தொடர்புடைய படைப்புகள்

2026 ஆகத்து 9 ஆம் நாள் புதுக்கோட்டையில் நடைபெற்ற.. மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:..

1 . வரலாற்றில் மிக நீண்ட நெடிய ஆயிரம் ஆண்டுகள் பழமை உடைய தமிழ்ப் பெரு நிலத்தை அதன் அதிகாரத்தை பிரித்தானிய வல்லாட்சியரிடமும், பின்னர் இந்திய அரசு அதிகாரத்திடமும் இழந்துவிட்ட நிலையில் எப்படியாவது அவற்றை மீட்க குறைந்த அளவு மாநிலம் என்கிற முறையிலாவது அதை நிலைநிறுத்திடவும், அதற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிடவும் போராடிய பன்னூற்றுக்கணக்கான தலைவர்களுக்கும், இலக்கக் கணக்கான தமிழ் உணர்வாளர்களுக்கும் தமிழக மக்கள் முன்னணி முன்னெடுத்து நடத்தும் மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு வீர வணக்கத்தையும் புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறது..

  1. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எல்லாம் தம் அடையாளங்களே அழிக்கப் படும்படி, அவற்றின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மாநிலங்களையே அழித்து விடலாம் என்கிற கருத்தில் மாநிலங்களைச் சிதைப்பது, அவற்றின் அதிகாரங்களை பறிப்பது, ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டு 'கப்பம்' கட்டி வந்த முறை போல இந்திய அரசுக்கு அடிமை சேவகம் செய்ய ஒன்றிய அரசு மாநிலங்களின் மீது அழுத்தம் தருவது தடையின்றித் தொடர்கிறது. இத்தகைய வல்லாட்சி செய்து வரும் இந்திய பாசிசப் பார்ப்பனிய அரசின் அதிகாரப் போக்கை இம்மாநாடு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது..
  2. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் அதிகாரங்களைச் செயலிழக்க வைக்கும் முறையில் இந்திய அரசின் கண்காணியாக அதிகார வெறியில் செயல்படும் ஆளுநர் என்கிற அமைப்பு முறையையே ஒழித்தாாக வேண்டும் என்று இம்மாநாடு அறிவிக்கிறது. ஆளுநர் அமைப்பையே ஒழிக்கும் முயற்சியில் தமிழ்நாட்டின் கட்சிகள் இயக்கங்கள் அனைத்தும் ஓங்கிச் குரல் எழுப்பிப் போராடிட முன்வர வேண்டும் என்று இம்மாநாட்டின் வழியாகத் தமிழக மக்கள் முன்னணி அனைவரையும் அழைக்கிறது..
  3. கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு மீட்பதோடு, துணைவேந்தர் அமர்த்தம் உள்ளிட்ட பல்கலைக்கழக ஆளுகை அனைத்தும் மாநில அரசுகளே பெற்றிருக்க வேண்டும் எனவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் இந்திய அரசே நடத்தும்முறை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது..
  4. ஜிஎஸ்டி, சுங்கச்சாவடிகள் மூலம் வழிப்பறிக் கொள்ளை அடிக்கப்படுவதையும், தமிழ்நாட்டில் நெய்வேலி நிலக்கரி, சேலம் இரும்பு, காவிரிப் படுகை எண்ணெய்கள் உள்ளிட்ட பிற கனிம வளங்கள், கடல் வளங்கள் இந்திய அரசாலும் வெளிநாட்டுக் கொள்ளை நிறுவனங்களாலும் சூறையாடப்படுவதையும் வன்மையாகக் கண்டிப்பதோடு உடனடியாக அவற்றைத் தமிழ்நாடு அரசும் மக்களும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் இம்மாநாடு கோரிக்கை விடுக்கிறது..
  5. தமிழர்கள் தங்களின் தேசிய இனமாகிய தமிழர் எனும் அடையாளத்தையே பதிவு செய்திட வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தின் படி தமிழ்நாட்டின் தமிழர்கள் உள்ளிட்ட பிற மாநிலங்களின் மொழி இனத்தினர் எவரும் இந்தியக் குடிமகனாக இருக்க முடியுமே அல்லாமல் இந்தியர் என்கிற தேசிய இனமாக அடையாளப்படுத்துவதை மறுக்கவும், தடை செய்யவும் வேண்டும்.. தமிழ்நாட்டின் இயக்கங்களும் கட்சிகளும் இவற்றை முன்னெடுத்து வலிமையாகப் போராட அழைப்பு விடுக்கிறது தமிழக மக்கள் முன்னணி..
  6. மெட்ராஸ் ஹைகோர்ட் என்கிற பெயருடைய உயர்நீதிமன்றம் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்றே அழைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அளவிலேயே தமிழ்நாட்டிற்கு உள்ளேயே தனியாக ஓர் உச்சநீதி மன்றம் இருக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழ் இருக்க வேண்டுமென்றும், உயர் நீதிமன்ற இலச்சினையில் உள்ள சத்யமேவ ஜெயதே என்கிற சமசுகிருத வரி நீக்கப்பட்டு வாய்மையே வெல்லும் எனத் தமிழில் உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது..
  7. தமிழ்நாட்டின் கல்விமுறை ஒரே திட்டத்தின் கீழ் மட்டுமே தமிழகக் கல்வித்துறை இயங்க வேண்டும். பன்னாட்டுக் கல்வித் திட்டங்கள், சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா - உள்ளிட்ட பிற கல்விக்கூடங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசின் பொறுப்பில் உடனடியாக மாற்றியமைத்திட வேண்டும்.. பள்ளிக் கல்வி வரை அனைத்துப் பாடங்களும் தமிழ் வழியிலேயே அமைய வேண்டும்.. அதற்கு முன்னோட்டமாகத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆங்கில வழி மழலையர் பள்ளிகளையும், தமிழ் வழி மழலையர் பள்ளிகளாக மாற்றி அமைத்திட வேண்டும். ஆங்கிலமும் பிற விருப்ப மொழிகளும் பாட மொழிகளாக இருக்கலாமே தவிர, பயிற்றுமொழியாக இருக்கத் தடைசெய்தாக வேண்டும்..
  8. தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இழிவு படுத்தும் வகையில் பின்தங்கிவிடுவதோடு, இந்து மத வெறியைத் தூண்டக்கூடிய வந்தே மாதரத்தைப் பாட வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதை இம்மாநாடு கடுமையாகக் கண்டிக்கிறது.. எந்தச் சூழலிலும் இதற்குத் தமிழ்நாடு இயக்கங்களும் கட்சிகளும் மக்களும் இசைந்து விடக்கூடாது என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
  9. இது நாள் வரை சிங்கள வெறி அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட 600-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மீனவர்களைப் பற்றிக் கவலைப்படாத, மீனவர்கள் மீதான தொடர்ந்த தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வக்கற்ற இந்திய பாசிசப் பார்ப்பனிய அரசின் பார்ப்பனிய வெறிப் போக்கை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆழ்கடல் மீன்பிடிப்பு, மீனவர்கள் மீதான தொடர் அடக்குமுறை ஆகியவற்றைச் செய்யக்கூடிய இந்திய அரசைத் தமிழ்நாடு மீனவர்களோடு இணைந்து தமிழ்நாட்டின் கட்சிகள் இயக்கங்கள் அனைத்தும் போராடிட வேண்டுமென இம்மாநாடு அனைவரையும் அறைகூவி அழைக்கிறது..
  10. சாதி ஆணவத்தின் கீழ் தொடர்ந்து தமிழ்நாடெங்கும் நடந்து வரும் ஆணவப் படுகொலைகளை நடத்தக்கூடிய சாதி வெறி பிடித்த இயக்கங்களை, சாதி வெறியர்களின் போக்கை இம்மாநாடு மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு உரிமை நலன்கள் மீட்பு குறித்தானப் போராட்டங்கள் நடக்கிற போதெல்லாம் சாதி கலவரங்களையும் மத கலவரங்களையும் திட்டமிட்டுச் சூழ்ச்சியாகப் பாசிசப் பார்ப்பனிய பாஜக செய்து வருவதை மிகக் கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.. சாதி ஆணவக் கொடுமையோடு இயங்குகிற இயக்கங்களைத் தடை செய்தாக வேண்டும். அவற்றிற்குக் காரணமானவர்களை வாழ்நாள் முழுக்கச் சிறையில் அடைக்கும்படியான தண்டனை வழங்க வேண்டும்.. சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரானச் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவர வேண்டும், இந்திய மகளிர் ஆணையம், இந்தியச் சட்ட ஆணையம் ஆகியன ஏற்கனவே வலியுறுத்தியுள்ளன. எனவே, அச்சட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக இயற்றிச் செயல்படுத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

செயல் தீர்மானம்:

  1. கடந்த 2017 ஆம் ஆண்டு சூலை மாதம் தொடங்கி இன்று வரை ஏறத்தாழ 10 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை, தமிழ்நாட்டின் சிறு வணிகர்களை, பொதுமக்களை ஜிஎஸ்டி என்கிற பெயரில் வழிப்பறிக் கொள்ளைபோல் பணம் பிடுங்கி வருகிறது இந்திய அரசு. 2026 சூலை மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் இருந்து 10,414 கோடி பணம் பறிக்கப்பட்டதாக அவர்களே குறிப்புகள் தருகின்றனர். இந்த 10 ஆண்டுகளில் ஏறத்தாழ 20 இலட்சம் கோடி அளவிற்கு ஜிஎஸ்டி வரியாக மட்டுமே தமிழ்நாடு மக்கள் பறிகொடுத்திருக்கிறார்கள். இத்தகைய இழப்பு தமிழ்நாடு மக்களின் பேரிழப்பாக இருக்கும் நிலையில் அவ்வாறு ஜி. எஸ். டி.யால் தமிழ்நாட்டின் தொழில் வளமும் வணிகமும் பெருமளவில் நசுக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் ஜிஎஸ்டி என்று இந்திய அரசு நாள்தோறும் தொடர்ந்து வரிகள் பறித்து வருவது சனநாயகத்திற்கே எதிரானது. எனவே வரிக்கொள்ளையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் தொழில் முனைவோர்கள், வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் திரட்டித் தமிழக மக்கள் முன்னணி மிகப்பெரும் போராட்டத்தை வரும் நவம்பர் மாதத்தில் நடத்துமென இம்மாநாட்டின் வழி அறிவிக்கிறோம்..

தமிழ்நாடு உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு - 2026

தோழர்களின் கருத்துகள்..

'ஓர் இனத்தின் வரலாறு தான் அந்த இனத்தின் ஆசிரியராக இருக்க முடியும்' அந்த வகையில் நம் தமிழ் இனத்தின் வரலாறு என்பது இன்றோ நேற்றோ உருவானது கிடையாது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டி பெருமைக்குரியவர்கள் நம் தமிழர்கள். அப்படிப்பட்ட தமிழர்களும் நம் தமிழ் மொழியும் இன்றைக்குப் போற்றப்படுகின்றனவா? தாய்மொழி வழி கல்வி இன்றைக்குச் சாத்தியமாக இருக்கிறதா? என்ற கேள்விகள் இன்றைக்கு வெறும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நாம் தானாக விடை கிடைத்துவிடும் என்று நினைத்தால் அது நம் முட்டாள்தனம். இது போன்ற உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடுகள் நடத்தி முதலில் நாம் யார்? நாம் எப்படிப்பட்டவர்கள்? என்ற புரிதலை நமக்கு நாமே முதலில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, பொருளாதார ஆதிக்கம், இந்திய இறையாண்மை என்ற பெயரில் கட்டமைக்கப்படும் மதக் கோட்பாடு போன்ற எல்லாவற்றிலிருந்தும் நம் தமிழரின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவது தமிழர்களாகிய நம் கடமை என்றால் அந்தப் போராட்டத்திற்கான முன்னெடுப்பாகத் தயாராவதும் நம் கடமை தான். தமிழர்களின் சுயமரியாதையைச் சுட்டிக் காட்டும் வகையிலும், நம் உரிமைகள் எப்படி எல்லாம் தட்டிப் பறிக்கப்படுகிறது என்ற நிலையையும், அதனால் ஏற்படும் விளைவையும் மிகவும் நேர்த்தியாக இந்த தமிழ்நாடு உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு ஆகஸ்டு ஒன்பதாம் தேதி எடுத்துரைத்தது. அதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன். நம் உரிமை பறிக்கப்படுகிற போதெல்லாம் தமிழர்களின் எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும் என்றால் இது போன்ற மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்தும் கோரிக்கையும் ஆகும்.

- அருள்அரசன்

மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு! மிகவும் சிறப்பு! மாநாட்டின் தொடக்க அறிவிப்பு முதல் மாநாட்டின் நிகழ்ச்சியின் நிறைவுப் பகுதி வரை தமிழகத்தில் ஒரு விடுதலைக்கான விதையை நாம் போட்டுள்ளோம். இந்திய வல்லாதிக்கம் தேசிய இனங்களுடைய அனைத்து உரிமைகளையும் பறித்து அடிமையாக வழிநடத்த முடிவு செய்துள்ளது, அதனுடைய வெளிப்பாடு தான் ஒரே நாடு! ஒரே தேர்தல்! என்கின்ற முழக்கத்தோடு வலம் வருகிறது. இந்த முழக்கத்தை முறியடிப்பதற்குத் தமிழக மக்கள் இணைய வேண்டும். எதன் வழியில் நாம் இணைய வேண்டும் என்கின்ற அடிப்படைக் கூறுகளை இந்த மாநாடு கொண்டிருந்தது. எப்படியெனில் இது மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய கொள்கை கொண்ட முற்போக்கு கூட்டணியில் அமைக்கப்பெற்ற ஒரு முன்னணியாக உருவெடுத்து இருக்கிறது. தேர்தல் பாதையில் நிற்கும் அனைத்துக் கட்சிகளும், இது அந்நியப்படுத்தியது உள்ளது மட்டுமல்லாமல், அதனுடைய முகத்திரையும் கிழித்துள்ளது. தேர்தல் பாதையில் உள்ள கட்சிகள் அனைத்திற்கும் நிரந்தர எதிரியும் இல்லை! நிரந்தர நண்பனும் இல்லை!! நிரந்தரக் கொள்கையும் இல்லை!!! என்கின்ற அளவோடுதான் வளர்ந்து வந்துள்ளன. இவற்றின் துணை கொண்டு எந்த ஒரு உரிமையும் பெற முடியாது என்பதனை இந்த மாநாடு வலிமையாக வலியுறுத்துகிறது. தமிழ்த்தேசம் என்கின்ற கருத்தியலை மக்கள் நடுவில் கொண்டு சென்றது போல், தமிழ் தேசியத்திற்கு விடுதலைக்கான அனைத்துக் கூறுகளையும் இந்த மாநாடு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இந்த நகர்வு தமிழ் தேசிய விடுதலை மட்டுமல்ல, இந்திய சிறையில் அடைத்துள்ள அனைத்து தேசிய இனங்களையும் விடுவிப்பதற்கான அடிப்படைத் தளத்தை அமைத்துள்ளது என்பது பாராட்டுக்குரியது.

- மெய்யப்பன்

தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பில் தேர்தல் கட்சிகள் அல்லாத புரட்சிகர இயக்கங்களின் சார்பாக மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு .... கொட்டும் மழையிலும் இளைய தலைமுறை தோழர்களின் எழுச்சி மிகுந்த முழக்கங்களோடு மாபெரும் எழுச்சிப் பேரணியாக மாநாட்டுத் திடலுக்கு வந்தது. தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் தமிழக மக்கள் முன்னணிகொடியேற்றி மாநாட்டின் நோக்க உரையாற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தமிழக மக்கள் முன்னணியின் உறுப்பு இயக்கங்களின் தலைவர் பெருமக்கள் வழிமொழிந்து எழுச்சியுரையாற்றினர் மாநாட்டில் தோழர் நிலவழகன் தோழர் கணிகுறிச்சி தோழர் பாலசா வல்லவன் உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்து கருத்துரை நிகழ்த்தினர். இறுதியாக ஐயா த.செயராமன் அவர்கள் இறுதியுரையாற்ற மாநாடு இனிதே வெற்றி மாநாடாக நிறைவுப் பெற்றது... காலத்தின் தேவையுணர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஒன்றிய மாநிலங்களுக்கான உரிமைக் குரலாக மாநாடு அமைந்தது பெருஞ்சிறப்பு..... மாநாட்டை ஒருங்கிணைத்த தமிழக மக்கள் முன்னணி தோழர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் ..

- கபிலன்

தமிழக மக்கள் முன்னணியின் அரிய உழைப்பால் புதுக்கோட்டை நகரில் கடந்த 9.8.26 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு மழையின் குறுக்கீட்டினால் சற்றே காலம் தாழ்த்தி தொடங்கப்பட்டது. மாநாட்டின் தொடக்கத்தில் புரட்சிகரப் பாடல்களோடு தொடங்கி தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிக்கிறது என்பதைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் மாநாட்டின் தலைவர் தோழர் பாவெல் முன்வைத்து உரையாற்றினார். முன்மொழிபாக இயற்றிய 12 தீர்மானங்கள் காலத்தின் தேவை என்பதை உணர்த்தியது. மிகச்சிறப்பு. இயற்கை ஒத்துழைப்பு நல்கியிருந்தால் இன்னும் மாநாடு சிறப்புற்றிருக்கும். பெருமுயற்சி மாநாடு நடைபெறவும் வெற்றியடையவும் உழைத்த தோழர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் பேரன்பின் நன்றியும்

- செந்தீ நாகவரசன்

மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு தமிழ்நாடு உரிமைப் பறிக்கப்படுதலுக்கு எதிராக அறைகூவுவோம் என்னும் அறைகூவலோடு, தமிழக மக்கள் முன்னணி பெரும் முயற்சியுடன் முன்னெடுத்துப் புதுக்கோட்டையில் இந்த மாநாட்டை நடத்தியது. மாநாட்டை நடத்துவதற்கான முன்னெடுப்பின் முதல் அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தபடி, “தேர்தல் அரசியலில் பங்கேற்காத, மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரியக் கொள்கைகளை ஏற்கிற, தேசிய இன உரிமைகளை முதன்மையாக எண்ணி உயர்த்திப் பிடிக்கிற, இயக்கங்கள் அனைத்தும் பங்கேற்கின்றன” என்னும் அறிவிப்புக்குத் தக்கபடி அதற்குரிய முயற்சியோடு ஒருங்கிணைத்து நடத்தியது. தஞ்சாவூர் சாலையின் வட முனையிலிருந்து தொடங்கி மாநாட்டு வளாகமான நகர்மன்றம் வரை உரிமைகளை எழுச்சியோடு முழங்கியபடி பேரணி சென்றடைந்தது.

மொழிவழி மாநிலங்களை அழித்தொழித்திட அலையும் இந்திய ஒன்றிய பாசிசத்தின் ஒடுக்குமுறைப் பிடியிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்னும் செய்தியை அழுத்தமாக வலியுறுத்திப் புதிதாக வந்திருந்த இளைஞர்களுக்கு விளங்க வைக்கக்கூடிய வகையில் நடைபெற்றது இம்மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், காலத்தின் தேவை கருதி அனைத்து இயக்கங்களும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவையைச் சுட்டிக்காட்டியுள்ளது; செல்லும் திசைவழியை இளையோருக்குக் காட்டியுள்ளது; உரிமை உணர்வை ஊட்டியுள்ளது. ஆகவே, புதிய நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் இம்மாநாடு நடைபெற்று நிறைவுற்றது சிறப்பு!

- ஒப்புரவாளன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.