தமிழ்நாட்டரசு ஒரு நாள் வேலை நேரம் 8 மணி என்பதை 12 மணிநேரம் என உயர்த்தி, சட்ட முன்வரைவுக் கொண்டுவந்தது. பின் எதிர்ப்புகளினால் திரும்பப் பெற்றது. இது தொழில்மயமாக்குவதற்கான அரசின் நடவடிக்கைகள், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக இருக்கக் கூடாது என்கிற கருத்தாடலைத் தொடங்கியது. தொழில் மயமாக்கலை ஊக்குவிப்பதன் வழியாக சாதியால் விளைந்த ஏற்றத்தாழ்வை நீக்குவதும் தனியார்மய சந்தையால் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வைப் போக்குவதும் திராவிட ஆட்சிமுறையின் உயர் குறிக்கோளாகும். பொருளுற்பத்தியால் விளையும் வளமையைப் பங்கீடு செய்வதே இந்தச் செயல்முறையாகும். இந்த வகையில் திராவிட ஆட்சி முறையில், முக்கியக் குறிக்கோளில் இருந்து விலகிச் செல்வதாகவே இந்த வேலை நேர மாற்றம் பற்றிய சட்ட முன்வரைவு இருக்கிறது. இந்தச் சட்ட முன்வரைவுத் திரும்பப் பெறப்பட்டிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்து, அதன்மூலம் வேலை வாய்ப்பை உருவாக்குவதே இந்தத் திருத்தத்தின் நோக்கம் எனத் தி.மு.க. அரசு கூறுகிறது. இந்தப் புரிதல் மிகவும் பிழையானதே ஆகும்.

கட்டமைப்பு மாற்றம் பின்நோக்கிச் செல்கிறதா?

இந்தியாவில் கட்டமைவு மாற்றத்தையும் ஏழ்மைக் குறைப்பையும் ஒருசேர நிறைவேற்றிய மாநிலங்கள் சிலவற்றுள் தமிழ்நாடும் ஒன்று ஆகும். மொத்த வேலைவாய்ப்புகளில் வேளாண்மையைச் சார்ந்து இருப்பதன் பங்கு அனைத் திந்தியச் சராசரியைவிட தமிழ்நாட்டில் குறைவாக இருப்பதே இதற்கான முக்கியக் குறியளவு ஆகும். எனினும் இந்தப் போக்கு இப்போது எதிர்மறையாகி வருகிறது. வேலை வாய்ப்பில் வேளாண்மைச் சார்பின் பங்கு 2018-2019-இல் 27 விழுக்காடாக இருந்தது. இது 2020-21-இல் 30 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதையே எண்ணிக்கையில் பார்த்தால் வேளாண்மையைச் சார்ந்து வாழும் மக்கள் 85 இலட்சம் என்பதிலிருந்து 1.05 கோடியாக அதிகரித்துள்ளனர். தொழில் துறையில் ஏற்பட்ட நெருக்கடியால் 20 இலட்சம் மக்கள் வேளாண் தொழிலை நோக்கி விரட்டப்பட்டுள்ள அவலநிலை ஏற்பட்டுள்ளது. உற்பத்தித் தொழில் துறையைச் சார்ந்தவர்கள் விகிதம் 20 விழுக்காட்டிலிருந்து 16.8 விழுக்காடாகக் குறைந்துள்ளது. எண்ணிக்கையில் பார்த்தால் 2011-12-இல் தொழில் துறையில் 65 இலட்சம் மக்கள் என்பது 2020-21-இல் 58 இலட்சமாகச் சரிவேற்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள காலகட்டம் தி.மு.க. ஆட்சியதி காரத்தை ஏற்பதற்கு முந்தியதுதான். ஆனால் இந்தத் தவற்றைத் திருத்துவதற்கு இதுவரை வழிகாணப்படவும் இல்லை; அதற்கான உறுதிமொழி எதையும் அளிக்கவு மில்லை.

சான்றாக த.நா. அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 224 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் உரு.2,73,448 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் எவ்வளவு முதலீடு இதுவரை கிடைத்துள்ளது என்பது தெரியவில்லை.

உறுதியளிக்கப்பட்டுள்ள முதலீட்டினால் 4,10,561 இளைஞர் களுக்கு வேலைகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனைக் கணக்கிட்டால் முதலீட்டிற்கும் வேலைவாய்ப்பிற்குமான விகிதம் 0.01 என்கிற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. உருபா ஒரு கோடி முதலீட்டினால் ஒரு ஆளுக்கும் குறைவாகவே வேலை கிட்டும். இதற்கு முன் இருந்த விகிதத்தைவிட இது மிகவும் குறைவாகும்.

தொழில் நிறுவனங்கள் பற்றிய ஆண்டு (2019-20) கணக்கெடுப்புப் புள்ளிவிவரப்படி ஒரு முதலீட்டுக்கு உருவாக்கப்பட்டுள்ள (மொத்த முதலுக்கு வேலை பெற்றத் தொழிலாளர் எண்ணிக்கை) வேலைகளின் விகிதம் தமிழ்நாட்டில் 0.58, குசராத்தில் 0.34, மகாராட்டிரத்தில் 0.33 ஆகும். இந்தப் போக்குத் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் ஊதியமும் குறைந்து போகும். வேலைகள் கிடைப்பதும் கானல் நீராக முடிவுறும்.

வரலாற்று நிலையில், வளர்ச்சியின் நோக்கத்தில் முதலீடுகளின் தேவையையும் தொழிலாளர் நலன்கள் ஓரளவுப் பேணிக் காப்பதையும் உணர்ந்து சமன்செய்வதில் தமிழ்நாட்டின் தனித்தன்மை அமைந்துள்ளது. முதலீட்டின் வலிமை அதிகரிப்பின் காரணத்தினால் உலகம் முழுவதும் தேசிய வருமானத்தில் தொழிலாளர் ஊதியத்தின் விகிதம் குறைந்து வருகின்றது. அதேவேளையில் தொழில் உற்பத்தித் துறையில் கூட்டப்பட்ட மொத்த மதிப்பை (Gross Value Added-GVA) வரையறுப்பதில் த.நா.இன் அணுகுமுறையின் விளைவாகத் தமிழ்நாட்டுத் தொழிலாளர் ஊதியத்தின் விகிதம் மற்ற பல மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.

2019-2020-ஆம் ஆண்டிற்கான கூட்டப்பட்ட மொத்த மதிப்பில் (GVA) சராசரியாக ஊதியத்தின் விகிதம் குசராத்தில் 12 விழுக்காடு, மகாராட்டிரத்தில் 14 விழுக்காடு என இருந்த போது, தமிழ்நாட்டில் அவற்றைப் போல் கிட்டத்தட்ட இருமடங்காக 21 விழுக்காடு ஆகும். உலகம் முழுவதிலும் முதலீட்டாளர்களுக்குச் சார்பான கொள்கைகளினால் சந்தையில் தொழிலாளர்களின் தேவை நிலையற்ற போக்கிற்குத் தள்ளப்பட்டதால் கூ.மொ.ம. (GVA)இல் ஊதியத்தின் பங்கு குறைந்துள்ளது. தமிழ்நாடு இதற்கு விலக்கு அல்ல என்றாலும் ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க முடிந்துள்ளது.

இதற்குமுன் தமிழ்நாட்டில் தொழிலாளர் ஊதிய நிலைகள் ஒப்பீட்டளவில் அதிகம் என்பதற்குக் காரணம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறைவாக இருந்ததும் தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்களின் பேரம் பேசும் ஆற்றல் அதிகமாக இருந்ததும் ஆகும். தமிழ்நாட்டில் 2015­2016-இல் நேரடியாக பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் விகிதம் 80 விழுக்காடு; ஆனால் அனைத்திந்திய சராசரி விகிதம் 65 விழுக்காடாக இருந்தது. இந்தப் போக்கு தமிழ் நாட்டில் 2019-2020-இல் 76 விழுக்காடாகச் சரிந்துவிட்ட தற்குக் காரணம் 1970ஆம் ஆண்டைய ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்கு முறை மற்றும் ஒழிப்புச்) சட்டத்தைச் சரியாகவோ, முறைகேடாகவோ பயன்படுத்தியதே ஆகும். இந்தச் சட்டத்திற்குத் தொழிலாளர்களுக்கு எதிராக நீதிமன்றங்களிலும் களத்திலும் தவறான விளக்கமளிக்கப்பட்டதால், தொழிலாளர்களுக்கு எதிரான போக்கு வளர்ந்தது. தமிழ் நாட்டில் தொழிலாளர்களின் முன்னைய மேம்பட்ட நிலை இப்போது தேய்ந்து வருகிறது. தொழிலாளர்களின் குறைகளைக் களைந்திட மாநில அளவிலும் தேசிய அளவிலும் முத்தரப்புக் குழுக்கள் அமைக்கப்பட ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்று தி.மு.க.வின் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் அறிக்கையில் உறுதிமொழி அளித்திருந்தது.

இந்தப் பின்நோக்கிய நிலையை தமிழ்நாடு பின்பற்றத் தேவையில்லை. தொழிலாளர்ச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதோ, முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகைகளை அளிப்பதோ மட்டுமே தொழிற் போட்டியில் வளர்ச்சியடை வதற்கான வாயில் அல்ல. தமிழ்நாட்டின் சாதகமான நிலை என்பது திறமையான பணியாளர்கள், வலுவான உள் கட்டமைப்பு, நிலவும் சாதகமான புறநிலை ஆகியவற்றால் அமைகிறது. மேலும் உற்பத்திக்கான பொருள்களைத் தருவிப்பதற்கும் உற்பத்திச் சரக்குகளை அனுப்புவதற்கும் உள்ள இணைப்பு வசதி, அவை நிர்வகிக்கப்படும் முறை ஆகியவற்றின் மூலம் ஒரு தொழில் நிறுவனத்தின் உற்பத்திச் செலவு குறைவதற்கான நிலை அமைகிறது. இவற்றை மேலும் முறைப்படுத்துவதே தொழில் வளர்ச்சியைப் பெருக்கும்.

செயல் திறப்பாடும் வேலைவாய்ப்பின் எதிர்காலமும்

தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக உற்பத்தித் துறையில் தானியங்கி தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புதிய வகை இயங்குத் தளங்களில் பொருளாதாரச் செயல்பாடு வளர்ந்து வருகிறது. இவற்றின் காரணமாக தொழிலாளர்கள் முன்பு வேலை செய்த பணிகள் கைவிடப்படுவதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஊதியத்தின் விகிதம் குறைந்து வருவதும் அனைத்து நாடுகளிலுமே தவிர்க்க இயலாததாகிவிட்டது. ஒரு செயல்திறனில் சராசரி பயன்பாட்டுக் காலம் மேலும் மேலும் சுருங்கி வருகிறது. இனிவரும் காலங்களில் உற்பத்தித் தொழில் மட்டுமே வேலை வாய்ப்புக்கானத் தீர்வாக இராமல் போகலாம். சேவைத் துறைகளில் அறிவுசார் அடித்தளம் தேவைப்படும் தொழில்களுக்கு மாற வேண்டியது தவிர்க்கவியலாது.

எனினும் உயர்கல்வியில் தமிழ்நாடு அடைந்துள்ள சாதனை -உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் அனைத்திந்திய சராசரி 27 விழுக்காடாக உள்ள போது தமிழ்நாடு 51.4 விழுக்காடாக இருப்பது இந்த மாற்றத்தை எதிர்கொள்ள உதவாது. தகுநிலைக் குறைபாடுடையப் பள்ளிக் கல்வி, உயர்கல்வியில் உள்கட்டமைப்புக் குறைபாடு, தொழில்முறைக் கல்வியில் பயன்பாட்டுத் திறன் பயிற்சி யளிப்பதில் குறைபாடு ஆகியவை செயல்திறனிலும் பணிக்கானத் தகுதியாக்கத்திலும் உள்ள போதாமையை ஏற்படுத்தியுள்ளது. இது இளைஞர்கள் வேலை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் நிலை மாநகரங்களின்பால் மென்பொருள் துறைகளை ஈர்த்துள்ள அண்மைக்கால முயற்சிகள் ஊக்கமளிப்பதாக உள்ளது. நலிந்த நிலைப் பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டம், செயல்திறன் மேம்படுத்தும் திட்டம் ஆகியன பாராட்டுக்குரியவையாகும். எனினும் இந்த நடவடிக்கைகள் வேலை வாய்ப்பைப் பெற்றிடுவதில் எந்த அளவுத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

நல்ல ஊதியமும் கண்ணியமாக பணிபுரியும் சூழ்நிலை யும் உறுதிச் செய்திடத்தக்கச் சிறந்த கூறுகள் அடங்கிய சமூகக் கொள்கையும் தொழில்மயமாக்கும் செயல்முறைகளையும் உருவாக்கிட புதிய அணுகுமுறைகளே தமிழ் நாட்டிற்கு இப்போதைய தேவையாகும்.

- ஆ.கலையரசன்

தமிழில்: சா. குப்பன்

(The Hindu நாளேட்டில் 19.06.2023 அன்று வெளியான கட்டுரை) 

(இக்கட்டுரையாளர் ஆ. கலையரசன் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத் தெற்காசிய நிறுவனத்தில் இணைந்துள்ள ஆராய்ச்சியாளர்.)

Pin It