‘இராசி எண்’ பார்க்கும் மூட நம்பிக்கை நீதித் துறைகளில் கொடி கட்டிப் பறப்பதை விளக்கி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு, தமிழ் நாளேடு ஒன்றில் விரிவான கட்டுரை எழுதியுள்ளார். அதிலிருந்து...

•             கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி தோற்று, இடதுசாரி கூட்டணி ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது. முந்தைய அமைச்சர்கள் பயன் படுத்திய வாகனங்களையே - புதிய அமைச்சர்களும் பயன்படுத்த முடிவெடுத்தனர். வாகனங்களை அணிவகுத்து நிறுத்தியபோது, அதில் 13ஆம் எண் உள்ள வாகனமே இல்லை. காரணம் 13 இராசியில்லாத எண் என்ற மூட நம்பிக்கை. ‘இராசியில்லாத எண்’ வேண்டாம் என்று நம்பிய பிறகும் தேர்தல் முடிவுகள் இவர்களுக்கு ‘இராசி’ இல்லாமல் போய்விட்டதே! இப்போது நிதி அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அமைச்சர் தாமஸ் அய்சக் தன்னுடைய வாகனத்துக்கு 13 என்ற எண்ணைப் பெற்றுத் தரு மாறு கேட்டுள்ளார். அமைச் சரைப் பாராட்ட வேண்டும்.

•             கேரளாவில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அறைகளுக்குக்கூட ‘13’ எண் தவிர்க்கப்பட்டு, ‘12ஏ’ என்று இலக்கமிடப்பட்டுள்ளது. பகுத்தறிவுக்கு எதிரான இந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சந்திரமோகன் என்ற வழக்கறிஞர் கேரள உயர்நீதிமன்றத்தில் 2006 ஆம் ஆண்டு பொது நலன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். 13ஆவது எண்ணை புறக்கணிக்கக் கூடாது என்று கோரி இருந்தார். வழக்கை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி வி.கே. பாலி, அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்ததோடு, வழக் கறிஞருக்கு ரூ.10,000 அபராதம் விதித்தது. இது அற்பத்தனமான மனு என்றும் நீதிபதிகள் கடுமை யாக கண்டித்தனர். வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு முறையீடு செய்தார் சந்திரமோகன். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் அடங்கிய அமர்வு கேரள உயர்நீதிமன்ற உத்தரவை நீக்கம் செய்ததோடு பகுத்தறிவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேரள உயர்நீதி மன்றத்துக்கு அறிவுறுத்தியது. அதற்குப் பிறகும்கூட கேரள உயர்நீதிமன்றத்தில் ஆங்கில அகர முதலி வரிசைப்படி எண்களை கொடுத்து (1, 1ஏ, 1பி....) 13ஆவது எண்ணை தவிர்த்து விட்டனர்.

•             சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனக்கு ‘இராசி’ எண் 7 என்று நம்பி, எப்போதுமே 7 அல்லது கூட்டு வரிசையில் ‘7’ வரக்கூடிய அறைகளையும் ஒவ் வொரு நாளும் விசாரிக்கக்கூடிய வழக்குகளின் எண்ணிக்கை கூட்டுத் தொகையில் ‘7’ அமையு மாறும் பார்த்துக் கொள்வாராம்.

•             தமிழகத்திலுள்ள நீதிபதிகள் தங்களது வாகனங்களின் பதிவு எண்கள் ஒற்றைப் படை வரிசை யில் அமையுமாறு பார்த்துக் கொள்வார்களாம். ஆந்திராவி லிருந்து இங்கே வரும் நீதிபதி களோ இரட்டைப் படை எண் தான் ‘இராசி’ என்று நம்புவார் களாம்.

•             அரசமைப்பு சட்டத்தின் அடிப் படைக் கடமைகள் பற்றிய பிரிவு 51ஏ-யிலுள்ள பிரிவு (எச்) என்ற உட்பிரிவு அறிவியல் மனப் பான்மையை வலியுறுத்துகிறது. அறிவியல் மன நிலையுடன் மனிதாபிமானத் தன்மையுடன் அனைத்தையும் விசாரணைக்கு உட்படுத்தி, சீர்திருத்த மனப் பான்மைக்கான மெய்ப்பொருளை தேடும் கடமை உணர்வு ஒவ் வொரு குடிமகனுக்கும் அடிப்படை கடமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் பல நீதிபதிகள் இதற்கு மாறான மூடநம்பிக்கையாளர் களாக அதுவும் ‘இராசி’ எண் பார்க்கக் கூடியவர்களாக இருக் கிறார்கள். இதே நீதிபதிகள் 13 இலக்கக் கூட்டுத் தொகையில் ஊதியத் தொகையோ ஆயுள் காப்பீட்டுத் தொகையோ வரும் போது, அதை வாங்குவதற்கு மறுப்பார்களா?

சிறைக்குத் தள்ளியது வேதமந்திரத்தின் ‘சக்தி’

மும்பை சம்தா நகரில் கடந்த ஜூன் 10ஆம் தேதி ம hளிகை ஒன்றில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி தேவேந்திர துபே, பகவான் திவேரீ என்ற இரண்டு வேதம் படித்த புரோகித பார்ப்பனர்களை கைது செய்துள்ளனர்.

இவர்களால் சிறை பிடிக்கப்பட் டிருந்த 12 பார்ப்பன சிறுவர்கள் மற்றும் 16 பார்ப்பன இளைஞர்களை மீட்டுள்ளனர். தாங்கள் கற்ற வேத மந்திரங்களின் சக்தியினால் ‘கடவுளோடு’ தங்களுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்று இவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்.

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உ.பி., ம.பி., ஜார்கண்ட் மாநிலங்களி லிருந்து தரகர்கள் வழியாக இந்த சிறுவர்கள் கடத்தப்படுகிறார்கள். அவர்களை ‘வேதப் பயிற்சி மாளிகைக்கு’ அனுப்பி வைக் கிறார்கள். இப்படி பார்ப்பன சிறுவர்களை சேர்ப்பதற்காக சில தரகர்கள் இருந்தார்கள். இப்போது பார்ப்பன பெண் தரகர் ஒருவரை காவல்துறை தேடிக் கொண்டிருக் கிறது. ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் தொடர்ந்து வேத மந்திரங்களை ஓதிக் கொண்டே இருக்க வேண்டுமாம். அப்படி இந்த சிறுவர்களும் இளைஞர்களும் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சொத்துக்கள் குவிப்பதற்கும், வெற்றிகரமாக வணிகம் நடத்துவதற் கும், விரும்பும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கும் சோதிட இராசிப் பலன்களை மாற்றி அமைப்பதற்கும் இந்த வேதப் பயிற்சி களை மேற்கொண்டால் கடவுள் நேரடியாக தலையிட முன் வருவார் என்று ஆசை வார்த்தைகள் காட்டப் பட்டன. கடும் மன அழுத்தத்துக்கு உள்ளான இளைஞர்கள், தங்கள் உறவினர்களுக்கு அலைபேசி, குறுஞ் செய்தி வழியாக இரகசியமாக தகவல் அனுப்பி, தங்களை மீட்க உதவுமாறு கேட்டனர்.

அதற்குப் பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. இந்த சிறுவர்கள் 2 மாதத்தி லிருந்து 5 மாதங்கள் வரை இப்படி கொடுமைபடுத்தப்பட்டிருக்கிறார்கள். கடவுளிடம் தொடர்பு இருப்பதாகக் கூறிய வேத புரோகிதர்கள் இருவரும் இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

கோயில்களிலும் அர்ச்சகப் பார்ப்பனர்கள் தங்களின் வேத மந்திர உச்சரிப்புகளின் ஒலி கடவுளுக்கு கேட்கிறது என்று கூறி பக்தர்களின் கோரிக்கைகளுக்காக ‘தட்சணை’ வாங்கிக் கொண்டு அர்ச்சனை செய்கிறார்கள். பாமர பக்தர்களும் இதை நம்புகிறார்கள். இதற்குப் பெயர் பக்தியாம்!

இதே தொழிலை வேறு வடிவத்தில் பார்ப்பனர்களாக பார்த்து ஆள் பிடித்து செய்தால் அதற்குப் பெயர் மோசடி. இதே மோசடிதானே கோயில்களிலும் நடக்கிறது. இதே மோசடிதானே கோயில்களிலும் நடக்கிறது.

‘சமஸ்கிருத’ மந்திரத்தின் சக்தியைக் கூறி பார்ப்பனர்கள் வேத காலத்தி லிருந்து ஏமாற்றிக் கொண்டே வருகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சில் அரசு ஊழியர்கள் சேரலாமாம்!

‘அரசு ஊழியர்கள் ஆர்.எஸ். எஸ்.சில் உறுப்பினராக இருக்க தடை யில்லை’ என்று மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஒரு அரசாணை பிறப்பித்தார். அது நாடு முழுவதும் கொந்தளிப்பை உருவாக்கியது. அன்று நாடாளு மன்றத்தில் எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் இந்த உத்தரவு திரும்பப் பெறும் வரை நாடாளுமன்றத்தையே முடக்கியது. இப்போது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அரசு ஊழியர்களாக அதிகாரிகளாக வருவதற்கான தடையை நீக்க மோடி ஆட்சி முடிவு செய்திருக்கிறது.

இந்திரா பிரதமராக இருக்கும் போது 1966ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப் பிலோ ஜமாத்-இ-இஸ்லாம் அமைப் பிலோ உறுப்பினராக இருப்பதற்கு தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இதன்படி அரசு ஊழியர்கள் பணியில் சேரும்போது இந்த அமைப்புகளில் உறுப்பினராக இல்லை என்று எழுத்துபூர்வமாக உறுதி தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து 1975ஆம் ஆண்டிலும் 1980ஆம் ஆண்டிலும் இந்த ஆணைகள் மீண்டும் பிறப்பிக்கப் பட்டன. தடை அமுலில் இருந்தாலும், எழுத்துபூர்வமாக உறுதி தரும் நடை முறை பின்பற்றப்படாமல் இருந்தது. இப்போது கோவாவில் புதிதாக அரசுப் பணிகளில் சேருவோர் இத்தகைய உறுதிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்துகிறது.

இந்த நிலையில் மத்திய வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம், ‘ஆர்.எஸ்.எஸ்.சில் அரசு ஊழியர் உறுப்பினராகும் தடையை நீக்கு வதாக முடிவு செய்துள்ளது’ என்ற செய்தியை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 10) வெளியிட் டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பிரச்சார செயலாளராக உள்ள (பிரச்சார் பிரமுக்) மன்மோகன் வைத்யா, ‘இத்தகைய தடை ஜனநாயக விரோத மானது’ என்று கூறியுள்ளார். மத்திய இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் என்பவரும் தடை நீக்கப்படும் என்று கூறியிருக்கிறார். ‘ஆர்.எஸ்.எஸ். ஒரு கலாச்சார அமைப்பு; அரசியல் அமைப்பு அல்ல’ என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவது மோடியா, அத்வானியா என்ற பிரச் சினை வந்தபோது, அத்வானியை அழைத்துப் பேசி போட்டியிலிருந்து விலக வைத்தது ஆர்.எஸ்.எஸ். மோடி யின் அமைச்சரவைப் பட்டியல், ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தலின் படியே தயாரிக்கப்பட்டது. ஆட்சியின் உயர் பதவிகளில் வரலாற்றுக் கழகம், தணிக்கைப் பிரிவு போன்றவற்றிலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களே நியமிக்கப் படுகிறார்கள். பிரதமர் அலுவலகத் தில் செல்வாக்கு மிக்க பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். முகாமிலிருந்து வந்த வர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அரசியல் தொடர்பு இல்லை. கலாச்சார அமைப்பு என்று காதில் பூசுற்றுகிறார்கள். அதிகார மய்யங்களை பார்ப்பன காவிமயமாக்கும் முயற்சிகளில் வெளிப்படையாகவே மோடி ஆட்சி இறங்கிவிட்டது.

Pin It