பல்லாயிரம் ஆண்டுகளாக -மனித இனம் இயற்கையிடம் கண்டு, கற்றுப் பண்பட்டு வருகின்றது. இயற்கை மற்றும் தாவரங்களை, அதன் சார் சூழல்களை அணுகுவதிலும், புரிந்து கொள்வதிலும் ஒவ்வோர் இனத்திற்கும் ஒரு தனிப்பட்ட பண்பு உள்ளது. 'இயற்கையுடன் இயைந்த வாழ்வு' எனும் மரபினை உடைய தமிழர்களில், சங்கப் புலவர்கள், இயற்கையின் போக்கைக் கண்ணினும், செவியினும் திண்ணிதின உணர்ந்து, மனத்தின் எண்ணி, எப்படி நுட்பமாக, மாசறத் தெரிந்து கொண்டார்கள் என ஆய்வு செய்வது சாலச்சிறந்ததாகும்.

இன்றைய புதித (நவீன) அறிவியல் உலகில் இயற்கையைக் கண்டு படி எடுத்து அதைத் தொழில் நுட்பத்தில் புகுத்தும் 'உயிர் படி எடு தொழில்நுட்பமும்' (Biomimetics),  நுண்மையைக் கருது பொருளாகக் கொண்ட நேனோ தொழில்நுட்பமும்'  புதிய பார்வையுடன் அறிவியலாரால் நோக்கப்படுகின்றன.

தாமரை தமிழ்ப் பண்பாட்டிலும், ஆசியப் பண் பாட்டிலும்  இரண்டறக்கலந்து போற்றப்படும் மலர் என்பது நாம் அறிந்த ஒன்று. இன்றைய புதிய அறிவியலில் 'தாமரை சார் தொழில்நுட்பம்' மற்றும் 'மருத்துவத் தாவரப் பன்மயப் பாதுகாப்பு உத்திகளும், அதனைப் பற்றிய சங்ககாலத் தமிழர்களின் நுட்பமான அணுகுமுறையும், பார்வையும் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.

தாமரை -இன்றைய உயர் தாவர அறிவியல் தொழில் நுட்பம் - கண்டுபிடிப்பு :

இன்றைய அறிவியல் முயற்சியில், தாவரவியல் உயிர்ம அறிவியலாளர்களையும் (Plant BioChemist) வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற கண்டுபிடிப்பு உலக புகழ் பெற்ற 'நேச்சர்' (Nature) இதழில் (1996) வெளிவந்த 'தாமரை' தொடர்பான'தாமரையின் வெப்ப முருவாக்கமும், பூச்சி இனங்களின் ஈர்ப்பும்'' என்ற பொருளிடப்பட்டகண்டு பிடிப்புக்கட்டுரையாகும். 'நேச்சர்' இதழ் உயிரியல் துறை வல்லுனர்களால் உயரிய முறையில்மதிக்கப்படும் அறிவியல் இதழாகும்.

முனைவர் ரோஷர் டெய் மோர் மற்றும் முனைவர் பால் சுல்சு மோட்டல் எனும் அடிலெய்டுஆஸ்திரேலியப் பல்கலைக் கழகம் சார்ந்த இரு 'தாவர உடலியல்' வல்லுனர்கள் 'தாமரைப்' பூவினை ஆராயும் பொழுது, அவை எப்பொழுதும் தமக்குள் வெப்பத்தையுண்டாக்கி வெதுவெதுப்புடன், அதனிலும் குறிப்பாக 860 - 950 பாரன்ஹீட் வெப்பத்தையே சமநிலைப்படுத்திக் கொண்டேயுள்ளது என்று கண்டறிந்தனர். மேலும் தாமரைப் பூவின் வெளிப்பகுதி வெப்பநிலை மிகக்குளிராக இருப்பினும், மிக உயர்வான வெப்பமாக இருப்பினும், தாமரை தன் பூவினுள்ளான  வெப்பத்தை உயரவிடாமலோ, தாழவிடாமலோ ஒரே விதமாக. ''ஒரு வெப்பரத்த உயிரி போல'' இதமான, உடலுக்கு வெதுவெதுப்பான தன்மையையே எல்லா சூழலிலும் பேணுகின்றது. 'தாமரையின் இச்செயல்பாடு' அந்த அறிவியலாளர்களை வியப்பின் உச்சத்திற்குள்  கொண்டு சென்றது.

இதன் தொடர்ச்சியாக, தாமரைப் பூக்களில் பல 'நுண் வெப்பமானிகளை' இணைத்து அதன் வெப்ப மாற்றங்கள்  மற்றும் ஆற்றல் உருவாக்கத்தை இணைத்து  ஆய்வுத் செய்தபொழுது, தாமரை மலர்கள் மலர ஆரம்பிக்கும்போது வெப்பநிலை மாற்றம் அடைய தொடங்குகிறது. அதைவிட, இரவு நேரக் குளிரில் அதன் மலர்கள் கூம்பிய நிலையில் அதிக வெதுவெதுப்பாகவே உள்ளது. அது வேகமாக 'ஆக்ஸிசன்' 'கார்பன் டை யாக்சைடு' ஆகியன கார்போ ஹைட்ரேட் சக்தியாக மாற்றமடையும் வினையைச் செய்கின்றது. இது குளிரில் நடுங்கும் பிராணிகள் தங்களைச் சூடுபடுத்திக் கொள்வதற்குச் செய்யும் உத்தியைப் போன்று உள்ளது. வெப்பநிலை மாற்றம் 860 முதல் 950 பாரன்ஹீட் வரையே உள்ளது.

இவ்வெப்பநிலை வெதுவெதுப்பிற்கு ஒவ்வொரு தாமரைப்பூவும் ஒரு 'வாட்' சக்தியை வெளியிடுகின்றது. நாற்பது தாமரை மலர்கள் கூடி ஓர் அறையில் உள்ள 40 வாட் குழல் விளக்கை எரிய வைக்க இயலும் என்று கூறுகின்றனர் அதே ஆராய்ச்சியாளர்கள்.

கார்னல் பல்கலைக்கழக அறிவியலார், முனைவர் டாட்தவுடன் எழுப்பும் வினா கீழ்க்கண்டவாறு : ஏன் தாமரை தொடர்ச்சியாக மனித உடலினைப் போன்று 860 tஷீ 950 பாரன் ஹீட்டை மட்டுமே நிலை நிறுத்த வேண்டும்?  என்று வினா எழுப்புகின்றார்.  இதற்குத் தாவர சூழியியல் அறிவியலார் பெர்ன் ஹென்ரிச் (வெர்மான்ட் பல்கலைக் கழகம்). கீழ்க்கண்ட ஆய்வு முடிவுகளை வெளியிடுகிறார்

இந்த வெப்பநிலையில் தான் தாமரையை நோக்கி வண்டுகள் மாலையில் விரும்பி வருகின்றன. பின்னர் 'தாமரை இதழ் மெதுவாக மூடிக் கூம்பிக் கொள்கின்றன. வெதுவெதுப்பான இந்த வண்டுகள் வெப்பநிலை உள்ளுறைச் சூழலில் இயல்பான  சூழலை விடச் சுறுசுறுப்பாக இரவில் புணர்ச்சியையும், மகரந்தத்தை கிளறி உண்பதையும் மேற்கொண்டு சிறப்பாகச் செயல்படுகின்றன. இரவில் வேலைசெய்து கால் முழுவதும் மகரந்தத் தூள்களை ஒட்டி எடுத்துக்கொண்ட வண்டு வேறு மலருக்குச் சுறுசுறுப்பாகக் காலையிலே சூரியன் ஒளியில் நிதானமாக நின்று கதகதப்பாவதற்கு முன்பே கிளம்பிச் சென்று அங்கு வேறு தாமரை அயல் மகரந்தச் சேர்க்கைக்கு மலருக்கு உறவாக்கும் மகத்தான வேலையைச் செய்து முடிக்கின்றது. இதற்காகத்தான் வண்டுகளுக்கு இதமான  860 - 950 பாரன்ஹீட் வெப்பத்தைத் தாமரை கொண்டுள்ளது, இது எரியும் சுடர்போலும் திகழுகிறது.

சங்க கால இலக்கியத்தில் தாமரை - ஒர் அறிவியல் பார்வை :

இனி, தாமரையை ''தேடலுடன் கூடிய'' நுட்பமாகப் பார்க்கும் வழக்கத்தைச்  சங்க இலக்கியங்களும் தமிழ்ப் பண்பாட்டு வழக்காறுகளும் கொண்டிருக்கின்றனவா என்பதை ஆராய்வோம்.

தாவரங்களை சங்க இலக்கிய புலவர் பார்க்கும் மாண்பு ''மிகவும் - நுண்ணிய கண்ணோட்டமாகவும், நுட்பமானதாகவும் தெரிகிறது. உலகம் வியக்க - பல்துறை அறிவியலாரால் ஆராய்ச்சி செய்யப்பட்டு, 'நேச்சர்' என்ற இதழில் வெளிவந்த நுட்பமான கண்டுபிடிப்பினை  2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் 'சங்ககாலத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர் என்பது அறிவியல் வியப்பின்  உச்சமாகும்.

குறுந்தொகைப்புலவன் படு மரத்து மோசிக் கொற்றனின் இவ்வரிய 'நுண் கண்டுபிடிப்பினைப்' பார்க்க, நாம் குறுந்தொகைக்குள் செல்வோம்... தாமரையின் தாவரச் சூழல் தன்மை மட்டுமல்லாமல் 'நேனோ' அளவிலான மனித மனநுட்பத்தினையும், உடல் நுட்பத்தினையும், விளக்கும் தன்மையைக் காணும்போது இப்புலவர்கள் இயற்கை அறிவியலை மிக நுட்பத்துடன் அறிந்திருந்தனர் என்பது புலப்படுகின்றது.

''மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில்

சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,

வேனிலானே தண்ணியள்; பனியே,

வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,

அலங்கு வெயில் பொதிந்த தாமரை

உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே''. 

(குறுந்தொகை 376 - நெய்தல்)

தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறியதாக அமைந்த இப்பாடலில், தலைவியினுடைய நலத்தை மனதால் நினைத்துத் தனது பொருள் தேடும் மனதைக் கட்டுப்படுத்துகிறான். மக்கள் அணுகமுடியாத உயரமான உள்காட்டுனுள்ளே வளர்ந்த சந்தனத்தின் குளிர்ச்சிபோல், வேனில் காலத்திலும் குளிர்ச்சி யுடையளவாக இருக்கின்றாள் தலைவி. இதை அனுபவித்துக் கண்ட தலைவன் இயற்கையில் குளிர்ந்த பொய்கையில் மலர்ந்த தாமரையை உவமையாக்குகின்றான். தாமரை, பனிக்காலத்தில் சூரியக் கதிர்கள் மறைந்த பின்பு, சூரிய கதிர்களின் ''வெப்பத்தை'' உள் வாங்கிக் கொண்டு பொதிந்து திகழ்வதைப் போலத் தலைவி ''சிறு வெப்பத்தை'' எப்போதும் மேனியினுள் கொண்டவளாகத் (சிறு வெம்மையள்) திகழ்கின்றாள்.

இங்கு நாம் அறிய வேண்டிய இயற்கை நுட்பம் என்னவெனில், தாமரைக்குளம் மிகுந்த குளிர்ச்சியைப் பெற்றிருக்கிறது; ஆனாலும், அந்தக் குளிர்ச்சியின் தாக்கம் தாமரையைச் சூழ்ந்த போதிலும், அதற்கு மாறாக உட்புறத்தில் சிறு வெம்மையுடன் வெதுவெதுப்பை (860&950 பாரண் ஹீட்) எப்பொழுதும் தாமரை தன்னக்கத்தே பொதிந்துள்ளது என்பதாம். இச்செயதி இப்பாட்டில் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் மனிதனின் உடல் எந்தச் சூழலிலும், மிகக் குளிர்ந்த பனி படர்ந்த மலைமிதினில் இருப்பினும், கடும் சூடுடைய பாலைவன நிலத்தில் இருப்பினும், ஒரே மாதிரியான அளவான, நிலையான உடல் வெப்பத்தைத் தன்னக்கத்தே கொண்டு இருக்கும். இதுவே மனித உடல் சூட்சுமமாக இருக்கிறது. இது அறிவியல் அடிப்படையில் வெப்பரத்த உயிரிகளின் பண்பாகும்.

இதேபோலப் பொதுத் தாவரங்களுக்கு இல்லாத பண்பாகத் 'தாமரை' தன் மலரினுள் ''சிறு வெப்பத்தை'', அதாவது உயிரிகள் வாழ்வதற்கு ஏற்ற வெப்பத்தை உருவாக்கித் தன்னக்கத்தே கொண்டுள்ளது.

இதனாலேதான் தாமரை மலரினுள் இரவானலும் தேன் உண்ட 'வண்டினங்கள்' 'தாமரை' பூவினுள் உறைகின்றன. ஏனெனில், தாமரை மலரின் உள் உள்ள இதமான வெப்பத்தினாலான கதகதப்பு அவை 'மகிழ்வுடன்' தங்க ஏற்ற வகையாக உள்ளது.

திருமுருகாற்றுப் படையில் அதன் ஆசிரியர் நக்கீரர், இரவு நேரங்களில் வண்டுகள் தாமரைப்பூவில் உறங்கி விட்டுக் காலையில் பூ, இதழ் விரித்ததும் வெளியேறுவதாகத் தெரிவித்திருக்கிறார். வண்டுகள் தாமரைப்பூவில் இரவில் ஏன் தங்குகின்றன என்ற காரணத்தைக் கண்டறிந்து அதனை அறிவியல் பூர்வமாக அறிவியலார் விளக்கி இருக்கின்றனர் என்பதை முன்பே கண்டோம்.

(அடுத்த இதழில் தொடரும்)

Pin It