democracy in nagaland 400உலகில் உள்ள அனைத்து மரபினங்களுக்கும், அனைத்து தேசிய இனங்களுக்கும் தனித்தனி அடையாளங்கள், தனித்தனிப் பண்பாடுகள், மரபுகள் இருக்கின்றன. அனைத்து இனங்களிலும் உள்ள முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்கள் அவரவர் சார்ந்த இனங்களின் அடையாளங்களையும், பண்பாட்டு நடைமுறைகளையும் காலப்போக்கில், நடைமுறைக்கேற்றவாறு மறுசீரமைத்துள்ளனர். தேவையற்ற வற்றைப் புறக்கணித்துள்ளனர்.

அப்படி காலத்துக்கு ஏற்றவாறு, அறிவியல் அடிப்படையில் பண்பாடு, பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டு, தம்மைத் தகவமைத்துக்கொண்ட இனங்களையே வளர்ந்த இனங்களாகக் கருதமுடியும். நாகரீகம் பெற்ற மனிதசமுதாயமாகக் கருத முடியும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எனது முன்னோர் கடைபிடித்தது. இவைதான் எமது அடையாளம், இதுதான் எமது பாரம்பரியம் என்று அறிவுக்குப் பொருந்தாத எதையும் தூக்கிப் பிடித்துக்கொண்டு, அதற்காக போராடுவதும், அதற்கான போராட்டங்களை சட்டரீதியானஉரிமை, தேசியஇன விடுதலை, மத விடுதலை ஆகியவற்றுக்கான போராட்டங்களாகச் சித்தரிப்பதும் உலகெங்கிலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் அதற்கு மிக முக்கியமான சான்று, ஜல்லிக்கட்டுக்கான போராட்டம். மற்றுமொரு சான்று நாகாலாந்து மகளிர் ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம்.

நாகாலாந்தின் தனித்தன்மையைக் (?) காக்கும் போர்

“இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து. பிப்ரவரி 1 ல் அங்கு நடைபெறுவதாக இருந்த, நகராட்சித் தேர்தல்களில் மகளிருக்கு 33 சதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்ற மாநிலங்களில் உள்ளது போலவே தங்கள் மாநிலத்திலும், மகளிருக்குத் தனி ஒதுக்கீடு வேண்டும் என்று, நாகாலாந்து அன்னையர் சங்கம், நீதிமன்றம் சென்று வாதிட்டது. 2012 ல் இருந்து 2016 வரை நான்கு ஆண்டுகள் போராடியதன் பலன் - இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உச்ச நீதிமன்றம், மகளிருக்கு 33 சதம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், 16 ஆண்டுகளுக்குப் பின், நாகலாந்து மாநிலத்தில், நகராட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 1 அன்று தேர்தல்கள் நடைபெற இருந்தன.

நாகாலாந்து மாநில பழங்குடியினர் கூட்டு இயக்கம், இந்த ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. “மகளிருக்கு அதிகாரம் வழங்குவது, நாகர் இனத்தில் இல்லை” என்பது அவர்களின் வாதம். நாகர் இனத்தின் தனித்தன்மையைக் குலைக்கிற செயலாகக் கூட்டியக்கம் பார்க்கிறது. எனவே, கிளர்ச்சி, கலவரம், துப்பாக்கிச் சூடு, இரு இளைஞர்கள் மரணம் என்று நீண்டுகொண்டே போகிறது.

பிப்ரவரி 2 இரவு நடந்த வன்முறையில் மாநிலத்தின் பழைய தலைமைச் செயலகம், முக்கியமான இயக்ககங்கள் செயல்பட்ட பழமையான கட்டிடங்கள் தீயிடப்பட்டு அடியோடு அழிந்து போனதாகவும், இவ்வகை வன்முறை செயல்கள் நாகர்களின் வழிமுறை அல்ல என்று பிப்ரவரி 4ஆம் தேதி, ‘நாகலாந்து போஸ்ட்', தலையங்கம் தீட்டி, அமைதி வழிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ( தமிழ் இந்து 07.02.2017 )

நமது பாரம்பரியம் எதற்காக?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களும், இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் கூறியவை இவைதான். “ஜல்லிக்கட்டு எமது பாரம்பரியம். எமது அடையாளம். எமது பண்பாடு.” நாம் முரண்படும் இடமும் இதுதான்.

நமக்குப் பண்பாடு, மரபு, பாரம்பரியம், அடையாளம் எதுவுமே வேண்டாம் என்று கூறவில்லை. இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவை மனித இனத்தின் வளர்ச்சிப் போக்கிற்குப் பயன்பட வேண்டும். அடுத்தகட்டத்திற்கு மக்களை வழிநடத்துவதாக இருக்க வேண்டும். மீண்டும் நம்மை 2000 ஆண்டுகளுக்குப் பின்னே தள்ளிவிடுவதாக இருந்தால் அந்தப் பண்பாடு, பாரம்பரியங்கள், அவை எவையானாலும் அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டுச் செல்லும் சமுதாயமே உலகில் நிலைத்து வாழும்.

நம்மை மீண்டும் ஜாதிக்காரனாகவும், ஆணாதிக்கவாதியாகவும் மதவாதியாகவும், காட்டு மிராண்டியாகவும்,முட்டாளாகவும் கட்டமைக்கும் ஜல்லிக்கட்டை மீட்க, பாரம்பரியத்தைக் காப்பது என்ற பெயரில் போராட்டங்கள் நடந்தன. அதேபோலத்தான் நாகாலாந்திலும் மகளிர் ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்துள்ளன. ஜல்லிக்கட்டுக்கு எதிராக அறிவியல் அடிப்படையில் நாம் மாறுபட்ட கருத்துக்களை வைத்தபோது நமக்கு என்னமாதிரியான எதிர்வினைகள் வந்தனவோ, அதேபோன்று தான் நாகாலாந்து அன்னையர் முன்னணிக்கும் வந்துள்ளன.

மரபுகள் அழியட்டும்!

“மகளிருக்கு ஒதுக்கீடு வழங்குவது நாகர் இனப் பண்பாடு இல்லை. நாகர்களின் தனித்தன்மையைக் கெடுக்கும் நடவடிக்கை இது. நாகர்களின் மரபுகளுக்கு எதிரான செயல் இது” என்று நாகாலாந்தின் ஒட்டுமொத்த மக்களும், அனைத்து அமைப்புகளும் களத்தில் நிற்கின்றன.

நாம் கவனிக்க வேண்டிவை என்னவென்றால், நாகாலாந்தின் பெரும்பான்மை மக்கள் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள். கிறித்துவ மதத்திற்கு மாறினாலும், இந்து மதத்தின் அடையாளமான ‘பெண் உரிமை மறுப்பு’ என்பதையே தமது இனத்தின் அடையாளமாகக் கருதுகிறது நாகா இனம். இந்து மதத்தின் அடையாளத்தைத் தமது இனத்தின் அடையாளமாகக் கருதிக்கொண்டு, அதைக் காப்பாற்றுவதற்காகப் போராடுகிறது.

மனித இனத்தில் சரிபாதியாக உள்ள பெண் இனத்திற்கு வெறும் 33 சதம் ஒதுக்கீடு கொடுத்தாலே உங்கள் பண்பாடு, பாரம்பரியம், அடையாளம் எல்லாம் அழிந்துவிடும் என்றால், அவை அழிந்து தொலையட்டுமே! இத்தனை காலமாக உங்கள் தேசியஇனப்பண்பாடும், தேசிய இனப்பாரம்பரியமும், தேசிய இனஅடையாளமும் ஆண் ஆதிக்கத்தை வலுப்படுத்தவே பயன்பட்டுள்ளன. பெண் இனத்தை அடக்கி ஆளவே துணை நின்றுள்ளன என்றால் அந்தப் பாரம்பரியங்கள் அழிந்து போக வேண்டும் என நாம் விரும்புவது எந்த வகையில் தவறாகும்?

எந்த ஒரு காட்டுமிராண்டித்தனத்தையும் தேசிய இன அடையாளமாகக் கருதுவதும், அதைக் காப்பாற்றப் போராடுவதும் அந்தத் தேசிய இன மக்களுக்கு எந்த வகையில் விடுதலையைப் பெற்றுத் தரும்?

ஜாதியும் தேசியஇன விடுதலையும்

நாகாலாந்துக்கு அரசியல் சாசனப் பிரிவு 371 ஏ, ன் படி, நாகாலாந்து மக்களின் பாரம்பரியம் தொடர்புடைய எந்தச் சட்டமும், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டாலும் கூட, மாநில சட்டப் பேரவையும் அங்கீகரிக்க வேண்டும் என்ற சிறப்புரிமை உள்ளது. அதன்படி, நகராட்சி அமைப்புகளில் மகளிருக்கான ஒதுக்கீடு, தங்களின் பாரம்பரிய மரபுப்படி, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று, போராடும் ‘பழங்குடியினர் கூட்டு இயக்கம்’ கூறுகிறது. பிரிவு 371 ஏ வழங்கிய சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்து இருப்பதாகவும் இவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்தியா என்ற சிறைக்குள் இருந்து நாகர் தேசியஇனம் விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கில் இந்தச்சிறப்பு உரிமைகளை வரவேற்கிறோம். ஆனால் அந்தச் சிறப்பு உரிமைகளின் பெயராலேயே, அதே நாகர் இனத்தின் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுமானால், அந்த நாகா தேசிய இனத்திற்கு எதற்காக சிறப்பு உரிமைகள்? முதலில் அவற்றைத் திரும்பப்பெறவேண்டும் என்றே கூறவேண்டிய நிலையில் உள்ளேம்.

மக்களின்முன்னேற்றத்திற்குத் தடையாக கடவுளோ, மதமோ, சாஸ்திர, சம்பிரதாயங் களோ எவை வந்தாலும் அவற்றைத் தூக்கி எறிந்து முன்னேறச்சொல்வதே பகுத்தறிவு. அதுவே மக்கள் விடுதலைப்போர். அந்த வழியில் தேசிய இனப் பாரம்பரியம், தேசிய இன அடையாளம், தேசியஇன விடுதலை என்பவை மக்களின் முன்னேற்றத்தையும், வளர்ச்சி நோக்கிய மாற்றத்தையும் தடை செய்யுமானால், அந்தப் பாரம்பரியம், அடையாளம், தேசியஇன விடுதலை என அனைத்தையும் புறக்கணிக்கவேண்டியது மக்கள் விடுதலையில் அக்கறை உள்ளவர்களின் அடிப்படைக் கடமை.

நாகாலாந்து மக்களுக்கு இந்திய அரசில் எவ்வித உரிமையுமில்லை. வளர்ச்சித் திட்டங்கள் இல்லை. முன்னேற்ற நடவடிக்கைகள் எவையும் இல்லை. அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. ஒட்டு மொத்தமாக வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துமே இந்திய அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகின்றன. சுரண்டப்பட்டு வருகின்றன. அவற்றை எதிர்த்து அந்த மக்கள் போராடுவதைவிட, தத்தமது அடையாளங்களைக் காக்கப் போராவதிலேயே அக்கறை காட்டுகின்றனர். தேசியஇனங்களுக் குள்ளேயே யார் பெரியவன் என்ற மோதல் போக்கு அதிகமாகி, அவற்றைக் கட்டுப்படுத்தும் போர்வையில் உளவுத்துறைகள் உள்ளே புகுந்து இன்று நிரந்தரக் குழுமோதல் களமாக வடகிழக்கு மாநிலங்கள் மாறியுள்ளன.

எதிரி யார்? என்று தெரியாமல் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்வதும் - அடிமைத்தனத்தை உறுதிப்படுத்தக் கோரி எதிரியுடன் போரிடுவதும் ‘ஜாதி’ என்ற கருத்தியலின் சிறப்புக்கூறுகள். அந்த வகையான சிறப்புக்கூறுகள் ‘தேசியஇன விடுதலை’ என்ற கருத்தியலுக்கும் வரக்கூடாது. வந்தால் தேசியஇன விடுதலையையும் எதிர்ப்போம்.

Pin It