எல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்ற புகழ் பெற்ற பழமொழியைப் போல் “எல்லா தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டை நோக்கி” என்ற புதுமொழியை உருவாக்கி இருக்கிறார் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்து செயலாற்றத் தொடங்கினார். முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் இது­ வரை 44 தொழிற்­சா­லை­க­ளுக்கு அடிக்­கல் நாட்டி அதில் 27 தொழிற்­சா­லை­க­ளைத் திறந்து வைத்­தி­ருக்­கிறார். இதன் மூல­ம் 74,757 பேர் வேலை­வாய்ப்பை பெற்றுள்ளனர்.

“முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற பெயரில் துறை ரீதியான முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூல­ம் 1,90,803 கோடி ரூபாய்க்­கான முத­லீ­டு­கள் ஈர்க்கப்­பட்­டு 2,80,600 பேருக்கு வேலை­வாய்ப்­பு­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு அங்குள்ள தொழில் துறையினருடன் உரையாடி 17,371 பேருக்கு ­வேலைவாய்ப்புகள் ஏற்­ப­டுத்தும் வகையில் 7,441 கோடி ரூபாய்க்­கான முத­லீ­டு­கள் ஈர்த்தார். இது போன்ற நடவடிக்கைகள் கடந்த பத்தாண்டு அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் பாழ்பட்டுக் கிடந்த தமிழ்நாட்டின் தொழில் துறையைத் தழைத்தோங்கச் செய்தது. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் அமைந்தது 07.01.2024 மற்றும் 08.01.2024 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு.mk stalin tamilnadu global investors meetஒரு மாநிலத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டினர் முன்வரவேண்டுமாயின் அதற்கு அந்த மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆட்சியின் மீதான நல்லெண்ணம், சட்டம் ஒழுங்கு சிறப்பாகப் பேணப்படும் அமைதியான சூழல், உட்கட்டமைப்பு வசதிகள், அறிவார்ந்த மனித வளம், ஆட்சியாளர்கள் மீதான உயர்மதிப்பு போன்ற காரணிகள் மிக அவசியமானவை ஆகும். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி இவை அனைத்திலும் சிறந்து விளங்குவதால் உலக முதலீட்டாளர் மாநாடு பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய ஒன்பது நாடுகள் பங்கேற்றன‌. அத்துடன் ஐம்பது நாடுகளைச் சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர். ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடியாகவும், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேருக்கு மறைமுகமாகவும் என 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது.

இம்மாநாட்டின் ஒரு பகுதியாக தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் தலைமைத்துவம், அதன் நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய கருப்பொருட்களைக் கொண்டு கருத்தரங்கங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்குமான பிரத்யேக சந்திப்பு, பல நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்களுக்கும், உள்நாட்டு விற்பனையாளர்களுக்கும் இடையேயான கலந்துரையாடல்கள், பலதுறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்ட அனுபவப் பகிர்வு உரையாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

“எல்லோருக்கும் எல்லாம்”, “அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” போன்ற முழக்கங்களை முன்னெடுக்கும் இந்த அரசு அதைப்பறை சாற்றும் வகையில் இந்த முதலீடுகளை மாநிலம் முழுவதும் பரவலாக்கி இருக்கிறது. இதுவரை சென்னையைச் சுற்றி மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கும் நிலையை மாற்றி விழுப்புரம், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விருதுநகர், திருச்சி, கோவை, நாகப்பட்டினம், இராமநாதபுரம், பெரம்பலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்க இருப்பதை இந்த மாநாடு உறுதி செய்திருக்கிறது. இது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மட்டுமின்றி மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியிலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதற்கு முன்பு அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 2015 ஆம் ஆண்டிலும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது 2019 ஆம் ஆண்டிலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்பட்டிருந்தாலும் அதில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதத்தில்தான் இருக்கிறதே தவிர அதன் மூலம் எந்தத் தொழிற்சாலையும் அமையவில்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். அதனால் தான் மாநாட்டின் தொடக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்திய ஒன்றியத்தின் தொழிற்துறை அமைச்சர் பியூஸ் கோயல் “தமிழ்நாட்டை சிறப்பாக மாற்றியமைப்பதில் தைரியமான முடிவுகளை எடுப்பதற்காகக் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களையும், தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.இராஜா அவர்களையும் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும்” என்று தனது உரையில் குறிப்பிட்டார். அதே போல் மாநாட்டில் பேசிய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் “பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவை மூலம் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருகி உள்ளன” என்று தமிழ்நாட்டு அரசுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

உலக முதலீட்டார்கள் மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் இம்மாத இறுதியில் அமெரிக்கப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவரது இந்த தொடர் செயல்பாடுகள் காரணமாக இந்திய ஒன்றியத்தின் முதல் மாநிலமாக தமிழ்நாடு வெகு விரைவில் முன்னேறும்.

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It