சமீபகாலமாக தமிழகம் முழுக்க சுற்றுச்சூழல் கருத்து கேட்புக் கூட்டங்கள் தொழிற்சாலை நிர்வாகத்துக்குச் சாதகமாகவே நடப்பது வழக்கமாகிவிட்டது. தஞ்சை வடசேரி கிங்ஸ் கெமிகல்ஸ் நிறுவனத்தின் எரிசாராய ஆலை, நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் செட்டிநாடு பவர் கார்பரேஷன் மின்ஆலை போன்றவற்றுக்கு நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டங்கள் ஒரு சார்பாக நடந்ததும், அதற்கு அரசு முழுமையாக உடன்பட்டதும் தெரிந்ததே. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பெருங்குறிச்சி கிராமத்தில் ராசி இண்டஸ்ட்ரீஸ் இந்தியா இரும்புத் தொழிற்சாலை அமைக்க நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் மாறுபட்ட முறையில் நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஊர் மக்கள், புரட்சிகர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 700 பேர் தங்கள் கருத்தை வெளிப்படையாக பேச முடிந்தது.

இந்த நிறுவனம் கழிவு இரும்புத் துண்டுகளை வாங்கி உருக்கி, அதிலிருந்து 4,500 டன் வார்ப்புத் துண்டுகளும், பின்னர் 4,500 டன் இரும்புக் கம்பிகளும் உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருந்தது. உற்பத்தியின்போது புகை வெளியாகும். மேலும் இத்தொழிற்சாலையின் நீர் சுத்திகரிப்பானுக்கு 200 லிட்டரும், மில் குளிர்விக்கும் அமைப்புக்கு 1,000 லிட்டரும், மொத்தம் ஒரு நாளைக்கு 6,500 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

தொழிற்சாலையில் இருந்து சூடான காற்று, புகை வெளியாவது சுற்றியுள்ள மரங்கள், பயிர்களை பாதிக்கும். காலப்போக்கில் மழைப் பொழிவையுகூட பாதிக்கலாம். தொழிற்சாலைக்கான அதிகப்படியான தண்ணீர் தேவையால் விவசாயம் பாதிக்கப்படலாம். அருகிலுள்ள கிராம மக்களுக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்படலாம். தொழிற்சாலை தேவைகளுக்கான போக்குவரத்து அதிகரிப்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பாதிப்புகளை மக்கள் கவனப்படுத்தினர். இதை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சகாயம், “பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் கிராம மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கிராமங்கள் இந்த மக்களின் சொந்த பூமி. விவசாயம்தான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே தொழில்.

அவர்களுடைய பயம் உண்மையானது. இத்தொழிற்சாலை வந்தால் சுகாதார பாதிப்பு, விவசாய பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும். விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் எதிராக முடிவெடுக்கும் சூழ்நிலையில் நான் இல்லை. ஏற்கெனவே விவசாயம் நொடித்துப் போய்விட்டது, விவசாயிகள் வேலை தேடி நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். என்னுடைய அதிகாரத்தை அவர்களுக்கு எதிராக பயன்படுத்த முடியாது. மக்களின் அமைதியான வாழ்க்கையை அழிக்க முடியாது. தொழிற்சாலை நிறுவும் தனிநபர்களின் கருத்துகளைவிட, விவசாயிகளின் கருத்தே இந்த விவகாரத்தில் மேலோங்கி இருக்கிறது. எனவே, இந்த தொழிற்சாலையிக்கு சுற்றுச்சூழல் அனுமதி தர பரிந்துரைக்கப்படவில்லை” என்று தெரிவித்தார். இதனால் இந்தத் தொழிற்சாலைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, ஆட்சியர் சகாயம் சுற்றுச் சூழலை காக்கும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளார். காவிரியில் சாயக் கழிவை கொட்டி வரும் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் சாயப்பட்டறைகளில் நூற்றுக்கணக்கானவற்றை தானே மூடி சீல் வைத்தார். திருச்செங்கோட்டில் 40 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்த தோல் சந்தையை அப்புறப்படுத்தினார். கொல்லிமலையில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் தாதுப் பொருள்களை வெட்டியெடுத்து மலையை நிர்மூலமாக்கிய மேட்டூர் மால்கோ நிறுவனத்துக்கு இசைவாணையை ரத்து செய்தார்.

மண், நீர், காற்றை மாசுபடுத்தும் எந்த ஆலையையும் இதுவரை அவர் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக ஒவ்வொரு விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திலும் தெரிவித்து, விவசாயிகளுக்கு ஆட்சியர் விழிப்புணர்வு ஊட்டி வந்தார்.

அதேபோல் எந்த ஆலைக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கான கருத்துக் கேட்புக் கூட்டங்களை நகரத்தில் நடத்தக் கூடாது. சம்பந்தப்பட்ட கிராமத்திலேயே நடத்த வேண்டும் என்ற பு.வி.வி.தொ.மு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று பெருங்குறிச்சி ராசி இரும்பாலை, கபிலர்மலை சரஸ்வதி மின்ஆலை கருத்து கேட்பு கூட்டங்கள் சம்பந்தப்பட்ட ஊர்களிலேயே நடத்தப்பட்டன.

அதேபோல் புதிய ஆலைகளின் கருத்துக் கேட்புக் கூட்டம் பற்றிய தகவலை நாளிதழ்களில் வெளியிடுவதுடன், பெரும்பான்மையான மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கிராமங்களில் சுவரொட்டி, துண்டறிக்கை மூலம் பரப்ப வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்று நடைமுறைப்படுத்தினார்.

ஏற்கெனவே பொன்னி சுகர்ஸ் குன்னமலை எரிசாராய ஆலை பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டம் சம்பந்தப்பட்ட மக்களுக்கு தெரிவிக்காமலேயே பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கமுக்கமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆலைக்கு ஆதரவாக அறிக்கை கொடுக்கப்பட்டது. இதற்கு எதிராக ஆட்சியரிடம் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, மக்கள் அந்த ஆலைக்கு தொடர் எதிர்ப்பு தெரிவித்ததால், அதே கிராமத்திலேயே கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 800 பேர் கலந்து கொண்டு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஆலை நிர்வாகம் பின் வாங்கிவிட்டது.

நாமக்கல்லில் மட்டுமல்ல காஞ்சிபுரம் மாவட்ட கோட்டாட்சியராக இருந்தபோது, கோககோலா ஆலைக்கு இவர் சீல் வைத்துள்ளார். அத்துடன் மணல் கொள்ளைக்கு எதிராகச் செயல்பட்டதாலும் தாக்குதலுக்கு உள்ளானார்.

இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் மட்டுமின்றி, நாமக்கல் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற கோடி மரம் வளர்ப்புத் திட்டம் என்ற திட்டத்தை இவர் நடைமுறைப்படுத்தி வருகிறார். அத்துடன் நமது பாரம்பரிய உணவுகளை உழவன் உணவகம் மூலமாக உழவர் சந்தைகளில் விற்க ஏற்பாடு செய்துள்ளார். அத்துடன் “காவிரியைக் காண்போம், காவிரியைக் காப்போம்“ என்ற முழக்கத்துடன் 2010 பொங்கல் நாளில் ஆயிரக்கணக்கான மக்களோடு சென்று காவிரியில் மலர்தூவி, மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தினார். இயற்கை வேளாண்மையை பரப்ப, வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இயற்கை வேளாண் கருத்தரங்கை மாவட்ட நிர்வாகம் சார்பிலேயே நடத்தினார்.

மக்களால் அரசு உருவாக்கப்படுகிறது, அரசு மக்களுக்கானது என்பதை நிஜமாக்குவது போல் தன் அதிகாரங்களைப் பயன்படுத்தும் மாவட்ட ஆட்சியர் இது போல் பல்வேறு விஷயங்களில் எடுத்துக்காட்டாய் திகழ்கிறார். இந்தியாவிலேயே முதலில் சொத்துக் கணக்கை வெளியிட்ட அவரது சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளும் நமது அரசு அலுவலர்கள் பின்பற்றத் தகுந்தவை.

Pin It