“நிகழும் சவுக்குக் கட்டையாண்டு, மண்ணென்ணெய் மாதம், 7-ந் தேதி புகைக் கிழமை நடுச்சாமம் 12-30 மணிக்கு மண்ணாங் கட்டி மகள் அடுப்புக்கும் வயிற்றுப் பிள்ளை மகன் அன்னசாமிக்கும் திருவாளர் ஓமகுண்டம் இல்லத்தில் திருமணம் நடைபெறும்”-

kuthoosi gurusamyஎன்று திருமணப் பத்திரிகை வருமேயானால் திடுக்கிடாதவர்கள் இருக்க மாட்டார்கள்!

“அடே சாம்பு! நாலு மாசமா கஷ்டப்பட்டது போதும்! இனிமேல் சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட என்னால் முடியாது. கல்யாணம் பண்ணிக் கொள்வதென்று முடிவு செய்து விட்டேன்! அவள் சாகிறபோது இனிக் கல்யாணம் பண்ணப் போவதேயில்லை யிண்ணுதான் சொல்லிக்கிட்டிருந்தேன்! ஆனால் இனிமேல் வெகுகாலம் சோற்றுக்குத் திண்டாட என்னால் முடியாது! நல்ல சிறு வயசா ஏதாவது ஒண்ணிருந்தால் பாரேன்! இந்த மாசமே முடிச்சுப்பிடலாம்!”

“என்னப்பா, சிறு வயசா கேட்கிறியே! உனக்கு அறுபது ஆகப் போகுதுங்கிறதை மறந்துட்டியா? சிறு வயசா வேணும்? ரொம்ப நல்லாயிருக்கே!”

“ஆமாண்டா, சாம்பு! சிறுவயசாயிருந்தால்தான் சமையலுக்காகும்! என் வயசைப் போல ஒண்ணைக் கட்டிக்கச் சொல்றியா என்ன?”

இம்மாதிரிப் பேச்சைச் சாதாரணமாய்க் கேட்கலாம்.

அதாவது, கல்யாணம் பண்ணுவதே சமையல் செய்து போடத்தான் என்பது பலருடைய முடிந்த முடிபு! அவர்கள் மீது குற்றமில்லை, நடைமுறையிலும் அப்படித்தானே இருக்கிறது?

"ஏண்டா தம்பி! இந்த ஹோட்டல் சாப்பாட்டைச் சாப்பிட்டு உடம்பை இப்படிப் பாழாக்கிக்கிறியே! ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டா நல்லாயிருக்காதா?” என்று சொல்வதை நாம் கேட்டதில்லையா?

இது மட்டுமா? பள்ளிகளில் கல்வி முறைகளை அமைக்கின்ற சர்க்கார்கூட பெண்களுக்குத் தனிமுறை, ஆண்களுக்குத் தனிமுறை என்றுதானே அமைக்கிறார்கள்? கும்மி, கோலாட்டம், கோலம், பாட்டு, சமையல், வீட்டுக் குடித்தனம், பிள்ளை வளர்ப்பு- என்று பெண்களுக்குத் தனியான ஒரு கல்வி முறையை அமைக்கிறார்களே, நம் கல்வி நிபுணர்கள்!

இந்த மாதிரி நிபுணர்களும், இவர்களை ஆதரித்து ஆதி தாளம் போடுகிறவர்களும் கவனிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சியைத் தருகிறேன்.

பீகாரில் ஒரு கிராமம், கோஷா முறைப்படி ஒருவர் வீட்டில் திருமணம் நடைபெற்றது. திருமண கோஷ்டியார் பெண்ணைப் பல்லக்கில் வைத்து அழைத்துக் கொண்டு ஊர் திரும்பினர். இளைப்பாறுவதற்காக ஒரு மரத்தடியில் தங்கினர். பல்லக்கிற்குள் முகத்தை மூடிக் கொண்டிருந்த மணப் பெண்ணுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டுமா என்று கேட்டார், ஒருவர். முகமூடிக்குள்ளிருந்த பெண் பதிலளிக்கவேயில்லை. உரக்க உரக்கக் கத்திப் பார்த்தனர். பயனில்லை. சந்தேகம் தட்டிற்று, மணப் பெண்ணை மூடியிருந்த பர்தாவை நீக்கினார்! என்ன ஆச்சரியம்! உள்ளே பெண் இல்லை! ஆனால் ஒரு மண் ஆடுப்பு இருந்தது! அந்தச் சமயம் மணமகன் முகம் எப்படியிருந்திருக்கும் என்பதைப் பற்றிக் கற்பனை செய்து பார்க்க வேண்டுமானால், குதிரைப் பந்தயத்தில் எல்லாப் பணத்தையும் தோற்றுவிட்ட ரயிலுக்குக்கூட காசில்லாமல் கால் நடையாக நடந்து வருகிறவன் முகத்தைப் பார்த்தால் ஓரளவு தெரிந்து கொள்ளலாம்!

பெண்களைக் கல்விக்காகவோ, வீரத்திற்காகவோ, வாழ்க்கை இன்பத்துக்காகவோ, மணம் செய்து கொள்ளாமல், வயிற்றுக்காக மணம் செய்து கொள்கிறவர்கள் முகத்தில் கரி பூசுவதற்காகவே பீகார் மணப்பெண் தன் இடத்தில் அடுப்பை வைத்துவிட்டு ஓடிப் போயிருக்க வேண்டும்!

இத்தகைய அன்னசாமிகள், ருக்மிணி குக்கர் ‘செட்’டை மணந்து கொள்ளலாமே! இவன் மனைவியை விட மலிவான சமையற்காரியல்லவா?

- குத்தூசி குருசாமி (13-06-1949)

நன்றி: வாலாசா வல்லவன்