நாகரிகமடையும் மனிதன், நம்பிக்கைகளுடன் அறிவியல் கற்றுத்தந்த உண்மைகளையும் சேர்த்தெடுத்துக் கொண்டே பயணிக்கிறான். இயற்கையின் இருப்புக்கு மாறாக உருவாக்கப்பட்ட கதைகள், உலகின் அனைத்து இனங்களிலும் காணப்படுகின்றன.
ஆதிகாலங்களில் சூரியனும் கோள்களும் பூமியைத்தான் சுற்றுகின்றன எனும் கருத்து பரவலாக நம்பப்பட்டது. அதற்கு எதிராகப் பேசியவர்கள், `கடவுளின் விரோதிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டு, மரணத்தைத் தழுவியதும் நடந்தது.
கலீலியோ கலிலி, ‘சூரியனே மையமானது’ எனும் கருத்தைச் சொன்னபோது, ‘பூமியை ஏனைய கோள்கள் சுற்றுகின்றன’ என்று சொல்லும்படி மதபீடத்தால் வற்புறுத்தப்பட்டார். இதுபோல ‘பூமி தட்டையானது’ என்ற நம்பிக்கையும் இருந்தது. வேதப் புத்தகங்களில் பெரும்பாலானவை அதைக் குறிப்பிடுகின்றன.
ஆனால், மெல்ல நாகரிகமடைந்து, அறிவியல் வளர்ச்சியின் பிறகு, பூமி கோளமானது தானென்று புரிந்து கொண்டோம். ஆனாலும், பூமி தட்டை என்பதை அடிப்படையாக வைத்து உருவான கதைகள் நம்மிடையே இப்போதும் மிச்சமிருக்கின்றன.
ஆனால், இவ்வளவு முன்னேறிய நிலையிலும், ‘பூமி தட்டையானது’ என்று ஒரு பெருங்கூட்டமே சொல்லிக் கொண்டிருக்கிறது. அவர்கள், தனிப்பட்ட எந்த மதத்தையோ, இனத்தையோ, நாட்டையோ சார்ந்தவர்களல்ல. அப்படிச் சொல்பவர்கள் அனைத்துக் கண்டங்களிலும் வாழ்கிறார்கள். அவர்கள் தங்களை `Flat Earthers’ என்று சொல்லிக்கொள்கிறார்கள்!
இவர்களின் நம்பிக்கையால் ஒரு சோகமும் நடந்தது. பூமி தட்டையானதுதான் என்பதை நிரூபிக்க 2018ஆம் ஆண்டு, சொந்தமாகச் சிறிய ரக ராக்கெட் ஒன்றைத் தயாரித்த, ‘மைக் ஹியூக்ஸ்’ (Mike Hughes) என்பவர், அதில் அமர்ந்தபடி மேலே பறந்தார். கிட்டத்தட்ட 570 மீட்டர்கள் மேலே போய் பாரசூட் மூலம் கீழே குதித்தார்.
ஆனால், உயரம் கம்மியாக இருந்ததால், நிலத்துடன் மோதியபடியே தரையைத் தொட்டார். நல்லவேளையாக உயிராபத்து எதுவும் ஏற்படவில்லை. அவர் மறுபடியும் 2020ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் மீண்டும் ராக்கெட்டில் பறந்து சென்றார்.
எல்லாமே அவரது சொந்த முயற்சிதான். ஆனால், ராக்கெட் தரையில் மோதி வெடித்ததால், மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 64. பூமி தட்டையானதா, கோளமானதா என்பதை அவர் அறிந்தாரா இல்லையா? தெரியாது!
தகவல் : ‘ஜு.வி.’