(பூவுலகு இதழில் வெளியான “தமிழர்களின் வாழ்வில் தலமர வழிபாடு” கட்டுரைக்கு ஒளிப்படக் கலைஞர் சண்முகானந்தம் எதிர்வினை ஆற்றியுள்ளார். அது இந்த இதழில் இடம் பெறுகிறது. பூவுலகு, இயற்கை சார்ந்த அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த விரும்புகிறது. சில பொருள்கள் சார்ந்து மாற்று கருத்துகள் எழுவது இயல்பு. இது போன்ற விவாதங்களை வரவேற்கிறோம். மானிடவியல் - சமூகவியல் நோக்கில் மரங்களை மனிதர்கள் வழிபடுவதை பதிவு செளிணியும் நோக்கத்திலேயே தலமர வழிபாடு கட்டுரையை பிரசுரித்திருந்தோம். மாறாக, மூட நம்பிக்கைகளை அப்படியே தொடர்வதில் பூவுலகு குழுவினருக்கு எந்த வகையிலும் விருப்பமில்லை.) 

ஆதிகாலத்தில் பகுத்தறிவும் வளர்ச்சியும் இல்லாத நிலையில் தன்னை மீறிய இயற்கை சக்திகளான காற்று, நீர், நெருப்பு ஆகியவற்றை மனிதர்கள் வழிபட்டனர். ஆனால் அதற்கு மாறாக இயற்கையை புரிந்து கொண்டு, அதற்கு இசைவாக தங்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வளங்குன்றாத வழிமுறைகளை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தியவர்கள் தமிழர்கள்.

இயற்கையை ஒட்டுமொத்தமாகச் சுரண்டுவதற்கு எதிரான மனநிலையே அவர்களிடம் இருந்தது. இயற்கையின் ஓர் அங்கமான தாவரங்கள்தான் தங்கள் வாழ்க்கைக்கான அடித்தளம் என்பதை உணர்ந்திருந்த அவர்கள், அத்துடன் நல்லதொரு உறவை பேணினர். சங்க இலக்கியங்களில் மரங்கள், தாவரங்களைப் பற்றிய நுணுக்கமான, நுட்பமான பல குறிப்புகள் உள்ளன.

வேளாண்மையில் தொடர்ச்சியாக பரி சோதனைகள் செய்து அனுபவ ரீதியாக அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்தவர்கள் என்றும், இன்றைக்கு உலகின் பாதி பேரின் முக்கிய உணவாக உள்ள அரிசியையும் அதைப் பயிரிடும் முறையையும் கண்டுபிடித்து வழங்கியவர்கள் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

தமிழர்களின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் நிலமும் பொழுதும் (டைம் அண்ட் ஸ்பேஸ்) முதற்பொருளாகக் கூறப்பட்டுள்ளது. நிலம் என்பது இயற்கைச்சூழல் கொண்ட புவியியல் பரப்பு, பொழுது என்பது மாறும் காலம். அதாவது பருவகாலம். எனவே, இயற்கை அம்சங்களுக்கும், அது பற்றிய புரிதலுக்குத்தான் இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தெய்வம், கடவுள் எல்லாம் அதற்குப் பின்னரே வைக்கப்பட்டன. ஆரியர் வருகைக்குப் பின்னரே கடவுள் என்ற சொல்லாடல் வருகிறது. வேதமும் வைதீகமும் அதன் ஆயுதங்கள். முற்பிறவி, மறுஜென்மம், சொர்க்கம், நரகம் எல்லாமே இதற்குப் பின்னர் "நம்பிக்கை" என்ற பெயரில் புகுத்தப்பட்ட புனைவுகளே. இன்று வரை தமிழர்களை இப்புனைவுகள் அடிமைகளாக கட்டிப் போட்டுள்ளன. இப்போது வரை தமிழன் அதிலிருந்து மீளவில்லை என்பது வரலாற்றுச் சோகம்.

நம்பிக்கை என்பது ஆக்கப்பூர்வமான, நேர்மறையான விஷயம். மனிதனால் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு இணக்கமாக வாழ முடியும். எதைக் கண்டும் சோர்ந்துவிடத் தேவையில்லை என்ற அடிப்படை அம்சத்திலிருந்து பிறந்தது அது. ஆனால் மூடநம்பிக்கைகளை நம்பிக்கை என்ற பெயரில் உலவுவதை ஏற்க முடியாது.

பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கைகள், அவர்களின் நலன்களுக்கு எதிராக இருக்கின்றன எனும்போது, அந்த நம்பிக்கைகளின் பின்னால் உள்ள மோசடித்தனங்கள், அரசியல், ஒரு சிறு குழுவினரின் நலன்கள் (ஆரியர்) போன்றவற்றை தோலுரித்துக் காட்ட வேண்டிய கடமை சூழலியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உண்டு.

இயற்கையை வணங்கிய தமிழர்கள், அதன் தொடர்ச்சியாக மரங்களை வழிபட்டார்கள், கோவில்கள் உருவாகின. இதெல்லாமே உண்மை. ஆனால், அழியக் கூடிய மரங்கள் கோவில்களில் பாதுகாப்பாக உள்ளன என்கிறார்கள் அக்கட்டுரை ஆசிரியர்கள். கோவில் காடுகள், கோவில் தோட்டங்கள், கோவிலைச் சார்ந்த இதர வளமான பகுதிகள் இன்றைக்கும் எஞ்சியிருந்தால் இந்த வாதத்தை ஒரளவு ஏற்கலாம். ஆனால், அதற்கு மாறாக தல மரம் என்ற ஒன்றை மட்டுமே கொண்டு, கோவில்கள் மரங்களை காப்பற்றி வருவதாகக் கூறுவதை ஏற்க முடியாது.

இந்தியா முழுவதும் எடுத்துக் கொண்டால், காடுகள், மலைகளின் நடுவே அமைந்துள்ள கோவில்கள் இக்காலத்தில் எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்துகின்றன என்பது நாம் நன்றாக அறிந்ததே. மனிதக் காலடி படும் இடத்தில் புல்கூட முளைப்பதில்லை. பழனி, திருவண்ணாமலை, சபரி மலை, இமயமலையில் உள்ள அமர்நாத் பனிக்குகை சிவலிங்கம் வரை மக்களின் தொடர்ச்சியான போக்குவரத்தால் அந்த மலைகளும் அருகிலுள்ள காடுகளும் கடுமையாகச் சீரழிந்துள்ளன என்பது அறிவியல்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணத் தடை நீங்க மரங்களை வழிபடுவதாக கட்டுரையாளர்கள் கூறுகிறார்கள். திருமணத் தடைக்கு வரதட்சிணை, ஆணாதிக்கம், ஜோசியர்கள் என தவறான சமூகவியல் கூறுகளே காரணம். இவற்றைக் களையாமல் மரங்களை வழிபடுவதால் எப்படி திருமணம் நடக்கும்?

அதேபோல் குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண், பெண் உடல் சார்ந்து மருத்துவ ரீதியில் பிரச்சினைகள் இருக்கலாம். அதை சரி செய்யாமல், வெறுமனே தொட்டில் கட்டுவதால் மரங்களில் வாழும் புழு, பூச்சிகள், கொறி விலங்குகள் பாதிக்கப்படும்.

பூம்பாதிரி குச்சிகளை கட்டி வைத்து ஆவிகளை விரட்டுவது, வள்ளி மர கிளையை எடுத்து வந்து வைத்தால் பணம் பெருகும், வேலா மரத்தில் வணிக அட்டைகளை கட்டிவைத்தால் வியாபாரம் பெருகும் என்பதெல்லாம் சில உள்ளூர் நம்பிக்கைகள். அரசியல்வாதிகள் மக்களுக்கு உழைப்பார்கள், தலைவர்கள் ஏழைகளை காப்பாற்றுவார்கள், நடிகர்கள் இளைஞர்களுக்கு ஆக்கப்பூர்வமாக வழிகாட்டுவார்கள் என்றுகூடத்தான் தமிழகத்தில் பெரும்பாலோர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அதெல்லாம் என்னவாகிறது?

மரங்களை வழிபட்டால் தோசம், தடை, முற்பிறவி பாவம் நீங்கும் என்பது சோதிட நம்பிக்கை, உயிருள்ள மரத்தை வழிபட்டால் உடனடியாக ஆண்டவனை அடையலாம் என்றெல்லாம் இவர்கள் கூறுவது இவர்களது ஆரிய - பார்ப்பனிய சார்பைக் காட்டுகிறது.

திருபாம்பாபுரத்தில் பாம்பேசுவரர் கோவிலில் பாம்புகள் கருவறைக்குள் சென்று சட்டை உரிப்பதாகக் கூறப்படுவதை, அறிவியல்பூர்வமாக உரிய காரணத்தை ஆராய வேண்டும். மாறாக, அதை வியப்புக்குரிய தெய்வ நிகழ்வாக எப்படி கூற முடியும்?

பழங்கள், சிறுபூச்சிகளை உண்ணும் வெளவால்கள் சூழலியல் சமன்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றன. அவை ஓரிடத்தில் இருக்கிற தென்றால் அந்த சூழல் நன்றாக இருக்கிறது என்று பொருள். அவை பரவலாக இருப்பதற்கு மாறாக, கோவில்களில் மட்டும் கடைசியாக புகலிடம் தேடுவது ஏன் என்றல்லவா சிந்திக்க வேண்டும்? அங்கு மட்டும்தான் அவை தொந்தரவு செய்யப் படுவதில்லை என்பது ஒரு முக்கிய காரணம்.

சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த பிற்போக்குத்தனங்கள், மூடநம்பிக்கைகளைக் களைந்து அரிவியல்பூர்வமான - பகுத்தறிவு அடிப்படையிலான உயிரியல் அறிவை கல்விப் புலத்திலும் சமூகரீதியிலும் பரவலாக்க வேண்டும். அறிவுப்பூர்வமான சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, இப்படி ஏற்கெனவே உள்ள மூட நம்பிக்கைகளை வலுப்படுத்துவது போல் பேசுவதும் எழுதுவதும் சமூகத்தை பின்னோக்கிச் செலுத்தும் பிற்போக்குத் தனத்தையே உருவாக்கும்.

Pin It