ஒரு நாட்டில் வாழும் சமூகத்தை வழிநடத்திச் செல்வதில், அதன் சுபீட்சத்தை தக்க வைத்துக் கொள்வதில் அந்நாட்டில் வாழும் ஒவ்வொரு இளையத் தலைமுறையினருக்கும் முக்கியப் பங்கு இருக்கின்றது. மேலும் ஒரு சமூகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் முதலில் அச் சமூகத்தை சீர்குழைக்கும் காரணிகளை இனங்காண வேண்டும். எமது நாட்டைப் பொறுத்தவரையில் இன்று போதைப் பொருள் பாவனை, பாலியல் வன்புணர்வு, இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினை, முறையற்ற சமூக வலைத்தளப் பாவனை முதலிய பல பிரச்சினைகள் முன்னிலை வகிக்கின்றன. இப் பிரச்சினைகள் இன்றைய இளைய தலைமுறையினராலேயே அரங்கேற்றப்படுகின்றன என்பதும் ஊர்ஜிதமாகியுள்ளது. இப்பிரச்சினைகளுக்கு அப்பால் பால்நிலை, சமூக நல்லிணக்கம் தொடர்பான சிக்கல்களும் எமது சமூகத்தில் ஒரு பிரச்சினையாக நோக்கப்பட்டு வருகின்றது. இவை தொடர்பாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பால்நிலை சமத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகிய இரு பதங்களும் அண்மைக்காலமாக வலைத்தளங்களிலும் கருத்தரங்குகளிலும் ஏனைய ஊடகங்களிலும் பேசப்பட்டு வரும் எண்ணக்கரு சார்ந்த ஒரு விடயமாகும். இன்றைய நிலையில் இவ் இரு எண்ணக்கரு சார்ந்த விடயங்கள் ஒரு சமூகத்திற்கு தேவைப்படுகின்றது என்றால் அதன் இருப்பில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது என்பதே அர்த்தமாகும். ஒரு சமூகத்தின் சுபீட்சத்திற்கு, அதன் இருப்பிற்கு சிறந்த சிந்தனை மாற்றம் அவசியமாகும். மாறும் சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு இளைஞரின் பொறுப்பாகும். “மாணவர் சக்தி மாபெறும் சக்தி”, “இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்” முதலிய வாசகங்கள் சமூகத்தில் இளையோர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன. ஏனெனில் செயற்கரிய செயல்களையும் முயன்றால் இளையோர்கள் செய்து முடிப்பர் என்பது எமது புத்தி ஜீவிகளின் நம்பிக்கை மட்டுமல்ல அதுவே உண்மையும் ஆகும். ஆகவே இக்கட்டுரையினூடாக பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை இளையோர்களுக்குத் தெளிவுபடுத்தி அதனூடாக சமூகமாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்த முடியும் என நோக்கலாம். முதலில் இவ் இரு எண்ணக்கரு சார்ந்த  விடயங்கள் குறித்த ஒரு தெளிவைப் பெற்றுக்கொண்டு அதன் பின்னர் இவை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதனால் ஏற்படும் இடர்பாடுகள், அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் என்பன குறித்து விரிவாக நோக்குவோம்.

பால்நிலை என்னும் எண்ணக் கருவை விளங்கிக் கொள்ள முதலில் “பால்”, “பால்நிலை” என்பன குறித்து விளங்கிக் கொள்ள வேண்டும். இயற்கையில் பிறப்பின் அடிப்படையில் வருவது பால் என்ற எண்ணக் கருவாகும். அதுவே சமூகமயமாக்கல் செயற்பாட்டின் மூலம் ஏற்படுத்தப்படுகின்றபோது பால்நிலை எனப்படுகின்றது. பால் என்ற எண்ணக் கருவை எம்மால் மாற்றமுடியாது. ஆனால் பால்நிலை மாறும் தன்மை கொண்டது. உதாரணமாக ஒரு பெண் தாய்மை அடைவதை மாற்ற முடியாது. ஆனால் ஒரு ஆணால் செலுத்தக்கூடிய கனரக வாகனங்களை செலுத்தவும், விண்வெளிக்குச் செல்லவும், நாடாளவும் ஒரு பெண்ணால் முடியும். எனவே பால்நிலை சமத்துவம் என்பது ஆணும் பெண்ணும் “பால்” என்னும் வேறுபாட்டுக்கு அப்பால் சமமானவர்கள் என்பதை குறிக்கின்றது.

சமூக நல்லிணக்கம் என்பது ஒரு நாட்டில் வாழும் சமூகங்களுக்கிடையில் இன, மத, மொழி, குடும்ப உறவுகள் என்பவற்றில் உண்டாகும் புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுப்பு என்பவற்றை குறிக்கும். இது பல்வேறு அமைப்புக்களின் அடிப்படையில் வேறுபடுகின்ற இரு சாராருக்கு மத்தியில் ஏற்படுகின்ற ஒருமைப்பாட்டினை குறித்து நிற்கின்றது. (இக்கட்டுரையில் சமூக நல்லிணக்கம் என சுட்டிக்காட்டப்படுவது இன, மத, மொழி சார்ந்த விடயங்களாகும்.)

மேற்படி சுட்டிக் காட்டப்பட்ட பால்நிலை சமத்துவம் மற்றும் சமூகநல்லிணக்கம் என்பன எமது சமூகத்தில் பேசாப்பொருளாகவோ, வலியுறுத்தப்படாத ஒன்றாகவோ இல்லை. கோட்பாட்டு நிலையில் இருந்தும் இல்லாத ஒன்றாகவே காணப்படுகின்றது. எனது இனம், மதம், மொழி என்னும் உணர்வு ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கலாம். ஒவ்வொரு சமூகத்தினருக்கும் இருக்கலாம். அதாவது ஒரு மனிதனுக்கு இன, மத, மொழி பற்று இருக்கலாம். ஆனால் இவை குறித்த வெறி இருக்கக்கூடாது. அவ்வாறு இருக்குமானால் அதுவே முரண்பாடுகளைத் தோற்றுவித்து சமூக நல்லிணக்கத்திற்கான தேவையை ஏற்படுத்தும். எமது நாட்டிலும் இதுவே இன்று பாரிய பிரச்சினையாக உள்ளது. கடந்த முப்பது வருடகாலம் நடைபெற்ற யுத்தம் முடிவிற்கு வந்தாலும் அதன் வடுக்கள் இன்னும் அழியாது பலர் மனதில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. அண்மையில் அம்பாறையில் ஏற்பட்ட இன நெருக்கடி, கண்டி மாநகரில் ஏற்பட்ட இனக்கலவரம், அளுத்கம தர்ஹா நகரில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களை பௌத்த பேரினவாதிகள் சூறையாடியமை முதலாக இன்னும் பல பிரச்சினைகள் எமது நாட்டில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றமை சமூக நல்லிணக்கத்திற்கானத் தேவையை நினைவூட்டுகின்றது.

பால்நிலை தொடர்பான பிரச்சினைகளும் அது தொடர்பான புரிந்துணர்வும் தெளிவும் இல்லாத நிலையில் இன்று இதற்கான தேவையும் அதிகரித்துவிட்டது. சிறுமியர் முதல் வயது முதிர்ந்த மூதாட்டி வரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்துகின்றமை அதிகரித்து வருகின்றமையை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. மிகவும் கொடூரமான செயல்களில் ஈடுபடும் அளவிற்கு இன்றைய சமுதாயம் பிற்போக்கான சிந்தனைகளுடன் வாழ்ந்து வருகின்றது. பெண் விடுதலை, பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. குறிப்பாக குழந்தை திருமணத் தடைச் சட்டம், திருமணச் சட்டப்படி பெண்களின் வயது இருபத்தொன்றாக உயர்த்தப்பட்டமை, விதவைகள் மறுமணச் சட்டம், வரதட்சணை ஒழிப்புச் சட்டம், பெண்கள் அநாகரிகமாக காட்டப்படுவதை தடை செய்யும் சட்டம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் சட்டம் முதலான சட்டங்கள் இவ்வகையில் சுட்டிக்காட்டத்தக்கன. எனினும் பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறைகள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

எமது சமூகம் இன்றும் பின்னடைவில் இருப்பதற்கு மரபுவழி சிந்தனைகளும் ஒரு காரணமாக அமைகின்றது. சாதி, சமயம் முதலிய கொள்கைகள் மிக இறுக்கமாகப் பின்பற்றப்படும் அதேநேரம் பெண்கள் குறித்தும் அவர்களின் பிறப்பு குறித்தும் தாழ்வான சிந்தனைகள் ஒவ்வொரு வீட்டிலும் காணப்படுகின்றது. பெண்பிள்ளையென்றால் சத்தமாக சிரிக்கக்கூடாது, கண்டபடி வெளியில் திரியக்கூடாது , இவ்வாறுதான் வளர வேண்டும், இப்படித்தான் வாழ வேண்டும் முதலிய பல்வேறு சட்டங்களை வகுத்துள்ளனர் நம்மவர்கள். “பெண் என்றால் பேயும் இறங்கும்”, “மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்தல் வேண்டும்”, “பின் தூங்கி முன் எழுவால் பத்தினி” என பெண்மைக்கு இல்லாத கற்பனைகளை கட்டமைத்து, சாஸ்திரங்களை கட்டமைத்து வாய்மூடி இருக்கும்படியாக நமது சமூகம் அவர்களை அடக்கி வைத்துள்ளது. ஆண்பிள்ளைக்கு இவ்வாறான சட்டதிட்டங்களோ வரன்முறைகளோ இல்லை. “அவன் ஆண்பிள்ளை.”, “அவன் அப்படித்தான் இருப்பான். சேற்றை கண்ட இடத்தில் மிதித்து, தண்ணீரை கண்ட இடத்தில் கழுவுவான்.” என இன்றும் சிலர் கூறிவருவதை காண்கின்றோம். விளையாட்டுப் பொருட்களை எடுத்துநோக்கும்போதுகூட பெண்பிள்ளைகளுக்கு சமையலுக்குரிய பாத்திரங்களும், பொம்மைகளும் வாங்கிக் கொடுக்கப்படுகின்றன. ஆண்பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கிக் கொடுக்கப்படுகின்றன. சாதாரண விளையாட்டுப் பொருட்களில்கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற்றுமை கற்பிக்கப்படுகின்றன.  இவ்வாறான பால் பாகுபாடுதான் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படுகின்றமைக்கும் ஆண்கள் அவர்களை ஒடுக்கி துன்புறுத்துவதற்கும்  முக்கிய காரணமாகும். அவர்களுக்கு (பெண்களுக்கு) பிறப்பு முதல் வளரும் வரை விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், மனதில் விதைக்கப்படும் பய உணர்வுகள் இன்று ஆண்களால் பலவீனமானவர்களாக நோக்கப்படுவதற்கும் அவர்களாலேயே வன்புணர்விற்கு உட்படுத்தப்படுவதற்கும் முக்கிய காரணமாகும்.

எனவே ஒரு நாட்டில் ஏற்படும் பாலியல் வன்முறைகள் மற்றும்  சமூக நல்லிணக்கமின்மை முதலிய ஆரோக்கியமற்ற, பிற்போக்கான சிந்தனைகள் இல்லாதொழிவதற்கு அந்நாட்டில் வாழும் பழைய தலைமுறையினரின் சிந்தனையோட்டங்கள் மரபுடன் இயைந்து காணப்படுவதும், புதியவற்றை ஏற்காது தவிர்த்தலும் ஒரு காரணமாகும். சுபீட்சமான எதிர்காலத்துடன் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றால் அது இன்றைய இளையோர்களின் சிந்தனைத் தெளிவின் மூலமே பெறமுடியும். “இளங்கன்று பயம் அறியாது” என்னும் முதுமொழிக்கேற்ப இளையோர் மத்தியில் ஏற்படுத்தப்படும் நல்ல சிந்தனைகள் சமூக மாற்றத்திற்கான அத்திவாரமாகும். அவ்வகையில் பின்வரும் மாற்றங்களை இளையோர்களினூடாக ஏற்படுத்தும்போது சமூக மாற்றமும், சுபீட்சமான எதிர்காலம் மலரும் என எதிர்பார்க்கமுடியும்.

முதலில் குடும்பத்தில் பெற்றோர்கள், பெரியோர்களினூடாக சிறுவயதிலிருந்து பிள்ளைகளுக்கு ஆண் - பெண் என்னும் வேறுபாட்டை ஏற்படுத்தி உள ரீதியாக பிளவுபடுத்தாது, பால் வேறுபாட்டிற்கு அப்பால் பெண்பிள்ளைகளை தைரியமாக சிந்திக்க வைப்பதற்கும், சமூகத்தில் எதையும் எதிர்கொள்வதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்த பெரியோர்களுக்கான அறிவூறுத்தல்களை வழங்க சமூக நிறுவனங்கள் முன் வர வேண்டும். இளையோர்களின் சிந்தனை மாறவேண்டும் என்றால் முதற்கண் அவர்களை உருவாக்கும் இல்லம், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பழமையில் ஊரிய முதியவர்கள் அவர்களின் வழித்தோன்றல்கள், ஒழுக்கத்திற்கு இலக்கணம் கற்பித்து மரபின் பிடியில் சிக்குண்டு நாளைய தலைவர்களையும் அதன்பால் கொண்டு சென்று பள்ளத்தில் தள்ளும் பழம் பெருச்சாலிகளுக்கே முதற்கண் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். மேலும் இன, மத, மொழி என்பவற்றிட்கு அப்பால் நாம் அனைவரும் மனித இனம் என்னும் உயரிய சிந்தனைகளை பெற்றோர்களினூடாக பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.

அடுத்து பாடசாலை மட்டத்தில் பால்நிலை, பால்நிலை சமத்துவம், சமூகநல்லிணக்கம் ஆகிய எண்ணக்கரு சார்ந்த உயரிய சிந்தனைகளை பரீட்சைக்குரிய பாடமாக மாற்றாது எவ்வாறு ஒவ்வொரு பாடசாலையிலும் உடற்பயிற்சி கட்டாயமாக பின்பற்றப்படுகின்றதோ அதே போன்று செயன்முறைசார்ந்த விழிப்பூட்டலாக பால்நிலை சமத்துவம், சமூக நல்லிணக்கம் கட்டாய பாடமாக்கப்படல் வேண்டும். இவை தொடர்பான கருத்தரங்குகளை செயன்முறையினூடாக மாணவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் சிறந்த சிந்தனை மிக்க இளையோர்களினூடாக சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும். பால்நிலை சமத்துவத்தை, சமூகநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் போட்டிகளை இளையோர் மத்தியில் நடாத்துதன் மூலம் இவற்றை மேலும் மேலும் ஊக்குவிக்க முடியும்.

அறநெறி பாடசாலைகளில் சமய போதனைக்கு அப்பால் எப்படி ஒரு இன, மத, மொழி சார்ந்தவர்களை கௌரவிக்க வேண்டும் அவர்தம் கலாசார அடையாளங்களை பேண வேண்டும் என்பதை இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய மதப் போதனைகளினூடாக வெளிப்படுத்த வேண்டும். இவ் இயக்கங்கள் தத்தமது மதப் பெருமைகளை கட்டிக்காக்கும் அதே வேளை சமூக நல்லிணக்கத்திற்கான வழிகாட்டியாகவும் விளங்க வேண்டும். மத குருமார்களும் இவற்றை கருத்தில் கொள்ளவேண்டும்.

இவை தவிர அரசாங்கம் இளையோர்களுக்கு பால்நிலை சமத்துவம் மற்றும் சமூகநல்லிணக்கம் தொடர்பான விழிப்பூட்டல்களை ஒரு சட்டமாகவும் கட்டாயத்திற்குரிய ஒன்றாகவும் மாற்ற வேண்டும். மேலும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் தொழில்புரியும் இளையோர்களுக்கும் கட்டாயத்திற்குரிய கருத்தரங்காக இவற்றை மேம்படுத்த வேண்டும். சிந்தனை மாற்றங்களுக்கான வழிகாட்டியாக அரச, தனியார் நிறுவனங்களின் கல்விகற்ற புத்தி ஜீவிகள் இளையோர் மத்தியில் ஏற்படுத்தும் விழிப்புணர்வே எதிர்காலத்தில் சுபீட்சமான எதிர்காலத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் வழிசமைக்கும்.

சமூகத்தில் ஏதாவதொரு பிரச்சினை நடைபெற்றால் உடனடியாக இவர் இந்த மதத்ததைச் சேர்ந்தவர். இந்த மொழியைச் சேர்ந்தவர். இந்த இனத்தைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது. உண்மையில் மனிதன் என்பவன் குற்றங்களை இழைக்கக்கூடியவன். நன்மைகளையும் ஆற்றக் கூடியவன். ஆனால் எமது சமூகம் இன அடையாளத்தை ஏற்படுத்தவதாக எண்ணி இன்னுமொரு சமூகத்தின் கலாசார, பண்பாட்டு அடையாளங்களை எள்ளி நகையாடி மனிதரிடையே பிளவுகளை ஏற்படுத்துகின்றன. இந் நிலைமை மாறவேண்டும். ஒரு பிரச்சினை, கலவரம் ஏற்படும்போது நாம் அனைவரும் மனிதர்கள் என்னும் சிந்தனை கண்கொண்டு நோக்கி பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறான சிந்தனைகளையும் இளையோரிடம் விதைக்க வேண்டும்.

ஒரு மதம், மொழி தொடர்பான கருத்துக்களை, சிந்தனைகளை இன்னுமொரு மதம், மொழி சார்ந்தவர் கற்றுக் கொள்வதற்கான வழிவகைகளையும் சமூக நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் தன்னுடைய மதம்தான் பெரிது, தன்னுடைய மொழிதான் சிறந்தது என்னும் சிந்தனைகள் இன்றுவரை இளையோர் மத்தியிலும் இருந்து வரும் பாரிய பிரச்சினையாகும். இது இன ஐக்கியத்திற்கான சமூக நல்லிணக்கத்திற்கான வாயிலை மூடிவிட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். இலங்கையைப் பொருத்தவரையில் இங்கு வாழும் ஒவ்வொரு சமூகமும் தமது அடையாளங்களை பேணும் அதேநேரம் இன்னுமொரு மதம் தொடர்பான காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இவற்றை ஊடகங்கள் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றன. இலங்கை மட்டுமன்றி உலக நாடுகளில் எல்லாம் இவ்வாறான பிற்போக்கான சிந்தனைகளே உள்ளன.

ஒரு பிரதேசம் தனது கலாசார அடையாளத்தை பேணிவரும் இடத்தில் இன்னுமொரு கலாசாரத்தை சேர்ந்தவர் தமது மத அடையாளங்களையோ இன அடையாளங்களையோ பேண முடியாத, வெளிப்படுத்த முடியாத அவல நிலையும் எமது நாட்டில் உள்ளது. புனித தலங்களை அமைக்கவும், வழிபாடாற்றவும் முடியாத ஒரு போக்கு சிறந்த சமூகத்திற்கான தகுதியை அழித்து விடுகின்றது. ஒரு நாட்டில் பல் இனத்தன்மை இல்லாது இருக்க முடியாது. அந்நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் நாட்டின் ஒவ்வொரு பகுதியும் சொந்தம் ஆகும் என்னும் தேசிய உணர்வு மட்டுமே இருக்க வேண்டும். மாறாக பிரதேச உணர்வுடன் கூடிய இன, மத, மொழி மோதல்கள் இருக்கக்கூடாது என்னும் உயரிய சிந்தனையையும் இளையோர்களிடையே ஏற்படுத்த சமூக நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

“மாறுதல் இந்த ஜகத்தின் முதலாவது விதி”, “மாற்றம் ஒன்றே மாறாதது”, “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்னும் உயரிய கருத்துக்கள் எல்லாம் விஞ்ஞான, தொழில்நுட்பத்தில் மட்டுமே மாறியுள்ளன. மனிதனின் மனதில், அவனது மரபுவழி சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அவ்வாறு ஏற்படுத்தியிருந்தால் இன்று சமூக நல்லிணக்கத்திற்கான தேவையோ, பால்நிலை சமத்துவத்திற்கான தேவையோ இருந்திருக்கமுடியாது.

அன்னை தெரேசா, கல்பனா சாவ்லா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க என வரலாற்றில் சாதனை படைத்தப் பெண்கள் குறித்து பேசும் நமது சமூகத்தில்தான் பெண்களிள் மீதான வன்புணர்வுகள் அதிகரித்துள்ளன. “காதல் ஒருவனை கை பிடித்தே அவன் காரியங்கள் யாவிலும் கை கொடுத்து” என பெண் விடுதலை கும்மியை பாரதி அன்று பாடினார். இல்லை என்று கூறவில்லை. அன்றைய சமூகநிலையில் பெண்கள் இருந்தமைக்கும் இன்றைய நிலைக்கும் இடையில் பாரிய இடைவெளி இருக்கும் அதேநேரம் முன்னேற்றமும் இருக்கின்றதுதான். ஆனால் பால்நிலை சமத்துவம் இல்லை. இதுவே ஒரு சமூகத்தின் வீழ்ச்சிக்குரிய முக்கிய காரணிகளில் ஒன்றாக காணப்படுகின்றது.

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்னும் பழம் பாடல் சங்க இலக்கியத்தினூடாக எடுத்துக் காட்டப்படுகின்றது. இதன் தாற்பரியம் எல்லாம் எமது ஊர். யாவரும் எமது உறவினர் என்பதாகும். இன்று ஐக்கிய நாடுகள் சபையிலும் இவ் வாசகம் எதிரொளித்த வண்ணமே இருக்கின்றது. எனினும் இதனை ஆத்மார்த்தமாக உணருவார் யாரும் இல்லை. எந்தவொரு மதமும் இன்னுமொரு மதத்தை அவமதிக்ககோ, வஞ்சிக்கவோ கூறவில்லை. எமது சிந்தனைகளே அவ்வாறு எண்ண வைக்கின்றது. இது முற்றிலும் தவறானவொன்றாகும்.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என இந்து மதம் கூறுகின்றது. “மனிதர்கள் அனைவரும் ஒரே குலத்தில் இருந்து பிறந்தவர்கள். ஒரு தாய் தந்தையரின் வழித்தோன்றல்கள்.” என இஸ்லாம் மதம் கூறுகின்றது. இவ்வாறு ஒவ்வொரு மதமும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துகின்றது. உணருவாரின்றியும் உணர்த்துவாரின்றியுமே இன்று ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க முடியாதுள்ளது.

எமது நாட்டின் பல்வேறு பாகங்களிலும் சமூகநல்லிணக்கத்திற்கான, பால்நிலை சமத்துவத்திற்கான கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டரைகள் நடைபெற்று வருகின்றன. இவை மேலும் ஊக்கப்படுத்தப்படுவதற்கு அரச மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், மூளை முடுக்குகளிலும் உள்ள இளையோர்கள் இக் கருத்தரங்குகளில் பங்குபற்றுவதற்கும் வழிகாட்ட வேண்டும். சில வேளைகளில் இனவாதிகளின் திட்டமிட்ட செயற்பாடுகளாலும் அதிகமான கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை கண்டறிந்து களைவதற்கான முயற்சியையும், பொறுப்புக்களையும் இளைய தலைமுறையினரிடையே ஒப்படைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு நாட்டில் பின்பற்றப்படும் மொழிகள் அனைத்தையும் சம அளவில் அனைத்து மொழியினரும் அறிந்திருக்க வேண்டும் என்னும் சட்டம் இறுக்கமாக்கப்படுவதுடன், தமிழ் பிரதேசம், சிங்களப் பிரதேசம் என்னும் வகுப்பு வாதங்களை நீக்கி கலவன் முறையில் இருவேறு இன மக்களையும் ஊடாடி பழக விடுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவற்றையும் இளையோர்களின் பொறுப்பாக பகிர்ந்தளித்து அவர்களையே செயலாற்றும்படி செய்தல் வேண்டும். மேலும் ஆண் - பெண் என்னும் பாகுபாடின்றி இருசாராரையும் இச்செயற்பாட்டில் பங்கேங்பதற்கு வழிவகுக்கும் போது பால்நிலை சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் ஒன்றில் ஒன்று செல்வாக்குச் செலுத்துவதுடன் இரண்டும் பரஸ்பரமாக சமூக வளர்ச்சிக்குத் துணை செய்யும் என உறுதியாகக் கூற முடியும்.

எனவே தொகுத்து நோக்கும்போது ஒரு சமூகம் சுபீட்சமான பயணத்தை நோக்கிச் செல்வதற்கு சமூக மாற்றம் அவசியமாவதுடன், அம் மாற்றத்தை ஏற்படுத்துவதில் இளைய தலைமுறையினருக்கே பாரிய பொறுப்பும் சவாலும் உள்ளது என்பதை மறுக்கமுடியாது. இளையோர்கள் மூலம் ஒரு சமூகம் விடிவைத் தேடுகின்றது என்றால் முதலில் இவர்களைத் தாக்கிக் கொண்டிருக்கும் பால்நிலை சமத்துவமற்ற போக்கு  மாற வேண்டும். அடுத்து சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் இன, மத, மொழி மோதல்களைத் தவிர்க்க வேண்டும். இதற்கு சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமாகின்றது. சமூக பங்களிப்பு என்னும்போது சமூக நிறுவனங்களான குடும்பம், பாடசாலை, அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் இவற்றில் உள்ளடங்குகின்றன. இவற்றின் மூலமே இளையோர்களுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்தி சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியும். எனவே பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான பாதையை இளையோர்களினூடாக திறக்கும்போது ஒரு சமூகம் சிறந்து விளங்கமுடியும் என்பதோடு சபீட்சமான எதிர்கால பயணத்தை நோக்கியும் நகர முடியும்.

- சி.ரஞ்சிதா, உதவி விரிவுரையாளர், மொழியியல் துறை, களனிப் பல்கலைக்கழகம்

Pin It