பார்ப்பனர் என்றும் கோவில் கட்டியதில்லை; இப்போதும் கட்டுவதில்லை; இனியும் கட்டப் போவதில்லை; ஏனென்றால் அவர்கள் புத்திசாலிகள்! பறவைகளைப் போல் கூடு கட்டிக் கொள்ளவோ, எலி-எறும்புகளைப் போல் வளை தோண்டிக் கொள்ளவோ நல்ல பாம்புக்குத் தெரியாது. ஆனாலும் தங்கியிருக்க அதற்குப் பெரும் பெரும் புற்றுக்கள் இல்லையா? நாட்டுக் கோட்டை நகரத்தார் லட்சம் லட்சமாக சம்பாதித்தார்கள். அத்தனையும் ஆண்டவன் கொடுத்தது என்றே நம்பினார்கள். ஆகையால் அவருக்கும் சொத்தில் கொஞ்சம் “கமிஷன்” தர வேண்டியது வியாபார முறைப்படி நியாயம் என்று கருதினார்கள்! ஊர் ஊராகக் கோவில் கட்டினார்கள். வாகனங்கள் செய்து வைத்தார்கள். திருவிழாக்கள் ஏற்படுத்தினார்கள்.

kuthoosi gurusamy 263தானே கடவுள் என்ற சுமார்த்த மதத்தைச் சேர்ந்த பிராமணர்கள், அந்தக் கொள்கையைச் சாக்கடையில் தூக்கி எறிந்து விட்டு கோவில்களில் புகுந்து கொண்டார்கள்!

“நாடு முற்றும் கோவில் மயம் ஆக்குதற்கும் நாட்டிலுள்ள சாத்திரங்கள் சம்மதிக்கும்.”

“பாடுபட்டுப் பார்ப்பனர்கள் பார்த்தாலன்றோ பாரதத்தார் செல்வத்தில் பொறுப்பிருக்கும்?”

- என்று நம் புரட்சிக் கவிஞர் அழகாகக் கூறியிருக்கிறார் - பல ஆண்டுகளுக்கு முன்பு!

நாட்டுக் கோட்டை நகரத்தார் இப்போது கோவில் கட்டுவதை நிறுத்தி விட்டார்கள். காரணம், சுயமரியாதை இயக்கம் என்று மட்டுமே சொல்லி முழுப் பெருமையையும் நாங்கள் அடித்துக் கொண்டு போக விருப்பமில்லை. சு.ம. இயக்கம் முக்கிய காரணமாயிருக்கலாம். ஆனால் இன்னொரு காரணமும் உண்டு. அதாவது, “பார்ப்பனர் கோயில் கட்டாத போது நாம் மட்டும் கோவில் கட்டி முட்டாள் பட்டம் பெறுவானேன்?” என்று யோசிக்கத் தொடங்கினார்கள் - அதாவது பார்ப்பனர் நடத்தையும் காரணம்!

இப்போது பண வசதியுள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் கல்லூரி கட்டுகிறார்கள்; ஆஸ்பத்திரி கட்டுகிறார்கள்!

பழைய கோவில்களையே நம்பியிருந்தால் போதுமா? மக்கள் கூட்டம் பெருகப் பெருக, கோவில்களும் பெருகினால் தானே வயிற்றுப் பிழைப்பு நடக்கும்? படிப்பில்லாதவர்கள் அர்ச்சகர்களாகவும், மடைப்பள்ளிப் பெருச்சாளிகளாகவும் வேலை பார்க்க வேண்டுமே! நாமே கோவில் கட்டலாம் என்றாலோ, அது அடி முட்டாள்தனம். அவன்களைக் கட்டச் சொல்ல வேண்டும்; நாம் அவன்கள் முதுகில் தட்டிக் கொடுத்து, “மகா பக்தனய்யா நீர்,” என்று உச்சிகுளிர... அடிக்க வேண்டும்! இந்தப் போக்கில் யோசித்தார்கள், பிராமணர்கள்!

ஆனால் இனி இந்த நாட்டில் கோவில் கட்டி அதில் சோம்பேறிகளைக் குடியேற்றக் கூடிய சோணகிரி எந்த ஜாதியிலும் அகப்பட மாட்டான்! என்பதைப் பார்ப்பனர் கண்டு கொண்டார்கள். இருக்கிற கோவில்களே வெகு சீக்கிரம் ஆஸ்பத்திரிகளாக மாறிவிடும் போலிருப்பதையும் உணர்ந்தார்கள்!

ஆகவே புதுத் திட்டம் போடுகிறார்கள் போலிருக்கிறது! கேளுங்கள், கதையே!

ஹைதராபாத் சமஸ்தானத்தில் திச்சுப்பள்ளி என்று ஓர் ஊராம்! அதில் ஸ்ரீராமர் கோவில் ஒன்று இருந்ததாம். கடந்த இருநூறு ஆண்டுகளாக அது இடிந்து பாழடைந்து கிடந்ததாம். புதை பொருள் ஆராய்ச்சி இலாகாவின் காட்சிப் பொருள்களில் ஒன்றாக இருந்து வந்ததாம்.

200 ஆண்டுகளாகப் புதைக்கப்பட்டுக் கிடந்த ஸ்ரீராமபிரானுக்குப் புத்துயிரளிக்க நினைத்தாராம், ஒரு புண்ணிய மூர்த்தி! அவர் யாராயிருக்கக்கூடும்? நீங்களே யோசியுங்கள்! நான் இப்போது கூற மாட்டேன்.

அவருடைய பெருமுயற்சியினால் ஹைதராபாத் சர்க்கார் அந்தக் கோவிலை (பாழடைந்த கண்காட்சி இடத்தை) பொது ஜன வணக்கத்துக்காகத் திறந்துவிட்டு விட்டார்களாம்!

புதைபொருள் ஆராய்ச்சி இடம் புண்ணியம் தேடும் புனித இடமாக மாறி விட்டது!

ஆகவே எழும்பூர் ம்யூசியத்திலுள்ள (கண்காட்சி சாலை) கடவுள்களுக்கெல்லாம் எப்போதாவது திடீரென்று ஒரு யோகமடிக்கப் போகிறது! அங்குள்ள கற்சிலைகளில் உயரமான ஒன்றைப் பொறுக்கியெடுத்து “ம்யூசிய நாதர்” என்று பெயர் வைத்தாலும் வைக்கலாம்! வைதீகத் தமிழ்ப் புலவர்களில் காலஞ்சென்றவர்கள் போக சிதறிக் கிடக்கும் ஏதாவதொன்றைப் பிடித்து, “சகல கடவுள் ஸ்தல புராணம்,” ஒன்று பாடச் செய்தாலும் செய்யலாம்! வேலையின்றித் தவிக்கும் “ஷார்ட் ஹாண்ட் ரைட்டர்” வெங்கட்ராமய்யருக்கு ம்யூசியநாதர் கோவிலில் அர்ச்சகர் வேலை கிடைத்தாலும் கிடைக்கலாம்!

இனிமேல் பாழடைந்த கோவில்களுக்கும், கை கால் ஒடிந்து கிடக்கும்! “கடவுள்” களுக்கும் அதிகக் கிராக்கி ஏற்படும்! கோவில்களைப் பெருக்குவதற்கு ஒரு குறுக்கு வழி பார்த்தீர்களா?

சாலை யோரங்களிலுள்ள மைல் கற்கள் எல்லாம் இனிமேல் “மைல்நாத ஸ்வாமிகளாக” ஆனாலும் ஆகலாம்! அவ்வளவு பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

சரி! ஹைதராபாத்தில் இந்தப் புனித சேவை செய்தவர் பெயரைக் கூறட்டுமா? ஹைதராபாத் சர்க்காரின் ரெவின்யூ மெம்பராகிய எம். சேஷாத்ரி.

அடாடா! இங்கிருந்து போயிருக்கும் சேஷாத்ரி ரெவின்யூ இலாகாவில் என்ன அருமையான, புதிய, புரட்சிகரமான திட்டத்தை நிறைவேற்றி வைத்திருக்கிறார் பார்த்தீர்களா?

ரெவின்யூ என்றால் வருமானம்! சர்க்கார் வருமானத்தைப் பெருக்க வேண்டிய பொறுப்புடையவர்! ஆனால் தன் இனத்தின் வருமானத்தை (ரெவின்யூ)ப் பெருக்குவதற்குத் திட்டம் வகுத்து விட்டார், சுயஜாதி ரெவின்யூ மெம்பர்!

அவர்கள் புத்தியே புத்தி! சஹாரா பாலைவனத்தில் ஒரு சத்யகீர்த்தி சாஸ்திரியை இன்றைக்குத் தனியாக விட்டு விட்டு வந்தால், அடுத்த ஆண்டில் அங்கு போய்ப் பார்த்தால் ஓர் அனுமார் கோவிலையாவது காணலாம்.

தெரியாமலா, அவர்களைப் “பூதேவர்கள்”-”பூசுரர்கள்”-என்கிறார்கள்?

- குத்தூசி குருசாமி (14-06-1949)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It