ஆண் பெண் சமத்துவம் பற்றிய உரையாடல்கள் அதிகமாகப் பேசப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பெண்களின் சமத்துவம் என்பது அரசியல் சமூக பொருளாதார தளத்தில் முழுமையடைய வேண்டும் என்பதுதான் முற்போக்குவாதிகளின் எண்ணமாக உள்ளது.
ஆனால் நம்மிடம் பெண்களுக்கான சமத்துவம் பற்றிய பேச்சுக்கள் உள்ள அளவுக்கு செயல்பாடுகள் இல்லை என்பதுதான் துயரமானது.
சில நட்களுக்கு முன்னால் கேரள மாநிலக் குழந்தைகள் நல ஆணையம் “ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகளுக்குத் தனித்தனிப் பள்ளிகள் என இருப்பதை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு, அடுத்த கல்வி ஆண்டு முதல் இரு பாலரும் இணைந்து படிக்கும் பள்ளிகளை மட்டுமே ஏற்படுத்த வேண்டும்" எனவும்,
பள்ளிகளில் கழிவறைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 90 நாள்களில் எழுத்துப் பூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.
மேலும் இருபாலர் பள்ளிகளின் தேவை பற்றி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் புரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் குழந்தைகள் நல ஆணையம் உத்தரவில் தெரிவித்துள்ளது.
கேரள அரசும் ஏற்கெனவே பெற்றோர் ஆசிரியர் கழகம் முடிவு செய்து அறிவித்ததால் இருபாலர் பள்ளியாக மாற்றலாம் எனக் கொள்கை முடிவு எடுத்திருக்கின்றது.
இத்தனைக்கும் கேரளாவில் தற்போது 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் என மொத்தம் 444 தனி பாலர் பள்ளிகள் மட்டுமே உள்ளன.
இந்தச் செய்தி பத்திரிக்கையில் வெளிவந்த போது கேரளா, சிந்தனை மட்டத்தில் அடைந்திருக்கும் உயரமும், பெரியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு கட்சி நடத்தும் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான தனிபாலர் பள்ளிகளை அரசே இன்னும் நடத்திக் கொண்டிருக்கும் கூத்தும் நினைவுக்கு வந்தது.
இதுபோன்ற தனிபாலர் பள்ளி, கல்லூரிகளை ஏதோ ஒழுக்க விழுமியங்களோடு சேர்த்து நாம் புரிந்து கொள்ளக் கூடாது. இதன் பின்னால் நிலவுடமை சாதிய அமைப்பின் ஆழமான தாக்கம் உள்ளது.
சொத்துடமை சமூகத்தில் சொத்தைப் பெறும் உரிமையற்றவர்களாக பெண்கள் மாற்றப்பட்டதும், அதற்காக பெண்சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ள புனித கற்பு கோட்பாடுகளும் எப்போதுமே ஆண்களையும், பெண்களையும் அனைத்து இடங்களிலும் தனித் தனித்தனியாக பிரித்து வைப்பதை முதன்மை படுத்துகின்றது.
எங்கே தன்சாதிப் பெண் மாற்று சாதி ஆணைத் திருமணம் செய்துகொண்டு போனால் சொத்து போய்விடுமோ, குழந்தை பெற்றுக் கொண்டால் சாதிய தூய்மை போய்விடுமோ எனப் பெரும்பாலான பார்ப்பன மற்றும் சூத்திரசாதி வெறியர்கள் நினைக்கின்றார்கள்.
ஆனால் அதே சமயம், மாறி வரும் காலச்சூழலுக்கு ஏற்ப தன்வீட்டு பெண்பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையும் இவர்களைப் பிடித்தாட்டுகின்றது. எனவே இவர்களுக்கு தங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளுக்கு கல்வியும் கிடைக்க வேண்டும், அதே சமயம் மாற்றுசாதி ஆண்களிடம் காதல் வயப்படுவதையும் தடுக்க வேண்டும். இந்த இடத்தில்தான் தனிபாலர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சாதி, மத வெறியர்களால் உருவாக்கப்படுகின்றன.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் சாதி, மத வெறியர்களின் துணையுடன் பெண் கல்வியை மேம்படுத்துகின்றோம் என்ற போர்வையில் இது சமூகத்தின் மீது திட்டமிட்டே திணிக்கப்படுகின்றது.
சமூகத்தில் இயற்கை நியதிகளுக்கு எதிராக நடத்தப்படும் இது போன்ற கல்வி நிலையங்களால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிக மிக அதிகமாகி இருக்கின்றன என்பதைத்தான் ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
பெண்களைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் ஆண்கள் வளர்வதும், ஆண்களைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் பெண்கள் வளர்வதும் இயல்பான சமூகக் கட்டமைப்பை குலைப்பதாக உள்ளது. இயல்பாக உருவாகி இருக்க வேண்டி நட்புணர்வு மறைந்து, பிடிக்காத பெண்கள் மீது ஆசிட் வீசுதல், தாக்குதல் தொடுத்தல், கொலை செய்தல், பாலியல் வன்முறைகளில் ஈடுபடுதல் போன்றவை ஏற்படுகின்றன.
பல பள்ளி கல்லூரிகள் இருபாலர் கல்வி நிலையங்களாக செயல்பட்டாலும் அங்கேயும் கூட ஆண்களுக்குத் தனி வகுப்புகளும், பெண்களுக்குத் தனி வகுப்புகளும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இருவரும் கலந்து பேசுவதற்கு கடும் கட்டுப்பாடுகளும், மீறினால் தண்டனைகளும் தரப்படுகின்றன.
இது போன்ற சூழல்கள் இளம்பருவத்திலேயே எதிர்பாலினத்திடம் பேசுவது என்பது சமூக தடையாகவும், அப்படி பேசுவது குற்றத்திற்கு உரிய தண்டனை என்ற தவறான எண்ண ஓட்டத்திற்கும் பழக்கப்படுத்தி விடுகின்றது.
ஆனால் சாதிவெறியர்களுக்கும் மதவெறியர்களுக்கும் இதைப் பற்றி எல்லாம் எப்போதுமே கவலை இருந்தது கிடையாது. அவர்களைப் பொருத்தவரை பெண்கள் என்பவர்கள் உடைமைகள். அந்த உடைமையைப் பாதுகாக்க வேண்டியது தங்களின் சாதி, மதக் கடமை அவ்வளவுதான்.
தினம் தினம் வன்முறையால் பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுமே இப்படி ஏதோ ஒரு சாதிவெறி பிடித்த, மதவெறி பிடித்த நபர்களின் பிள்ளைகள்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
தனிபாலர் பள்ளி, கல்லூரிகளை இருபாலர் கல்வி நிலையங்களாக மாற்றினால் மட்டுமே பெண்கள் மீதான் வன்முறைகள் குறைந்து விடுமா என்றால் நிச்சயம் இல்லை. அதற்கான கல்வித் திட்டங்கள் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கற்பிக்கப்பட வேண்டும்.
ஏற்கெனவே பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்துக்குக் கீழே வரும் கல்லூரிகளில் இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு பாலின சமத்துவக் கல்வி (Foundation course on gender studies) பாடமாக உள்ளது.
பாலின சமத்துவக் கல்வி என்பது ஆண் – பெண் சமத்துவ உணர்வு மட்டுமின்றி, சாதி, மதம், வர்க்கம் என எல்லா நிலையிலும் சமத்துவ சிந்தனையை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். அது பள்ளிகளில் இருந்தே கற்பிக்கப்பட வேண்டும்.
சாவித்ரிபாய் புலே தன் கணவர் ஜோதிராயுடன் இணைந்து, பெண்களுக்கான தனிப் பள்ளியை புனேயில் 1848லேயே நிறுவினார். இந்தியாவின் முதல் பெண்கள் கல்லூரி வங்கத்தில் உருவான பெத்தூன் கல்லூரி (1879) ஆகும். ஆசியக் கண்டத்திலேயே மிகத் தொன்மையான மகளிர் கல்லூரியான அக்கல்லூரி 1849-இல் ஜான் எலியட் டிங்கிங் தெர் பெத்தூனால் பெண்கள் பள்ளியாகத் தொடங்கப்பட்டு அது பின்னர் கல்லூரியாக வளர்ச்சி பெற்றது.
தமிழ்நாட்டில் 1914 - ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற இராணி மேரி கல்லூரிதான் தமிழ்நாட்டின் முதல் பெண்கள் கல்லூரி ஆகும்.
இன்று தமிழ்நாட்டில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரி, விவேகானந்த மகளிர் கல்லூரி, திருச்சி கோலிகிராஸ் பெண்கள் கல்லூரி என சொல்லிக் கொண்டே போகலாம்.
பெண்கள் பெரும்பான்மையாக கல்வியறிவு பெறாத சமூகத்தில் பெண்களுக்கான கல்வி நிலையங்கள் அன்று தேவைப்பட்டன என்பதையும், (1901-இல் சென்னை மாகாணத்தில் எழுத்தறிவு பெற்ற பெண்களின் சதவீதம் 0.9 மட்டுமே. நம் நாடு விடுதலை அடைந்த போது (1947-இல்) மொத்தமே 12 சதவீதம் பேர்தான் எழுத்தறிவு பெற்றவர்கள்) ஆனால் இன்று அப்படியான தனிபாலர் கல்வி நிலையங்கள் சமூகத்தை பண்பாட்டு ரீதியாக சீரழிக்கும் நிலைக்கு வந்து விட்டதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரும்பாலான சாதிய, மத நிறுவனங்கள் நடத்தும் பல பள்ளி, கல்லூரிகள் ஆண்களுக்குத் தனியாகவும் பெண்களுக்குத் தனியாகவும் இருப்பதற்கு முக்கிய காரணம் இவர்கள் நிறுவ முயலும் ஒழுக்க விழுமியங்கள் என்பது இயற்கை நியதிகளுக்கு எதிரான அப்பட்டமான மதவெறி, சாதிவெறியின் வெளிப்பாடாக இருப்பதுதான்.
ஆனால் அரசே இதைச் செய்வது என்பது வெட்கக்கேடானது. இதை ஒரு போதும் நாம் அனுமதிக்க முடியாது. பெண்களின் கல்வி முன்னேற்றம் என்ற பெயரில் சாதிய, மதவாதக் கழிசடைகளின் தீய நோக்கத்தை நிறைவேற்றுவது பெரியாருக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் செய்யும் திட்டமிட்ட துரோகம் ஆகும்
எனவே தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனிபாலர் பள்ளி, கல்லூரிகளையும் இருபாலர் பள்ளி, கல்லூரிகளாக மாற்றி உத்திரவிட வேண்டும். அப்போதுமே மட்டுமே நாம் இந்தியாவில் முற்போக்கான மாநிலம் என்று சொல்லிக் கொள்வதற்கு முழுத் தகுதி படைத்தவர்களாக இருப்போம்.
- செ.கார்கி