தமிழக அரசின் பெண்ணுரிமைத் திட்டங்கள் வெற்றிநடை

தமிழ்நாட்டில் உற்பத்தி துறையில் 43 சதவீத பெண்கள் வேலை செய்கிறார்கள். இந்தியா முழுவதிலும் பெண்களின் வேலை – உழைப்பு பங்களிப்பு 39.8 சதவீதம் மட்டுமே, தேசிய சராசரியை மிஞ்சி நிற்கிறது தமிழ்நாடு. இது குறித்து விரிவான கட்டுரையை ’இந்து’ ஆங்கில நாளேடு நவம்பர் 11, 2023இல் வெளியிட்டுள்ளது. கட்டுரைக்கு சான்றாக பல சர்வே ஆய்வுகளை கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது.

ஒன்றிய ஆட்சி 2019ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு அறிக்கையில் இந்தியாவில் தொழிற்சாலைகளில் 15.6 இலட்சம் பெண்கள் வேலை செய்கிறார்கள். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 6.74 இலட்சம் பெண்கள் அடங்குவார்கள் (43 சதவீதம்) என சுட்டிக் காட்டியுள்ளது.

ஜூலை 22 இல் இருந்து ஜூன் 2023 வரை உள்ள காலக்கட்டத்தில் எடுத்த கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளில் (15-59 வயதுக்குள்) நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வேலை செய்யும் பெண்கள் 43.9 சதவீதம். இதே காலகட்டத்தில் தேசிய சராசரி 39.8 சதவீதம். இது தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் நடத்திய அறிக்கை.tamilnadu women in factoryவழக்கமாக தோல் பதனிடுதல், ஜவுளி, ஆட்டோ மொபைல் துறையில் பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். இப்போது வளர்ந்துவரும் தொழில் துறைகளான மின்சார வாகனங்கள், சூரிய ஒளி பேனல் தயாரிப்பு, காலனி உற்பத்தி துறையிலும் தமிழ்நாட்டு பெண்கள் இறங்கி விட்டனர். இதனால் உற்பத்தி துறையில் பெண்களின் பங்களிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

”இதற்கு முக்கிய காரணம் துணிவும், வீரமும் உள்ளவர்களாக தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதும், பெற்றோர்கள் தரும் ஆதரவும் தான்” என்று கேட்டர் பில்லர் இந்தியா லிமிடெட் தலைவர் லட்சுமி உமாபதி கூறுகிறார். வணிக வளாகங்களை அமைக்கும் கட்டுமான பொருள் உற்பத்தி நிறுவனத்தை இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் வெற்றிகரமாக நடத்திவருபவர் லட்சுமி உமாபதி. 1994இல் அவர் தொடங்கிய போது சந்தித்த தடைகள் இப்போது நீங்கி விட்டன என்கிறார்.

டைட்டான், அசோக் லேலாண்ட், டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டாட்டா குழும தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் பெண்களின் பங்களிப்புகள் குறித்து அதன் தலைமை நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்கள் அந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பான பயணம், நகர கிராமத்தின் சிறப்பான திட்டங்கள், பெண்களுக்கு வழங்கப்படும் சிறப்பான திட்டங்கள், பணியிடங்களில் குழந்தை பாரமரிப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பான தங்குமிடங்கள், மருத்துவ வசதிகள் தான் தமிழ்நாட்டில் பெண்கள் தொழில்துறை வேலை வாய்ப்புக்கு பெரிதும் துணை நிற்கின்றன என்று அப்தார் குழும நிறுவனர் சவுந்தர்யா இராஜேஷ் கூறுகிறார். பெண்கள் சமத்துவத்திற்கு தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்கள் – பெண்களை அதிகார சக்தியுள்ளவர்களாக மாற்றியுள்ளது. இலவசப் பேருந்து பயணம், பெண்கள் உதவித் திட்டங்கள் மற்றும் உயர்கல்வி பெண்களின் இந்த உழைப்பு சந்தையில் பெரிதும் பங்கேற்க உதவுகின்றன என்கிறார் திறன் மேம்பாட்டு கழக இயக்குநர் தீனதயாளன். மகப்பேறு விடுப்பு காலத்தை ஒன்பது மாதத்தில் இருந்து ஒரு வருடமாக உயர்த்தியது. கல்லூரி படிக்கும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் உதவித் தொகை போன்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திட்டங்கள் பெண்களின் நிலையை உயர்த்துகிறது என்கிறார் தீனதயாளன்.

குறிப்பு : அண்மைக் காலமாக சில ஆய்வாளர்கள் தமிழ்நாட்டில் பெண்கள் கல்விநிலை உயர்ந்தாலும் உழைப்பு சந்தையில் பெண்கள் உயரவில்லை என்று எழுதிவரும் ஆய்வு கட்டுரைகளுக்கு மறுப்பாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

விடுதலை இராசேந்திரன்

Pin It