சுதந்திரமென்றால் என்ன? உண்மையில் நாம் சுதந்திரம் பெற்று விட்டோமா? நாம் சுதந்திரமாகத்தான் இந்த நாட்டில் இருக்கின்றோமா? இதை அனைவராலும் உணர முடிகிறதா? ஆகஸ்ட் 15-ல் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலேயரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்றதாக கொண்டாடுகிறோம். ஆங்கிலேயன் வந்தப் பிறகுதான் நாம் அடிமையானோமா? அதற்கு முன் நாம் அனைவரும் முழு சுதந்திரமாக, அதுவும் இந்தியர்களாக ஒற்றுமையாக வாழ்ந்தோமா? ஆங்கிலேயன் வருவதற்கு முன்பு ஆட்சி செய்த பல்வேறு மன்னர்களும் ஆரியர்களின் சூழ்ச்சியில் சிக்கி சுயத்தையிழந்து ஆரியர்களின் சிந்தனைக்கு அடிமைகளான மன்னர்கள், ஆரியர்களின் சொல்படி, மனுதர்மப்படி ஆட்சி செய்ததின் விளைவு, நாட்டில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அடிமைகளாகவே வாழ்ந்தனர் கையில் விலங்கிட்டு சிறையில் அல்ல. சிந்தனைக்கு விலங்கிட்டதால் நாட்டிலும், வீட்டிலும்.
நாம் அடிமைப்பட்டுத்தான் இருந்தோம். இன்றும் அவ்வாறே உள்ளோம். இதில் எங்கிருந்து வந்தது புதியதாக சுதந்திரம்? இதில் விடுதலை பெற்று இன்று 72வது சுதந்திரதினம் கொண்டாடி முடித்துவிட்டோம். உலகிலுள்ள மக்கள் எப்போது யாரிடம் அடிமைபட்டார்கள், பிறகு அதிலிருந்து விடுதலைப் பெற்றார்கள் என்பதைவிட, குறிப்பாக நாம் இன்று இந்தியர்கள் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் மக்கள் அனைவரும் அடிமைப்பட்டது ஆங்கிலேயரிடமல்ல.
ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கைபர் கணவாய் வழியாக இன்று இந்தியாவாக உள்ள நிலப்பரப்பிற்கு வந்து பார்ப்பனீயம் தழைத் தோங்கிய பிறகு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் எல்லோரும் தங்களுக்குள் எந்தவிதமானதொரு வேறுபாடுகளுமின்றி, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற இழிவுகளின்றி எல்லோரும் சமமாக, ஒற்றுமையாக, ஒன்றாக வாழ்வதைக் கண்ட வந்தேறிக்கூட்டம் தங்களது பரம்பரைக்குணமான சூழ்ச்சி, நயவஞ்சகத்தால், நம் மக்களிடையே உயர்ந்தசாதி, தாழ்ந்தசாதி, என்ற இழிவான எண்ணங்களை நம் மக்களின் சிந்தனையில் புகுத்தி இதற்கு அடிப்படை இந்துமதம், மற்றும் இந்துமதக் கடவுள்கள். இதற்கெல்லாம் மூலம் மனுதர்மம் இதில் கூறியபடி வாழ்வதுதான் மனிதவாழ்க்கைக்கு நல்லது. இவைகளை அறிந்து கொள்ள புராணம் இதிகாசம் உள்ளது. அதில் கூறியதுபோல் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் தங்களது வாழ்வு நலமும், வளமும் பெறுமென்று சொல்லி, அன்று, அந்த அயோக்கியர்கள், ஆரியர்கள் செய்த செயல்தான் இன்று நாம் வாழும் அத்தனை இழிவுக்கும், கேவலத்திற்கும் காரணம். இந்த ஆரிய அயோக்கியர்களின் சூழ்ச்சியில் சிக்கி மதியிழந்த மன்னர்கள் அவர்கள் சொல்படி நடந்ததால் மக்களும் நாளுக்கு நாள் சிறிது சிறிதாய் ஆரியர்களின் சிந்தனைக்கு அடிமையாகி பிறகு ஆரியர்களின் சிந்தனைக்கு முழுமையாக அடிமையானோம். அந்த அறியாமையில், முழு அடிமைத்தனத்திலிருந்து சற்றே விடுபட்டது ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்கு, இந்த நிலப்பரப்பிற்கு வந்த பிறகுதான்.
சமூகநீதிப் போராளியான மகாராட்டிரத்தைச் சேர்ந்தமூத்த பொதுவுடைமை வாதியான அன்னா பாபு சாட்டே என்று அழைக்கப்பட்ட துக்காராம் பாபுராவ் சாட்டே இந்தியா சுதந்திரம் அடைந்த மறுநாள் ஆகஸ்ட் 16-ஆம் தேதி, மும்பை ஆசாத் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் இது நமக்கான சுதந்திரமல்ல, இது ஒரு பொய்யான சுதந்திரம், ஒரு ஆண்ட வர்க்கத்தினர், மற்றொரு ஆண்ட வர்க்கத்தினரின் கைகளில் நம்முடைய எதிர்காலத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர். நம்முடைய போராட்டம் இன்றும் முடிவடையவில்லை என்று கூறினார். இதைத்தான் தந்தை பெரியாரும் இன்றைய தினத்தை சுதந்திர தினமாகக் கொண்டாடாமல் இது துக்க நாள் என்று கூறினார்.
நாடு சுதந்திரமடைந்த நாள் முதல் இன்றுவரை நம்மை ஆளும் ஆட்சியாளர்களால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களா? உண்மையில் நாம் சுதந்திரமடைந்திருந்தால் நமது சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விட்டிருக்கவேண்டும், உண்மையில் இன்றுவரை ஒவ்வொரு நாளும் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தங்களின் உரிமைக்காக, அன்றாட தேவைக்காக அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டே இருக்கின்றார்கள் இதுவா சுதந்திரம்? ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரால், வருணத்தினரால் வஞ்சிக்கப்பட்டுள்ளோம். தினம் தினம் வஞ்சிக்கப்படுகிறோம். அப்படியென்றால், நாம் இன்றளவும் அடிமைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம் என்றுதானே பொருள்.
தந்தை பெரியார், அம்பேத்கர், ஜோதிராவ் புலே போன்றோர் சமூகநீதி காக்க போராடிய, சமூகநீதி காத்த தலைவர்கள் நமக்கு வலியுறுத்தியது என்ன? உண்மையான சுதந்திரம் என்பது அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவது. ஆங்கிலேயன் இருக்கும்போது இருந்த அடிமைத்தனம், அவன் சென்ற பிறகு இன்னும் கூடுதலானது எப்படி? உண்மையில் நாடு சுதந்திரம் பெற்றது உண்மையாக இருந்தால் நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் ஆகியும் நாம் ஏன் இன்னும் சமூக நீதியைப் பெற அன்றாடம் போராட வேண்டியிருக்கிறது?உண்மையில் அடிமைத்தனம் என்பது ஆங்கிலேயன் வந்த பிறகு துவங்கியதா? என்பதை யோசித்துப் பார்ப்போம்.
வரலாற்றைப் நன்கு படித்துப் பார்த்தால் தெரியும். இந்தியாவில் அம்பேத்கர் கொண்டுவந்த அரசமைப்புச் சட்டத்தை ரத்துசெய்துவிட்டு மனு தர்மத்தையும், பகவத் கீதையையும் அரசமைப்புச் சட்டமாக கொண்டுவர வேண்டும் என்று தலைநகர் டில்லியில் ஆளும் பாஜக அமைச்சர்கள் முன்னிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தொடர்ந்து பேசிவருகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த (2015-ஆம் ஆண்டு) சுஸ்மா சுவராஜ், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று கூறினார்.
அதே மேடையில் இன்று மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ராகேஷ் சின்கா என்ற ஆர்.எஸ்.எஸ் காரர் தேசிய நூலாக மட்டுமல்ல, இந்திய அரசமைப்புச் சட்டமாகவே கொண்டுவர வேண்டும், அதற்கு முழுமையான பலம் கொண்ட மோடி தலைமையிலான அரசு தீர்மானம் இயற்றவேண்டும் என்று கூறினார். சுதந்திரம் என்பது இன்றளவும் நடுத்தர வர்க்கத்தினருக்குக் கூட கிட்டாத நிலையில் கீழ்மட்ட மக்களுக்கு அது ஒரு கனவுதான். 2000 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்தவர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு, ஆங்கிலேயர்கள் சென்று விட்டார்கள். சமூகநீதி காத்த தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் இதைத்தானே கூறினார்கள்.
அம்பேத்கர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒன்றை முக்கியமாக முன்னெடுத்துச் சென்றார் சமத்துவம், சகோதரத்துவம், தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி, ஒரு அடிமைக்கு, அவன் அடிமை என்று உணர வைத்துவிடுங்கள் பிறகு அவன் தனக்காக போராடுவான் என்றார்.