அண்ணல் அம்பேத்கரிடம் இராஜாஜி குறிப்பிட்ட எச்சரிக்கை

இந்தியா ஒரு நாடன்று. இந்தியா ஒரு துணைக் கண்டம். டச்சு, போர்த்துக்கீசிய, பிரெஞ்சு, ஆங்கிலேயே நாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் வணிகக் குழுமங்களை ஏற்படுத்தினார்கள். அக்காலக்கட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் பல இயற்கை வளங்கள் அதிகளவில் இருந்தன. இந்த வளங்களைச் சுரண்டி புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்திப் பொருட்களாக மாற்றி உலகசந்தை யில் கிழக்கிந்தியக் குழுமங்கள் வணிகம் செய்து தங்கள் நாடுகளின் வளத்தைப் பெருக்கிக் கொண்டன.

பிரித்தானியக் கிழக்கிந்தியக் குழுமம் இந்தியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றித் தங்களின் வணிகச் சுரண்டலைப் பெருமளவில் தொடர்ந்தது. இந்நிகழ்வைப் பற்றி அறிஞர் காரல் மார்க்சு “இந்தியாவை ஆளும் வர்க்கத்தினர் கைப்பற்ற எண்ணினர். பண வர்க்கத்தினர் கொள்ளை யடிக்க விரும்பினர். ஆலை அதிபர்கள் குறைந்த விலைக்கு விற்க விரும்புகின்றனர். இப்பொழுது நிலைமைகள் மாறி விட்டன. இன்றியமையாத் தேவைகளான உள்நாட்டுத் தொடர்புகளையும் நீர்ப்பாசன வழிகளையும் இந்தியாவிற்குக் கொடையாக வழங்குவதன் வாயிலாக இந்தியாவை உற்பத்தித் தரும் வளமிக்க நாடாக மாற்றியமைக்கலாம் என ஆலை அதிபர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். எனவே அவர்கள் இந்தியாவிற்கு இரயில்வே இணைப்பை ஏற்படுத்த விரும்பு கிறார்கள். அதை அவர்கள் செய்வார்கள். அதன் விளைவுகள் பாராட்டுக்குரியதாக இருக்க முடியாது”. (The aristocracy wanted to conquer it, the moneyocracy to plunder it, and the millocracy to under sell it. But now the tables are turned. The millocracy have discovered that the transformation of Indian into a reproductive country has become of vital importance to them, and that, to that end, it is necessary, above all, to gift her with means of irrigation and of internal communication. They intend now drawing a net of railways over India. And they will do it. The results must be inappreciable-Karl Marx and Fredrick Engels – On the National and Colonial Questions – Selected Writings- edited by Aijaz Ahmed, P.71) என்று குறிப்பிடுகிறார்.

ஆனால் பிரித்தானியக் கிழக்கிந்தியக் குழுமத்தின் ஆட்சியில் ஊழல்கள் மலிந்தன. இராபர்ட் கிளைவ் மீது பிரித்தானிய அரசு நடத்திய ஊழல் விசாரணை இதற்கு ஒரு சான்றாகும். இதன் பின்னர் பல குழப்பங்கள் ஏற்பட்டு, நிர்வாகத்தில் சீர்கேடுகள் பன்மடங்கு பெருகி, இறுதியில் சிப்பாய்க் கலகமாக வெடித்தது. இதற்குப் பிறகுதான் பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சியின்கீழ் 1857ஆம் ஆண்டு இந்தியத் துணைக்கண்டம் கொண்டு வரப்பட்டது.

1857க்குப் பிறகு நடந்த சில அரசியல் நிகழ்வுகளை வரலாற்று ஆய்வாளர் இராமசந்திர குகா தனது ‘காந்திக்குப் பிறகு இந்தியா’ (India After Gandhi) எனும் நூலில் விளக்கியுள்ளார். அவர் தனது முன்னுரைக்கு அளித்த தலைப்பே இயற்கையாக அமையாத நாடு (Unnatural Nation) என்பதாகும். கிழக்கிந்தியக் குழும ஆட்சியின் காலத்தில் நிலவிய குழப்பமான தெளிவற்ற நிர்வாகம் மாறி 1857இல் ஒரு புதிய, திறன்மிக்க வலிமையான ஒரு நிர்வாகம் ஏற்பட்டது. புதிய மாவட்டங்கள், நிர்வாகங்கள் உருவாக்கப் பட்டன. காவல் துறை, வனத்துறை, நீர்வளத் துறை போன்ற துறைகளை மேலாண்மை செய்வதற்குத் திறன்மிக்க இந்திய ஆட்சிப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இத்தகைய கட்டமைப்புகள்தான் இந்தியாவினுடைய ஒற்றுமைக்கும் நிலைத்த தன்மைக்கும் வழிவகுத்தன. இந்தப் புதிய கட்டமைப்புகள் வழியாக பிரித்தானிய இராணுவத்தைப் பல பகுதிகளுக்கு விரைந்து அனுப்புவதற்கு வழிவகுத்தன.

1888இல் ஒரு நிலையான இந்தியாவை உருவாக்க முடிந்தது. ஜான் ஸ்ட்ராச்சி என்ற வெள்ளை அதிகாரி இந்தியா வை ஒருங்கிணைக்கும் பணியில் பெரும் பங்காற்றினார். இவர் கவர்னர் ஜெனரல் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் ஓய்வு பெற்ற பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இந்தியாவைப் பற்றிப் பல தொடர் சொற்பொழிவு களை நிகழ்த்தினார். ஐரோப்பிய நாடுகளில் காணப்பட்ட வேறுபாடுகள் இந்தியாவில் காணப்பட்ட வேறுபாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறிய அளவே எனக் குறிப்பிட்டார். இன, மொழி, மத வேறுபாடுகள் ஐரோப்பிய நாடுகளைவிட இந்தியத் துணைக்கண்டத்தில் மிகவும் அதிகம்; ஐரோப்பிய நாடுகளைப் போன்று இந்தியத் துணைக்கண்டத்தின் பகுதிகள், நாடுகளைப் போன்று அமையவில்லை, அவைகளுக்குத் தனித்த அரசியல் சமூக அடையாளங்கள் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரை கேட்க வந்தவர்களைப் பார்த்து ஸ்ட்ராச்சி என்ன கூறினார் தெரியுமா? “இந்தியாவைப் பற்றி முதலாகவும் முதன்மை யாகவும் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்தியா என்ற அமைப்பு ஒரு போதும் இருந்ததில்லை. இருக்கவும் இல்லை. ஐரோப்பிய நாடுகளைப் போன்ற இடம் சார்ந்த அரசியல் சார்ந்த, சமூகம், மதம் சார்ந்த ஒற்றுமை கூட கிடையாது. இந்தியா என்ற நாடு கடந்த காலத்திலும் இல்லை. எதிர்காலத்திலும் இருக்கப் போவதில்லை” (There was no Indian nation or country in the past; nor would there be one in future, p.xxi).

பஞ்சாப், வங்காளம், வடக்கு மேற்கு பகுதிகள் பற்றிக் கூறுகின்ற போது, சென்னை மாகாணத்தைப் பற்றி ஒரு கருத்தை ஜான் ஸ்ட்ராச்சி தெரிவித்துள்ளார். சென்னை மாகாணம் இந்திய நாட்டின் ஒரு பகுதியாகத் தங்களை ஒருபோதும் கருதவில்லை (Madras, should ever feel that they belong to one Indian nation, P.XXI) இவ்வாறு ஜான் ஸ்ட்ராச்சி குறிப்பிட்டதை ஆய்வாளர் குகா முன்னுரையில் விரிவாக விளக்கியுள்ளார். இத்தகைய வரலாற்று உண்மைகளை நன்கு படித்து உணர்ந்ததால் தான் பேரறிஞர் அண்ணா நாடாளுமன்ற மேலவையில் தனது உரையில் இந்தியா ஒரு நாடன்று; இந்தியா ஒரு துணைக்கண்டம் எனக் கூறினார்.

இந்த வரலாற்று உண்மையைப் பறைசாற்றும் வண்ணம் 1857இல் பிரித்தானிய ஆட்சியில் இந்தியத் துணைக்கண்டத்தின் பகுதிகளாக இருந்த பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற பகுதிகள் இன்று தனித்தனி நாடுகளாக மாறிவிட்டன.

சான்றாக இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக இன்று விளங்கும் கோவா 1961-இல்தான் போர்த்துக்கீசிய ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்றது. இன்றும் பாண்டிச்சேரி பகுதியில் வாழும் மக்கள் பிரான்சு நாட்டினுடைய நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கேற்று வாக்களிக்கின்றனர். பிரெஞ்சு தூதரகம் பாண்டிச்சேரியில் இன்றும் இயங்கி வருகிறது. மேற்கூறிய வரலாற்று உண்மைகள் இந்தியா ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட நாடு என்பதைப் பறைசாற்றுகின்றன.

1885ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் மும்பையில் இருந்த கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருத கல்லூரியில் 72 உறுப்பினர்கள் கூடி காங்கிரசு அமைப்பை ஏற்படுத்தினர். இதை உருவாக்குவதற்குத் துணைபுரிந்தவர் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் ஏ.ஓ.ஹியும் என்பதும் குறிப் பிடத்தக்கது. காங்கிரசு என்ற அமைப்பு ஆரம்பக்காலத்தில் பிரித்தானிய அரசிடமிருந்து இந்தியர்களுக்குச் சலுகைகளைக் கேட்கும் கட்சியாகவே இயங்கியது. ஆங்கிலவழிக் கல்வி பயின்ற ஆதிக்கச் சாதியினர்தான் இவ்வமைப்பில் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றனர்.

1915ஆம் ஆண்டு காந்தியார் காங்கிரசு இயக்கத்தில் இணைந்தார். இவர் இணைந்த பிறகுதான் காங்கிரசு ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. பல்வேறு மொழி, மத, இன பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட தனித் தனியாக இயங்கிய மக்களை ஒன்றிணைத்து இந்திய அளவில் ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பை உருவாக்க வழிவகுத்தார். இருப்பினும் காந்தியின் அரசியல் செல்வாக்கு பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் காலூன்ற வில்லை. காந்தியின் அரசியல் ஆளுமைதான் வெவ்வேறு பகுதிகளாக இருந்த பல மாநிலங்களிலிருந்து அரசியல் உணர் வாளர்களைக் காங்கிரசு இயக்கத்தில் இணைய வழிவகுத்தது.

1947-இல் இந்தியா விடுதலைப் பெற்ற போது மக்களின் செல்வாக்கைப் பெற்றிருந்த காந்தியால் பாகிஸ்தான் பிரிவினையைத் தடுக்க முடியவில்லை. இதற்கு இந்தியா ஒரு நாடாக இயற்கையாக அமையாததுதான் காரணம். 1938 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியின் போது தனியார்த் துறையில் காப்பீட்டுக் கழகம் ஒன்று தொடங்கப்பட்டது. ஒன்றிணைக்கப்பட்ட இந்திய தீ மற்றும் பொது காப்பீட்டுக் கழகம் (United India Fire and General Insurance Company) என்றுதான் பெயரிடப்பட்டது. 1972ஆம் ஆண்டு இந்தக் காப்பீட்டு நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கியபோது இன்று உள்ள பெயர் ‘ஒன்றிணைக்கப்பட்ட இந்தியக் காப்பீட்டு நிறுவனம்’ (United India Insurance Company) என்று சூட்டப்பட்டது. இத்தகைய வரலாற்று உண்மைகளையும் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளாமல் ஒரு மத உணர்வைத் தூண்டும் ‘பாரத மாதவிற்கு ஜே’ என வெற்று வெறி முழக்கமாக சனாதன சங்கிகளால் எழுப்பப்படுகிறது.

பர்மா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய பகுதிகள் இந்தியத் துணைக்கண்டத்தின் ஒன்றாக இருந்த போதும் பல நாடுகளாகப் பிரிந்த போதும் பாரத மாதா எங்கே இருந்தார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? ஒரு வேளை காஞ்சிபுரம் அத்திவரதர் போல் வடநாட்டுக் குளத்தில் பதுங்கி இருந்தார் என ஆளுநர் இரவி போன்றோர் சொல்லக்கூடும். புராண, இதிகாச, சனாதன மனுநீதி நூல்கள் எல்லாம் ஆதிக்கச் சமுதாயத்தினரால் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகக் கட்டப்பட்ட பொய்கள் என்பதுதான் வரலாற்றுக் குறிப்புகள் நமக்கு அடையாளம் காட்டுகின்றன.ambedkar and rajajiஇந்தியக் காங்கிரசுக் கட்சியின் வரலாற்றில் காந்தியார் செல்வாக்குமிக்க தலைவராக வலம் வந்த போது, இராஜாஜியின் மகளை காந்தி மகனுக்கு மணம் முடித்தார். காந்தி சில காலக்கட்டங்களில் இராஜாஜி தனது மனசாட்சி எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவினுடைய முதல் இந்திய கவர்னர் ஜெனரல் எனும் பதவியும் வகித்தவர் இராஜாஜி.

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவான போது அண்ணல் அம்பேத்கர் அரசமைப்புச் சட்ட அவையின் வரைவுக் குழுவின் தலைவராக இருந்த போது இருவரும் சந்தித்து அரசமைப்புச் சட்டம் தொடர்பாகப் பல கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

அண்ணல் அம்பேத்கர், "நான் இராஜகோபாலாச்சாரியாரைப் பலமுறை அக்காலக்கட்ட நிகழ்வின்போது, சந்தித்துள்ளேன். ஒரு சந்திப்பின் போது, உருவாகி வருகின்ற அரசமைப்புச் சட்டம் பற்றித் தனது கருத்தை வெளிப்படுத்தினார். என்னிடம், ‘நீங்கள் ஒரு பெரும் தவறைச் செய்கிறீர்கள். இந்தியா முழுவதுமுள்ள எல்லா பகுதிகளுக்கும் சமப் பிரதிநிதித்துவம் அளிக்கும் ஒரு கூட்டாட்சி அமைப்பு இயங்க முடியாது. அப்படிப்பட்ட கூட்டமைப்பில் பிரதமரும் குடியரசுத் தலைவரும் எப்போதுமே இந்தி பேசும் பகுதிகளிலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இரண்டு கூட்டமைப்புகளை நீங்கள் உருவாக்க வேண்டும். ஒரு கூட்டமைப்பை வட நாட்டிற்கும் ஒரு கூட்டமைப்பைத் தென் நாட்டிற்கும் உருவாக்க வேண்டும். வடக்கும் தெற்கும் இணைந்த ஒரு பெரும் கூட்டமைப்பில் மூன்று அதிகாரங்கள்தான் இருக்க வேண்டும். அந்த அமைப்பில் இரண்டு கூட்டமைப்புகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்’ என்று சொன்னார். இந்தக் கருத்துகள்தான் இராஜகோபாலாச்சாரியின் உண்மையான எண்ணங்களாக இருந்தன. இவை உள்ளார்ந்த இதயத்திலிருந்து ஒரு காங்கிரசுக்காரரின் எண்ண வெளிப்பாடாக அமைந்தது. இந்தியா வடக்கு, தெற்கு என உடையும் எனக் குறிப்பிட்ட ஒரு தீர்க்கதரிசியாகவே நான் இராஜகோபாலாச்சாரியாரைப் பார்க்கிறேன். இராஜகோபாலாச்சாரியாரின் கணிப்பு பொய்யாக வேண்டும் என நாம் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.

“அமெரிக்காவில் வடக்கு, தெற்கு மாநிலங்களுக்கிடையே நடந்த உள்நாட்டுப் போரை நாம் மறந்துவிட முடியாது. வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒரு உள்நாட்டுப் போர் கூட நடக்கலாம். காலம் அத்தகைய மோதல்களுக்கான அடிப்படைகளைக் கொடுக்கலாம். வடக்கிற்கும் தெற்கிற்கும் மாபெரும் பண்பாட்டு வேறுபாடுகள் இருப்பதை மறந்துவிட முடியாது. அந்த பண்பாட்டு வேறுபாடுகள் பெருமளவில் பற்றி எரியக்கூடியது” என இராஜாஜியுடன் நடந்த உரையாடலை விளக்கியுள்ளார்.

இராஜாஜி அன்று கணித்ததில் ஒன்று இன்று நடந்து விட்டது. 1950லிருந்து இந்தியக் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் பதவிகளில் வடநாட்டு தென்னாட்டுத் தலைவர்கள் மாறி மாறி பதவி வகித்துள்ளனர். ஆனால் இந்த மரபு கடந்த 15 ஆண்டுகளாக முறியடிக்கப் பட்டு வருகிறது. குறிப்பாக, குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பதவிக்காலம் 2007இல் முடிந்த பிறகு இன்றுவரை தென் மாநிலங்களிலிருந்து குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 1997முதல் துணைக் குடியரசுத் தலைவராகத் தென் மாநிலங்களைச் சார்ந்த வெங்கய்ய நாயுடு தவிர இன்றுவரை யாரும் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. பா.ச.க. தலைமையிலான மோடி அரசு முதல் முறையாகக் குடியரசுத் தலைவரும் துணைக்குடியரசுத் தலைவரும் வட மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுத்துள்ளது.

ஒன்றிய அரசின் அதிகாரங்கள் மேலும் மேலும் குவிக்கப்பட்டு வருகின்றன. வட மாநிலங்கள் போதிய பொருளாதார வளர்ச்சியைப் பெறவில்லை. நேர்முக, மறைமுக வரிகள் வருவாய், ஒன்றிய அரசிற்குக் கிடைக்கும் வரி வருவாய் ஆகியவற்றில் பெரும்பகுதி 3 மாநிலங்களில்­தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து பெறப்படுகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தென் மாநிலங்கள் பெரும் வெற்றிகளைப் பெற்று வருகின்றன. ஆனால் வட மாநிலங்களில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிப்பதால் இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தென் மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்த வட மாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு கோடிக்கு மேல் இருக்கும் எனக் கணக்கிடப்படுகிறது.

ஒன்றிய அரசு மாநிலங்களிலிருந்து பெறப்படும் நிதியா தாரங்களைப் பிரித்துக்கொடுப்பதில் தொடர்ந்து தென்மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. அதேபோன்று ஒன்றிய அரசின் தனித்திட்டங்களின் நிதி ஒதுக்கீடு பெருமளவில் வட மாநிலங்களுக்குத்தான் செல்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் வட மாநிலங்கள் குறிப்பாக இந்தி பேசும் மாநில மக்களைக் கொண்ட மாநிலங்கள்தான் அதிக அளவு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாகப் பொறுப்பேற்ற 50 நீதிபதிகளில் இதுவரை தென்மாநிலங்களைச் சேர்ந்த 6 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வட மாநிலங்கள் போற்றப்படுகின்றன. தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஒன்றிய அரசு உருவாக்குகிற இத்தகைய இடர்பாடுகளுடன் தென்னக மாநிலங்கள் மானுட மேம்பாட்டுக் குறியீடுகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

தமிழ்நாட்டின் ஆளுநர் இரவி அண்மைக் காலமாகத் தொடர்ந்து ஆதிக்கச் சாதியினரை உயர்த்தியும் ஒடுக்கப்பட்டவர்களைத் தாழ்த்தியும் எழுதப்பட்ட சனாதனக் கருத்துகளை முன்னிறுத்தி வருகின்றார். தமிழ் நாடு எனச் சொல்வது இந்திய ஒற்றுமைக்கு எதிரானது எனும் கருத்தையும் கூறி வருகிறார். இக்கருத்துகள் எல்லாம் ஓர் ஆளுநரின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒன்றிய அரசின் ஆதரவில்லாமல் இதுபோன்ற கருத்துகளை ஆளுநர் தெரிவிக்க முடியுமா? இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்யும் சட்டத்திற்குக் கையொப்பம் வழங்காமல் இருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்கு எதிரானது என்பதை ஒன்றிய அரசு பொறுப்பில் இருக்கின்ற பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் தெரியாதா? சமஸ்கிருதத்தைப் போற்றுவது இந்தியைத் திணிப்பது ஒன்றிய அரசின் நிதிஒதுக்கீட்டில் தமிழ் மொழியைப் புறக்கணிப்பது இந்திய ஒற்றுமைக்கு வழிவகுக்குமா? அல்லது இராஜாஜி அண்ணல் அம்பேத்கரிடம் குறிப்பிட்டது போல வடநாடு தென்நாடு மோதலுக்கு வழி வகுத்துவிடும் அல்லவா!

பா.ச.க.வினர் கூறி வரும் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு, ஒரே தேர்தல் போன்ற கருத்துகள் மேலும் இந்தியாவின் ஒற்றுமையைச் சீர்குலைத்துவிடும். இதுவரை ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகளைப் பற்றி ஆய்வு செய்த வல்லுநர் குழுக்களின் பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன. ஆனால் இன்று வரை ஆக்கப்பூர்வமான எந்த ஒரு நடவடிக்கையும் இவ்வறிக்கைகளின் பரிந்துரைகளின்படி ஒன்றிய அரசால் எடுக்கப்படவில்லை.

பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில் நீதிபதி வெங்கடாச்சலய்யா தலைமையில் அமைக்கப்பட்ட 11 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட வல்லுநர்களின் பின்வரும் கருத்தை ஒன்றிய அரசு ஏற்குமா?

வலிமையான ஓர் ஒன்றிய அரசும் வலிமையான மாநில அரசுகளும் அமைவதால் பிளவு ஏற்படாது என இக்குழு கருதுகிறது. இரண்டுமே வலிமையாக அமைய வேண்டும். ஒன்றிய அரசிற்கும் மாநில அரசிற்கும் உள்ள உறவு, ஒட்டுமொத்த உடலுக்கும் அதனுடைய இதர உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பு போன்றதாகும். உடல் நலமாக இருப்பதற்கு அதனுடைய உறுப்புகள் வலிமையாக அமைய வேண்டும். இன்றைக்குக் காணப்படுகிற பல பிரச்சினைகளுக்கு முதன்மையான காரணம் அதிகாரக் குவியலும் அதிகாரம் தவறாகப் பயன்படுத்துவதுமே ஆகும் என இக்குழு கருதுகிறது. (The Commission feels that there is no dichotomy between a strong Union and strong States. Both are needed. The relationship between the Union and States is a relationship between the whole body and its parts. For the body being healthy it is necessary that its parts are strong. It is felt that real source of many of our problems is the tendency of centralization of powers and misuse of the authority. (Report of the National Commission to Review the Working of the Constitution, 2003, p.152)

வாஜ்பாயை மதிப்பவர்களாக இருந்தால் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மாநிலங்களின் உரிமைகளை அளிக்க உரிய அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் வழியாக மேற்கொள்ள வேண்டும். மேற்கொள்வார்களா? இந்திய ஒற்றுமையைச் சீர்குலைப்பார்களா?

- பேராசிரியர் மு.நாகநாதன்

Pin It