முற்றுந் துறந்த முனிவர்கள் கூட நோய் என்றால் அஞ்சுகிறார்கள்! சுவர் வைத்த பிறகு தானே சித்திரம் எழுத வேண்டும் என்று துறவிகள் கூட எண்ணுகிறார்கள் என்றால், மற்றவர்களைப் பற்றிக் கூறவா வேண்டும்?

kuthoosi gurusamy 268நோய்வாய்க்குள் அகப்படாத மானிடர்கள் வெகுவெகு சொற்பம். லட்சத்திற்கு ஒருவர்கூட இருப்பது அருமை. ஆதலால்தான் சோதிடம், ஆரூடம் முதலிய பித்தலாட்டத் தொழில்காரர்கள், கண்ணை மூடிக் கொண்டே, கை விரல்களால் எண்ணிவிட்டு, “உங்களுக்கு ஒரு நோய் இருக்கிறது; அதைப் பற்றிக் கவலையாயிருக்கிறீர்கள்!” என்று பளிச்சென்று அடிக்கிறார்கள்! உடனே ஒற்றைத் தலைவலி இருப்பவனும், முழங்கையில் புண்ணிருப்பவனும் கூட முடிச்சை அவிழ்த்துக் கொடுத்து விடுகிறான்!

டாக்டர்களுக்கே நோய் வருகிற தென்றால், மற்றவர்களுக்கு வராதா?

ரோம்! நகரிலுள்ள போப்பாண்டவர் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாயிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன! கூப்பிட்ட நேரத்தில் கடவுளானவர் நேரில் “பேட்டி” தருகின்ற வாய்ப்புப் பெற்ற புண்ணிய மூர்த்தியான போப்பாண்டவருக்கே நோய் வருவதென்றால், வறுமையினாலும், வாடிக்கையினாலும் நம் நாட்டில் கிறிஸ்துவராயிருக்கிறவர்கள் திடுக்கிடாமல் இருப்பார்களா? அவர்கள் நம்பிக்கையும் ஆட்டங் கொடுக்கத்தானே செய்யும்?

பகவான் ரமணரிஷிக்குக் கையும் காலும் வீங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். என்னால் நம் முடியவேயில்லை! நமது பகவானுக்கா நோய் வரும்? நிச்சயம் இருக்காது. பொய் வதந்தியாகத்தான் இருக்கும்! தம் ஜீவாத்மாவைப் பரமாத்மாவுடன் ஒன்ற வைத்து, அந்த முறையைப் பிற பக்த கோடிகளுக்கும் வாரி வழங்கி வருகின்ற ஒரு ரிஷிக்கு - ஆமாம் - வால்மீகி, விஸ்வாமித்திரர் போன்ற கலிகால ரிஷிக்கு - கை வீக்கமா? சே! சே! சுத்தப்புரளி! பிணி, மூப்புச் சாக்காட்டை வென்ற முனிபுங்கவருக்கா? மும்மலம் அறுத்த மூர்த்திக்கா? சுத்தப் பொய்!”

இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி மகந்துவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது! பக்த கோடிகளான நோயாளிகள் எல்லோரும் திருப்பதி வெங்கிடாசலபதியிடம் சென்று தங்கள் விலையுயர்ந்த காணிக்கையை (மயிரை) அவருக்குத் தருவதன் மூலம் நன்றி செலுத்தி வருகிறபோது, தமது முதல் சிஷ்யரான மகந்துவுக்கு வந்த பைத்தியத்தைப் போக்க முடியவில்லையாம், டாக்டர் வெங்கடாசலபதி, எம். பி., பி. எஸ்., எம். டி. அவர்களால்! உடனே விரைந்தோடி வந்தார், சென்னைக்கு! கர்னல் மால்காம்சன் என்ற “நீச (மிலேச்ச) சாதி” வைத்தியர் தான் அவருடைய பைத்தியத்திற்கு வைத்தியம் பார்த்தார்!

உலகில் நோய் வாய்ப்படாதவர்கள் யாராவது உண்டென்றால், அவர்கள் “ஹிந்து”க் கோவில்களுக்குள் இருக்கும் கடவுள்கள் தான்! எத்தனை வேளை, என்ன உயர்வான உணவு கொடுத்தாலும் சரி! ஒரு வயிற்று வலியோ, காலராவோ, சீத பேதியோ, எதுவும் வருவதேயில்லை! நல்ல குளிர் காலத்தில் இளநீர் அபிஷேகம் செய்கிறார்களே! எந்தக் கடவுளுக்காவது இது வரையில் சளி (சென்னையில் ‘ஜளிப்பு’!)ப் பிடித்ததாகக் கேள்விப் பட்டதுண்டா? அய்ப்பசி மாதத்தில் கூட தலை முழுகுவதற்கு வெந்நீர் கேட்டதுண்டா, எந்தக் கடவுளாவது? அத மட்டுமா? இடுப்பு வேட்டி எண்ணெய்ச் சிக்கு வாடை வீசுகிறது, சலவை வேட்டி கட்டிவிடு, என்று கேட்டதுண்டா? சூரிய வெளிச்சமோ, காற்றோ இல்லாத அறையில் 24 மணி நேரமும் கோஷாப் பெண்களைப் போலக் கிடந்து புழுங்குவதனால் நியாயமாக வரவேண்டிய ஷயரோகம் வருகிறதா, இக்கடவுள்களுக்கு?

எத்தனை எலிகள் இராப்பகலாய் நம் கடவுள்கள் மீது மேய்கின்றன? எலிக்கடியினால் இஞ்செக்ஷன் செய்ய வேண்டிய அவசியமும் எந்தக் கடவுளுக்காவது இதுவரையில் ஏற்பட்டதுண்டா?

ஆகவே, இவர்களைத் தவிர உலகிலுள்ள எல்லோருக்கும் ஏதாவதொரு நோய் இருக்கத்தான் செய்கிறது!

நோயைப் போக்குவதற்கு மனிதன் முயல்கிறானே, அது சரியா? சரியல்லதான்! ஆஸ்திகர்களுக்கு நிச்சயம் சரியல்ல.

அது மகா பாபமான செய்கை என்று கூடச் சொல்வேன்! நோய்களை உண்டாக்குகிறவர் யார்? கடவுள்! எந்தக் கடவுள்? உலகில் பாம்பையும், தேளையும், ஈயையும், கொசுவையும், மூட்டைப் பூச்சியையும், விஷத்தையும், புலியையும் எந்தக் கடவுள் உண்டாக்கினாரோ, அதே கடவுள் தான் நோய்களையும் உண்டாக்கினார்! ஆதலால் ஆஸ்திகர்களின் முதல் கடமை, எந்த நோய் வந்தாலும் சும்மாயிருப்பதேயாகும்! அதனால் நாட்டுக்கு ஒரு லட்சம் ஆஸ்திகர்கள் பலியாக வேண்டி நேரிட்டாலும் பரவாயில்லை! ஒரு நல்ல உண்மையை, அதாவது ஆஸ்திகத்தை உலகில் நிலை நாட்டுவதற்காக, நாட்டுக்கு ஒரு லட்சம் பேர் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தால் தான் என்ன? கடவுள் கொடுப்பதை மனிதனாகப் பார்த்துத் தடுப்பதா? “தலைவிதி”யைப் பொய்யென்று சொல்லி எதிர்க்கலாமா?

இந்த மாதிரித் தியாகம் செய்யாவிட்டால், கோவில்களையெல்லாம் ஆஸ்பத்திரிகளாக்க வேண்டும் என்ற நாஸ்திகர்களுக்கு ஆதரவு தருவது போலாகி விடும்!

இந்த அடிப்படை உண்மையை - தத்துவத்தை உணர்ந்து, ஆஸ்திகப் பெரியோர்கள் நடைமுறையில் நடந்து காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்! நோய்கள் வரட்டும்! பரவாயில்லை! “ஆண்டவனே!” என்று கூறிவிட்டு கண்களை மூடிக் கொண்டு சத்யாக்கிரகம் செய்யுங்கள், ஆஸ்திகப் பெரியோர்களே!

- குத்தூசி குருசாமி (07-03-1950)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It