அண்மையில் இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை மூன்று பொதுவுடைமைக் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ளன.
அதற்கென்று பன்னிரண்டு பேர் கொண்ட குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அரசியலுக்காக அல்லாமல் தமிழர் உரிமைகளுக்காகவும், இடதுசாரி அரசியலைப் பரப்புவதற்காகவும் இந்த ஒருங்கிணைப்பு நடந்துள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்த ஒருங்கிணைப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். அதேபோது, அவர்கள் மேலும் சிலவற்றைக் கவனிக்கவும் மீளாய்வு செய்யவும் வேண்டிய கருத்துகளையே கீழே குறிப்பாகக் கூறியிருக்கிறோம்.
சாதி ஒழிப்பு நோக்கம் கொண்டோர், பெரியாரிய உணர்வாளர்கள், அம்பேத்கரிய உணர்வாளர்கள், திருவள்ளுவ அறநெறி ஒப்புரவியர்கள்... எனப் பொதுமைக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட அனைவரும்தான் உங்களை நோக்கிப் பேசுகிறோம். நூறாண்டுகளுக்கும் மேலாகப் பொதுவுடைமைக் குமுகத்தை (சமூகத்தை) உருவாக்கும் இலக்கு நோக்கிச் செயல்பட்டு வருகிற உங்கள் கட்சிகளிடம்தான் பேசுகிறோம்.
பிரித்தானிய வல்லாட்சியர் தங்கள் சுரண்டல் நலனுக்காக உருவாக்கிய இந்திய அரசை அப்படியே தங்கள் அதிகார நலனுக்காக உருப்படுத்திக் கொண்டவர்கள் ஆரியப் பார்ப்பனியக் கருத்துடையவர்கள். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். எனும் இயக்கத்தைத் தொடங்கி, தங்களுடைய கருத்துடையதாகவே இந்தியா இருக்க வேண்டும் என்பதற்காக அதற்குப் பாரததேசம், இந்துஸ்தானம் என்றெல்லாம் பெயர்களைப் புனைந்து கொண்டதோடு, பழம்புராணக் கதை அளப்புகளை எல்லாம் வரலாறு போல் திரித்து இந்திய வரலாறு என்று உருவாக்கிக் காட்டினர். பல்வேறு மொழி, இன, குமுக, வரலாற்று வாழ்வியல் முறைகளைக் கொண்ட அடையாளங்களை எல்லாம் மறுத்து இந்தியாவை ஒற்றைக் குமுகம் போல் அடையாளப்படுத்திப் பரப்பி வருகின்றனர்.
ஆனால், பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் உள்ளிட்ட பல பகுதிகளை இணைத்துப் பிரிட்டிஷார் 'இந்தியா' எனப் பெயரிட்டு உருவாக்கியபோது, பொதுவுடைமையாளர்கள் தாங்கள் உருவாக்கிய கட்சிக்கு 'இந்தியப் பொதுவுடைமைக் கட்சி' என்று பெயரிட்டுக் கொண்டனர். பாகிஸ்தான், வங்காளம், நேபாளம் இவையெல்லாம் பிரிக்கப்பட்டு எஞ்சிய பகுதிதான் இந்தியா என்ற பின்னரும், பொதுவுடைமையாளர்களும் அந்த எஞ்சிய பகுதியையே இந்தியா என்று ஏற்றுக்கொண்டனர். இந்தியா என்பதை ஒற்றைக் குமுக அமைப்பைக் கொண்டதாகவும் ஒப்புக் கொண்டனர்.
ஆரியப் பார்ப்பனியக் கருத்தாளர்களும், காங்கிரஸும் இந்தியாவைத் தேசம் என்றபோது, இவர்களும் இந்தியாவைத் தேசம் என்றனர். எதனினும் இந்தியத் தேசிய ஒற்றுமையே அடிப்படையானது என்று காங்கிரஸ்காரர்களும், ஆர். எஸ். எஸ்.-உம் சொல்லும்போது, பொதுவுடைமைக் கட்சியினரும் தேச ஒற்றுமையே முதன்மையானது என்று கூறிக் கொண்டனர்.
பிரிட்டிஷ் இந்திய ஆண்டைகளின் இந்தியாவையும், அதன் பிறகு ஆரியப் பார்ப்பனிய அதிகார வகுப்பின் இந்தியாவையும் பாதுகாப்பதுதான் பாட்டாளி வகுப்பின் அரசியல் என்பதான அரசியல் மயக்கம் அவர்களிடம் நோய் போல் தொற்றிக்கொண்டது.
இந்தியாவிற்குள் அடக்கப்பட்டிருக்கும் பல்வேறு தேசிய இன மக்களின் மீதான அடக்குமுறைகளை எதிர்த்துப் பொதுவுடைமைக் கட்சிகள் குரல் கொடுத்து விடவில்லை; போராடிடவில்லை. அது பாட்டாளி வகுப்பைப் பிரிப்பதாகும் என்றும், பாட்டாளிகளுக்கு மொழி இல்லை, இனமில்லை, தேசம் இல்லை என்றும் தேசிய இனங்களின் பாட்டாளிகளிடம் பேசத் தொடங்கி விட்டனர்.
வியட்நாம், கம்பூச்சியா, லாவோஸ் ஆகிய தேசங்களை இணைத்த இந்தோசீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1930-இல் தொடங்கப்பட்டு, நடைமுறைத் தவறின் காரணமாக மீளாய்வு செய்து, 1951-இல் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் பிறகு லாவோஸ் கம்யூனிஸ்ட் கட்சியாகவும், கம்பூச்சியா கம்யூனிஸ்ட் கட்சியாகவும் தனித்தனியே கட்சிகள் கட்டிப் புரட்சி செய்து உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவின.
ஆனால், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அந்த வகையில் எந்தத் தண்திறனாய்வும் (சுயபரிசீலனையும்) செய்துகொள்ளவில்லை. இந்தியாவிற்குள் இருக்கிற தேசிய இனங்களின் உரிமைகளைப் பற்றிக் கவலைகொள்ளவில்லை. அந்தத் தேசிய இனங்கள் கடுமையாக இந்திய அதிகார வகுப்பினால் ஒடுக்கப்பட்டபோது, நசுக்கப்பட்டபோது கூட அவற்றிற்காக, அவற்றின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவில்லை. மாறாக, "இந்திய ஒருமைப்பாடு, இந்திய ஒருமைப்பாடு" என்று இந்திய அதிகார வகுப்போடு இணைந்து கொண்டு தாங்களும் வறட்டுக் கூச்சலே போட்டு வந்தனர்.
மேலும், இந்தியாவை ஓர் ஒற்றைக் குமுக அமைப்பாகவே அரசியல்வழி வரையறுத்துக்கொண்டனர். அரைக்காலனிய, அரைநிலவுடைமை அமைப்பு என்றனர். 'இந்தியப் பாட்டாளி வகுப்பு' என்று ஒட்டுமொத்தமாக இந்தியாவில் அடைக்கப்பட்டுள்ள பாட்டாளி வகுப்புகளை எல்லாம் ஒரே வகுப்பு அடையாளத்தோடு நிறுத்தினர்.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியை எதிர்த்துச் சில சூழல்களில் பாஜகவோடும், பாஜகவை எதிர்த்துப் பல சூழல்களில் காங்கிரஸோடும் கூட்டுச்சேர்ந்தே தேர்தல் அரசியலில் பங்கு எடுத்துக்கொண்டனர்.
இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனப் பாட்டாளி வகுப்புகளைப் புரட்சி நோக்கம் கொண்டு குமுக மாற்றத்திற்காக அணிதிரட்டாமல், தேர்தல்களில் வாக்கு போடுவதற்காக மட்டுமே அரசியல் பேசி வருகின்றனர் பொதுவுடைமைக் கட்சியினர்.
தமிழ்நாட்டைப் பொறுத்த அளவு, திமுகவோடு, அதிமுகவோடு என்று மாறி மாறி அரசியல் கூட்டணி வைத்துத் தங்கள் இலக்கு நோக்கிச் செல்லாமல், தேர்தல் அரசியல் கூட்டணிக் கட்சிகளின் அரசியலையே தாங்களும் பேசி ஏறத்தாழ 100 ஆண்டுகள் வரலாற்றைத் தொலைத்து நிற்கின்றனர் பொதுவுடைமைக் கட்சியினர்.
இறுதியாக இப்போது, குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக விஜய் முதலமைச்சராக ஆவதற்கு என்று கூறி வெளியில் இருந்து ஆதரவு என்கிற அளவில் முடிவெடுத்திருக்கின்றனர்.
பன்னாட்டு முதலாளியத்திற்கு எதிராகப் போராடுகிற, போராடி உழைக்கும் மக்களின் நலனுக்கான ஒரு புதிய குடியாட்சி அமைப்பை நிறுவுகிற நோக்கம் நூறாண்டுகளுக்குப் பிறகும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
வருகிற ஆகஸ்ட் 6-ஆம் நாள் தொடங்கி ஆகஸ்ட் 15-ஆம் நாள் வரை இந்தியா முழுமையும் அரசியல் விழிப்புணர்வு இயக்கத்தை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி நடத்தப் போகிறதாம். செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் இடதுசாரிகள் இணைந்து பெரும் பேரணியை நடத்தப் போகிறார்களாம்.
அத்தகைய இணைப்புகளும், பேரணிகளும் வரவேற்புக்குரியதே என்றாலும், அவர்கள் முன்வைக்கிற அரசியல் விழிப்புணர்வு என்பது என்ன என்பதே முதன்மையானது. 'நாட்டைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம், அரசியல் சட்டத்தைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் முடிவடைகிறது.
செப்டம்பர் 1-ஆம் நாள் டெல்லியில் மிகப்பெரிய செங்கொடிப் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதாம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி. அரசியல் விழிப்புணர்வு மூலமாகக் கிராமம் முதல் பெருநகரம் வரை மக்களைச் சந்தித்து நாட்டில் உள்ள தற்போதைய சிக்கல்கள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறப் போகிறார்களாம்.
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு இந்தியாவின் வளர்ச்சிக்கும், கட்டமைப்புக்கும் அடித்தளமிட்டாராம்; பொதுத்துறை நிறுவனங்களை ஏற்படுத்தினாராம்; கனரகத் தொழிற்சாலைகளை உருவாக்கினாராம். நேரு காலத்தில் திட்டக்குழு மூலம் இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சம பொருளாதாரம் ஏற்படுத்தப்பட்டதாம். அதன் மூலம் மாநிலங்களுக்குப் பாகுபாடின்றி நிதிப் பங்களிப்பு வழங்கப்பட்டதாம். எனவே, நேருவுடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவது சரியானது அல்லவாம் என்று அந்தக் கட்சி வெளியிட்ட அறிக்கை சொல்லுகிறது.
எவ்வளவு பெரிய கொடுமை! பொதுவுடைமைக் கட்சியின் அளவு இவ்வளவுதானா? புரட்சிவழிபட்ட குமுக மாற்றம் என்பது என்ன ஆனது?
மாநில உரிமைகளையெல்லாம் முற்றும் முழுமையாகப் பறித்துக்கொண்டிருக்கிற வல்லாதிக்க இந்திய அரசைக் கண்டித்து ஒரு வரியாவது வாய் திறக்க முடியாதா?
இருக்கக்கூடிய அரசு அமைப்பு முழுக்க முழுக்கப் பன்னாட்டு முதலாளியத்தின் எடுபிடி அரசியல் அமைப்பாக இருக்கிறது என்று அம்பலப்படுத்தி, உழைக்கும் மக்கள் தலைமையிலான ஓர் அரசை நிறுவுகிற முனைப்பைப் பொதுவுடைமைக் கட்சிகள் அனைவரையும் இணைத்துத் தங்கள் தலைமையில் மேற்கொள்வதாக அறிவிக்கிற துணிவு அவற்றிடம் இருக்க வேண்டாமா?
இந்தியாவை ஒன்றியம் என்று அடையாளப்படுத்திப் பேசுகிற பொதுவுடைமைக் கட்சி, மாநிலங்களின் உரிமைகளில் மாநில அரசுகளின் வழியான இணைப்புகளின் வழி உண்மையான ஒன்றியத்தைக் கட்டமைப்பதற்கு முயல வேண்டாமா?
என்ன அரசியல் நியாயத்தோடு, தமிழ்நாட்டில் திமுகவோடும், இந்தியாவில் காங்கிரஸோடும் கூட்டுச் சேர்ந்துகொண்டு எதிர்காலத்தில் யாரை யாரையெல்லாம் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து ஆட்சியில் அமர்த்தப் போகிறார்கள்?
இவைதாம் பொதுவுடைமைக் கட்சிகள் செய்கிற அரசியல் பணிகளா? மிகவும் மனம் வருந்தியும், சினத்தோடும் இந்தக் கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. அன்புத் தோழர்களே, இனியாவது மீளாய்வு செய்யுங்கள்.
மாநிலங்களின் அளவில் முதலில் கட்சிகளைக் கட்டுங்கள். உங்களின் அகில இந்தியக் கட்சியை 'இந்தியக் கட்சி' என்றில்லாமல், 'மாநிலக் கட்சிகளின் ஒன்றியக் கட்சி'யாக மாற்றுங்கள்.
அதே தன்மையில் ஒவ்வொரு மாநிலங்களும் மாநிலங்களுக்கான அரசியல், பொருளியல் நிலைப்பாடுகளைப் பகுத்தாய்ந்து வேலைத்திட்டங்களை முன்வையுங்கள்.
தமிழ்நாட்டில் தமிழ்நாட்டின் பொதுவுடைமைக் கட்சிகளின் தலைமையில் அனைத்துக் ஜனநாயகக் கட்சிகளை, இயக்கங்களை எல்லாம் ஆதரவாக அணிசேருங்கள். உங்களை, நீங்கள் மேற்கொண்டு இருக்கிற பொதுவுடைமைக் குமுகத்தைப் படைக்கும் இலக்கை நோக்கிச் செயல்பட வழிதேடுங்கள்.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் இந்தியா, இந்திய ஒற்றுமை, இந்தியப் பாதுகாப்பு என்று பேசி இந்திய அதிகார வகுப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?
இந்திய முதலாளியச் சார்புக் கட்சிகளை அரவணைத்துக் கொண்டோ, அவற்றுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டோ அரசியல் பேசிக் கொண்டிருப்பீர்கள்?
இன்றைக்கு அடிப்படைத் தேவைக்குரியவை:
- இந்தியாவைக் காப்பதும்...
- மக்களாட்சியைக் காப்பதும்...
- இந்திய அரசியல் சட்டத்தைக் காப்பதும்... என்பதல்ல.
மாறாக,
- மக்களைக் காப்பதும்,
- மாநிலங்களைக் காப்பதும்,
- மாநில அரசுகளை அதிகாரமிக்கதாக மாற்றுவதும்,
- இந்தியப் பார்ப்பனிய பாசிச அதிகார வகுப்பை வீழ்த்துவதும்,
- பன்னாட்டு முதலாளியத்தை விரட்டுவதும்...
உடனடித் தேவைகளாக இருக்கின்றன.
இவற்றைச் செய்வதன் வழியேதான் 'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம, ஒரே வரலாறு, ஒரே பண்பாடு' என்கிற பாசிச வெறித்தனத்தை வீழ்த்த முடியும்; பன்னாட்டு முதலாளியத்தை விரட்டியடிக்க முடியும்.
எனவே மீளாய்வு செய்யுங்கள் தோழர்களே. தமிழக வரலாற்றில் உங்களின் செயல்பாடுகள் தமிழக மக்களால், இளைய தலைமுறையினரால் ஏற்கப்படுகிற அளவிற்குத் திட்டமிடுங்கள்...
- பொழிலன், தமிழக மக்கள் முன்னணி