சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து 59 கிமீ தூரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய பசுமை வானூர்தி நிலையத் திட்டத்தை இந்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த விமான நிலையம் 4,700 ஏக்கரில் அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி 4,700 ஏக்கரில் 2,900 ஏக்கர் நஞ்சை, புஞ்சை விவசாய நிலங்களும், 1,200 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலைகளும் அடங்குகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவ மன்னன் கம்பவர்மனால் கட்டப்பட்ட கம்பன் கால்வாய் ஏழு கி.மீ. தூரத்துக்கு அழிக்கப்படுகிறது. பாலாற்றில் இருந்து வரும் உபரிநீர் 73 ஏரிகளை நிரப்பிய பின்னர், 43 கிலோமீட்டர் தூரம் பயணித்து, திருப்பெரும்புதூர் ஏரி வழியாகச் செம்பரம்பாக்கம் ஏரியை அடைந்து சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அமைப்பு முற்றிலுமாகத் தகர்க்கப்படவிருக்கிறது.

parandurஇந்தத் திட்டத்தால் ஏகனாபுரம், மேலேரி, நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம் ஆகிய ஆறு சிற்றூர்கள் முழுமையாக அழிக்கப்படுகின்றன. மேலும் அக்மாபுரம், பரந்தூர், குணகரம்பாக்கம், சிங்கிளிபாடி, பொடவூர், இடையார்பாக்கம், வளத்தூர் ஆகிய ஏழு சிற்றூர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன.

ஆக மொத்தம் பதிமூன்று சிற்றூர்களின் விவசாய விளைநிலங்களையும், தலைமுறை தலைமுறையாக மக்கள் வாழ்ந்த வீடுகளையும் அழித்து, இப்பகுதியைத் தனியாருக்குத் தாரைவார்க்க ஒன்றிய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்படுகின்றன. எனவே இம்மக்கள் புதிய விமான நிலையத்துக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

இம்மக்களின் நிலங்களுக்கு .3.5 மடங்கு விலை தருகிறோம், அரசு வேலை தருகிறோம் என்றெல்லாம் மாநில அரசு ஆசை வார்த்தைகள் கூறி வருகிறது. ஆனால் இப்பகுதி மக்களோ அவர்களுடைய நிலங்களை, வீடுகளை, பாரம்பரியத்தை, பூர்வீகத்தை, கலாச்சாரத்தை, கோவில்களை, வரலாற்றை, நினைவுகளை, அடையாளங்களை இழக்கத் தயாராக இல்லை

பரந்தூர் பசுமை வானூர்தி நிலையம் திட்டத்திற்கு எதிராகப் பதிமூன்று சிற்றூர் மக்களும் தத்தம் சிற்றூர்சபைக் கூட்டங்களில் நான்கு முறை தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கின்றனர். பத்துக்கும் மேற்பட்ட முறை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களைச் சந்தித்து, இத்திட்டத்தால் ஏற்படும் பிரச்சினைகளை எடுத்துக் கூறியிருக்கின்றனர்.

தமிழ்நாட்டு அரசின் மூன்று அமைச்சர்களோடு இரண்டு முறை பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசோ அல்லது முதலமைச்சரோ பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக இதுவரை எதையும் சொல்லவுமில்லை, செய்யவுமில்லை.

மேற்படி பதிமூன்று சிற்றூர்களில் வாழும் மக்களிடம் இதுவரை கருத்துக்கேட்புக் கூட்டம் எதுவும் முறையாக நடத்தப்படவில்லை. ஆனால் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட காவல்துறை தடுப்புக்கள் அமைக்கப்பட்டு, இம்மக்கள் முள்ளிவாய்க்கால் வதைமுகாம் போன்றதொரு நிலையில் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப் பட்டிருக்கின்றனர்.

போராட்டக் குழுவினர் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து இத்திட்டத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி எடுத்துக் கூறியிருக்கின்றனர். பல சமூகக் களப்பணியாளர்களும் களஆய்வுகள் செய்து, மக்களின் கருத்துகளைக் கேட்டுப் புதிய விமான நிலையத் திட்டத்தைக் கைவிடும்படி அரசிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

பதிமூன்று கிராம மக்களும் உண்ணாவிரதப் போராட்டம், கருப்புக்கொடிப் போராட்டம், சட்ட மாமேதை அம்பேத்கார் சிலையிடம் மனு அளிக்கும் போராட்டம், கிராமசபைக் கூட்டத் தீர்மானம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்லும் போராட்டம், தலைமைச் செயலகம் நோக்கிச் செல்லும் போராட்டம், பள்ளிக்கூடப் புறக்கணிப்புப் போராட்டம், தினமும் நடைபெறும் மாலை நேரப் போராட்டம் என இருநூறு நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

ஏராளமான விவசாய விளைநிலங்களையும், குடியிருப்புகளையும் அழித்து வானூர்தி நிலையம் கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை வானூர்தி நிலையத்தின் அருகிலேயே, 59 கிமீ தூரத்தில் இன்னொரு வானூர்தி நிலையத்தைக் கட்டுவது என்பது வானூர்தி நிலைய விரிவாக்கத் திட்டமாகவே அமையும். அது வான்வெளி, தரைவழி போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, ஒலிமாசு, காற்றுமாசு போன்ற மாசுபாடுகளைக் குறைக்க, எந்த வகையிலும் உதவாது.

இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்துக்கும், கேட்விக் வானூர்தி நிலையத்துக்கும் இடையே 45 கிமீ தூர இடைவெளிதான் உள்ளது. நாம் பின்பற்றுவது வெள்ளைக்காரர்களின் வளர்ச்சிச் சித்தாந்தம் என்பதால், இலண்டனைப் பார்த்து அப்படியே செயல்படுகிறோமோ என்கிற எண்ணம் மேலெழுகிறது.

சென்னை மாநகரின் தெற்கே நெருக்கடி குறைந்தப் பகுதியில் புதிய வானூர்தி நிலையம் அமைத்து, நகரின் மையப்பகுதிக்கு மிகுவிரைவுத் தொடர்வண்டி விட்டால், நகரவாசிகளுக்கும் வசதியாக இருக்கும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்ட மக்களுக்கும் அது உதவும். அம்மாவட்டங்கள் வளர்ச்சி பெறவும் புதிய விமான நிலையம் பெரிதும் பயன்படும்.

அந்நிய நாடுகளுக்கும், அவர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தனியார் பெருமுதலாளிகளுக்கும், நில வணிகர்களுக்கும், சக்திமிக்க ஒப்பந்தக்காரர்களுக்கும், இடைத்தரகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஏராளமாக கமிஜனும், கையூட்டும் பெற்றுத்தரும் இந்தத் திட்டம் மக்களுக்கானத் திட்டம் அல்ல.

புதிய வானூர்தி நிலையம் திட்டமிடப்படும் நிலையிலேயே மேற்படி பதிமூன்று சிற்றூர்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சொத்து விலை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. வானூர்தி நிலையத்துக்காக ஓர் ஏக்கர் நிலத்தை விற்கும் ஒருவர் அந்தத் தொகையைக் கொண்டு அருகமைப் பகுதிகளில் 10 சென்ட் நிலத்தைக்கூட வாங்க முடியாது என்பதுதான் மெய்யான கள நிலவரம்.

தமிழ்நாடு அரசு காவல்துறையை வைத்து எத்தனை அடக்குமுறைகளைக் கையாண்டாலும், போராட்டம் தொடரும். புதிய வானூர்தி நிலையத் திட்டத்தை அரசு கைவிட்டால் மட்டுமே போராட்டம் நிறுத்தப்படும்.

- எஸ்.டி.கதிரேசன், பரந்தூர் பசுமை வானூர்தி நிலையத் திட்ட எதிர்ப்புக் குழு, ஏகனாபுரம் சிற்றூர் குடியிருப்போர் & விவசாய நலக் கூட்டமைப்பு.

Pin It