மதம் என்னும் விஷயமும் ஆராயத் தகுந்ததேயாகும். மனித வர்க்கம் விலங்குகளைப் போல் தனித்தனியே காடுகளில் வாசஞ்செய்து வந்த நிலைமை மாறி, குடிசைகட்டிக் கூடிக் குலாவி வாழ ஆரம்பித்தபோதே அவற்றிற்குச் சில கொள்கைகள் தேவையாகி விட்டன. எப்படி எனில், எப்படித் தனியே இருக்கும் மக்கள் ஏதாவது ஒரு பொது நன்மையை உத்தேசித்து, தங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவினால் உடனே அதற்குக் கொள்கைகள் நிர்ணயிக்கின்ற அவசியம் ஏற்பட்டு விடுகின்றதோ அதே போல், மனிதர்களின் கூட்டு வாழ்க்கைக்குக் கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டியதாகிவிட்டது. அக்கொள்கைககள் தாம் இப்போது மதம் எனப்படுவதாக இருக்கின்றன.
ஆனால், இக்கொள்கைகள் நிர்ணயம் செய்யப்பட்டது எப்படி? எந்த ஆதாரங்கொண்டு என்று பார்ப்போமானால், அது அந்தக் காலத்திய நிலைமை, சீதோஷ்ண ஸ்திதி, மக்களின் அறிவு நிலை - அதாவது, பாமர மக்களின் அறிவீனம், சிலரின் சூழ்ச்சித் திறம் முதலாகிய நிலையில், அதாவது கால தேச வர்த்தமானத்திற்கு ஏற்பச் செய்யப்பட்டவைகள் என்றே சொல்லவேண்டும். மேலும், ஒரு குறிப்பிட்ட கொள்கை, பிற்கால தேசவர்த்தமானத்திற்கோ, சிலரின் சுயநலத்திற்கோ ஏற்றதாயில்லாவிட்டால் யாராவது அறிஞர் அல்லது தந்திரக்காரர் அதை மாற்ற நினைக்கும்போது, பாமர மக்கள் மூடநம்பிக்கையின் பலனாய்த் தங்கள் பிடிவாதம் காட்டி மாற்றச் சம்மதிக்காத காலத்தில், பிரிந்து போய்க் கொள்கைகள் வகுத்து, அதாவது முன்னையதைத் திருத்தியோ அல்லது சிலவற்றை மாற்றியோ அல்லது சில புதியவைகளைச் சேர்த்தோ செய்ய நேரிடும்போது - அது ஒரு புதிய மதமாக ஏற்பட்டுவிடுகின்றதும் உண்டு. இதனால் பாமர மக்கள், அதாவது குருட்டுப் பிடிவாதமுள்ளவர்கள், ‘என் மதம் பெரிது” ‘உன் மதம் சிறிது” என்கின்ற மதச் சண்டைக்கு ஆளாகிவிடவும் நேரிட்டுவிடுகின்றது.
இன்றையதினம் எந்த மதக்காரனையாவது கண்டு, உன் மதம் என்ன? அதன் தத்துவம் என்ன? - என்றால் சில சடங்குகளையும் குறிகளையும் மாத்திரந்தான் சொல்லுவானே ஒழிய, அதன் உண்மைத் தத்துவம், அதாவது எந்தக் கருத்தைக்கொண்டு ஆதியில் மதத்தை உண்டாக்கினார்களோ அந்தக் கருத்து சற்றும் அறிந்திருக்கமாட்டான். அதோடு, அதற்கு நேர் விரோதமாக அறியாமையும் ஒழுக்க ஈனங்களும் ஏற்பட்டு விட்டன. அன்றியும், சிலர் இவற்றை தங்கள் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக்கொள்ளவும் கருவியாய் விட்டது. சிறப்பாக இப்போதைய முக்கிய மதங்கள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் பாமர மக்களை ஏமாற்றிக்கொடுமைப் படுத்திப் பணம் பறித்து, புரோகிதக் கூட்டமும அரசாங்கமும் செல்வந்தனும் பிழைக்க மார்க்கங்களாக இருக்கின்றனவேயன்றி, பொதுவாக மனித வர்க்கத்திற்கு அவற்றால் எவ்விதப் பலனும் இல்லாமற்போய்விட்டது.
(குடிஅரசு - தலையங்கம் - 11-8-1929: 23-4-1949)