kuthoosi gurusamyகல்லூரியிற் படித்து பட்டம் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு இன்று பட்டமளிப்பு விழா! ஏ. இராமசாமி முதலியார் அறிவுரை கூறிக்கொண்டிருப்பார், (நான் எழுதும்) இந்த நேரத்தில்.

“நீங்கள் யாவரும் மண்ணைக் கயிறாகத் திரித்தவர்கள்! வானத்தை வில்லாக வளைத்தவர்கள்! சூரியனை அம்பாகச் செய்தவர்கள்!” என்றெல்லாம் புகழ்ந்திருப்பார்! அதுதானே முறை! அதை விட்டு-

‘நீங்கள் தம்பிடிக்குப் பயனற்ற படிப்புப் படித்தீர்கள். ஒரு குண்டூசியோ, ஒரு ஹரிகேன் விளக்கோ, ஒரு குடையோ, ஒரு ஃபவுண்டன் பேனாவோ, கூடச் செய்யத் தெரியாத வெறும் குப்பைத் தொட்டிப் படிப்புப் படித்தவர்கள்; நீங்கள் இனி எப்படித்தான் இந்த உலகத்தில் காலந்தள்ளப் போகிறீர்களோ? அதுதான் தொலையட்டும். உங்களுக்கு நல்லொழுக்கமாவது வந்திருக்கிறதா என்றால், 100-க்கு 90-பேருக்கு வந்திருக்காது தான்! சிக்கன வாழ்க்கையாவது கற்றிருப்பீர்களாவென்றால், சிகரெட்டுக்கே தினம் இரண்டு ரூபாய் வேணுமே!”- என்று

இந்த மாதிரிப் பேசலாமா? நான் பட்டம் பெறுகிறவனா யிருந்தால் கட்டாயம் இந்தப் பேச்சை ரசிக்கவே மாட்டேன். முணு முணுப்பேன்! உஷ்! உஷ்! என்று சத்தம் போடுவேன்! போதும்! போதும்! என்று கூச்சலிடுவேன்! என்னென்னமோ செய்வேன் (சுருங்கக் கூறினால் பிரசங்கியார் கூறுவதெல்லாம் அப்படியே உண்மை என்பதை அந்த மண்டபத்திலேயே காட்டி விடுவேன்) ஆகையால்தான் பிரசங்கியார்கள் பாராட்டிப் பேசுகிறார்கள்! தெரிகிறதா?

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரபல கள்ளபார்ட் நடிகர் இருந்தார். அவர் நாடக மேடைமீதே கவிபுனைந்த பாடுவார்! அவர் ‘நரிப் பாட்டு’ என்று ஒரு பாட்டுப் பாடுவது வழக்கம்! ஒரு சமயம் மன்னார்குடிக்குப் போயிருந்தார். நாடகம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் சிக்கலான ஒரு கட்டத்தில் “நரிப் பாட்டு!” என்று கூச்சலிட்டார்கள், என்னைப் போன்ற தரை மகா ஜனங்கள்! (அந்தக் காலத்தில் இரண்டணா டிக்கெட் வாங்கிக் கொண்டு எச்சில் நிறைந்த தரையில்தான் நானும் உட்காருவது வழக்கம்!) கோபம் வந்துவிட்டது, நடிகருக்கு! ஆனாலும் அடக்கிக் கொண்டு நரிப் பாட்டுப் பாடினார். அது முடிந்ததும் யாரோ ஒரு விஷமி, நண்டுப் பாட்டுப் பாடு!” என்று கூவினான்!

நடிகரின் கோபம் அணை கடந்து விட்டது. ஆரம்பித்தார்.

“நண்டுகளா! நண்டுகளா!

மன்னார்குடி மண்டுகளா!”-

என்று முதல் அடியைப் பாடினார்! மண்மாரி பெய்தது! கல்மாரியும் பொழிந்தது! போலீசார் தலையிட்டனர், நாடகமும் நின்றது!

பட்டதாரிகளைப் புகழ்ந்து பேசுவதுதான் முறை! அதுதான் நாகரீகம் கூட! அந்த மேடைமீது பர்னாட்ஷாவைப் பேச விட்டால் என்னவாகும்?

“பட்டப் படிப்பை விட முட்டாள் தனமான செய்கை உலகிலேயே கிடையாது!” என்று துவங்குவார்! அவ்வளவுதான்! மண்டபம் கிடுகிடுத்துப் போகும்!

பட்டதாரிப் பெண்களில் வயது சென்ற யாரோ ஒரு அறிஞர் பட்டமளிப்பு விழாவில் பேசுவதாக வைத்துக் கொள்வோம். உதாரணமாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியவர்கள் பேசினால் என்ன சொல்வார்?

“முதலில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது பெண்களிடத்தில் எப்படி மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதாகும். மற்ற விஷயங்களில் எதுவும் வரா விட்டால் கூடப் பரவாயில்லை. உதாரணமாக, உங்களில் யாரோ இரண்டொருவர் 4 நாளைக்கு முந்தி மேரி கல்லூரியில் பெண்களிடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், போலீசார் தலையிட்டுப் பிரம்படி தந்ததாகவும், அதற்கு முந்திய இரவிலும் அங்கு அநாகரீகமாக நடந்ததாகவும் கேள்விப்பட்டேன். இது ரொம்பத் தவறு. நம் நாட்டுப் பெண்களிடத்தில் ரிவால்வர் அல்லது கத்தி இருந்தால் நீங்கள் இவ்விதம் நடக்கத் துணிவீர்களா? உதாரணமாக நரிக்குறத்தியிடம் எந்த ஆணாவது வாலாட்டினால் அவள் கழுத்தைப் பிடித்து நெறித்து விடுவாள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே! நம்நாட்டு படித்த பெண்கள் வெறும் அலங்காரப் பொம்மைகளாக இருப்பதனால் தானே சில ஆண்கள் மிருகத்தனமாக நடக்கிறார்கள்? அது ரொம்பத் தப்பு. வெட்கப்படக் கூடியது. உங்கள் வீட்டுப் பெண்களிடம் மற்ற ஆடவர்கள் தவறாக நடந்து கொண்டால் நீங்கள் சகிப்பீர்களா? அதைப் போல மற்றப் பெண்களையும் கருத வேண்டாமா? ஆகையால் பட்டம் பெற்றவர்கள் முதலில் இதைக் கற்றுக் கொள்ளுங்கள்”-

என்று பட்டமளிப்பு விழாவில் பேசினால் எத்தனை மாணவர்கள் ரசிப்பார்கள்? ஒருக்கால் மாணவிகள் வேண்டுமானால், “ஹியர்” “ஹியர்” என்று (தைரியமாக மனதுக்குள்ளேயே!) சொல்வார்கள்!

கருத்துரை:- கேட்பவர்களைத் திருப்திப் படுத்த வேண்டும் என்று கருதி மட்டும் பேசுகிறவர்களால் இழைக்கப்படும் தீங்குகளைவிட அதிகமாக, திருடர்களாலும், கொலைகாரர்களாலும் கூட இழைக்கப்படுவதில்லை.

- குத்தூசி குருசாமி (19-08-1949)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It