள், வெறுப்பு உணர்வு மற்றும் ஹேஷ்டேக்குகளை நம்பியிருக்கின்றன,” என்று ஸ்டீவன் ஃபெல்ட்ஸ்டீன் கூறுவதை நாம் மறுக்க முடியாது. அதனால், உண்மையான மாற்றம் ஏற்பட, சமூக வலைதளங்களில் தொடங்கும் இயக்கங்கள் நீண்டகால பார்வையுடனும், உண்மையான மனித உறவுகளுடனும் இணைந்த அமைப்பாக மாற வேண்டும்.
சமூக வலைதளப் போராட்டங்களை வேலைநிறுத்தங்கள், பேரணிகள் போன்ற பாரம்பரிய எதிர்ப்பு வடிவங்களுடன் அமைப்பு ரீதியாக இணைக்க வேண்டும்.
இந்தியாவில் அரசியல் ரீதியான, அமைப்பியல் ரீதியான வலுவான தலைமைகளைக் கொண்டு அமைப்பாக்கப்பட்ட தேசிய விடுதலை இயக்கங்கள், மாவோவிய இயக்கங்கள், பொதுவுடமை இயக்கங்களே ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் லடாக் ஜென் தலைமுறையினர் மற்றும் பிற லடாக்கியர்கள், மாநில அந்தஸ்து மற்றும் அரசியல் சாசனத்தின் ஆறாவது அட்டவணையின் கீழ் சிறப்புப் பாதுகாப்பைக் கோரி, அமைதியான போராட்டங்களை நடத்தினர். ஆனால், செப்டம்பர் 2025-ல் இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது, இதில் நான்கு பேர் உயிரிழந்ததோடு முடிவுக்கு வந்தது.
எனவே, சமூக ஊடகங்களின் மூலமாக ஒருங்கிணைக்கப்படும் போராட்டங்கள் சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகளுக்கிடையேயான ஒத்துழைப்பை உருவாக்கும் கூட்டணிகள் முக்கியமானவை. எனவே, இசட் தலைமுறைக்கு அமைப்பின் அவசியத்தை நாம் உணர்த்த வேண்டும், முகநூலும், வாட்ச்அப் - மட்டும் புரட்சியை உருவாக்க முடியாது என்பதை புரிய வைக்க வேண்டும்.
ஒரு காலத்தில் அரசியல் விவாதங்களின் துடிப்பான மையங்களாக இருந்த பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கத் தேர்தலை தடை செய்து விட்டு அவர்களை தற்குறிகள் என்று நாம் இன்று கூறுவது சரியான போக்கு அல்ல. அதே போல் அவர்களது போராட்டத்திலிருந்து நாம் விலகி நிற்காமலும் நமது போராட்டங்களிலிருந்து அவர்களை விலக்கி வைக்காமல் எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டும்.
இசட் தலைமுறையினர் மிகவும் துடிப்பானவர்கள், தெளிவானவர்கள், எதையும் விரைவாக உள்வாங்கிக் கொள்ளக் கூடியவர்கள் அதே நேரம் விளைச்சலை உடனடியாக எதிர்பார்க்கக் கூடியவர்கள். எனவே அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களை அமைப்பாக்கி, அரசியல் படுத்தி எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.
இந்தியாவில் அனைத்து நெருக்கடிகளையும் இளந்தலைமுறை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான நெருக்கடிகள் இல்லை, இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களும் பல்வேறு விதமான நெருக்கடி சந்தித்து வருகின்றன. அதை இளைஞர்கள் புரிந்து கொண்டு தான் இருக்கின்றனர், உள்ளுக்குள் கோபத்தை வைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர், அதை தங்களது சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.
அவர்களுக்கு அமைப்பின் தேவையை உணர்த்தி மாரக்சிய-லெனினியக் கோட்பாட்டின், பெரியார் அம்பேத்கர் கருத்தியலின் தேவையை புரிய வைத்து அமைப்பாக்குவோம். அதன் வழி மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டமைப்போம்.
- க.இரா.தமிழரசன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்