1639 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரண்டு பேர் விஜய நகர ஆட்சியாளரின் முகவர்களிடம் கடற்கரை ஒட்டிய சிறுபகுதியை பெற்றதுவே இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை. இன்றைய தமிழ்நாட்டின் செயலகம், சட்டசபைக் கூட்டம் நடக்கும் இடம். பின் மெட்ராசு பட்டினம். இத்துனணக் கண்டத்தின் தெற்குப்பகுதி மக்களை மதராசி என்று அழைக்கப்படுவதற்கும் இதுவே காரணமாகிப் போனது. நவீன அறிவியல் தொழில்நுட்ப இயக்கப் போக்கின் துணை கொண்டு இந்நகரத்தின் பெரும்பசிக்கு அக்கம்பக்க சிற்றூர்களும் வரலாற்றுப் பெருமை கொண்ட பேரூர்களும் இறையாகின. தற்போதைய மெட்ராசு - சென்னை யாரும் காணக்கூடியதே. இதன் வரலாற்றுச் சக்கரங்களால் அழுத்தப்பட்ட மண்ணின் மக்களது கதையை யாரும் எழுதுவதில்லை.

ஆனால், இன்று பரந்தூர் மக்கள் தங்கள் வாழ்வாதாரமான வயல்வெளிகளே - வரலாற்று வழிவந்த நீர் நிலைகள் கொண்ட நிலங்களை புதிய விமான நிலையம் அமைப்பதற்கு அரசு கையகப்படுத்தப்படும் என்றவுடன் அச்சத்தில் உறைந்துபோய்விடாமல் போராடத் துவங்கி யுள்ளனர். நவீனத்தின் கோரப் பசியை எதிர்த்து சிங்காரச் சென்னையின் விரிவாக்கம் - அச்சரபாக்கம் முதல் அரக்கோணம் வரை கேள்விக்குள்ளாகியுள்ளது. அரசு, வளர்ச்சி என்ற ஒற்றைச் சொல்லை வழக்கமாக உதிர்க்கும். ஆயிரத்தெட்டு காரணங்களைக் கூறி தனது வாதத்தை நியாயப்படுத்தலாம். அனால், வேளாண் உற்பத்தி நிலங்களின் தொடர் அழிவு வளர்ச்சியாகாது என்றே நாம் கூற வேண்டியுள்ளது. எப்படி?parandur airportநவீன தொழில்நுட்பங்கள் வளமையான உழவு நிலங்களையே காவு கொள்கிறது. மெட்ராசைச் சுற்றியுள்ள பகுதியைப் பாருங்கள். திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், இராயபுரம், திருவொற்றியூர் எனக் கூறிக் கொண்டே போகலாம். இவற்றின் ஊடாக கூவமும் அடையாரும் பக்கிங்ஹாம் கால்வாயும் இன்ன பிறவற்றின் பகுதிகளாக ஏராளமான ஏரிகள் நிறைந்திருந்தன. இவை அனைத்தும் நகரமாக்கப்பட்டு அழிந்தன என்பதே பதிவுகள். ஆக வேளாண் நிலங்களே புதிய நகரங்களாக மாற்றப்பட்டன. பிற பகுதிகளில் இருந்து வந்தவர்கள் பெரும் வணிகர்களாகவும் பெரும் நிலத்தை வளைத்து தோட்ட வீடுகளாகவும் மாற்றப்பட்டன. கூடவே தொழிற்சாலைகளும் உருவாயின. தெற்கு பகுதியின் தலைநகரமாக ஆங்கிலேயனால் வடிவமைக்கப்பட்ட நகரம் இன்று மேலும் மேலும் விரிந்து காஞ்சிபுரம் வரை வந்துவிட்டது. மூடப்பட்ட நோக்கியா தொழிலகம் (இது மூடப்பட்டபோது கலைந்தது கனவுகள் என்று வார இதழ் கட்டுரை வரைந்தது) போர்டு, நடப்பில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலம் சிட்கோ இன்னும் இதற்குத் துணையான ஏராளமான தொழிற்சாலைகள், இவற்றில் பணியாற்றுபவர்களுக்கென வீட்டுமனைகள் சாலைகள் இவற்றை ஒட்டிய கடை கண்ணிகள், கல்வி நிலையங்கள் என்று இப்பரப்பை மனக்கணக்கில் ஏற்றிப் பாருங்கள். இவையனைத்திற்கும் வேளாண் நிலங்களே பலியிடப்பட்டன, இது சென்னைக்கு மட்டுமல்ல. தமிழ்நாடே நரக நகரமாகியுள்ளது. ஆனால், உணவு பாதுகாப்பிற்கு மசோதா மற்றும் சட்டமாக பாராளுமன்ற பேச்சுக்கள் முரண் நகையல்லவா?

வளர்ச்சி வேலைவாய்ப்பு என படாடோபமாக அரசுகள் அறிவித்தாலும் இவை உணவுப் பாதுகாப்பின் மீது எழுப்பப்படும் அழிவல்லவா! பல நவீன தொழிற்சாலைகளை மூடப்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரிய தொழிலகங்கள் சிறு இடத்தில நடத்தமுடியும். மேலும் பொருளாதார மந்தமாக 30 ஆண்டு இடைவெளியில் நடந்துவரும் உலகளாவிய நிகழ்வுப் போக்கு. இதை கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. மேலும் காலநிலை மாற்றம்.

கோவை மருதநிலப் பகுதியில் உருவான பஞ்சாலைகள் இன்று பாழடைந்து காட்சியளிக்கிறது. மேலும், அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியுள்ளன. விஸ்கோஸ் தொழிற்சாலைகள் பெருமாசு காரணமாக மூடப்பட்டு, பெரும்பகுதி என்னவாயிற்று என்று மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதி மக்களைக் கேட்கவேண்டும். ஊட்டி இந்துஸ்தான் போட்டோ நிறுவனம் என்னவாயிற்று? இதுபோலவே பிற இடங்கள் பொட்டால் வெளியாகிடும் நிலை. எதிர்காலப் பொருளாதார மந்தம் இவற்றுள் ஏற்படும் நீர்மாசுவோடு - சூழல் சீர்கேடு பெருமாசு நிகழும்போது நாம் இருக்கமாட்டோம். காங்கீரீட் காடுகள் காட்சியளிக்கும். இதுதான் நமது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் கைமாறா?

புவி வெப்பமயமாக்கல் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொழில் நிலையங்கள், இன்னபிற தொழில்வளர்ச்சிக்கு அவசியம் என காரணம் கூறலாம். இவற்றின் உரிமையாளர்கள் பெரும் பணக்காரர்களாக வலம் வருகின்றனர். நிலத்தை இழந்தவர்கள் பஞ்சைக் பராரிகள் வயிறு நிரம்பாது. வயிற்றுக்கு சோறிடும் நிலங்கள் வானூர்தி நிலையமாகலாம். தானியங்கள் கம்ப்யூட்டரில் விளையாது. கத்தரி, தக்காளி கணினியில் காய்க்காது என்பது வளர்ச்சிக்குத் தெரியாது. தொழிற்சாலைகள் மில்கள் மூடும்போது வேலையிழப்பு என்பது முடிவற்ற போராட்டம். இதை நவீனப் பொருளாதாரம் தீர்க்காது. இது வளர்ச்சி எனும் ஒற்றைவழிப்பாதை கொண்டது. இதற்கு மாற்றாக இன்று sustainable அதாவது நிலைத்த என்ற ஒற்றைச் சொல்லை ஒலிக்கின்றன. ஆக உணவு விளைவிக்கும் நிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும்.

மனிதகுல வரலாற்றில் இயற்கையுடன் சேர்ந்தும் சிதைந்தும் வாழ்ந்துவரும் மனிதன் எதிர்நோக்கும் சூழல் நெருக்கடி அவனை சிந்திக்கத் தூண்டியுள்ளதே சூழல் பற்றிய விழிப்புணர்வு.

நவீனப் போக்கு இயற்கை வளங்களை சூறையாடி வருகின்றன. இயற்கையால் ஜீரணிக்க முடியாத கழிவுகளை உருவாக்கி வருகின்றது. இதன் போக்கிற்கு ஆட்பட்டவர்கள் நாகசாகி ஹிரோஷிமா இரண்டு நகரங்களை அணுகுண்டிற்கு இரையாக்கி புல் பூண்டு அற்றுப் போகச் செய்பவர்களே. இவர்களே இன்று உலகமக்களை மேலும் மேலும் நவீனப் பொருள் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் மக்களை இழுத்துச் செல்கின்றனர். இன்று மனிதகுலம் அறிவியல் தொழில்நுட்பத்தில் மிதக்கலாம்! அதே அறிவியல் மனிதனை எச்சரிக்கும் சொல் சூடாகும் பூமி, காலமாற்றம் என வெவேறு பெயர் சூட்டினாலும் பயன்படுத்தும் ஆற்றலே அடிப்படை என்பதை உணரச் சொல்கின்றது.

இந்த பிரபஞ்சத்தைப் பார்த்து வாழ்வதற்கே இந்த உயிர்ப் படைப்பு. நவீனத்தை அளவோடு பயன்படுத்தாது. அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சாகிடும் என்பதே நமது பழமொழி. நாம் அழித்தவற்றிற்கு மாற்று நடவடிக்கையே உங்களது காணுயிர் சரணாலயங்கள். விமான நிலையங்களும் காட்டுப்பள்ளி அதானி துறை முகங்களில் விடியாது தமிழ்நாடு.

நஞ்சில்லா உணவு என இயற்கையுடன் இசைந்த வேளாண் செயல்பாடுகள் தனது ஆற்றலை வெளிப்படுத்துவது எல்லா உற்பத்தியையும் கார்பரேட் என்ற பதத்துடன் உறவுபடுத்தும் முறைக்கு எதிராக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனது ஒத்த கருத்துடன் உழைப்பாற்றலை மண்ணில் முதலீடு செய்கின்ற முறை. இதுவே அறிவியல் தொழிநுட்பம் என்பதை அனைத்து இயந்திரத்தை துணைப் படுத்துவதற்கு மாற்றாக தனி மனிதனின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள தாக்கும் போக்கு துவங்கியுள்ளது. இது அனைத்து உயிர்களுக்கும் ஒவ்வும் தன்மை கொண்டது. இது இன்று சாதாரணமாகத் தோன்றலாம். இதுவே காலத்தின் கட்டாயமாகும். வேலைவாய்ப்பு என்பதையும் வளர்ச்சி என்பதையும் இதன் அடிப்படையில் பார்க்க வேண்டும். இங்கு பொருளாதார மந்தமிருக்காது. அளவில்லாத வேலைவாய்ப்பு உண்டாகும். ஓய்விருக்கும், போட்டியிருக்காது. பொறாமை இருக்காது. மாறாக இசைவிருக்கும். இதுவே இனி வருங்காலமென உரைக்கும். ஆக பரந்தூரை காப்பாற்ற அனைத்து மக்களும் இயற்கை ஆர்வலர்களும் எதிர்கால சந்ததி குறித்த நோக்குடையோரும் கரம் சேர்க்க அறைகூவல் விடுகிறோம்.

முத்துமுருகன்

Pin It